Saturday, November 30, 2024

தங்கமே ! ஃபெங்கலே !

 தங்கமே ! ஃபெங்கலே !


ஃபெங்கல் புயலே ! ப்ளீஸ் பேரிடர் வேண்டாமே

   பிள்ளையாய் சிற்றடி வைத்து நெருங்குகிறாயே


வங்கக் கடல் உப்பு பிடித்திருக்கிறதோ?

   வந்த வேலை முடித்து ஓட மாட்டாயோ ? 


எங்க வீட்டுப் பிள்ளையாய் சாட்டை சுழற்றாதே

   எங்கள் மேனியும் நம்பியார் போல் தாங்காதே


பொங்கும் கடலும், நீயும் போட்டி போடலாம்

   பொருந்தாது உன் மோதல், நாங்கள் புழுவாம்


கங்குவாவால் காதுகள் கிழிந்தன போதும்

   கரங்கள் நீட்டி மரங்கள் அழிக்காதே பாவம்


சிங்கம் நீதான்! நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

   சிற்றெறும்பு எம் மேல் கருணை வேண்டுகிறோம்


திங்கள், தாரகைகள் சேர்ந்ததே அவ் வானம்

   திங்கள் நீ முனிய, எங்கு நாங்கள்  போவோம்? 


தங்கமே ! ஃபெங்காலே ! தணிந்திடு சீற்றம்

   தரும் " ஆறுதல் சினம் " உன்னிலும் மாற்றம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


---------------------------------

ஃபெங்கல் வந்தாலும்

பூம்பொழிலாய் கவிதை வரும்


பொங்கல் தின்றாற் 

 போல் உளமெலாம்

தித்திக்கும்


எங்கள் குத்தனூரார்

சொல்லாட்சி

மயக்கம் தரும்


நற்றமிழ் கவிதையிது எதிரொலிக்கும் எத்திக்கும்.


ஃபெங்கல் சீற்றம் தணிகிறதோ இல்லையோ


தமிழின் ஏற்றம்

உலகையே 

வலம் வரும்.


--ஸ்ரீவி

-----------------------------

ஃபெங்கல் புயலே!

எமது நீர்நிலைகள்,

குளங்கள்,ஏரிகள்(எவ்வளவு மீதம் இருக்கிறதோ அவ்வளவு) இவற்றை நிரப்பு

அதுவே உனக்கு சிறப்பு.

வலிவான புயலாம் நீ , ஃபெங்கல்.

ஆனால்  தவறு,தமிழர் விருந்தோம்பல் கருதி

நீ இங்கு தங்கல்.


தென்றலாக கருமாறி

எம்மை வருடி, பன்னீர்

துளிகளாக குளிர்வித்து

செல், ஃபெங்கல்!

----மோகன்


-----------------------------

இடுக்கண் ஃபெங்கல் 

வருங்கால் 

குளிரில்/ பயத்தில் 

தாளம் போடுமே 

முப்பத்திரு பல்!

(விழுந்திருந்தால் கழித்துக் கொள்ளுங்கள்)

இருந்தாலும் கேட்போம்

ஏதேனும் முறுகல்..


பள்ளிகள் மூடல்..

சீறும் புயல் கண்டு

சிறுவர்கள் மட்டும் செய்யவில்லை சாடல்..

வீட்டிலிருந்தே வேலை 

பார்ப்போரின் 

வழியில்லா புலம்பல்!


விடியற்காலை விடைபெறுமாம்..

சின்னஞ்சிறிய ஆறுதல்! 

அதுவரை 

அடித்துத் தள்ளுமே

இந்தப் புயல்!

ஏரி குளங்கள் நிரம்பல்..

வண்டிகள் போக வழியில்லாமல் திரும்பல்..!

சுலபமாய்ச் சொல்லிவிட்டாய்...

கேட்கிறது முனகல்!

வேறு வழியில்லை..

காலை வரை சற்றுப் பொறுங்கள்!


- சாய்கழல் சங்கீதா

Thursday, November 28, 2024

இந்தக் குளிரில்...

 இந்தக் குளிரில்... 


இந்தக் குளிரு நமக்கு ஒத்துவராது

   எத்தனை சட்டை போட்டுக் கொள்வது


பெந்த பெந்த விழியும் விழிக்குது

   பெங்களூரா? என ஐயம் எழுகுது


வெந்த சோறு அது வேண்டாம் என்குது

   விறுவிறு, மொறுமொற என வேண்டுது


பிந்து அப்பளம் பொரி எனக் கேட்குது

   பிள்ளைக்கும் இலாமல் தின்று தீர்க்குது


மந்தமாய்க் கைகட்டி உட்காரச் சொல்லுது

   மசால்வடையாவது கிடைக்குமா ஏங்குது


தந்திமுகனை வணங்க நிபந்தனை வைக்குது

   " தருவாரா பொங்கல் சுடச்சுட? " என அது


சந்திரன் அவனைப் போ என விரட்டுது

   சப்பாத்தி, குருமா கேட்டு மிரட்டுது


அந்த நாள் படம் " அதே கண்கள் " பார்க்கணும்

   அதோடு வறுத்த வேர்க்கடலை கொரிக்கணும்.


__  குத்தனூர் சேஷுதாஸ்

Tuesday, November 26, 2024

சொட்டச் சொட்ட...

 சொட்டச் சொட்ட... 


சொட்டச் சொட்ட மரத்தில் நனைகிறது காகம்

   சொல்லிச் சொல்லி அடிக்குது மழை பாவம்


கட்ட வீடு என்று கடன் அது வாங்கியதோ? 

   கந்து வட்டிக்காரன் வட்டி கேட்கிறானோ? 


பட்டப் பகல் என்பதால் பார்க்க முடிகிறது

   பரிதவிக்கும் அதன் நிலை புரிகிறது


துட்டு இல்லை எனில் நாமும் அவ்வாறே 

   தெருவோரம், பாலம், மரம் அதன் கீழே. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


-----------------

கணேசன் ஐயா,

காக்கைகள் பற்றிய உம்பதிவு எம் சிந்தனையைத் தூண்டியதன் விளைவு மற்றும் 'காக்கை குருவி  எங்கள் ஜாதி'

என்று நமது பாரதியே கூறி உள்ளாரே!



காகங்கள்

----------

காக்கைகள் 

பாரம்பரியத்தை விடாது கடைப்பிடிக்கும்

இனம்,ஆயிரமாயிரம்

ஆண்டுகளாக-மழையில் நனைந்து, வெயிலில் உலர்ந்து;மழையங்கியோ , குடைகளோ, ஆறு அறிவு படைத்த நமக்குத்தான்!


இன உணர்வு என்று பேசி வாய்ச்சொல்லில்

வீரம் காட்டும்  மாந்தர்க்கு,

டில்லிக் காக்கையோ,

சென்னைக் காக்கையோ,'கா கா'

என்றுதான் கரைகின்றன; இனத்தோழரைப் பகிர்ந்துண்ண அழைப்பு விடுக்கின்றன!கறுப்பாய் இருந்தாலும்

உள்ளம் வெண்மை.


காலத்துக்கு ஏற்றவாறு

உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் போலும்!- முன்னோரை நினைத்து சாதம் வைத்தால் தீண்டாது( ஓரக் கண்ணால் ஏளனப்பார்வை வேறு!)

ஆனால்  ' கலவைச்சிற்றுண்டியை( மிக்ஸர்) விரும்பிக்கொத்தும்!


இவற்றின்இறக்கைகள்

தத்துவ ஞானிகள்- நீர்த்துளிகளில் நனைந்தாலும்  துளிகள் ஒட்டுவதில்லை!

- மோகன்

Sunday, November 24, 2024

புதினாவின் போதனை

 புதினாவின் போதனை


குழந்தை முதல் முதியோர் வரை புதினா பிடித்த மணம் 

   " கொண்டா கொண்டா " என பசிப்பது இதன் குணம்


வழக்கமாய் உணவகத்தில் புதினா சட்னி இருக்கும்

   வழித்ததை உண்டதும் மீண்டும் கேட்கத் தோன்றும்


பொழுது போகவில்லை புதினா கட்டு வாங்கினேன்

   பொறுமையாகப் பிரித்து ஆயத் தொடங்கினேன்


அழுகிய இலைகளோ அம்புட்டு இருந்தன

   அவை எலாம் நீக்கி மேலும் தொடர்ந்தேன்


புழு ஒன்று வழவழவென நெளிந்தது கருப்பாய்

   பொத்தெனப் போட்டேன் நெளிந்தேன் வெறுப்பாய்


கழுவ இலைகளைக் கலயத்தில் நீர் விட்டேன்

   கால் அளவு படிந்தது மண் அடியில் திடுக்கிட்டேன்


பழனி தேநீர்க் கடை போனேன் தோழருடன்

   பச்சைப் புதினாவை வெட்டினார் "கட்டுடன்"


அழுகை வர உறுதி பூண்டேன் வெளியே இனி உட்கொளேன்

   ஆசை அடங்காத போது விழி மூடிக் கொள்வேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Saturday, November 23, 2024

காதுகள்

கவி கேளாய் !  - கவிதையின் தொடர் கவிதைகள்

கணேசன் ஐயா,

காது கொடுத்துக்கேட்டேன்

உமது படைப்பை உரக்கப்படித்து; செவிக்கு நல்ல உணவு!


இந்தக்காதுகளுக்குப் பல சிறப்புகள்:



-கணவர் சொல்லி

துணைவியர் காதுகளில்போடுவது

வைரத்தோடுகளை  மட்டுமே!


-ஆவணப்பதிவு அற்ற வரலாற்றுச்செய்திகள்

செவிவழிச்செய்திகள்

என்றே அறியப்படும்.


-தேன் பாயும் பிரதேசமாக, பாரதியும்

காதையே தேர்ந்தெடுத்தார்!


-கண்கள நன்கு நோக்க விழி ஆடிகளைத் தாங்கி

உதவுவது செவிகள் அன்றோ!


-நுண்ணறிவை செவிவழி பெறுவது

கேள்வி ஞானம் என்றே

போற்றப்படுகிறது.


-மருத்துவர் இதயத்துடிப்பை அறிய உதவும் குழல்களையும்

செவிகளில்தானே மாட்ட வேண்டும்!


தூண்டி விட்டீர்

செவிகளிப்பற்றி

சற்றே சிந்திக்க;

நமது பாரம்பரியங்களே

'கர்ண' பரம்பரையாக வந்தவைதாமே!


- மோகன்


----------------------

கெட்ட விக்ஷயங்களை கேட்காது....

வம்பர்களின் போலித் தகவல்களை படிக்காது.....

குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்காது.....

வயிற்றில் தேவையற்றவை அடைக்காது......

தீய பழக்கங்கள் பிடிக்காது.........

தீயவர் சொல் கேட்டு நடக்காது


இருப்பின் வாழ்க்கை சிறக்கும்...

காதில் விழுந்த செய்தியை காதுகொடுத்து கேளுங்கள்....

😊 சாயி 😊


----------------

வம்பு தும்புகள் வந்திடின்

கேளாச் செவியினராய்


அன்பு நிறை சொற்களையே

கேட்கும்

செவியினராய்


மனிதகுலம் இருந்திட்டால்

எல்லாம் நன்மையே

- ஸ்ரீவி

----------------------



கவி கேளாய் !

 கவி கேளாய் !


அலையாய்க் காற்றில் வரும் அதிர்வுகளைப் பிரிப்பாய்

   ஆனந்த இசை என்பாய், அபஸ்வரம் என்பாய்


தலையசைக்கச் செய்வாய், தாளம் போட வைப்பாய்

   தாங்க முடியாத போது பொத்திக் கொள்வாய்


உலை வைக்கும் கைகளில் வளையல் போடும் உலகு

   ஊர் சுற்றும் கால்களில் அதுவே மாட்டும் கொலுசு


வலை விரிக்கும் விழிகளுக்கு மையும் தீட்டும்

   வம்பளக்கும் வாயிலே வண்ணம் காட்டும்



சிலை என்பார், மலர் என்பார், யார் யாரையோ வர்ணிப்பார்

   சிலரே உனை எனைப் போல் "சங்குப் பூ  " என்பார்


விலையுயர்ந்த தோடு என்று குத்தி மாட்டுவார்

   வீட்டுச் செலவு எனச் சொல்லி மீட்டும் கேட்பார்


மலைக்கிறேன், வியக்கிறேன் செவியே ! உனைக் கண்டு

   மறக்கும் முன் மற்றொன்று சொல்ல உண்டு


தலையணை மந்திரம் வர தனி இருக்கை தருவாய்

   தாடி, மீசை வல்லினத்தை தவிடுபொடி ஆக்குவாய்



செம்மொழித் தமிழ் உன்னில் தேனாய்ப் பாயும்

   சேயாய்த் துள்ளுவாய், வாயில் நீர் ஊறும்


அம்பாய் வரும் வதந்தியை அப்படியே நம்புவாய்

   அறிவுரையை அடுத்த செவி வெளி அனுப்புவாய்


கம்பன், பாரதி எதைச் சொன்னாலும் களிப்பாய்

   கணேசன் கவிதை எனில் காற்றில் விடுவாய்


வம்பு வருமா என்று வாசல் திறந்து வைப்பாய்

   வாழிய செவிகளே ! உம்மால் வளரும் செய்திகளே.


__  குத்தனூர் சேஷுதாஸ்

Friday, November 22, 2024

மழை

 அனைவரது வாழ்விலும் உண்டாம் புயல் காற்றுடன்

ஒரு பெரு மழை! 

அழையா மழை!

விழையா மழை!


பெரு மழை தாங்கிடும் நம் வலிமை!

இதுவல்ல பெருமை!

பெரு மழைக்குப் பின்

மயான அமைதியாம்..

இதைக் கடக்கத் தான் வேண்டுமே

சிதையா  மனத்துடன்

தனி வலிமை!


மழைக்கும் மயான அமைதிக்கும் பின்..

தழைக்குமே மீண்டும்

நம் வாழ்க்கை!

உழைக்குமாம்  நம் மனம்...

புதிய பார்வையுடன்!

புதைந்த நினைவுகளுடன்!

முதிர்ந்த அனுபவத்துடன்!


- சாய்கழல் சங்கீதா

Monday, November 18, 2024

ஐயோ ! அத்துமீறல்

 ஐயோ ! அத்துமீறல்


வாரத் தொடக்க நாள் காகம் எங்கோ கரைந்தது

   வாய் காபி கேட்க  எழுந்து விட்டேன் விரைந்து


தூரிகையால் கீழ் வானில் சூரியன் ஏதோ தீட்டும் 

   துவண்ட இளமை ஆழ்ந்து துயிலும் நேரம்


பேரனும், நானும் நடந்து வரப் புறப்பட்டோம்

   பேசியபடி வந்தவன் " பார் தாத்தா " சுட்டினான்


கீரி ஒன்று குட்டிகளுடன் களித்து விளையாடியது

   கிரிக்கெட் சிறார்கள் விளையாடும் முட்காடு


லாரிகள், ஜேசிபி அணிவகுத்து வரக் கண்டோம்

   லட்சங்கள், கோடியில் வீடு விற்கும் திட்டம்


" வாரி சுருட்டிக் கொண்டு எங்கவை போகும்? " பேரன்

   வாயில் விடையில்லை பரிதவித்தேன் நானும்


ஆரிடம் போய்ச் சொல்ல இதெல்லாம் நிற்கும் ? 

   அதனிடத்தில் நாம் புகுதல் அத்துமீறல் ஆகும்


கோரிக்கை பிரமனிடம் வைத்தேன் நெஞ்சில் அடைப்பு 

   " கொஞ்சம் நிறுத்தி வையும் மனித குலப் படைப்பு ". 


__  குத்தனூர் சேஷுதாஸ்

இளவரசிகள் தினம்

 இன்று இளவரசிகள் தினமாம்

என் நினைவிலே மூன்று இளவரசிகள்.

முதல் இளவரசி என்னைப் 

பெற்ற தாய். 

பத்து மாதம் சுமந்து பெற்று 

பாலூட்டி சீராட்டி வளர்த்த உன்னை 

வாழ்த்த வயதில்லை 

வணங்குகிறேன். 

இரண்டாம் இளவரசி 

என்னை மணந்த என் மனைவி. 

கட்டிக் களி மண்ணாக இருந்த 

என்னை ஊரார் மெச்சும் அழகிய 

பாண்டமாச் செய்தவள்.

உனக்கு நான் என்ன கைமாறு 

செய்யப் போகிறேன். 

உன்னை மேலும் வருத்ததாமல் 

இருந்தாலே போதும். 

மூன்றாவது நான் பெற்ற இளவரசி. 

நீ அன்றும் சரி இன்றும் சரி உன் 

செல்லக் குறும்புகளாலும் 

சேட்டைகளாலும் என்னை ஆட்கொண்ட நினைவுகள் என்றும் 

பசுமை. எங்கள் இல்லத்தின் அழகிய இராட்சசி.

நீ என்றும் எங்கள் அன்பிற்கு இனியவளே.


பதிவிடும் அவசரத்தில் எங்கள் வீட்டு

இன்னொரு இளவரசியை மறந்து விட்டேன். 

"தாத்தா" என்ற உரத்த குரலுடன் என்னை மிரட்டி அவளுடன் விளையாட  கட்டளை இடும் என் மற்றும் ஒரு தாய் என் செல்ல பெயர்த்தி.

Sunday, November 17, 2024

மின் தடை

 தொலைக்காட்சி  திரையில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

வெளியே வந்து

கருவானித் திரையில்  மின்னும் நட்சத்திரங்களை எண்ணினேன்..

சிறு வயதில் பார்த்து எண்ணியது..

பல நாள் மீண்டும் எண்ண வேண்டும் என்று எண்ணியது..

இன்றாவது எண்ணு

என்று மின் தடை சொல்லியது! 

இலட்சியதின் தடை 

விலகியது! 


- சாய்கழல் சங்கீதா

-------------------------------------

தட்டுப்பாடே இல்லாத 

மின்தடைகள்!


கட்டுப்பாடே இல்லாத

மின்கட்டண உயர்வுகள்!


வேர்க்கிறது!


ஆனால் மெழகுவர்த்திகளும் கைவிசிறிகளும்

என்றும் நம்துணை நிற்கும்என்ற ஆறுதல்!


-- மோகன்


------------------------------


Thursday, November 14, 2024

குழந்தைகள் தினம்(2024)

 ◆०◆०◆०◆०◆०◆०◆०◆०●०●०◆

குழந்தைகள் தினம்: நவ.14

நல் வாழ்த்துகள்

◆०◆०◆०◆०◆०◆०◆०◆०◆०◆०◆


வஞ்சமில்லா நெஞ்சம் கொண்டோர்

கொஞ்சு மழலையால் உலகம் ஆள்வோர்

அஞ்சுதல் இன்றி ஆட்டம் போடுவார்

கெஞ்சிக் கொஞ்சி காரியம் முடிப்பார்


கைகால் முளைத்த தேவதை இவர்கள்

பைகள் தூக்கிப் பள்ளிக்குச் செல்வர்

தைதையெனவே ஆடியும் மகிழ்வர்

மைபூசிய விழியால் அழகை இரசிப்பர்


கவலையில்லா உள்ளம் கொண்டு

கபடம் களவு ஏதும் இன்றி

கலகலப்பாய் சிரித்தே வாழ்வார்

பூவுலகை சொர்க்கம் ஆக்குவார்!


குழந்தைகளே இன்ப ஊற்று!

குழந்தைகளே அன்பின் ஜோதி. 

குழந்தைகளே உலகின் சக்தி!

குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


--------------------

குழந்தைகள் தினம்

------------------

வாழ்க்கைச் சூழலில்

சிக்கிக் களைப்புறும்

மாந்தர்தமக்கு மகிழ்வூட்ட இறைவன்

அளித்த வரம் குழந்தைகள்.


வெள்ளை உள்ளம் கொண்டு, கள்ளமில்லா சிரிப்புடன் வெள்ளந்தியாக  உலா வரும் இவர்தம்மைக்

காணறுங்காலை

எத்தனை கோடி இன்பம் இவ்வுலகில்

என்று பாடத்தோன்றுகிறது.


இவர்கள் அரசில்

மொழி, எல்லை, இட ஒதுக்கீடு பிரச்னைகளே

கிடையாது-யாதும் ஊரே, யாவரும் கேளிர்தான்!


குழந்தைத்தனமாக நடக்காமல் குழந்தைகள் போல் மக்கள் நடப்பின்

வையகமே அமைதிப்பூங்கா ஆகாதோ!


குழந்தைகளுக்கு இந்த 'மழலை'யின்

'குவா குவா'(குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்) என்றபடி

இனிய குழந்தைகள்

தின நல்வாழ்த்துக்கள்!🌺🌺🌺


---மோகன்

-------------------------------

நவம்பர் 14 !

நமக்கெல்லாம் குழந்தைகள் தினம்!

பலூன் தராத😀

நேரு மாமா பிறந்த தினம்!

உலக அளவில் நவம்பர் 20..

பல நாடுகளில் ஜூன் 1...

இன்னும் சில தேதிகள்!

குழந்தைகளை ஆலோசிக்காமல் வளர்ந்த குழந்தைகள் தேர்வு செய்த தேதி!

இதுவல்ல சேதி!

குழந்தைகளுக்குக் கல்வி,

பாதுகாப்பு என 

பட்டியல் நீளும்!

பலன் முழுதும் சேர்ந்ததா?

தெரியவில்லை இந்நாளும்!


மேலை நாடுகளில் 

பெற்றோர் " பட்" என்று அறைந்தால்

போன் பறக்குமாம்!

பேசுபவர் :குழந்தை

அளிப்பது: புகார்..

" வாட்" என்று கேட்டு வீட்டின்

" கேட்" திறந்து வருவராம்!

"மை காட்" என்று இரண்டு தலைகளில் நான்கு கைகள்!!!😀


குழந்தைகள் தின வாழ்த்துகள்!💐


- சாய்கழல் சங்கீதா


----


Wednesday, November 13, 2024

மைனா இரண்டு ...

 மைனா இரண்டு ... 


ஐநா பாதுகாப்பு அவையில் பாரதம் என்று இடம் பெறும் ? 

   ஆபரணத் தங்கம் விலை எத்தனை தான் ஏறும் ! 


சைனா நம் எல்லையில் என்று பின்வாங்கும் ? 

   சனியன் பாகிஸ்தான் தலைவலி என்று நீங்கும் ? 


நைனா என தந்தையை (மேஜர்) முகுந்த் அழைத்த காரணம்

   நாணமிலா ஊடகங்கள் எத்தனை நாள் விவாதிக்கும் ! 


மைனா இரண்டு வெளியே மகிழ்ந்து சிறகடிக்குது

   மனிதன் மண்டை மட்டும் குடையுது, வெடிக்குது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

பலூன் மாமா

 ●०●०●०●०●०●०●०●०●०●०●०

*பலூன் மாமா வந்தாலே*

*பரவசந்தான் பெருகிடுமே!*

●०●०●०●०●०●०●०●०●०●०●०


திருவிழாக் காலங்களிலே

தெருவெங்கும் தோரணங்கள்

இரவைப் பகலாக்கும்

வண்ணமிகு மின்விளக்குகள்


பாலகர்கள் பரவசங் கொள்ள

பற்பலவாய் காரணங்கள்

பலூன் மாமா வந்திட்டால்

விண்ணைத் தொடும் பரவசங்கள்


கலர் கலராய் பலூன் பறக்கும்

சிறார்களின் கண்கள் சிறகடிக்கும்

கைகளில் பலூன் கிடைத்திட்டால்

இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்கும்


எளிமையான குழந்தை மனமோ

கொள்ளை மகிழ்வில் குதித்தாடும்

இனிமையான அந்த நாட்கள்

திரும்பி வர மனம் தவிக்கும்!


பலூன் போன்ற இளமைக் காலம்

பறந்து போகும் விரைவினிலே

காற்றிறங்கிய பலூன் போல

ஆகி விடுமே மனிதரின் வாழ்வே!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


-------------------

பலூன்  மாமா

-------

இந்த ஊதும்பை அல்லது வளிக்கூண்டு

எளியவர்க்கும் மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு சாதனம்.


அது மட்டுமா?

இது மருத்துவர்க்கு 

இருதய அடைப்பை

நீக்க உதவும் உயிர்காப்பான்.


அக்காலத்தில் இதை விற்பவர் மாமா என்று அறியப்படுவார்

இக்காலத்தில் 'அங்கிள்' அல்லது 'அண்ணா'.


இவர் இப்போதெல்லாம

காற்றழுத்த விசைக்குழாயை பயன்படுத்துகிறார்

மாசுக்காற்று நிறைந்த இவ்வுலகில் வேறென்ன செய்ய?!


இன்று பிறந்த நாள் விழாக்களில்

இப்பையை ஊதி உடைப்பதோ அல்லது

மெழுகுவர்த்திகளை ஏற்றி அணைப்பதோ

கொண்டாட்டத்தின்

வெளிப்பாடுகள்.


இதன் வாழ்வு  சுருக்கமானது எனினும்ஒரு தத்துவத்தை இனைவூட்டுகிறது:

"காயமே இது பொய்யடா

வெறும் காற்றடைத்த

பையடா "என்ற சித்தர் 

வாக்கை!


பெயர்கள வேறுபட்டாலும்

இவர் விற்கும் பொருளுக்குக் காலம்

தாண்டிய மதிப்பு உண்டு.


-மோகன்


------------------------------

உரு தெரியாமல் எங்கோ சுருங்கி

யார் கண்களுக்கும் 

புலப்படாமல்  இருக்கும் பலூன் போன்றவர்கள் சிலர்! இவர்களின் காதுகளுக்குள் நம் வாயையே பலூனாக்கி 

நம்பிக்கை என்னும் காற்றை நேர்மறையாய்  ஊதினால் பலரும் பார்த்துப் பரவசப்படும் பலூனைப் போல் உயரப் பறப்பர்!

எதிர்மறை ஊசியால்

பயம் காட்டிக் குத்தினால் இருக்கும் தன்னம்பிக்கையும் இழந்து ஒடுங்கி ஒன்றுமில்லாமல் போவர்!

உங்கள் வாய் பலூனா

ஊசியா?


- சாய்கழல் சங்கீதா

-------------------------


Tuesday, November 12, 2024

மிதி வண்டி

 ●०●०●०●०●०●०●०●०

*மிதி வண்டி தரும்*

*வாழ்க்கைப் பாடம்*

●०●०●०●०●०●०●०●०


கொதி நிலையில் இருந்திடினும்

கூலாக இருத்தல் நன்றே

மிதி வண்டியிது சொல்கின்ற

வாழ்க்கைப் பாடம் இதுவே


துதி பாடி தூக்கி வைக்கும்

துச்சர்களே இழித்துரைப்பர்

சதி பலசெய்து குழியும் கூட

இச்சையோடு பறித்திடுவர்


வாழ்க்கைப் பயணம் நடக்கையிலே

வழுவாது பேலன்ஸ் செய்ய

வரங் கொடுக்கும் தேவதையாய்

சைக்கிள் ஓட்டுதல் கைகொடுக்கும்


நல்ல நண்பர்கள் தாங்கிப் பிடிக்க

நிலை தடுமாறா நிலையைக் கற்க

ஹேண்டில் பாராய் கொள்கைகளும்

மிதிக்கும் பெடலாய் கடின உழைப்பும்


நிச்சயமாகத் தேவையென

சைக்கிள் ஓட்டக் கற்கையிலே

சிறாராய் இருக்கும் நாள்முதலாய்

சிரத்தையோடு கற்றிடுவோம்


வாழ்க்கை நடத்த அடிப்படை பாடம்

போதிமரமாய் சைக்கிள் தந்திடும்

நிலைமாறா லாவகம் பெற்றிடின்

கீழே விழுதல் சிறிதும் இல்லையாம்


பேலன்ஸ் இல்லா வாழ்வு என்றால்

அல்லும் பகலும் மிகவும் தொல்லையாம்

நல்ல தோழர்கள் உடன் வரட்டும்

இனிதாய் வாழ நலம் தரட்டும்


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


-----------------------------------------------------------

மிதி வண்டி தரும் பாடம்

--------------------

மிதி வண்டி நம்வாழ்வின் தொடக்கத்தில்

சமநிலை(balance) கற்க உதவும் ஆசான்.


தந்தை பின் தள்ளி தரும் உந்துவிசை

வாழ்வு முழுவதும் நம்மை முன்நோக்கி நடத்தும் , மண்மிசை.


குரங்கு  போல மிதிக்கட்டையை அழுத்தி  நண்பர்களோடு போட்ட பந்தய

நாட்களை நினைக்கிறேன்

இனிக்கிறது

நெஞ்சம் எல்லாம்

மணக்கிறது.


மிதி மிதி என்று மிதித்தாலும்

அதை மதிக்காமல்

நம்மையும் ,சுமக்கும்

சுற்றுச்சூழலையும்,

மாசின்றி காக்கும்

உடற்பயிற்சிக்கூடம்((gym)

இந்த இரு சக்கர வண்டி


--மோகன்


-----------------------------------

அடி

----

இந்த அடிகள்தான் எத்தனை எத்தனையோ!


நமக்கு சொல்லடி கல்லடி  என்றுதான் பழக்கம்

வெங்கட் ஐயாவோ

குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி என்று

யாப்பில் பல சுற்று 

வருவார்.



அந்தக்காலம்:

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்

இந்தக்காலம்:

அடியும் உதவாது

அண்ணன் தம்பியும்

உதவ மாட்டார்!


அந்தக்காலம்:

அடி மேல்அடி வைத்தால் அம்மியும்நகரும்


இந்தக்காலம்:

அடி மேல்அடி வைத்தால் மம்மிக்கும்

மன்னிப்பு கிடையாது

சட்டத்தில்.


அடி நாக்கில் நஞ்சும்

நுனி நாக்கில் அமுதமும் உடையார்

உறவு கலவாமை வேண்டும்


- மோகன்

-------------------------

சொல்லடியோ தடியடியோ...

"நடி"ப்பை விட

அடி இனிது..

பண்பை ஊட்ட

அன்பால் அடித்தால்

அதனினும் இனிது!

தலையில் அடி வாங்கி சித்தம் 

கலங்கிய பித்தன்

சொன்னதல்ல...

மரத்தடியில் சித்தனாகிய

புத்தன் சொன்னது!

பலரும் பயணிக்கும் 

பேருந்தில்

மிதிவண்டி போல்

ஊன்றி மிதிக்க வேண்டியதில்லை!!!

சக பயணிகள் 

ஒருவருக்கொருவர்

கால்களை மிதிக்காமல்

ஒவ்வொருவரையும்   மதித்து..

இடம் கொடுத்து.. இடம் பிடித்து...

ஓட்டுனர்  இதமாய் "ஸ்டியரிங்" பிடித்து..

அளவாய் "ஆக்சிலரேட்டரை" மிதித்து

சாலை விதிகளை மதித்து 

சீரான வேகத்திற்காய்க் 

கட்டுப்படுத்தி 

போட வேண்டிய

"பிரேக்"குகளை வண்டியே

ஆட்டம் காணா வகையில்

மிதமாய்ப் உதைத்து..

நடத்துனர் சரியான பயணச்சீட்டைக் கிழித்து 

சரியாகக் கொடுத்து...

வழி நடத்த...

பாதுகாப்பான பயணம்!

நிறுத்தங்கள் இல்லாத

இனிமையான பயணம்!

யாரும் இறங்க விரும்பாத பேருந்து!

என்றென்றும் நமக்குண்டு

தமிழ் விருந்து!


தாய் அடித்தாலும் 

வலிப்பதில்லை!

தந்தை கடிந்தாலும்

வலிப்பதில்லை!

இவர்கள் அன்பில்

நடிப்பு இல்லை!

துன்புறுத்த வேண்டி 

தண்டிப்பதில்லை!

நமக்கொரு துன்பமெனில்

இவர்களுக்கு இணையாய்

யாரும் துடிப்பதில்லை!

இவர்கள் அன்பிற்கு

ஈடு இணையில்லை!

எனினும் இவர்களைப் போல் நடிப்பில்லா

அன்பால் அடியுங்கள்!

வலி தெரியாது!

நல்வழி தெரியும்!


அன்பால் அடியுங்கள்!

அடியாத மாடும் பூம்பூம்

மாடாய்த் தலை ஆட்டும்!


அன்பால் அடியுங்கள்!

படியாத மாடென்ன..

பலரும் அடி பணிகின்ற

நாடாளும் மன்னரும் 

நாடி வருவர்!!!


- சாய்கழல் சங்கீதா

-------

அடி மேல் அடி வைப்பின் அம்மியும் நகரும்.....

அடிக்குஅடி மிதித்து வீழ்வின்

மிதிவண்டியும் பழகும்......‌

😊 சாயி 😊

------

மிதிவண்டி


அதிகாலை அன்று அனைவர்க்கும் தெரியும்

   ஆனைச்சாத்தன் கூவும், அதுவும் பரிச்சயம்


புதிதாய் வாங்கித் தர அப்பாவிடம் காசில்லை

   புதிதே வேணுமென பிடிவாதமும் இல்லை


முதியோர் இனி முடியாதென மூலையில் வைத்தது

   முகுந்தன் துணையோடு வெளியே எடுத்து


எதிரே எமனாக வரும் லாரி, பேருந்தில்லை

   எருமைகளே வரும், நகர்வதே இல்லை


குதிகுதித்துக் கூட வரும் நாய்க் குட்டிகள்

   குத்தனூரில் இதுவே அன்று ட்ராபிக் பாருங்கள்


சதிகாரன் சங்கரன் தள்ளினான் பின்னே

   சற்றும் எதிர்பாராத சாந்தி மாமி குறுக்கே


மதிவாணன் எங்கிருந்தோ வந்து இடித்தான்

   மண்ணில் விழ, இரத்தம் வர, மண்ணே போட்டான்


மிதிவண்டி இவ்வாறு தான் அன்று கற்றேன்

   மிதிலையில் வில் முறித்துக் ஸ்கூட்டர் பெற்றேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-----------------



Monday, November 11, 2024

நான்காம் கனி

 நான்காம் கனி


கப் பில் செக்கச் சிவந்த  மாதுளை வித்துக்கள்

   கரிசனமாய் நீட்டிய மனைவி வாயில் முத்துக்கள்


எப்போதோ நடந்தது இன்றும் நெஞ்சில் பசுமை

   ஏனோ இந்நாளில் எல்லாம் தோணுது வெறுமை


குப்பனும், நானும் குழந்தையராய் நண்பர்கள்

   கூடி விளையாடினோம் குத்தனூர் மண்ணில்


தப்பெனத் தெரிந்தும் துணியும் வயது

   தண்டனை ஏதானாலும் ஏற்கும் மனது


சிப்பாய் போல் துல்லியமாய்த் திட்டம் போடுவோம்

   சீறி நாகம் வரினும் எதிர் கொள்வோம்


அப்பா அறிந்தால் அடி வாங்கும் கன்னம்

   அம்மா " அடுத்த முறை பண்ணாதே " என்னும்


முப் பழங்கள் தொடர்ந்து இக் கனி நான்காம்

   முள்ளிடை யாரோ மூடிய செந்தேனாம்


சப்பாத்திக் கள்ளியின் கனியே மனக் கண்ணில்

   சட்னி, குருமா ஏதும் வேணாம் அதை உண்ணில்.

கப்பில் செக்கச் சிவந்த  மாதுளை வித்துக்கள்

   கண்டுகொள்ளாத நான், ஏக்கத்தில் ஈக்கள்.


__  குத்தனூர் சேஷுதாஸ்

Saturday, November 9, 2024

வேண்டா தனைத்தையும் நீக்கு

 -------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

--------------------


★०★०★०★०★०★०★०★०★

(7) வேண்டா தனைத்தையும் நீக்கு

★०★०★०★०★०★०★०★०★


கல்லூரியின் விளையாட்டு மைதானம். கல்லூரிகளுக்கு  இடையேயான கால்பந்துப் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த அரை இறுதிப் போட்டியில் இதுவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. நாக்-அவுட் கேம் என்பதால் பெனால்டி ஷூட் அவுட் மூலம் போட்டியின் முடிவு நிர்ணயிக்கப் படும். எப்போதும் அரை இறுதி வந்திராத அரசு கலைக் கல்லூரி இம்முறை அரை இறுதியில் இப்போது விளையாடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கோப்பையை வெல்லும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியோடு மோதிக் கொண்டு உள்ளது. அரசுக் கல்லூரி அணித் தலைவன் தாள முத்து தனது தனித் திறமையினால் செமிஸ் வரை தனது அணியைக் கொண்டு வந்துள்ளான். அந்த அணியின் கோச் அரவிந்த் மாஸ்டர் கொடுத்த பேராதரவும் பயிற்சியும் அதற்கு உதவின. வெகு சுலபமாக இவர்களை ஊதித் தள்ளிடலாம் என்ற மிதப்பில் இருந்த செயின்ட் ஜான்ஸ் கோல் ஏதும் போட முடியாமல் திணறியது. தாளமுத்து இரண்டு முறை கோல் அடிக்க நெருங்கியும் அவனது அணியினர் பாஸ் செய்வதில், எதிரணியினரை அணைகட்டி சமாளிப்பதில் காட்டிய தயக்கம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் அவனால் கோல் அடிக்க இயலாது போனது. செகண்ட் ஆஃப் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் எதிரணியின் கோல் கீப்பர் காலைப் பிடித்தவாறே நொண்டிக் கொண்டு கீழே அமர்ந்தான். மருத்துவ உதவிக்காக ப்ரேக் வந்தது. அதனைப் பயன்படுத்தி எதிரணி கோச் தனது அணியின் கேப்டனைக் கூப்பிட்டு வேகவேகமாக ஆலோசனை கூறினார். இதற்காகவே கோல் கீப்பர் அடிபட்டது போல் நாடகமாடி இருக்கக் கூடும் என தெரிகிறது. இதுவும் ஒரு கேம் ஸ்ட்ராடஜியே. 


இந்த ப்ரேக்கை  தாளமுத்துவும் சரியே பயன்படுத்திக் கொண்டான். தன்னோடு ஃபார்வார்டு ஆடும் லெஃப்ட் விங் மற்றும் ரைட் விங் இருவரையும் அழைத்து, 


"இன்னும் மூணு அல்லது நாலு நிமிஷம் இருக்கு.. அதுக்குள்ள நாம கோல் அடிக்கணும். பெனால்டி ஷூட் அவுட் போகக் கூடாது. போனா அவனுக்கு ஈஸியா ஜெயிச்சுடுவானுங்க. பால் இப்போ இந்தக் கோர்ட்லதான் இருக்கு. ஃப்ரீ கிக்கை ரமேஷ்(ரைட் விங்) அப்துல் கிட்ட (லெஃப்ட் விங்) அடிக்கட்டும். எல்லாரும் அப்துல்ட்ட ஓடுவானுங்க. ரமேஷ் சென்டர் பாயின்ட் வந்து நிக்கட்டும். நான் லெஃப்ட் பொஷிசன்ல கோல் கீப்பர் சைட்ல நிக்கிறேன். ரமேஷ்கிட்ட அப்துல்... நீ திருப்பி தள்ளு. அவன் சென்டர் பாயின்ட்லேருந்து என் பக்கம் லாப் (lob) செய்யட்டும். அவனுங்க டிபன்ஸ்ங்கள நம்ம ஆளுங்க மார்க் பண்ணி அணை கட்டிட்டா இதெல்லாம் ஈஸியா செய்யலாம். நான் ஹெட்டர் பண்றதா .. இல்ல.. சிசர்ஸ் கிக் அடிக்கறதாங்கறத வர ஹைட்-ஐ வச்சு முடிவு செஞ்சுக்குறேன். " -இப்படி மளமளவென சொல்லி விட்டு ஒரு நொடி கண்ணை மூடி யோசித்து விட்டு காலையில் அவனது தாய் அவனுக்கு சொன்ன ஒரு விஷயத்தை நிதானமாக தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான்:


"நம்மால முடியாதுங்குற எண்ணத்தை நீக்குவோம். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களே நமக்கு பெரிய தடை. நமக்கு வேண்டாதவை. அதை நீக்கிட்டா, நம்மால முடியும் என்ற நம்பிக்கை தானே வரும்" - இதைச் சொல்கையில் அவனது கண்கள் ஒளிர்கின்றன. குரலில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த உற்சாகம் பிறரையும் தொற்றிக் கொள்கிறது. இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிகிறது. எல்லோரும் அவரவர் போசிஷன்களுக்கு விரைகிறார்கள்.


ப்ரேக் முடிந்து ரெஃப்ரீ விசில் ஊதுகிறார். வலது புறத்திலிருந்து ரமேஷ் புது உற்சாகத்துடன் பந்தை அப்துலிடம் லாவகமாகத் தள்ளி விட்டு, வேகமாக கோல் போஸ்ட்டுக்கு நேரே சென்டர் பாயின்ட்டுக்கு ஓடுகிறான். அப்துல் அதனை மேலும் இடது புறம் வெளியே தள்ளுவது போல் பாவ்லா செய்து விட்டு திரும்பி ரமேஷிடம் அடிக்கிறான். ரமேஷ் தயக்கமின்றி பந்தினை அடி பாகத்தில் எத்தி விட்டு தாளமுத்து வின் பக்கம் உயரே செல்லுமாறு தூக்கி அடிக்கிறான். அதிக உயரத்தில் வராததால், தாளமுத்து டைவ் அடிப்பது போல் சுழன்று இடது காலால் சிசர்ஸ் கிக் அடிக்க பந்து 'ஜிவ்'வென்று எழும்பி அதிக வேகத்தில், தடுக்கப் பாய்ந்த கோல் கீப்பரைத் தாண்டி வலையில் போய் மோதுகிறது. அரசுக் கலைக் கல்லூரி கோல் அடித்து விட்டது. அம் மாணவர்கள் குதித்துக் கும்மாளம் போடுகிறார்கள். அரங்கமே கூச்சலால் அதிர்கிறது. செயின்ட் ஜான்ஸ் கேம்ப் அதிர்ச்சியில் மூழ்குகிறது. 


போட்டி முடிய இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் நிலையில் மிட் கோர்ட்டில் உள்ள பந்தை தங்களுக்குள் கடைந்து ஆடி காலம் கடத்துகிறார்கள் தாளமுத்து அணியினர். 


இதோ ஃபைனல் விசில் ஊதியாகி விட்டது. 1-0 என்ற கோல் கணக்கில் செமி ஃபைனலை அரசு கலைக் கல்லூரி வென்று ஃபைனலுக்கு முன்னேறி விட்டது.


 பத்தாண்டுகளாக தொடர்ந்து கோப்பை வென்ற செயின்ட் ஜான்ஸ் ஃபைனலுக்கு வராமல் சோகத்தோடும் விரக்தியோடும் வெளியேறியது. 


மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த தாளமுத்து நண்பர்கள் அவனின் தாயாரை சந்தித்து ஆசி பெறச் சென்றனர். தாளமுத்து தனது தாயாரின் அறிவுரைதான் தனக்குக் கைகொடுத்து உதவியதாகக் கூறியது, அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. தன்னைப் பார்க்க வந்த அவர்கள் அனைவரிடமும் அவனது தாய் சொன்னது இதுதான்:


"தம்பிங்களா! நமக்குள்ள அபார சக்தி இருக்கு. எதையும் செஞ்சு முடிக்கிற திறமையும் தெம்பும் நிறைய இருக்கு. ஆனா அது எல்லாத்தையும் 'வேண்டாத பயமும், சந்தேகமும், எதிர்மறை விஷயங்களும்' மனசுக்குள்ள வந்து குச்சியடிச்சு உக்காந்து கிட்டு அலைக்கழிக்கும். நாம அச்சப் பட ஆரம்பிச்சுடுவோம். தயக்கம் வந்துரும் ... அப்புறம் நம்மால எந்த விஷயத்தையும் உருப்படியா செய்யவே முடியாது. அதோட, உங்க வயசுல வரும் தடுமாற்றங்களான போதை, சூது, மாது போன்ற அரக்கர்களுக்கும் அடிமையாக வாய்ப்புகள் நிறைய வரும் - வேண்டாத அந்த அசுரன்களை நீக்கி வைக்குறது ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒங்க வாழ்க்கையவே முழுசா சீரழிச்சிடும். அதனால்தான் நம்ம பாரதியாரே 'வேண்டாத அனைத்தையும் நீக்கு' அப்படின்னு அறிவுரை சொல்லிருக்காரு. அதையேத்தான் சாமிகிட்டவும் வேண்டுறாரு. இதை நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கன்னா எப்பவுமே வெற்றி தான். போய் ஃபைனல ஜெயிச்சுட்டு வாங்க.. " - இப்படியாக வாழ்த்தி ஆசி கூறினாள். 


பிறகென்ன, ஒரு வாரம் கழித்து மீண்டும் அவளைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்த தாளமுத்து நண்பர்கள் கையில் கால்பந்து போட்டி வெற்றிக் கோப்பை தகதகத்தது எனக் கூறவும் வேண்டுமோ?

மொத்தமாய்.....

 மொத்தமாய்..... 


வேராம் பெற்றோர்களை விட்டுப் பிரிந்தேன்

   வேறெங்கோ வந்து விரும்பியபடி வாழ்கிறேன்


ஊரை விட்டு வந்தேன் உறவுகள் மறந்தேன்

   ஒன்றுக்கும் போகாமல் செலவைத் தவிர்த்தேன்


காரை நானே துடைத்தேன் கணிசம் சேமித்தேன்

   கண் முன் யூ ட்யூப் போட்டு தர்ப்பணம் செய்தேன்


கீரைக்காரியிடமும் பேரம் பேசி வாங்கினேன்

   கிழிந்த ஆடைகள் தாம் ஏழைக்குத் தந்தேன்


மோராய்ப் பெருக்கினேன், தயிரைத் தவிர்த்தேன்

   முழு பூசணி வாங்கி மூன்று வாரம் ஓட்டினேன்


வாரம் ஒருமுறை முன்பு சகோதரியைச் சந்தித்தேன்

   வருடம் என ஆக்கினேன் செலவழிக்க சிந்தித்தேன்


ஆரோ ஒருத்தி அன்று அலைபேசியில் அழைத்தாள்

   அழகாகச் சொலச் சொல அப்படியே வளைந்தேன்


தோராயமாய் இழந்ததையும் பகிர மாட்டேன்

   தொலைந்தன வாரா துவண்டு போனேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Friday, November 8, 2024

பகைமை ஒன்றின்றி பயந் தவிர்த்தல்

 ----------------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

----------------------------


★०★०★०★०★०★०★०★०★०★०★

*(6) பகைமை ஒன்றின்றி பயந் தவிர்த்தல்* 

★०★०★०★०★०★०★०★०★०★०★


மதுரை நகரில் மையத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவ மனை. உலகத் தரம் வாய்ந்த நவீன கருவிகள், தேர்ந்த மருத்துவர்கள், ISO நற்சான்று பெற்ற கட்டமைப்பும் கட்டடங்களும் என கொடி கட்டிப் பறக்கும் மருத்துவ மனை. 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தூங்கா நகரத்தில் இம்மருத்துவ மனையும் தூங்கா மருத்துவ மையமாகத் திகழ்கிறது. 


ஆங்காலஜி பிரிவின் ஸ்பெஷல் ரூமில் 55 வயதான கே.ஜி. ராவ் படுக்கையில் படுத்திருக்கிறார். சில நாட்களாக ஷேவிங் செய்யாததால் முகத்தில் வெள்ளை முட்களாய் தாடியும் அடர்ந்த சால்ட் அன்ட் பெப்பர் மீசையுமாக இருக்கிறார். டை அடித்த தலைமுடி ஆங்காங்கே பல்லிளித்து பழுப்பும், வெள்ளையும், கருப்பும் திட்டுத் திட்டாகத் தெரிகிறது. முகம் மிக வாடியுள்ளது. மார்பு வரை மூடப் பட்டிருக்கும் வெளிர் நீல போர்வையினுள் உடம்பு இருக்கிறதா என ஐயமுற வைக்கும் அளவு உடல் மெலிந்துள்ளது.


யார் இந்த கே.ஜி. ராவ்.! அவருக்கு என்ன? என எழும் கேள்விகளுக்கு விடையறியலாம். அவர் முழுப் பெயர் கே. கங்காதர ராவ். வயது 55 ஆகிறது. இந்திய இராணுவத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்து விருப்ப ஓய்வில் சென்றாண்டு ஓய்வு பெற்றவர். சில மாதங்களில் நான்கு நட்சத்திரங்கள் பெற்று ஜெனரலாக வர வாய்ப்பிருந்தும், அவர் VRS-ல் ஓய்வு பெற்றது பலருக்கு வியப்பைத் தந்தது. அதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் அவர் ஏன் மதுரையில் அந்த மருத்துவ மனையில் படுத்திருக்கிறார் என்பது தெரிந்திடும்.


எட்டு மாதங்களுக்கு முன் டேராடூன் இந்திய இராணுவ அகாடமி மையத்தில் காலை பரேட் பார்த்து விட்டு காலை உணவு அருந்திய பின் கை கழுவச் சென்றவர் வாஷ் பேஷினில் வாந்தி எடுக்கிறார். சத்தம் கேட்டு பலரும் அவரை நோக்கி ஓடி வருகையில், ஒன்றுமில்லை என கை காட்டி விட்டு வாய் கொப்புளிக்கிறார். மீண்டும் வாந்தி. இம்முறை பெரிய சத்தத்துடன். இரத்தமும் கலந்து வருகிறது. அருகிலிருந்த சிலர் உதவி செய்ய வருமுன் சரிந்து கீழே விழுகிறார். வாயெல்லாம் இரத்தக் கறை. உடையெல்லாம் இரத்தம். அவரை உடனே ஸ்ட்ரெச்சரை வரவழைத்து மிலிட்டரி ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கின்றனர். அனைவரும் அஜீரணம் என எண்ணினாலும், இரத்தம் வாந்தியுடன் வந்தது சிறிது அச்சத்தைத் தருகிறது. 


மிலிட்டரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளித்தாலும், அங்கிருக்கும் சி.எம்.ஓ. சொல்லியபடி டெல்லி அனுப்பப் படுகிறார். ஒருவாரம் விரைவாக ஓடுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் ஸ்கேன் எடுக்கப் பட்டு அவருக்கு குடலில் கேன்சர் உள்ளது என கண்டறியப் பட்டது. கடந்த சில வாரங்களாக வயிற்று வலி, காலைக் கடன்களில் அசௌகரியங்கள் என தொந்தரவு இருப்பினும், அவர் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது கேன்சர் மூன்றாம் நிலையில் (தேர்ட் ஸ்டேஜ்) என்று கண்டறியப் பட்டுள்ளது. நீண்ட நாள் உயிர் வாழ்தல் துர்லபம் எனவும் மருத்துவ அறிக்கை கூறியது.

போர்முனையில் நவீன ஆயுதங்களுடன் வரும் எதிரிகளை அஞ்சாது எதிர் கொண்டவர், கேன்சர் எனும் பகையைக் கண்டு பயந்தார். உள்ளம் ஒடுங்கினார். 


நிர்வாகம் அவரை இன்வேலிடேஷனில் அனுப்புவதை விட அவரை விருப்பப் பணி ஓய்வு கொடுக்கச் சொல்லலாம் என முடிவு செய்தது. அவரிடம் இதனை வாய்மொழியாகத் தெரிவித்தது.


தான் தனது இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற செய்தி ஒரு மனிதனுக்குத் தெரிவது போல பெரிய கொடுமையானது உலகில் வேறெதுவும் இல்லை. அந்தக் கொடுமையை ராவ் அனுபவிக்கத் துவங்குகிறார். இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு அவரது குடும்பம் வந்து அவரை மதுரை அழைத்துச் சென்றது. ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ளது அவரது வீடு. அது ஒரு வசதியான பெரிய பங்களா. அவரது இரு மகன்களும் வெளி நாட்டில் பணங் கொழிக்கும் பதவிகளில் உள்ளனர். நிலைமையின் தீவிரம் உணர்ந்து இருவரும் விடுப்பில் தாயகம் வந்தனர். வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே உடல்நிலை மிகவும் மோசமானதால் ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை தொடர்ந்து கொடுத்தும் பெரிய முன்னேற்றமில்லை. இந்நிலையில் சீஃப் டாக்டர் அவரது பிள்ளைகளை பேச அழைக்கிறார். பேசி விட்டு வந்தவர்கள் முகங்களில் குழப்ப ரேகைகள் ஓடுகின்றன. மூத்த மகன் கணபதி ராவ் அம்மா சுதாங்கியைத் தனியே அழைத்து கிசுகிசுவென ஏதோ சொல்கிறான். அவளோ உடனே உடைந்து அழத் துவங்குகிறாள்.


"அம்மா... ஒண்ணுமில்லேம்மா... அண்ணா ... அம்மாவ கூட்டிட்டுப் போய் காஃபி வாங்கிக் கொடு.. காலைலேர்ந்து வெறும் வயித்துல இருக்கா... மயக்கம் வந்துறப் போகுது..." - இரண்டாம் மகன் கஜபதி ராவ்


"ஆமாம்மா... அழுது ஆகாத்தியம் பண்ணாத... வா.. மொதல்ல கான்டின் போயி காஃபி குடிக்கலாம்.. வா.வா.." - இது கணபதி.


"ஏன்டா... என்னடா நடக்குது... குசுகுசுன்னு பேசுறீங்க.. அம்மா அழறா.. ஒங்க மொகங்கள்ல குழப்பம் தெரியது.. நான் ஆர்மில இருந்தவனாடா... என் கைமேலயே என் சகாக்கள் செத்து விழுந்ததைப் பாத்தவன்.. மெடிகல் ஹாஸ்பிடல்ல எங்கிட்ட சீக்கிரம் செத்துடுவேன்ற ரிபோர்ட்ட காமிச்சுருக்காங்க... இங்க சீஃப் என்ன சொன்னாரு... நாளைக்கே போயிடுவேன்னாரா..." - திக்கித் திக்கி ராவ் பேசினார்.


சுதாங்கி கேவிக் கேவி அழுகிறாள். இரு மகன்களும் அவளை அடக்கி விட்டு ராவிடம் சமாளிக்கிறார்கள்.


"டேய் கணபதி... டாக்டர் என்ன சொல்லிருப்பான்னு எனக்குத் தெரியும். பிழைக்கிறது கஷ்டம். இங்க ஆஸ்பத்ரிலே இருந்தா செலவு.. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க.. ஒங்க சாய்ஸ்...  அப்படின்னு சொல்லிருப்பாரு... அதானே.. ஒங்க கொழப்பம்.. இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்குறது.. அதானே..! "- என்கிறார் ராவ்


மலங்க மலங்க முழித்தபடி நின்றிருக்கும் அவர்களை அருகில் அழைக்கிறார்.


"என்னோட கடைசி ஆசை.. நிறைவேத்துங்க... மொதல்ல டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நம்ம வீட்டுக்குப் போலாம்... நாளை காலைல ஒரு கார்ல என்னை பழனி மலைக்குக் கூட்டிட்டுப் போகணும். அங்க ஒரு குகைல போகரின் வழி வந்த ஒரு சித்தர் இருக்காரு.. என்கிட்ட இருந்த ஹவில்தார் ஜவ்வாது மலைப் பகுதிலேர்ந்து வந்தவரு. அவர் சொன்னாரு. அந்த சித்தரப் போய் பாக்கச் சொனானாரு.. அந்த லொகேஷனும் ஷேர் பண்ணிருக்காரு.. அங்க போனா அந்த சித்தர் அனுமதி கொடுத்தா நாம பாக்கலாம்னு சொன்னாரு.. எனக்கு ஏன்னவோ நேத்துலேருந்து அங்க போகணும்னு ஒரு அர்ஜ் இருக்கு.. ஏற்பாடு பண்ணுங்க" - ராவ்


டிஸ்சார்ஜ் செய்வதில் உடன்பாடு இருந்தாலும், இப்போது உள்ள நிலையில் பழனி மலைக் குகைக்கு அழைத்து செல்வது சாத்தியமா என்ற பெருங் குழப்பம் அவர்களைச் சூழ்ந்தது. ஆயினும் ராவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவானது.


மறுநாள் காலை ஏழு மணிக்கு தங்கள் பி.எம்.டபிள்யூ. வில் அனைவரும் கிளம்பினர். இரண்டு மணி நேர பயணம் முடிந்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு ஒரு கல் மண்டபம் இருந்தது. அதிக ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நீண்ட தாடியுடன் அரையில் கௌபீனத்துடன் ஒரு சாமியார் நின்றிருந்தார். 


"வாப்பா... கங்காதரா... ஒனக்குத்தான் காத்திட்ருக்கேன்... இந்தா இத சாப்பிடு" - என ஒரு கொய்யாப் பழத்தைக் கொடுக்கிறார்.


எல்லோரும் அதிசயமாகப் பார்க்க ராவ் அப்பழத்தை வாங்கி சாப்பிடுகிறார். எதையும் சாப்பிட மிகவும் அவஸ்தைப் படும் அவர் அக்கொய்யாப் பழத்தை கடித்து சாப்பிடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். எதற்கும் முரண்டு பிடிக்கும் ராவ் எப்படி உடனே பழத்தை வாங்கி சாப்பிடுகிறார் என்பதும் புரியவில்லை. ராவ் அந்த சாமியாரைப் பார்த்தவாறே பழத்தை முழுவதும் தின்று முடிக்கிறார். அதுவும் ஒரு நிமிடத்திற்குள். பிறகு,


"நீங்கள்லாம் கிளம்புங்க.. கங்காதரன் மட்டும் எங்கூட இருக்கட்டும். இன்னிலேந்து நாலாம் நாள் இதே நேரத்துக்கு இதே எடத்துக்கு வந்துடுங்க. கங்காதரனை ஒங்களோட அனுப்பி வைக்கிறேன் அப்போ.. இப்போ எல்லாரும் கெளம்புங்க.. இன்னும் நாலு மணி நேரத்துல மழை கொட்டப் போகுது.. அதுக்கு முன்னாடி ஊர் போய் சேருங்க.. வழில எங்கயும் நிக்க வேணாம்" - சாமியார் கடகடவென சொல்கிறார்.


மற்றவரெல்லாம் தயங்கி நிற்க ராவ் தலையசைத்துப் போகச் சொல்கிறார். 


"அவங்க கிளம்பட்டும். எழுந்திரி.. நாம அந்தப் படியில ஏறி நம்ம எடத்துக்குப் போவோம் வா.." - என சாமியார் ராவிடம் கூற, தானே எழுந்து நின்ற ராவ் தடுமாற்றம் ஏதுமின்றி நடக்க ஆரமாபிக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக வீல் சேரிலேயே வாழ்க்கையைக் கழித்த அவர் இப்போது நடப்பது அவரது குடும்பத்தாரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இல்லந் திரும்பி ஒரு மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது அவர்களின் ஆச்சரியத்தை இரட்டிப்பாக்கியது.


மூன்று நாட்களும் சாமியார் காலையில் மூலிகைப் பொடி கலந்த கஷாயமும், மாலையில் சூரண உருண்டைகளும் தந்தார். உணவு அறவே இல்லை. மூன்றாம் நாள் ராவ் நிம்மதியாக மலம் கழிக்க இயன்றது. மாதக் கணக்கில் மலங் கழிக்காது அவதியுற்றிருந்த அவரது உடல் உபாதை இப்போது நிறையக் குறைந்திருந்தது. நிறையப் பசியும் எடுத்தது. மறுநாள் அதிகாலை ஒரு சட்டி நிறைய சுடச்சுட பால் அருந்தச் சொன்னார். அதனை ஒரே மூச்சில் ராவ் குடித்து முடித்தார். பின் பெரிய ஏப்பம் ஒன்று விட்டார். உயிரை வாங்கிய வயிற்று வலி அறவே இல்லை. சாமியார் தாடியை வருடிய வாறே,


"கங்காதரா.. என் வேலை முடிந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் கார் வந்து விடும். நாம் சந்தித்த அந்தக் கல் மண்டபத்தில் மையத் தூணில் சாய்ந்தவாறு தியானம் செய். உனது மகன் குரல் கேட்டதும் விழி. அதுவரை இங்கு என்ன நடந்தாலும் கண் விழிக்காதே" - சித்தர் சொல்லிவிட்டு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். மத்தியிலிருந்த தூண் மற்றவைகளை விடப் பெரிதாக இருந்தது. அங்கு போய் சாய்ந்து அமர்ந்து கண்மூடி ராவ் தியானம் செய்யலானார். ஏதோ ஒரு பேரொளி கண்ணைக் கூசச் செய்வது போல் மூடிய கண்களை உறுத்தியது. சூறைக் காற்று அடிப்பது போல் இரைச்சலும் கேட்டது. ராவ், சித்தர் சொல்லிய படி, ஆடாமல் அசையாமல் சிலை போல அப்படியே அமர்ந்திருந்தார். வானவெளியில் சஞ்சரிப்பது போல, அவரது உடல் மேகங்களின் ஊடே பறப்பது போல அவருக்குத் தோன்றியது. சிலுசிலுவென குளிர்ந்த காற்று அவரைத் தழுவியவாறே இருந்தது. ஒரு பேரானந்த நிலையில் அவர் வீற்றிருந்தார். அவரது மனக் கண்ணில் அந்த சித்தரின் திருவுருமே நீக்கமற நிறைந்திருந்தது. எவ்வளவு நேரம் கடந்தது என அறியாது மோன நிலையில் இருந்தார். திடீரென,


"அப்பா... அப்பா.. ஒக்காந்துகிட்டே தூங்கறீங்களா... எழுந்திருங்கப்பா.." - என கஜபதி கூப்பிடும் ஓசை கேட்டு கண் திறக்கிறார். அவரருகில் கஜபதி நிற்க, மண்டபத்தின் கீழே சுதாங்கியும், கணபதியும் ஆர்வமாய் இவரைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நீட்டப் பட்டிருந்த கஜபதியின் கைகளைப் பிடிக்காமல் தானே எழுந்து நின்றதோடு மண்டபத்திலிருந்து குதித்து கீழே இறங்குகிறார் ராவ். கண்களை நம்ப முடியாமல் இருக்கும் குடும்பத்தைப் பார்த்து தான் முழுமையாகக் குணமாகி விட்டதாக சந்தோஷமாகக் கூறுகிறார். கேன்சர் எனும் பெரும் பகை நீங்கியது என்கிறார். "பகைமை ஒன்றின்றி பயந் தீர்ந்தது" என உற்சாகமாய் உரக்கச் சொன்னார். என்ன நடந்தது என அவர் விளக்கியதும் கேட்டவர்கள் நம்ப முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். சுதாங்கியின் கண்களில் நீர் பெருகிறது. அப்போது அங்கு வந்த ஒரு முதியவரிடம் அந்த சாமியார் பற்றி விசாரிக்க,


"நிசமாவா சொல்றீங்க.. சித்தர் சாமிய பாத்தீங்களா.. ஒங்க நைனாவுக்கு வைத்தியம் செஞ்சாருங்களா.. ஒங்கள மாதிரி கொடுப்பின யாருக்குக் கிடைக்கும்.. அந்த சித்தரு போகர் வழி வந்தவரு.. தன்வந்திரி மருத்துவக் கலை அறிஞ்சவரு.. அவர பாத்தவங்க அதிகமா யாருமில்ல.. ஒரு நிமிஷம் நம்ம பக்கம் நிப்பாரு.. அடுத்த நிமிஷம் மாயமாயிடுவாறு.. ஒங்ககூட மூணு நாளு இருந்திருக்காரு.. பழம், கஷாயம்லாம் தன் கையால கொடுத்துருக்காரு.. நீங்களும் தெய்வம் சாமி" - என ராவைப் பார்த்துக் கும்பிடுகிறார்.


எல்லாரும் விடைபெற்றுக் கிளம்புகிறாராகள். காரை ராவ்தான் ஓட்டுகிறார். மதுரை வந்த மறுநாள் அதே ஆஸ்பத்திரி போகிறார்கள்.  ஸ்கேன் செய்து பார்த்த சீஃப் டாக்டர் திகைத்துப் போய் 'இது எப்படி சாத்தியம்' என அதிசயிக்கிறார். நடந்ததைக் கேட்ட அவர் தனது டீமுடன் ராவை அதே கல் மண்டபத்துக்குப் போகிறார். பலமுறை முயன்றும் அந்த சித்தரை அவர்களால் பார்க்கவே இயலவில்லை. நீங்கள் பழனி பக்கம் போனால் அவரைப் பார்த்தால் சொல்லுங்களேன். வியாதிகள் பெருகிப் போன இந்த நாகரீக உலகில் அவரது சேவை மிகவும் தேவையென சொல்லுங்களேன்.


குறிப்பு: சமீபத்தில் எங்கள் குடியிருப்பில் வசிக்கும் 80 அகவையைத் தாண்டிய ஓர் அன்பர் அவரது உறவினருக்கு கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அந்த உரையாடல் கொடுத்த கருவே இக்கதையின் கரு. (சொன்னவர் பெயரையும் உடனிருந்தவர் பெயர்களையும் அவர்களின் ப்ரைவசிக்காகத் தவிர்க்கிறேன்)


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Wednesday, November 6, 2024

செவிகளே!!!

 செவிகளே!!!


* "தோடுடைய செவியன்" 

என்று எம்பிரானைப் பாடுகையில் உம்மையும் ஏற்றிப் பாடுவதை மறந்தீரோ?


*செல்வத்துள் எல்லாம் தலை என்று எங்கள் தலை வள்ளுவன் சொன்னதாக 

எங்கள் பள்ளி விழாவில் தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர் வாய் வழியே சொன்னதை எம் தலையில் உள்ள உங்கள் வழியே கேட்டு உங்களை எம் தலையில் வைத்துக் கொண்டாடினோமே..

கேட்க மட்டுமே முடியும் என்பதால் நினைவில் இல்லையோ?

நீங்கள் மூளைக்குத் தானே 

தகவல் அனுப்பி வைத்தீர்?

தலையில் உள்ள மூளை சொல்லவில்லையா? அல்லது மூளை சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? 


*உங்களுக்கு உணவளித்த

பின்பு வேறு வழியில்லாமல்  உங்களுக்கே மீண்டும் மீண்டும் உணவளிக்க விரும்பி எம் வயிற்றுக்கு உணவளித்து

உயிர் வளர்த்து உம் செல்வத்தைக் கேட்டோமே! 

இதையும் மறந்தீரோ?


*இவையெல்லாம் போதாதென்று "காதணி விழா" என்று உங்களுக்காக 

ஊரையும் உறவையும் கூட்டி 

தடபுடலாக விழா எடுத்து தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் என்று சொல்லி உங்களைக் குத்தினால் எங்கள் குழந்தைகள் கத்துவர் என்று தெரிந்தும்  

உங்களுக்கு  நட்சத்திர கம்மல் அணிவித்து அழகு பார்த்தோமே...எல்லாம் மறந்து போனதா? உங்களுக்கு விழா எடுக்க வசதியற்ற குடும்பங்கள் "கைல காதுல" இருந்ததை அடகு வைத்தும் உங்களைக்

கொண்டாடித் தீர்த்த போது 

ஒலி பெருக்கியில் நீங்களே அதிரும்படி ஒளித்த

" காதொடு லோலாக்கு"

" காதோடு தான் நான் பேசுவேன்"  ஆகிய திரைப்படப் பாடல்களைக் 

கேட்காமல் விட்டீர்களோ??


*உங்களைப் பாடவில்லை என்று ஏன் சென்னீர்கள்?

எங்கள் ழகரக் கவியரங்கத்தில் " சங்குப்பூ செவிகளாம்" என்று எங்கள் அவைப்புலவர் கவிதை பாடியது உங்களுக்கு எட்டவில்லையோ?



*உங்களை இரட்டையர் என்று யார் சொன்னது?

எங்கள் மனம்/ ஆன்மா என்ற கருவறைக்கு வெளியே காவல் காக்கும் துவார பாலகர்கள் அல்லவா நீங்கள்?

எதை அனுமதிக்கலாம்?

எதை உள்ளே விடாமல் காற்றில் விட்டுவிடலாம் என்று உமக்குத் தானே அதிகாரம் கொடுத்துள்ளோம்!

இரு காதுகளே...

இனியும் உங்களுக்கு எங்கும் முக்கியத்துவம் 

இருக்"காது" என்று காது கிழிய பேச வேண்டாம்!




- சாய்கழல் சங்கீதா

Tuesday, November 5, 2024

விரல் நுனியில் உலகமாம்!!!

 விரல் நுனியில்  உலகமாம்!!!


அன்றே பாடினார் 

கலைவாணர் 

பொத்தானைத் தட்டி விட்டால் 

ஒரு தட்டுல இட்லி சட்டினியுடன் வந்திட. 

இன்று கைபேசியில் விரல் பட்டால்  இட்லி மட்டுமல்ல 

பிரியாணியும் சேர்ந்தே வரும். 

அன்னையின் அன்பும் பாசமும் 

அதில் வருமா?


அன்பு மகன் அமெரிக்காவில்.

கிராமத்தில் அம்மா. 

தினமும் காணுகிறார் மகனைக் கையடக்கத் திரையில். 

அன்பு மகனின் தலையைக் கோதத் 

துடிக்கும் கை.  

அன்னையால் முடியுமா?


முன்னெல்லாம் வீட்டில் 

அழையா விருந்தாளிகள்.

மாமன் மச்சான் உறவுடன். 

உடன் பிறந்தாரைக் காணக் கூட

முன் அனுமதி வேண்டும் இன்று. 


அன்றாட மளிகைச் சாமானைக் கூட 

அலை பேசியில் பெற்றிட இயலும். 

மளிகைக் கடை அண்ணாச்சியின் 

அன்பும் பரிவும் அதில் வருமா?


முக நூலில் அயல் தேசத்தார் 

கூட உனக்கு நண்பர். 

ஆனால் அடுத்த வீட்டில் யார் 

என்றால் தெரியாது. 


எல்லா வங்கிக் கணக்கும் 

உன் ஆன்ட்ராய்டு போனில் 

ஆனால் எல்லாக் கடன்களுக்கும் 

ஈ எம் ஐ உன் தலையில்.


இயற்கையைக்  காட்டி அமுதூட்டினர் அந்நாள் அம்மாக்கள். 

சாப்பிட இன்ஸ்டா ரீல் கேட்கும் 

இந்நாள் குழந்தைகள். 


ஆபத்தில் மனிதர்கள். 

அதை அவசரமாகப் படமாக்கும் 

அறிவிலிகள்.  


பாசத்தையும்  பணத்தால் 

அளக்கும் குணம்.


இயந்திரமானது

மனிதா உன் 

வாழ்க்கை மட்டுமல்ல

நீயும்தான்.


விரல் நுனியில் 

விரிந்து விட்டது

உனக்கு உலகு. 


ஆனால் 

கூட்டுக்குள் 

சுருங்கி விட்டது 

உன்  மனது.


- முகம்மது சுலைமான்

மூத்த மழலையர்

 நேற்றைய தினம் நடைபெற்ற

பூர்வா மூத்த மழலையர் ஏழாவது ஆண்டு விழாவின்போது வருகை

புரிந்த Senior kids எனும்

மூத்த மழலையர்களை வாழ்த்திப் பாடியதின் மறுபதிவு 😀😀


முத்தோர் சொல்லும் 

முதுநெல்லிக் காயும் 

முன்னே கசக்கும் 

பின்னே  இனிக்கும் 


காத்து வளர்த்த 

பெற்றோர் தம்மை 

காத்து வளர்த்தால் 

நன்மை நிலைக்கும் 


வேர்வை சிந்தி 

செய்த செயல்கள் 

பின்னால் ஒருநாள் 

காத்து நிற்கும்! 


ஈர்த்து நீங்கள் 

சொன்ன சொற்கள் 

எந்த நாளும் 

மனத்தில் ஒலிக்கும்!


பார்த்து வளர்த்த 

செடிகள் பின்நாள் 

வேலி யாகி

வயலைக் காக்கும்!


வார்த்து வளர்த்த 

பெரியோர் உம்மை

வாழ்த்திப் பாடுதல் 

எம்பணி யாகும்!


மார்பின் மேலே 

தூக்கி வளர்த்த 

உங்கள் கைகளை 

நெஞ்சில் கோர்த்தோம்!


சேர்த்து வைத்த 

அன்பை உங்கள் 

மகிழுறவு தன்னில் 

சேர்த்தோம்!!!!

👏👏👏👏👏👏💐

மூத்த குடிமக்கள் கொண்டாட்டத்தில்... (5/11/2024)

 மூத்த குடிமக்கள் கொண்டாட்டத்தில்... (5/11/2024) 


மூத்த குடிமகன் என முத்திரை குத்தி விட்டால்

   மூலையில் உட்கார முடியுமோ அதனால்? 


காத்து வாங்க நாளும் வெளியே போவோம்

   காலார நடப்பதை என்றும் நிறுத்தோம்


கூத்து, கலை நிகழ்ச்சிகள் கண்டு களிப்போம்

   கூடவே முடிந்தால் பங்கும் பெறுவோம்


மாத்தி புதுசு புதுசாய் ஏதேனும் செய்வோம்

   மண்டையில் நியூரான்கள் மடிய அனுமதியோம்



நேத்து தான் மணந்தது போல் மனைவியை நேசிப்போம்

   நிற்போமா அவரின்றி? யோசிப்போம் பூசிப்போம்


பாத்திரங்கள் தேய்த்து மனைவிக்கு உதவலாம்

   பால் பாயசம் பரிசாய்க் கேட்காமல் பெறலாம்


பேத்தி, பேரனுடன் பேதமின்றிப் பழகுவோம்

   பேசுவோம், சிரிப்போம், வயது மறப்போம்


தோத்தும் போவோம் விளையாட்டில் பிள்ளையிடம்

   தோளில் கை போட்டுத் தோழனாய் மகிழ்வோம்



நேத்து நடந்ததை நேத்தே மறப்போம்

   நிகழ்காலம் நில்லாது தவறவிடோம்


சேத்து வைத்தச் செல்வம் போதுமென நினைப்போம்

   சிரித்தபடி இருப்போம், சினத்தை எரிப்போம்


பாத்து பாத்து வளர்த்த பசங்களை மன்னிப்போம்

   பாராமல் இருந்தும் பாசமாய் இருப்போம்


வேத்து சாதி, மதம் உறவாக வந்தாலும்

   விரும்பி ஏற்போம் வேறென்ன செய்வோம்? 



ஆத்து வெள்ளத்தில் அடித்து வரும் கட்டைகள்

   அங்கங்கே சேர்வது போல் அமையும் உறவுகள்


பாத்துக் கொண்டிருக்கையில் பள்ளம், மேடு வரும்

   பாவம் கட்டைகள் போல் உறவும் பிரியும்


கூத்து மேடையாம் வாழ்க்கையது அறிவோம்

   கொடுத்த பாத்திரம் சரியாகச் செய்வோம்


காத்திருந்த அந்நாள் இன்றென நினைப்போம்

   கையிருப்பைக் கொஞ்சம் கருணையிடம் ஈவோம்


கொசுறு


மூத்த சகோதரரே ! முக்கியமாய் ஒன்றுண்டு

   முழுக் கவனம் என் பக்கம் திரும்பினால் நன்று


காத்துக் கிடக்கிறதாம் கழுகுகள் கூட்டம்

   கண்ணை உறுத்தும் கடின உழைப்பின் பணம்


மாத்தி மாத்திக் கூப்பிடும் மண்டையைக் குழப்பும்

   மன்றாடும், மிரட்டும்  OTP, PIN கேட்கும்


ஆத்துமாமியிடமும் அவைகளைப் பகிர வேண்டாம்

   அழகாய் இருப்பாரிடம் அறவே வேண்டாம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Monday, November 4, 2024

தனவந்தர் மனதின் வினா

 ●०●०●०●०●०

*எது இனிது!*

*(தனவந்தர் மனதின் வினா)*

●०●०●०●०●०


பிள்ளைப் பருவத்தில்

பொங்கல் தினம்

நினைக்க நினைக்க 

ஏங்குது மனம்

ஏழ்மையின் பிடியில்

வாடிய இனம்

மலரும் நினைவுகளால்

மனதிலே கனம்


கரும்பு வாங்கிட 

காசிலா நிலை

ஊரோடு கொண்டாட

வசதியோ இலை

வீடுகளில் எப்போதும்

எரியாத உலை

எண்ணைப் பசையே

காணாத தலை.


போகி பொங்கல் 

எல்லாம் முடிந்து

மேலத் தெரு 

மச்சு வீட்டில்

கொண்டாட்டங்கள்

முடிந்த கையோடு

அவ்வீட்டார் தூக்கி

எறிந்த  காஞ்ச கரும்பு..


கையில் கிடைத்த

சிறுவர் கூட்டம்

எடுத்து ஓடியது

ஊரின் எல்லைக்கு

யாருமறியா வண்ணம்

ஒளிந்து நின்று

ஆவலாய்க் கடித்து

சுவைத்து மகிழ்ந்தது


வசந்த காலம்

சுகந்த நினைவுகள்

திரும்பும் திசையெலாம்

வயல் வரப்புகளோடு

மாளிகை போன்ற

வீட்டில் வசிக்கும்

இந்நாளில் இல்லாத

இனிமை அன்றிருந்ததே!


இனிது எதுவென

நினைத்துப் பார்க்கையில்

காய்ந்த கரும்பா

காயாத நினைவா

வறுமையிலும் மகிழ்ந்த

இளமைக் காலமா

விடையறிந்த நல்லோர்

தடையின்றி சொல்லுங்களேன்!


*(தனவந்தர் மனதின் வினா)*


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

யார்க்கும் எளியனாய்... யார்க்கும் இனியனாய்..

 -------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

--------------------


        ●०●०●०●०●०●०●०●०●०●०●०

          (5) யார்க்கும் எளியனாய்...

           யார்க்கும் இனியனாய்.. 

         ●०●०●०●०●०●०●०●०●०●०●०


சேலம் கலைக் கல்லூரியில் தென்னிந்திய ஆய்வர்கள் கூடிய சிம்போசியம் நடந்து முடிந்த மாலை நேரம். சிம்போசியத்தில் விவாதிக்கப் பட்ட பொருள் - பாரதியின் தீர்க்கதரிசனம்.  சிம்போசியத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, கலந்துரையாடிய பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் வெளிநாட்டவர்கள் அனைவரும் கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் வழங்கப் பட்ட சூடான பக்கோடாவையும் ஆவி பறக்கும் கருப்பட்டிக் காப்பியையும் சுவைத்தவாறு தங்களுக்குள் உரையாடிக் கொண்டுள்ளனர். தத்தமது தொடர்பு எண்களைப் பகிர்ந்தும், கலந்துரையாடலில் வந்த கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் விவாதித்தவாறும் இருந்தனர். முக்கியமாக பலர் கோவாவிலிருந்து வந்த கில்பர்ட் ராஜ் எனும் பேராசிரியர் முன்வைத்த சில கருத்துகளைப் பற்றி தீவிரமாக உரையாடினர். கில்பர்ட் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி மின்னலைத் தோற்கடிக்கும் வெண்ணிற வேட்டி வெள்ளை ஜிப்பா உடுத்திய ஒருவர் புன்னகைத்தபடி வருகிறார். 


"வணக்கம் கில்பர்ட். உங்க உரை நல்லா இருந்தது. என்னை யார்னு தெரியுதா" - என வினவுகிறார்.


காப்பியை உறிஞ்சியவாறே அவரை நிமிர்ந்து பார்த்த கில்பர்ட் சில நொடி யோசனைக்குப் பின்,


"வாங்க குரியன்.. உங்கள மறக்க முடியுமா. நான் கொஞ்சம் லேட்டாத்தான் வந்தேன். வந்த கொஞ்ச நேரத்துலயே விவாதத்துல கலந்துக்க வேண்டியதாயிடுச்சு.. யார் யார் வந்துறுக்காங்கன்னு கூட பார்க்க முடியல.. நீங்க நிச்சயம் வந்துருப்பீங்கன்னு தெரியும். அழைப்பிதழ்ல பேரைப் பாத்ததும் உங்களோட உரையாடணும்னு ஆவலா இருந்தேன். எப்பவும் புதிய கருத்துகளை புதிய கோணத்துல எளிமையா சொல்றதுல உங்கள யாரும் மிஞ்ச முடியாது.. உங்களப் பார்தததுல ரொம்ப சந்தோஷம்" - என உற்சாகத்தோடு பதில் சொன்னார்


"எல்லாரும் என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" - குறியன்


"இன்னிக்கு நடந்த விவாதத்தைப் பத்திதான் இருக்கும்" - கில்பர்ட்


"அது சரி.. யாரோட உரையை அல்லது விவாதத்தைப் பத்தி இருக்கும்னு நினைக்கிறீங்க?" 


"இது என்ன கம்ப சூத்திரமா.. எல்லார் வாயிலேயும் அடிபடுற பேர் என்னோடதாகத்தான்  இருக்கும். எல்லோரும் பாரதியை தீர்க்கதரிசின்னு சொல்லி ஆதாரங்களை அடுக்கடுக்கா சொன்னாங்க. நான்தான் அவருடைய சுதந்திர வேட்கையும் சுதந்திரம் பெற்றிட அவர் கொண்ட அதீத ஆர்வமும் மட்டுமே 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என ஆடுவோமே...' என்று பாட வைத்தது. அது தீர்க்க தரிசனமாகாதுன்னு சொன்னேன்ல. இது மாதிரி நிறைய எடுத்துக் காட்டினேன்ல அது கொஞ்சம் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கும். உள்ளேயும் சிலர் கொஞ்சம் சூடா பதில் சொல்ல ஆரம்பிச்சாங்க.. அதுக்குள்ள தலைவர் கலந்துரையாடலில் காழ்ப்பு வேண்டாமென வேண்டுகோள் வைத்ததால் அமைதி திரும்பியது.. அதனோட வெப்பம் இங்கு அடிக்கும்னு தெரியும். அதனாலத்தான் என்கூட அமர்ந்து காப்பி குடிக்கக் கூட யாரும் தயாரா இல்லைங்கறதும் புரியுது."


"உங்கள் அறிவாற்றல்  என்னை எப்பவும் வியக்க வைக்கும். இன்னிக்கும் உங்கள் உரையிலே நேர்மை இருந்தது. தன்னோட மேதாவித்தனத்தை வெளிப் படுத்துறதுக்காக பேசற ஆளில்லை நீங்க. உங்கள் எண்ணத்தில் தோன்றிய விஷயங்களை ஆராய்ந்து நிதானமா பேசற நீங்க சொன்ன சில விஷயத்து மேல உங்களோட பேசலாம்னு நினைக்கிறேன்."


"தாராளமா... குரியன்.. நீங்க கூட உள்ளதை உள்ளபடி சொல்ற ஒருத்தர்தான். உங்ககிட்ட எனக்குப் பிடித்ததே அமைதியா ஆனா.. ஆணித்தரமா விவாதிப்பீங்க.. அடுத்தவர் சொல்வதையும் பொறுமையா கேட்பீங்க. அதனால உங்களோடு உரையாடுறது ஒரு நல்ல அனுபவம். என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க. விவாதிப்போம்."


"ஒரே ஒரு கேள்விதான்.

'யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்..  யார்க்கும் இனியனாய்..' னு மகாகவி பாடியது ஆண்டவனிடம் இறைஞ்சுவது மட்டுமே. அப்படி ஒருவர் இருக்கவே முடியாதுன்னு சொன்னீங்களே.. அதுல உறுதியா இருக்கீங்களா..?"


"என்னங்க இது.. உறுதியா இல்லாமலா அதை சொல்லிருப்பேன்"


"அப்படி ஓர் ஆள் இருக்குறத நான் நேரிலேயே காண்பிக்கிறேன்.. நீங்க கூட வந்தால்.."


"என்னது.. இந்தக் காலத்துல அப்படி ஒருவரா.. தமாஷ் பண்ணலயே நீங்க. "


"இல்லைங்க.. நிச்சயமா தமாஷ் இல்லை.. ஆனா நீங்க என் கூட எங்க ஊருக்கு வரணும்"


"கேரளாவுக்கா...!"


"ஆமா.. இங்கேயிருந்து நம்ம கார்ல நாலு மணி நேரத்துல திருச்சூர்க்கு முன்னாடியே எங்க ஊர் குட்டம்பள்ளிக்குப் போயிடலாம். பூரம் விழாவும் நாளை மறுநாள் துவங்குது. அதையும் பார்த்த மாதிரி இருக்கும். எங்க வீட்டில தங்குன மாதிரியும் இருக்கும். நீங்க ஒப்புக் கொள்ளாத பாரதியின் கூற்றை மெய்ப்பிக்க நேரில் அழைத்துச் சென்று காண்பித்த மாதிரியும் இருக்கும். வறீங்களா..?"


சில விநாடிகள் யோசித்த பின்,


"இருங்க.. வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்" என சொல்லியவாறு செல்ஃபோனை எடுத்து டயல் செய்யத் துவங்குகிறார். குரியன் அவரையே பார்த்த படி இருக்கிறார்.


"டார்லிங்.. எ ஸ்மால் சேன்ஜ் இன் மை ப்ரோக்ராம். மை ஃப்ரென்ட் குரியன், எ டமில் ஸ்காலர் இஸ் இன்வைட்டிங் மீ டு ஹிஸ் நேட்டிவ் இன் கனெக்ஷன் வித் பூரம் ஃபெஸ்டிவல் விச் இஸ் வெரி ஃபேமஸ். ஐ'ல் ஸ்டே தேர் ஃபார் எ கபுள் ஆஃப் டேஸ் அன்ட் ரிடர்ன். ... யெஸ்... ஐ'ம் கோயிங் டு எ கேரளா வில்லேஜ் நியர் ட்ருஷூர்.  டெஃபினிட்லி ஐ'ல் கீப் யூ போஸ்டட் ஹனி... யா..யா.. ஐ'ல் சென்ட் ஃபோட்டோஸ் & வீடியோஸ்... ஷ்யூர்லி.. பை பை டார்லிங்" பேசி விட்டு "ஓகே. லெட்ஸ் ப்ரொசீட்" -என்கிறார்.


குரியனும் கார் ட்ரைவருக்கு ஃபோன் செய்து வரச் சொல்கிறார். சிறிது நேரத்தில் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஐந்துமணி அளவில் காரில் ஏறி கிளம்புகிறார்கள். இடையில் இரவு உணவு மற்றும் தேநீருக்காக ஒரு நிறுத்தம். ஒன்பதரை மணியளவில் குரியனின் இல்லம் அடைந்தனர்.

வழி நெடுக பயணத்தில் குரியன்,  ஆதர்ஷ் என்பவனைப் பற்றி பிரதாபித்துக் கொண்டே வந்தார். அவர் சொல்லுவதைக் கேட்கக் கேட்க கில்பர்ட்டுக்கு ஆச்சரியம் மேலிட்டாலும் தனது கூற்றை நிரூபிக்க குரியன் கொஞ்சம் அதிகமாக பில்டப் செய்கிறாரோ என்ற ஐயமும் எழுந்தது. அவர் முகக் குறியிலிருந்து அதனை உணர்ந்த குரியன்,


"நீங்களே நேரில் பார்க்கத்தானே போறீங்க.. அப்ப நிச்சயம் நான் மிகைப் படுத்தல அப்படிங்கறத புரிஞ்சுக்கிடுவீங்க" - குரியன் சொன்னார்.


அமைதியாக கில்பர்ட் தலையசைத்தார். வீடு வந்ததும் குடும்பத்தாருடன் ஒரு சிறு அறிமுகம் முடிந்த கையோடு, மரியா (குரியனின் மனைவி) இருவருக்கும் பனங்கல்கண்டு போட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பாலை கொடுத்தாள். பிறகு அவருக்கு கொடுக்கப் பட்ட தனியறையில் படுக்கப் போனார் கில்பர்ட். விரைவில் உறங்கிப் போனார்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. கில்பர்ட் கண் விழிக்கும் முன்னரே குரியன் குடும்பம் காலைக் கடன்களை முடித்து பூரம் திருவிழா துவக்கத்தினைக் காணத் தயாராக இருந்தனர். தாமதமாக எழுந்து விட்டோம் என்ற குற்ற உணர்வோடு கில்பர்ட் வேக வேகமாக தனது பணிகளைத் துவங்கினார். பளீரென புன்னகையோடு நல்ல உடல் வாகுள்ள உயரமான ஓர் இளைஞன் அவருக்கு முகமன் கூறினான். இடையில் ஒரு காவி நிற வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்த அவன் முகம் மிகக் களையாக இருந்தது. சுறுசுறுப்பின் மொத்த உருவமாக அவன் இருந்தான்.  அவரது தேவைகளை ஓடியாடி பூர்த்தி செய்தான். பாய்லரில் போடப்பட்ட வெந்நீரை இரண்டு பெரிய பக்கெட்டுகளில் ஒரே சமயத்தில் தூக்கி வந்து அவர் குளிக்கும் பதமான இளஞ்சூட்டில் விளாவி தொட்டியில் நிரப்பினான். குரியனின் குடும்பத்தார் ஒவ்வொருவரும் இட்ட பணிகளை இன்முகத்தோடு சுறுசுறுப்பாக செய்தான். கில்பர்ட் குளித்து முடித்து உடை மாற்றி வந்தபோது குரியன் குடும்பமே டைனிங் டேபிளில் அவருக்காகக் காத்திருந்தது. கேரள ஸ்பெஷல் குழாய்ப் புட்டிலிருந்து எழும்பிய புகையின் மணம் நாவில் நீர் ஊற வைத்தது. கொண்டக்கடலை க்ரேவி, அவித்த நேந்திரம் பழம், இட்லி, தோசை, பணியாரம், மீன் குழம்பு, சட்னி என ஒரு மினி ஹோட்டலே அங்கு வந்திருந்தது. அனைவருக்கும் அந்த இளைஞனே ஓடியாடி பறிமாறினான். மரியா பெருமையோடு கேரளாவின் ஸ்பெஷல் மத்தி மீன் என்றும் அதனை ஃப்ரெஷ்ஷாக பிடித்து வந்து மண்சட்டியில் பொறித்து மணக்க மணக்க குழம்பு வைத்தது ஆதர்ஷ்தான் என அன்பு ததும்பச் சொன்னார். அப்போதும் புன்னகைத்த படி,


"இன்னும் மீனு போட்டு நல்லா சாப்பிடுங்க சாரே!" - ஆதர்ஷ் கூறினான். நேற்று மாலை கார் பயணத்தின் உரையாடலின் போது அறிமுகமான ஆதர்ஷ், தன் மனத் திரையில் பதிந்து விட்ட ஆதர்ஷ் அவன்தான் என தெரிந்ததும் கில்பர்ட் அவனை கண்களை விரித்து உற்றுப் பார்த்தார். 


"அம்மை எப்போதும் தமாஷ் செய்யும். சாரோட ராசி இன்னிக்கு கருக்கல்லே தோணில வரும்போது வலை வீசினேன். மத்தி மீன் வண்டி வண்டியா மாட்டுச்சில்லா.. அதான் சுடச்சுட மீன்குழம்பு வைக்க முடிஞ்சது... நீங்க கைநிறைய எடுத்து உண்ணுங்க சாரே" - மீண்டும் ஆதர்ஷ் அன்போடு சொன்னான்.


குரியனின் குழந்தைகள் மூவரும் அவனையே 'சேட்டன் - சேட்டன்' என்று அழைத்தவாறு சுற்றி சுற்றி வந்தார்கள். அவர்களின் தேவை எல்லாம் நொடியில் அவன் செய்து முடித்தான். அவன் இதேபோல அந்த கிராமத்தில் இருந்த அனைத்து இல்லங்களிலும் குடும்ப உறுப்பினனாகவே இருக்கிறான் என்பதை குரியன் பெருமையோடு கூறினார்.


உணவு உண்டு முடிந்து தோணிக்கரைக்கு சென்றார்கள். ஆதர்ஷின் தோணி அங்கு கட்டப் பட்டிருந்தது. அவன் வருகைக்காக ஒரு சிறு கூட்டம் கரையில் காத்திருந்தது. இவர்களோடு அந்த மக்களையும் ஏற்றிக் கொண்டு தோணி புறப்பட்டது. பயணத்தின் போது மக்கள் ஆதர்ஷுடன் மிக அன்னியோனியமாக பேசி வந்தனர். தோணியின் முனையருகில் ஒரு மூங்கில் கம்பு நிறுத்தி வைக்கப் பட்டு அதில்  பிரம்பால் முடைந்த ஒரு கூடை மாட்டப் பட்டிருந்தது. பயணம் முடிந்ததும் அதில் தங்கள் விருப்பப் படி காசினை போடலாம். காசில்லாதோர் அல்லது காசு கொடுக்க விருப்பமில்லாதோர் ஒன்றும் போடாது போனாலும் போகலாம். குறிப்பாக பள்ளிப் பிள்ளைகளுக்கும் தினக் கூலிகளுக்கும் பயணம் இலவசமே. அந்தக் கூடையில் விழும் பணத்தில் பாதிக்கு மேல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கே கல்விக் கட்டணத்துக்காக, மருத்துவ செலவுக்காக, வயிற்றுப் பசியைப் போக்கிட செலவு செய்யப் படும். மறுநாளைக்காக சேமித்து வைத்தல் எனும் சிந்தனையே இல்லாதவன். அவனது தாய் கணவனை இழந்த நாள் முதல் சொந்தக் காலில் நின்று, இதேபோல தர்ம சிந்தனையோடு கருணை உள்ளத்தோடு ஊர் மக்களுக்கு உதவி வந்தவள். அவள் வளர்ப்பு விழலாகுமா.. சமூகத்துக்கே நிழல் தரும் விருக்ஷமாகுமா! இதெல்லாம் நேற்று வாய்மொழியாகக் கேட்டறிந்தது. கில்பர்ட்டுக்கு ஒரு குறுகுறுப்புத் தோன்றியது. அந்த மூங்கில் கூடைக்கு அருகில் ஒரு சிறிய மண்பானை உண்டியலாக்கிக் கட்டப் பட்டிருந்தது. அதில் மலையாளத்தில் ஏதோ எழுதப் பட்டிருந்தது. அது என்ன என்று விசாரித்தார். 'அசோகன் நம்பியார் குழந்தை ஷைலஜாக் குட்டியின் மருத்துவ செலவுக்கு' என்று எழுதப் பட்டிருந்ததாகக் கூறினார்கள். குரியனும் அது குறித்து விசாரித்தார்.


"சாரே.. நம் ஷைலஜாக் குட்டிக்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்தல்லோ.. ஆஸ்பத்திரி கூட்டிப் போனா பெரிய டாக்டர் ஹோர்ட்ல ஓபரேஷன் செய்யணும்னு பறஞ்சூ.. மூணு லட்சம் எஸ்டிமேட்டாம். அதுக்கான கலெக்ஷன் வேண்டி வச்சு சாரே" - இதுதான் உண்டியலுக்கான எக்ஸ்ப்ளனேஷன்.


குரியன் கவலையோடு தனது மனைவியைப் பார்க்க, அவளும்,


"ஆதர்ஷ்.. ஏன் முன்னமே சொல்லலே.." -என்றாள்.


"அம்மே! மன்னிக்கனும்.. நேத்து ரவைக்குத்தான் டாக்டர் பறஞ்சு.. அதான் ..."


கில்பர்ட் இந்த உரையாடல் முடிந்த கையோடு அமைதியில் ஆழ்ந்தார். தனது கைபேசியை எடுத்து பார்க்கத் துவங்கி விட்டார். 


கோயில் கரை வந்ததும் தோணியை விட்டு இறங்கிச் செல்வோர் கூடையிலும் குடத்திலும் காசு போட்டுவிட்டு சென்றார்கள். கில்பர்ட் பார்த்தபடியே இருந்தார். அனைவரும் இறங்கிய பின் ஆதர்ஷ் கூடையை எடுத்து அப்படியே அந்த மண்குடத்தில் மொத்தக் காசையும் கவிழ்த்தான்.


குரியன் குடும்பம் கோவிலுக்குப் போகையில் கில்பர்ட் சில கால்கள் பண்ண வேண்டியிருப்பதாகக் கூறி கரையிலே நின்று விட்டார். அங்கு மக்கள் பலரிடம் உரையாடியதில் அனைத்து இல்லங்களிலும் நடக்கும் நல்லவை கெட்டவைகளில் முதல் ஆளாக நிற்பவன் ஆதர்ஷ் என அறிந்து கொண்டார். எளிய குடும்பங்கள் பலவற்றின் ஆபத்பாந்தவன் அவன்தான் என பலரும் கூறினர். குரியன் சொன்னதை விட பல மடங்கு அதிகமாக பெருமையாகப் பலரும் கூறினர். அனைத்து உதவிகளையும் சிரித்த முகத்தோடு ஓடி வந்து மகிழ்ச்சியோடு செய்வான் என அவர்கள் கூறிய போது எல்லார்க்கும் எளியனாய்.. எல்லார்க்கும் இனியனாய்.. அவன் இருப்பதை புரிந்து கொண்டார். 


மளமளவென கில்பர்ட் பல கால்கள் செய்யத் துவங்கினார்.

அரைமணி நேரம் கழித்து அனைவரும் திரும்பி வந்ததும், நேரே ஆதர்ஷிடம் சென்றவர் தங்களை அந்த டாக்டரிடம் அழைத்துச் செல்ல இயலுமா எனக் கேட்டார். இல்லந் திரும்பியதும் காரில் சுவாதித் திருநாள் மருத்துவ மனைக்கு கிளம்பினார்கள். அங்கு டீனை சந்தித்து தனது மைத்துனர் (டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை மருத்துவர்) பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டார். டீனும் தன்னிடம் அவர் மைத்துனர் ஃபோனில் பேசி விட்டதாகக் கூறி எல்லோரையும் அமரச் சொன்னார்.  குழந்தை ஷைலஜா ஆபரேஷனுக்காக ஆகக் கூடிய மொத்த செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கில்பர்ட் கூறினார். உடன் வந்தவர்கள் திகைத்து நிற்க காரியங்கள் வேக வேகமாக நடந்தன. 


மறு நாளே ஆபரேஷன் என முடிவும் எடுக்கப் பட்டு விட்டது.

இது எல்லாவற்றையும் ஏதோ மந்திரித்து விட்டவனைப் போல் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றிருந்தான் ஆதர்ஷ். குரியனும் மரியாவும் அதே திகைப்பில் இருந்தனர். சிறிது சுதாரித்துக் கொண்ட குரியன்,


"என்னங்க கில்பர்ட். ஒண்ணுமே சொல்லாம எல்லா வேலையும் செஞ்சுட்டீங்க... " என்றார்.


கில்பர்ட் பதில் சொல்லும் முன் அசோகன் குடும்பமே ரிசப்ஷன் கவுண்டருக்கு வந்து விட்டது. கில்பர்ட்டை ஆதர்ஷ் அறிமுகப் படுத்தியதும் அவர் காலில் வந்து விழுந்தது. நாத்தழுதழுக்க,


"சாரே! நிங்கள் தெய்வம் சாரே..." என ஆதர்ஷ் கண்கள் கலங்கியபடி சொன்னான்.


"ஆதர்ஷ்... ஆசானுக்கு குரு தக்ஷ்ணை கொடுக்கனும்ல.. எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்த உனக்கு நான் கொடுக்குற தட்சிணைதான் இது..  குரியன்தான் எனக்குத் தெரியாத விஷயத்தை சொல்லிக் கொடுக்க உங்கிட்ட கூட்டி வந்தாரு... அவருக்கு தாங்க்ஸ்.. எல்லாருக்கும் எளியனாய்.. இனியனாய் இருக்குற உங்கிட்ட நான் இன்னிக்கு நல்ல ட்யூஷன் எடுத்துக்கிட்டேன்." - என சொல்லியவாறு ஆதர்ஷை இறுகத் தழுவிக் கொண்டார். 


அவருக்குப் புரிந்த அந்த பாடம் நமக்கும் புரிந்தால் நல்லது. இயன்ற அளவு 'எல்லார்க்கும் எளியனாய்... எல்லார்க்கும் இனியனாய்..' நாமும் இருக்க முயற்சிக்கலாமே. குறைந்த பட்சம் வள்ளுவனார் கூறியது போல "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" எனும் வழியில் இனிய சொற்கள் கூறிடலாமே. இயன்ற அளவு சிறிய உதவிகளையாவது செய்திடலாமே! முயற்சிப்போமா!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


Saturday, November 2, 2024

அசையா நெஞ்சம் அருள்வாய்

 -----------------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

-----------------------------


◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●

(4) அசையா நெஞ்சம் அருள்வாய்

◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●


நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஒரு முக்கியமான ஊர் பிரம்மதேசம். அவ்வூரின் சிவன் கோவில் மிகப் பிரசித்தமானது. ராஜேந்திர சோழனால் பராமரிக்கப் பட்ட கோவில் என்ற புகழுடையது. அந்த சிவன் கோவிலின் மேற்கே ஒரு கிமீ. தொலைவில் இன்னொரு கோவில் உள்ளது. அது ஓர் அம்மன் கோவில். அந்த சிவன் கோவிலை விடப் புராதானமானது என்று அவ்வூர் மக்கள் கூறுவர். பிரம்மதேசம்  அப்பகுதியின் தலைமைப் பீடமாக இருநூறு ஆண்டுகள் முன்பு வரை இருந்ததாத வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. அப்பெருமையை தற்போது அம்பைக்கு விட்டுக் கொடுத்து விட்டது. பிரம்மதேசம் முக்கிய பீடமாக இருந்த காலத்தில் இக்கோவில் மிகப் பிரபலமாக இருந்தததாகவும் மக்கள் கூறுகின்றனர். அக்கோவிலுக்கு ஒரு சிறப்பு உள்ளது. அக்கோவிலின் குளம் பிற கோவில்களில் உள்ள குளங்களை விட மிகப் பெரியது. சுற்றுவட்டாரத்திலுள்ள பற்பல பட்டி தொட்டிகளின் நீராதாரமாக விளங்கி வந்தது. அக்கோவிலின் மகிமை குறையத் துவங்கியதால் கோவிலின் பராமரிப்பு கேள்விக் குறியானது. கோவில் பராமரிப்பே தள்ளாடும் போது, குளத்தைப் பற்றிக் கவலைப் படுவோர் இருப்பார்களா!


நீரின் மேலாண்மையில் மிகச் சிறந்து விளங்கிய தமிழினம் எவ்வாறு தன் மொழியின் பெருமை அறியாது அன்னிய மொழிப் பித்து பிடித்து அலைகிறதோ, அதைப் போலவே இயற்கையைப் போற்ற மறந்தும் நீர் மேலாண்மையைப் புறக்கணித்தும் நவநாகரீக வாழ்வு எனும் இருளில் மூழ்கிப் போனது. அந்த பாதிப்பின் நீட்சியே மாநிலமெங்கும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணற் கொள்ளை, பராமரிப்பு ஏதுமின்றி நீர்நிலைகள் சீரழிதல் என சீர்கேடுகள் பல்கிப் பெருகின. பிரபலத்துவம் இழந்த அந்த அம்மன் கோவிலின் குளமும் இந்த சீரழிவுக்குப் பலியானது. ஆம்.. கோவிலே சிதிலமடைந்து இருக்கையில் அதன் குளத்தைப் பற்றி யார் கவலைப் படுவார். விரைவில் அக்குளம் குப்பைமேடாகிப் போனது. கழிவுகள் கொட்டும் இடமாகவும் ஆகிப் போனது. குளம் இருந்த இடமே தெரியாமல் போனது.


அவ்வூரில் இருந்த பொன்னம்பலம் ஒரு சிறு விவசாயி. அவரது பாட்டனார் சிவதாசன் நொடிக்கு நூறுமுறை அம்மன் கோவிலைப் பற்றியும், அந்தக் குளத்தைப் பற்றியும் சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார். அது ஏனோ அவரது அடிமனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. சிறு வயது முதலே பொன்னம்பலத்தின் மனதில் ஓர் உறுதி உருவானது. தான் தலையெடுத்து குடும்பப் பொறுப்பை சுமக்க ஆரம்பிக்கத் துவங்கிய போது, அந்த மனவுறுதி மேலும் வலுப் பெற்றது. பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தனது நட்பு வட்டத்தின் மூலம் அக்கோவில் நிலங்கள் மற்றும் அக்குளத்தின் ஆவணங்களின் நகல்களைப் பெற்றார். அவற்றிற்கு சர்வே செய்ய தன் சொந்த செலவில் விண்ணப்பித்தார். 'சிவன் சொத்து குல நாசம்' என உபதேசம் செய்து ஊரில் வலம் வரும் சில பெருந் தலைகளே கோவில் நிலத்தின் பெரும் பகுதியை சுவாஹா செய்திருந்தனர். இவர் இந்நடவடிக்கைகளை மேற் கொண்டதும், பதறிப் போயினர். அதற்கு எவ்வாறெல்லாம் முட்டுக் கட்டை போட இயலுமோ அதையெல்லாம் தொடர்ந்து செய்தனர். பொன்னம்பலமும் மனந் தளராது தனது வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். காசுள்ளவர் பக்கமே சாய்ந்து நிற்கும் சமூகமும், அரசு எந்திரமும் பிரம்ம தேசத்தில் மட்டும் புது அவதாரமா எடுக்கும். தம்மை நோக்கி எறியப் படும் எலும்புத் துண்டுகளுக்காய் தமது வாலைத் தாராளமாக ஆட்டின. 

நிலங்கள் பல ஆர்ஜிதப் படுத்தப் பட்டதாக ஆவணங்கள் புதிதாக அரிதாரம் பூசிக் கொண்டன. பொன்னம்பலத்தின் கைவசம் இருந்த நகல்கள் போலியானவை என பஞ்சாயத்து அலுவலகம் சொல்லி விட்டது. ஆவண முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது புகாரளிக்கப் போவதாக மிரட்டியது அதிகார வர்க்கம். 


மனந் தளராத விக்கிரமாதித்தனாய் பொன்னம்பலம் தனியாளாய் அந்த பெருந் தனக்காரர்களிடம் தொடர்ந்து பேசி அந்தக் குளத்தையாவது மீட்டெடுக்க முயற்சித்தார். தொய்வில்லாமல் அவர்களோடு பேசி வந்தார். நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த அக்கால கட்டத்தில் குளங்களை, ஏரிகளை ஆக்கிரமித்து அபகரிக்கும் நிலை பெரிதாகக் காலூன்றாத நிலை என்பதால், அந்தக் குளத்தின் நிலப் பரப்பு ஆக்கிரமிப்பால் பெருமளவில் பாதிக்கப் படவில்லை. எனவே, அந்த தனவந்தர்களும் தங்கள் நிலங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதி செய்த பின், குளத்தை சரி செய்ய பொன்னம்பலத்துக்கு தடை சொல்லாது விட்டனர். அவரும், தொடர்ந்து போராடி, அக்குளத்தைச் சுற்றி கல் நட்டு முள் கம்பி போட்டார் தன் சொந்த செலவில்.


இம்முயற்சிகளை மேற்கொண்டு குளத்தை மீட்டெடுக்க அவருக்கு பற்பல ஆண்டுகள் ஆகின. எப்படியோ தன் பாட்டனின் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில்  முதல் படியை ஏறி விட்ட திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஆயினும் குளத்தின் ஒரு பகுதி குப்பைமேடாகவும் மறு பகுதி சேறும் சகதியாகவும் உள்ள நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். அக்குளத்தை பராமரித்து நீர்நிலையாக மாற்ற இனி தன்னால் இயலுமா எனும் விரக்தி அவருக்கு உண்டானது. இதுவரை "அசையா நெஞ்சம்"  கொண்டு செயல் பட்ட அவர் முதுமையைத் தொடும் தனது அறுபதாவது வயதில் இந்த மனச் சோர்வு கொண்டார்.


உள்ளம் நல்லதையே நினைத்தால், சிந்தனைகள் நல்லவைகளாக இருந்தால், செயல்கள் நல்லதாக அமைந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்பது சான்றோர்களின் அருள் வாக்கல்லவா! பொன்னம்பலத்தின் மகன் பொன்னரசு சிறு வயது முதலே தனது தந்தை எடுத்து வரும் அரிய பெரிய முயற்சிகளைப் பார்த்து வளர்ந்தவன். அவரது பேச்சும் மூச்சும் கோவில் நிலங்கள் பற்றியும் குளத்தை மீட்பது பற்றியும் இருந்து வருவதைக் கண்கூடாகக் கண்டு அவற்றை தனது இலட்சியமாக ஏற்றுக் கொண்டவன். மதுரைக்கு எஞ்சினீரிங் படிக்கச் சென்றவிடத்தில் கிடைத்த தனது என்.எஸ்.எஸ். நண்பர்கள் பலரோடும் பணவுதவி செய்யத் தயாராக இருந்த சில வணிக நிறுவனங்கள் துணையோடும் களமிறங்கினான். அக்குளத்தை தூர் வாற, குப்பைகளை அகற்ற, குளத்தின் மடுவில் (ஆழமான பகுதி) ஒரு தொட்டி கட்டி மோட்டார் வைக்க, குளக் கரையில் சுவரெழுப்பி வர்ணம் பூச ஒரு பெரிய பட்டாளம் பணி செய்தது. இத்தனை காலம் பொன்னம்பலத்தின் நடவடிக்கைகளைக் கிண்டல் செய்து ஏகடியம் பேசிய அவ்வூர் மக்கள் ஆச்சரியத்தில் பொன்னரசுவின் செயல்களைப் பார்த்து அதிசயப் பட்டனர். முப்பது நாற்பது ஆண்டுகளாக ஒற்றையாள் இராணுவமாகப் போராடி வந்தவனின் மகன் ஒரு பெரிய இராணுவப் பட்டாளத்தையே அழைத்து வந்தது அவர்களுக்கு வியப்பளித்தது இயற்கையே.


ஒரே வாரத்தில் குளத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, தூர் எடுக்கப் பட்டு, சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டு கம்பீரமாக காட்சி தந்தது. மழை நீர் சேகரிக்கும் கால்வாய்கள் மூலம்  அக்குளத்தில் நீர் வந்து சேர ஏற்பாடுகள் செய்து முடிக்கப் பட்டன. குள மடுவில் பெரிய தொட்டி நிற்கிறது. குளக்கரையிலும், தொட்டி சுவர்களிலும் "இங்கு குப்பை கொட்டாதீர்" "நெகிழியைப் போடாதீர்" எனும் வாசகங்கள் பொறிக்கப் பட்டன.


அடுத்த மழை வந்த பிறகு வந்து பாருங்கள் அந்தக் குளத்தை. நீர் நிரம்பி இருக்கும் அக்குளத்தின் அழகை இரசித்து மகிழுங்கள். அப்படியே "அசையா நெஞ்சம் அருள்வாய்" என வாழ்ந்து வெற்றி பெற்ற பொன்னம்பலத்தையும் அவருக்குத் தோள் கொடுத்த அவரது புதல்வன் பொன்னரசையும் அவனுக்குத் துணை நின்றோரையும் வாழ்த்தி விட்டு வாருங்கள்!

Friday, November 1, 2024

ஆஹா உருவானது

 ஆஹா உருவானது


" பனை " யது இதன் தலவிருட்சம் ஆனது

   " பரதம் " அது இம்மண் நாட்டியமானது


தினை விரும்பி " மரகதப் புறா " தேர்வானது

   தெரு ஓரக் " கபடி " தீர விளையாட்டானது


பனி " நீலகிரி (வரை) ஆடு " மாநில விலங்கானது

   பாவில் வரும் " செங்காந்தள் " பதவி ஏற்றது


அனைவரும் விரும்பு " தமிழ் " ஆட்சி மொழியானது

   ஆஹா " தமிழ்நாடு " இந்நாள் (1/11/1956) உருவானது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...