ஊடகங்களில் பற்றி எரியும் அண்மைச் செய்தி..
பெற்றோர்களைப்
பற்றியிருந்தாள்...
வாழ்க்கை துணையாய்
ஒருவனை கைகாட்டி
கை பற்ற
சொன்னார்கள்..
பற்றோடு பற்றினாள்...
கொடுமைகள் அவளைப்
பற்றியது..
பொறுத்து போக சொன்னார்கள்..
பொறுத்தது போதும்
என வாழ்கையில் பற்றிழந்து பறந்துவிட்டாள்
பல காலம் வாழ்ந்திருந்து
பற்றறுத்து பற்றற்றவனைப் பற்றியிருந்தால்
பரவாயில்லை..
பெற்றோரையும் சமுதாயத்தையும்
பற்றி யோசித்தவள்..
கல்வியைப் பற்றியிருக்கலாம்..
தனக்கென ஒரு வேலையைப் பற்றியிருக்கலாம்...
நல்ல நட்புகளைப்
பற்றியிருக்கலாம்..
கவிதைகளைப் பற்றியிருக்கலாம்
புத்தகங்களைப் பற்றியிருக்கலாம்
இசையைப் பற்றியிருக்கலாம்..
கொஞ்சம் சுயநலம்
பற்றியிருக்கலாம்.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்?
இந்த வரிகளைப்
பற்றிக் கொண்டு
பொறுமை காத்து
வாழ்ந்திருக்கலாம்..
திருமணம் தாண்டி
பெண்கள்
பற்றிக் கொள்ள
ஒன்றுமேயில்லையா
இந்தப் பரந்த உலகில்?
கை காட்டிப் புதூரில்
பிறந்தவள்..
எழுதப்படாத
திருத்தப்பட வேண்டிய
சமூகக் கோட்பாடுகளை
கை காட்டி சென்றிருக்கிறாள்..
அவள் ஆன்மாவேனும்
அமைதியைப் பற்றட்டும்..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment