-------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
--------------------
●०●०●०●०●०●०●०●०●०●०●०
(5) யார்க்கும் எளியனாய்...
யார்க்கும் இனியனாய்..
●०●०●०●०●०●०●०●०●०●०●०
சேலம் கலைக் கல்லூரியில் தென்னிந்திய ஆய்வர்கள் கூடிய சிம்போசியம் நடந்து முடிந்த மாலை நேரம். சிம்போசியத்தில் விவாதிக்கப் பட்ட பொருள் - பாரதியின் தீர்க்கதரிசனம். சிம்போசியத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, கலந்துரையாடிய பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் வெளிநாட்டவர்கள் அனைவரும் கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் வழங்கப் பட்ட சூடான பக்கோடாவையும் ஆவி பறக்கும் கருப்பட்டிக் காப்பியையும் சுவைத்தவாறு தங்களுக்குள் உரையாடிக் கொண்டுள்ளனர். தத்தமது தொடர்பு எண்களைப் பகிர்ந்தும், கலந்துரையாடலில் வந்த கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் விவாதித்தவாறும் இருந்தனர். முக்கியமாக பலர் கோவாவிலிருந்து வந்த கில்பர்ட் ராஜ் எனும் பேராசிரியர் முன்வைத்த சில கருத்துகளைப் பற்றி தீவிரமாக உரையாடினர். கில்பர்ட் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி மின்னலைத் தோற்கடிக்கும் வெண்ணிற வேட்டி வெள்ளை ஜிப்பா உடுத்திய ஒருவர் புன்னகைத்தபடி வருகிறார்.
"வணக்கம் கில்பர்ட். உங்க உரை நல்லா இருந்தது. என்னை யார்னு தெரியுதா" - என வினவுகிறார்.
காப்பியை உறிஞ்சியவாறே அவரை நிமிர்ந்து பார்த்த கில்பர்ட் சில நொடி யோசனைக்குப் பின்,
"வாங்க குரியன்.. உங்கள மறக்க முடியுமா. நான் கொஞ்சம் லேட்டாத்தான் வந்தேன். வந்த கொஞ்ச நேரத்துலயே விவாதத்துல கலந்துக்க வேண்டியதாயிடுச்சு.. யார் யார் வந்துறுக்காங்கன்னு கூட பார்க்க முடியல.. நீங்க நிச்சயம் வந்துருப்பீங்கன்னு தெரியும். அழைப்பிதழ்ல பேரைப் பாத்ததும் உங்களோட உரையாடணும்னு ஆவலா இருந்தேன். எப்பவும் புதிய கருத்துகளை புதிய கோணத்துல எளிமையா சொல்றதுல உங்கள யாரும் மிஞ்ச முடியாது.. உங்களப் பார்தததுல ரொம்ப சந்தோஷம்" - என உற்சாகத்தோடு பதில் சொன்னார்
"எல்லாரும் என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" - குறியன்
"இன்னிக்கு நடந்த விவாதத்தைப் பத்திதான் இருக்கும்" - கில்பர்ட்
"அது சரி.. யாரோட உரையை அல்லது விவாதத்தைப் பத்தி இருக்கும்னு நினைக்கிறீங்க?"
"இது என்ன கம்ப சூத்திரமா.. எல்லார் வாயிலேயும் அடிபடுற பேர் என்னோடதாகத்தான் இருக்கும். எல்லோரும் பாரதியை தீர்க்கதரிசின்னு சொல்லி ஆதாரங்களை அடுக்கடுக்கா சொன்னாங்க. நான்தான் அவருடைய சுதந்திர வேட்கையும் சுதந்திரம் பெற்றிட அவர் கொண்ட அதீத ஆர்வமும் மட்டுமே 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என ஆடுவோமே...' என்று பாட வைத்தது. அது தீர்க்க தரிசனமாகாதுன்னு சொன்னேன்ல. இது மாதிரி நிறைய எடுத்துக் காட்டினேன்ல அது கொஞ்சம் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கும். உள்ளேயும் சிலர் கொஞ்சம் சூடா பதில் சொல்ல ஆரம்பிச்சாங்க.. அதுக்குள்ள தலைவர் கலந்துரையாடலில் காழ்ப்பு வேண்டாமென வேண்டுகோள் வைத்ததால் அமைதி திரும்பியது.. அதனோட வெப்பம் இங்கு அடிக்கும்னு தெரியும். அதனாலத்தான் என்கூட அமர்ந்து காப்பி குடிக்கக் கூட யாரும் தயாரா இல்லைங்கறதும் புரியுது."
"உங்கள் அறிவாற்றல் என்னை எப்பவும் வியக்க வைக்கும். இன்னிக்கும் உங்கள் உரையிலே நேர்மை இருந்தது. தன்னோட மேதாவித்தனத்தை வெளிப் படுத்துறதுக்காக பேசற ஆளில்லை நீங்க. உங்கள் எண்ணத்தில் தோன்றிய விஷயங்களை ஆராய்ந்து நிதானமா பேசற நீங்க சொன்ன சில விஷயத்து மேல உங்களோட பேசலாம்னு நினைக்கிறேன்."
"தாராளமா... குரியன்.. நீங்க கூட உள்ளதை உள்ளபடி சொல்ற ஒருத்தர்தான். உங்ககிட்ட எனக்குப் பிடித்ததே அமைதியா ஆனா.. ஆணித்தரமா விவாதிப்பீங்க.. அடுத்தவர் சொல்வதையும் பொறுமையா கேட்பீங்க. அதனால உங்களோடு உரையாடுறது ஒரு நல்ல அனுபவம். என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க. விவாதிப்போம்."
"ஒரே ஒரு கேள்விதான்.
'யார்க்கும் எளியனாய்.. யார்க்கும் அன்பனாய்.. யார்க்கும் இனியனாய்..' னு மகாகவி பாடியது ஆண்டவனிடம் இறைஞ்சுவது மட்டுமே. அப்படி ஒருவர் இருக்கவே முடியாதுன்னு சொன்னீங்களே.. அதுல உறுதியா இருக்கீங்களா..?"
"என்னங்க இது.. உறுதியா இல்லாமலா அதை சொல்லிருப்பேன்"
"அப்படி ஓர் ஆள் இருக்குறத நான் நேரிலேயே காண்பிக்கிறேன்.. நீங்க கூட வந்தால்.."
"என்னது.. இந்தக் காலத்துல அப்படி ஒருவரா.. தமாஷ் பண்ணலயே நீங்க. "
"இல்லைங்க.. நிச்சயமா தமாஷ் இல்லை.. ஆனா நீங்க என் கூட எங்க ஊருக்கு வரணும்"
"கேரளாவுக்கா...!"
"ஆமா.. இங்கேயிருந்து நம்ம கார்ல நாலு மணி நேரத்துல திருச்சூர்க்கு முன்னாடியே எங்க ஊர் குட்டம்பள்ளிக்குப் போயிடலாம். பூரம் விழாவும் நாளை மறுநாள் துவங்குது. அதையும் பார்த்த மாதிரி இருக்கும். எங்க வீட்டில தங்குன மாதிரியும் இருக்கும். நீங்க ஒப்புக் கொள்ளாத பாரதியின் கூற்றை மெய்ப்பிக்க நேரில் அழைத்துச் சென்று காண்பித்த மாதிரியும் இருக்கும். வறீங்களா..?"
சில விநாடிகள் யோசித்த பின்,
"இருங்க.. வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்" என சொல்லியவாறு செல்ஃபோனை எடுத்து டயல் செய்யத் துவங்குகிறார். குரியன் அவரையே பார்த்த படி இருக்கிறார்.
"டார்லிங்.. எ ஸ்மால் சேன்ஜ் இன் மை ப்ரோக்ராம். மை ஃப்ரென்ட் குரியன், எ டமில் ஸ்காலர் இஸ் இன்வைட்டிங் மீ டு ஹிஸ் நேட்டிவ் இன் கனெக்ஷன் வித் பூரம் ஃபெஸ்டிவல் விச் இஸ் வெரி ஃபேமஸ். ஐ'ல் ஸ்டே தேர் ஃபார் எ கபுள் ஆஃப் டேஸ் அன்ட் ரிடர்ன். ... யெஸ்... ஐ'ம் கோயிங் டு எ கேரளா வில்லேஜ் நியர் ட்ருஷூர். டெஃபினிட்லி ஐ'ல் கீப் யூ போஸ்டட் ஹனி... யா..யா.. ஐ'ல் சென்ட் ஃபோட்டோஸ் & வீடியோஸ்... ஷ்யூர்லி.. பை பை டார்லிங்" பேசி விட்டு "ஓகே. லெட்ஸ் ப்ரொசீட்" -என்கிறார்.
குரியனும் கார் ட்ரைவருக்கு ஃபோன் செய்து வரச் சொல்கிறார். சிறிது நேரத்தில் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஐந்துமணி அளவில் காரில் ஏறி கிளம்புகிறார்கள். இடையில் இரவு உணவு மற்றும் தேநீருக்காக ஒரு நிறுத்தம். ஒன்பதரை மணியளவில் குரியனின் இல்லம் அடைந்தனர்.
வழி நெடுக பயணத்தில் குரியன், ஆதர்ஷ் என்பவனைப் பற்றி பிரதாபித்துக் கொண்டே வந்தார். அவர் சொல்லுவதைக் கேட்கக் கேட்க கில்பர்ட்டுக்கு ஆச்சரியம் மேலிட்டாலும் தனது கூற்றை நிரூபிக்க குரியன் கொஞ்சம் அதிகமாக பில்டப் செய்கிறாரோ என்ற ஐயமும் எழுந்தது. அவர் முகக் குறியிலிருந்து அதனை உணர்ந்த குரியன்,
"நீங்களே நேரில் பார்க்கத்தானே போறீங்க.. அப்ப நிச்சயம் நான் மிகைப் படுத்தல அப்படிங்கறத புரிஞ்சுக்கிடுவீங்க" - குரியன் சொன்னார்.
அமைதியாக கில்பர்ட் தலையசைத்தார். வீடு வந்ததும் குடும்பத்தாருடன் ஒரு சிறு அறிமுகம் முடிந்த கையோடு, மரியா (குரியனின் மனைவி) இருவருக்கும் பனங்கல்கண்டு போட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பாலை கொடுத்தாள். பிறகு அவருக்கு கொடுக்கப் பட்ட தனியறையில் படுக்கப் போனார் கில்பர்ட். விரைவில் உறங்கிப் போனார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. கில்பர்ட் கண் விழிக்கும் முன்னரே குரியன் குடும்பம் காலைக் கடன்களை முடித்து பூரம் திருவிழா துவக்கத்தினைக் காணத் தயாராக இருந்தனர். தாமதமாக எழுந்து விட்டோம் என்ற குற்ற உணர்வோடு கில்பர்ட் வேக வேகமாக தனது பணிகளைத் துவங்கினார். பளீரென புன்னகையோடு நல்ல உடல் வாகுள்ள உயரமான ஓர் இளைஞன் அவருக்கு முகமன் கூறினான். இடையில் ஒரு காவி நிற வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்த அவன் முகம் மிகக் களையாக இருந்தது. சுறுசுறுப்பின் மொத்த உருவமாக அவன் இருந்தான். அவரது தேவைகளை ஓடியாடி பூர்த்தி செய்தான். பாய்லரில் போடப்பட்ட வெந்நீரை இரண்டு பெரிய பக்கெட்டுகளில் ஒரே சமயத்தில் தூக்கி வந்து அவர் குளிக்கும் பதமான இளஞ்சூட்டில் விளாவி தொட்டியில் நிரப்பினான். குரியனின் குடும்பத்தார் ஒவ்வொருவரும் இட்ட பணிகளை இன்முகத்தோடு சுறுசுறுப்பாக செய்தான். கில்பர்ட் குளித்து முடித்து உடை மாற்றி வந்தபோது குரியன் குடும்பமே டைனிங் டேபிளில் அவருக்காகக் காத்திருந்தது. கேரள ஸ்பெஷல் குழாய்ப் புட்டிலிருந்து எழும்பிய புகையின் மணம் நாவில் நீர் ஊற வைத்தது. கொண்டக்கடலை க்ரேவி, அவித்த நேந்திரம் பழம், இட்லி, தோசை, பணியாரம், மீன் குழம்பு, சட்னி என ஒரு மினி ஹோட்டலே அங்கு வந்திருந்தது. அனைவருக்கும் அந்த இளைஞனே ஓடியாடி பறிமாறினான். மரியா பெருமையோடு கேரளாவின் ஸ்பெஷல் மத்தி மீன் என்றும் அதனை ஃப்ரெஷ்ஷாக பிடித்து வந்து மண்சட்டியில் பொறித்து மணக்க மணக்க குழம்பு வைத்தது ஆதர்ஷ்தான் என அன்பு ததும்பச் சொன்னார். அப்போதும் புன்னகைத்த படி,
"இன்னும் மீனு போட்டு நல்லா சாப்பிடுங்க சாரே!" - ஆதர்ஷ் கூறினான். நேற்று மாலை கார் பயணத்தின் உரையாடலின் போது அறிமுகமான ஆதர்ஷ், தன் மனத் திரையில் பதிந்து விட்ட ஆதர்ஷ் அவன்தான் என தெரிந்ததும் கில்பர்ட் அவனை கண்களை விரித்து உற்றுப் பார்த்தார்.
"அம்மை எப்போதும் தமாஷ் செய்யும். சாரோட ராசி இன்னிக்கு கருக்கல்லே தோணில வரும்போது வலை வீசினேன். மத்தி மீன் வண்டி வண்டியா மாட்டுச்சில்லா.. அதான் சுடச்சுட மீன்குழம்பு வைக்க முடிஞ்சது... நீங்க கைநிறைய எடுத்து உண்ணுங்க சாரே" - மீண்டும் ஆதர்ஷ் அன்போடு சொன்னான்.
குரியனின் குழந்தைகள் மூவரும் அவனையே 'சேட்டன் - சேட்டன்' என்று அழைத்தவாறு சுற்றி சுற்றி வந்தார்கள். அவர்களின் தேவை எல்லாம் நொடியில் அவன் செய்து முடித்தான். அவன் இதேபோல அந்த கிராமத்தில் இருந்த அனைத்து இல்லங்களிலும் குடும்ப உறுப்பினனாகவே இருக்கிறான் என்பதை குரியன் பெருமையோடு கூறினார்.
உணவு உண்டு முடிந்து தோணிக்கரைக்கு சென்றார்கள். ஆதர்ஷின் தோணி அங்கு கட்டப் பட்டிருந்தது. அவன் வருகைக்காக ஒரு சிறு கூட்டம் கரையில் காத்திருந்தது. இவர்களோடு அந்த மக்களையும் ஏற்றிக் கொண்டு தோணி புறப்பட்டது. பயணத்தின் போது மக்கள் ஆதர்ஷுடன் மிக அன்னியோனியமாக பேசி வந்தனர். தோணியின் முனையருகில் ஒரு மூங்கில் கம்பு நிறுத்தி வைக்கப் பட்டு அதில் பிரம்பால் முடைந்த ஒரு கூடை மாட்டப் பட்டிருந்தது. பயணம் முடிந்ததும் அதில் தங்கள் விருப்பப் படி காசினை போடலாம். காசில்லாதோர் அல்லது காசு கொடுக்க விருப்பமில்லாதோர் ஒன்றும் போடாது போனாலும் போகலாம். குறிப்பாக பள்ளிப் பிள்ளைகளுக்கும் தினக் கூலிகளுக்கும் பயணம் இலவசமே. அந்தக் கூடையில் விழும் பணத்தில் பாதிக்கு மேல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கே கல்விக் கட்டணத்துக்காக, மருத்துவ செலவுக்காக, வயிற்றுப் பசியைப் போக்கிட செலவு செய்யப் படும். மறுநாளைக்காக சேமித்து வைத்தல் எனும் சிந்தனையே இல்லாதவன். அவனது தாய் கணவனை இழந்த நாள் முதல் சொந்தக் காலில் நின்று, இதேபோல தர்ம சிந்தனையோடு கருணை உள்ளத்தோடு ஊர் மக்களுக்கு உதவி வந்தவள். அவள் வளர்ப்பு விழலாகுமா.. சமூகத்துக்கே நிழல் தரும் விருக்ஷமாகுமா! இதெல்லாம் நேற்று வாய்மொழியாகக் கேட்டறிந்தது. கில்பர்ட்டுக்கு ஒரு குறுகுறுப்புத் தோன்றியது. அந்த மூங்கில் கூடைக்கு அருகில் ஒரு சிறிய மண்பானை உண்டியலாக்கிக் கட்டப் பட்டிருந்தது. அதில் மலையாளத்தில் ஏதோ எழுதப் பட்டிருந்தது. அது என்ன என்று விசாரித்தார். 'அசோகன் நம்பியார் குழந்தை ஷைலஜாக் குட்டியின் மருத்துவ செலவுக்கு' என்று எழுதப் பட்டிருந்ததாகக் கூறினார்கள். குரியனும் அது குறித்து விசாரித்தார்.
"சாரே.. நம் ஷைலஜாக் குட்டிக்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்தல்லோ.. ஆஸ்பத்திரி கூட்டிப் போனா பெரிய டாக்டர் ஹோர்ட்ல ஓபரேஷன் செய்யணும்னு பறஞ்சூ.. மூணு லட்சம் எஸ்டிமேட்டாம். அதுக்கான கலெக்ஷன் வேண்டி வச்சு சாரே" - இதுதான் உண்டியலுக்கான எக்ஸ்ப்ளனேஷன்.
குரியன் கவலையோடு தனது மனைவியைப் பார்க்க, அவளும்,
"ஆதர்ஷ்.. ஏன் முன்னமே சொல்லலே.." -என்றாள்.
"அம்மே! மன்னிக்கனும்.. நேத்து ரவைக்குத்தான் டாக்டர் பறஞ்சு.. அதான் ..."
கில்பர்ட் இந்த உரையாடல் முடிந்த கையோடு அமைதியில் ஆழ்ந்தார். தனது கைபேசியை எடுத்து பார்க்கத் துவங்கி விட்டார்.
கோயில் கரை வந்ததும் தோணியை விட்டு இறங்கிச் செல்வோர் கூடையிலும் குடத்திலும் காசு போட்டுவிட்டு சென்றார்கள். கில்பர்ட் பார்த்தபடியே இருந்தார். அனைவரும் இறங்கிய பின் ஆதர்ஷ் கூடையை எடுத்து அப்படியே அந்த மண்குடத்தில் மொத்தக் காசையும் கவிழ்த்தான்.
குரியன் குடும்பம் கோவிலுக்குப் போகையில் கில்பர்ட் சில கால்கள் பண்ண வேண்டியிருப்பதாகக் கூறி கரையிலே நின்று விட்டார். அங்கு மக்கள் பலரிடம் உரையாடியதில் அனைத்து இல்லங்களிலும் நடக்கும் நல்லவை கெட்டவைகளில் முதல் ஆளாக நிற்பவன் ஆதர்ஷ் என அறிந்து கொண்டார். எளிய குடும்பங்கள் பலவற்றின் ஆபத்பாந்தவன் அவன்தான் என பலரும் கூறினர். குரியன் சொன்னதை விட பல மடங்கு அதிகமாக பெருமையாகப் பலரும் கூறினர். அனைத்து உதவிகளையும் சிரித்த முகத்தோடு ஓடி வந்து மகிழ்ச்சியோடு செய்வான் என அவர்கள் கூறிய போது எல்லார்க்கும் எளியனாய்.. எல்லார்க்கும் இனியனாய்.. அவன் இருப்பதை புரிந்து கொண்டார்.
மளமளவென கில்பர்ட் பல கால்கள் செய்யத் துவங்கினார்.
அரைமணி நேரம் கழித்து அனைவரும் திரும்பி வந்ததும், நேரே ஆதர்ஷிடம் சென்றவர் தங்களை அந்த டாக்டரிடம் அழைத்துச் செல்ல இயலுமா எனக் கேட்டார். இல்லந் திரும்பியதும் காரில் சுவாதித் திருநாள் மருத்துவ மனைக்கு கிளம்பினார்கள். அங்கு டீனை சந்தித்து தனது மைத்துனர் (டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை மருத்துவர்) பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டார். டீனும் தன்னிடம் அவர் மைத்துனர் ஃபோனில் பேசி விட்டதாகக் கூறி எல்லோரையும் அமரச் சொன்னார். குழந்தை ஷைலஜா ஆபரேஷனுக்காக ஆகக் கூடிய மொத்த செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கில்பர்ட் கூறினார். உடன் வந்தவர்கள் திகைத்து நிற்க காரியங்கள் வேக வேகமாக நடந்தன.
மறு நாளே ஆபரேஷன் என முடிவும் எடுக்கப் பட்டு விட்டது.
இது எல்லாவற்றையும் ஏதோ மந்திரித்து விட்டவனைப் போல் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றிருந்தான் ஆதர்ஷ். குரியனும் மரியாவும் அதே திகைப்பில் இருந்தனர். சிறிது சுதாரித்துக் கொண்ட குரியன்,
"என்னங்க கில்பர்ட். ஒண்ணுமே சொல்லாம எல்லா வேலையும் செஞ்சுட்டீங்க... " என்றார்.
கில்பர்ட் பதில் சொல்லும் முன் அசோகன் குடும்பமே ரிசப்ஷன் கவுண்டருக்கு வந்து விட்டது. கில்பர்ட்டை ஆதர்ஷ் அறிமுகப் படுத்தியதும் அவர் காலில் வந்து விழுந்தது. நாத்தழுதழுக்க,
"சாரே! நிங்கள் தெய்வம் சாரே..." என ஆதர்ஷ் கண்கள் கலங்கியபடி சொன்னான்.
"ஆதர்ஷ்... ஆசானுக்கு குரு தக்ஷ்ணை கொடுக்கனும்ல.. எனக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்த உனக்கு நான் கொடுக்குற தட்சிணைதான் இது.. குரியன்தான் எனக்குத் தெரியாத விஷயத்தை சொல்லிக் கொடுக்க உங்கிட்ட கூட்டி வந்தாரு... அவருக்கு தாங்க்ஸ்.. எல்லாருக்கும் எளியனாய்.. இனியனாய் இருக்குற உங்கிட்ட நான் இன்னிக்கு நல்ல ட்யூஷன் எடுத்துக்கிட்டேன்." - என சொல்லியவாறு ஆதர்ஷை இறுகத் தழுவிக் கொண்டார்.
அவருக்குப் புரிந்த அந்த பாடம் நமக்கும் புரிந்தால் நல்லது. இயன்ற அளவு 'எல்லார்க்கும் எளியனாய்... எல்லார்க்கும் இனியனாய்..' நாமும் இருக்க முயற்சிக்கலாமே. குறைந்த பட்சம் வள்ளுவனார் கூறியது போல "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" எனும் வழியில் இனிய சொற்கள் கூறிடலாமே. இயன்ற அளவு சிறிய உதவிகளையாவது செய்திடலாமே! முயற்சிப்போமா!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment