விடை தெரியும் வேளை...
விடை தெரியும் வேளை வினாத்தாள் மாறும்
வெவ்வேறு வினாத்தாள் ஒவ்வொருவர் கையிலும்
கடை விரித்து வருக! வருக!! என அழைக்கும்
கருவாய்த் தொடங்கி மண்ணில் பிறக்க வைக்கும்
இடையிலாளில் மயங்கி அமைதியது தொலையும்
இமயமலையில் அதையே தேடச் செய்யும்
வடை, பாயசத்தோடு திருமணமும் முடிக்கும்
வாண்டு ஒன்று பிறக்கும், வாலாய் இருக்கும்
சுடச்சுட காஃபியாய் சுவைக்கத் தூண்டும்
சொர்க்கமாய்த் தெரிந்தது சுமையாகும்
தடைகள் முன் நிறுத்தி தடுக்கி விழச் செய்யும்
தரணியில் சிலருக்கு அவை படிக்கட்டுகளாகும்
உடையில் ஒருவனை நாயகனாகக் காட்டும்
ஒருசிலர் கோவணதில் கோயிலும் கட்டும்
படையாய் உறவுகள் பார்த்துக் கொண்டிருக்கும்
பறக்கும் உயிர் எல்லோர் கண்ணிலும் மண் தூவும்
விடை தெரியும் வேளை வினாத்தாள் மாறும்..........
__. குத்தனூர் சேஷுதாஸ் 3/7/2025
***********************
வினாத்தாளுக்கு விடையளிக்க பயிற்சி எடுக்கலாம் என்றால்
பாடத்திட்டம்( syllabus)
கொடுக்கப்பட மாட்டாது.
பாடத்திட்டம் மாறியதும் தெரியாது..
கேள்விகளும் புரியாது..
சரியான விடைகளும் தெரியாது ..
போதாதென்று
மேலே, கீழே, இடது, வலது என குறுக்கெழுத்துப் புதிர்கள் அங்குமிங்கும
அலைய விடும் ..
வினாத்தாளில் சொடக்கு போட்டு
" சுடோக்கு" கொடுக்கும் ..
(வாழ்க்கைக்)கணக்கு
என்றும் புரியாததால்
எப்போதும் கணக்கில் "மக்கு!"
ஏதோ ஒன்றை விடையாய் அளித்த பின்பே பாடங்கள் கற்பிக்கப்படும்..
அனுபவப் பாடம்!
-சங்கீதா
No comments:
Post a Comment