●०●०●०●०●०
*எது இனிது!*
*(தனவந்தர் மனதின் வினா)*
●०●०●०●०●०
பிள்ளைப் பருவத்தில்
பொங்கல் தினம்
நினைக்க நினைக்க
ஏங்குது மனம்
ஏழ்மையின் பிடியில்
வாடிய இனம்
மலரும் நினைவுகளால்
மனதிலே கனம்
கரும்பு வாங்கிட
காசிலா நிலை
ஊரோடு கொண்டாட
வசதியோ இலை
வீடுகளில் எப்போதும்
எரியாத உலை
எண்ணைப் பசையே
காணாத தலை.
போகி பொங்கல்
எல்லாம் முடிந்து
மேலத் தெரு
மச்சு வீட்டில்
கொண்டாட்டங்கள்
முடிந்த கையோடு
அவ்வீட்டார் தூக்கி
எறிந்த காஞ்ச கரும்பு..
கையில் கிடைத்த
சிறுவர் கூட்டம்
எடுத்து ஓடியது
ஊரின் எல்லைக்கு
யாருமறியா வண்ணம்
ஒளிந்து நின்று
ஆவலாய்க் கடித்து
சுவைத்து மகிழ்ந்தது
வசந்த காலம்
சுகந்த நினைவுகள்
திரும்பும் திசையெலாம்
வயல் வரப்புகளோடு
மாளிகை போன்ற
வீட்டில் வசிக்கும்
இந்நாளில் இல்லாத
இனிமை அன்றிருந்ததே!
இனிது எதுவென
நினைத்துப் பார்க்கையில்
காய்ந்த கரும்பா
காயாத நினைவா
வறுமையிலும் மகிழ்ந்த
இளமைக் காலமா
விடையறிந்த நல்லோர்
தடையின்றி சொல்லுங்களேன்!
*(தனவந்தர் மனதின் வினா)*
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment