Tuesday, November 5, 2024

மூத்த குடிமக்கள் கொண்டாட்டத்தில்... (5/11/2024)

 மூத்த குடிமக்கள் கொண்டாட்டத்தில்... (5/11/2024) 


மூத்த குடிமகன் என முத்திரை குத்தி விட்டால்

   மூலையில் உட்கார முடியுமோ அதனால்? 


காத்து வாங்க நாளும் வெளியே போவோம்

   காலார நடப்பதை என்றும் நிறுத்தோம்


கூத்து, கலை நிகழ்ச்சிகள் கண்டு களிப்போம்

   கூடவே முடிந்தால் பங்கும் பெறுவோம்


மாத்தி புதுசு புதுசாய் ஏதேனும் செய்வோம்

   மண்டையில் நியூரான்கள் மடிய அனுமதியோம்



நேத்து தான் மணந்தது போல் மனைவியை நேசிப்போம்

   நிற்போமா அவரின்றி? யோசிப்போம் பூசிப்போம்


பாத்திரங்கள் தேய்த்து மனைவிக்கு உதவலாம்

   பால் பாயசம் பரிசாய்க் கேட்காமல் பெறலாம்


பேத்தி, பேரனுடன் பேதமின்றிப் பழகுவோம்

   பேசுவோம், சிரிப்போம், வயது மறப்போம்


தோத்தும் போவோம் விளையாட்டில் பிள்ளையிடம்

   தோளில் கை போட்டுத் தோழனாய் மகிழ்வோம்



நேத்து நடந்ததை நேத்தே மறப்போம்

   நிகழ்காலம் நில்லாது தவறவிடோம்


சேத்து வைத்தச் செல்வம் போதுமென நினைப்போம்

   சிரித்தபடி இருப்போம், சினத்தை எரிப்போம்


பாத்து பாத்து வளர்த்த பசங்களை மன்னிப்போம்

   பாராமல் இருந்தும் பாசமாய் இருப்போம்


வேத்து சாதி, மதம் உறவாக வந்தாலும்

   விரும்பி ஏற்போம் வேறென்ன செய்வோம்? 



ஆத்து வெள்ளத்தில் அடித்து வரும் கட்டைகள்

   அங்கங்கே சேர்வது போல் அமையும் உறவுகள்


பாத்துக் கொண்டிருக்கையில் பள்ளம், மேடு வரும்

   பாவம் கட்டைகள் போல் உறவும் பிரியும்


கூத்து மேடையாம் வாழ்க்கையது அறிவோம்

   கொடுத்த பாத்திரம் சரியாகச் செய்வோம்


காத்திருந்த அந்நாள் இன்றென நினைப்போம்

   கையிருப்பைக் கொஞ்சம் கருணையிடம் ஈவோம்


கொசுறு


மூத்த சகோதரரே ! முக்கியமாய் ஒன்றுண்டு

   முழுக் கவனம் என் பக்கம் திரும்பினால் நன்று


காத்துக் கிடக்கிறதாம் கழுகுகள் கூட்டம்

   கண்ணை உறுத்தும் கடின உழைப்பின் பணம்


மாத்தி மாத்திக் கூப்பிடும் மண்டையைக் குழப்பும்

   மன்றாடும், மிரட்டும்  OTP, PIN கேட்கும்


ஆத்துமாமியிடமும் அவைகளைப் பகிர வேண்டாம்

   அழகாய் இருப்பாரிடம் அறவே வேண்டாம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...