-----------------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
-----------------------------
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●
(4) அசையா நெஞ்சம் அருள்வாய்
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஒரு முக்கியமான ஊர் பிரம்மதேசம். அவ்வூரின் சிவன் கோவில் மிகப் பிரசித்தமானது. ராஜேந்திர சோழனால் பராமரிக்கப் பட்ட கோவில் என்ற புகழுடையது. அந்த சிவன் கோவிலின் மேற்கே ஒரு கிமீ. தொலைவில் இன்னொரு கோவில் உள்ளது. அது ஓர் அம்மன் கோவில். அந்த சிவன் கோவிலை விடப் புராதானமானது என்று அவ்வூர் மக்கள் கூறுவர். பிரம்மதேசம் அப்பகுதியின் தலைமைப் பீடமாக இருநூறு ஆண்டுகள் முன்பு வரை இருந்ததாத வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. அப்பெருமையை தற்போது அம்பைக்கு விட்டுக் கொடுத்து விட்டது. பிரம்மதேசம் முக்கிய பீடமாக இருந்த காலத்தில் இக்கோவில் மிகப் பிரபலமாக இருந்தததாகவும் மக்கள் கூறுகின்றனர். அக்கோவிலுக்கு ஒரு சிறப்பு உள்ளது. அக்கோவிலின் குளம் பிற கோவில்களில் உள்ள குளங்களை விட மிகப் பெரியது. சுற்றுவட்டாரத்திலுள்ள பற்பல பட்டி தொட்டிகளின் நீராதாரமாக விளங்கி வந்தது. அக்கோவிலின் மகிமை குறையத் துவங்கியதால் கோவிலின் பராமரிப்பு கேள்விக் குறியானது. கோவில் பராமரிப்பே தள்ளாடும் போது, குளத்தைப் பற்றிக் கவலைப் படுவோர் இருப்பார்களா!
நீரின் மேலாண்மையில் மிகச் சிறந்து விளங்கிய தமிழினம் எவ்வாறு தன் மொழியின் பெருமை அறியாது அன்னிய மொழிப் பித்து பிடித்து அலைகிறதோ, அதைப் போலவே இயற்கையைப் போற்ற மறந்தும் நீர் மேலாண்மையைப் புறக்கணித்தும் நவநாகரீக வாழ்வு எனும் இருளில் மூழ்கிப் போனது. அந்த பாதிப்பின் நீட்சியே மாநிலமெங்கும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணற் கொள்ளை, பராமரிப்பு ஏதுமின்றி நீர்நிலைகள் சீரழிதல் என சீர்கேடுகள் பல்கிப் பெருகின. பிரபலத்துவம் இழந்த அந்த அம்மன் கோவிலின் குளமும் இந்த சீரழிவுக்குப் பலியானது. ஆம்.. கோவிலே சிதிலமடைந்து இருக்கையில் அதன் குளத்தைப் பற்றி யார் கவலைப் படுவார். விரைவில் அக்குளம் குப்பைமேடாகிப் போனது. கழிவுகள் கொட்டும் இடமாகவும் ஆகிப் போனது. குளம் இருந்த இடமே தெரியாமல் போனது.
அவ்வூரில் இருந்த பொன்னம்பலம் ஒரு சிறு விவசாயி. அவரது பாட்டனார் சிவதாசன் நொடிக்கு நூறுமுறை அம்மன் கோவிலைப் பற்றியும், அந்தக் குளத்தைப் பற்றியும் சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார். அது ஏனோ அவரது அடிமனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. சிறு வயது முதலே பொன்னம்பலத்தின் மனதில் ஓர் உறுதி உருவானது. தான் தலையெடுத்து குடும்பப் பொறுப்பை சுமக்க ஆரம்பிக்கத் துவங்கிய போது, அந்த மனவுறுதி மேலும் வலுப் பெற்றது. பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தனது நட்பு வட்டத்தின் மூலம் அக்கோவில் நிலங்கள் மற்றும் அக்குளத்தின் ஆவணங்களின் நகல்களைப் பெற்றார். அவற்றிற்கு சர்வே செய்ய தன் சொந்த செலவில் விண்ணப்பித்தார். 'சிவன் சொத்து குல நாசம்' என உபதேசம் செய்து ஊரில் வலம் வரும் சில பெருந் தலைகளே கோவில் நிலத்தின் பெரும் பகுதியை சுவாஹா செய்திருந்தனர். இவர் இந்நடவடிக்கைகளை மேற் கொண்டதும், பதறிப் போயினர். அதற்கு எவ்வாறெல்லாம் முட்டுக் கட்டை போட இயலுமோ அதையெல்லாம் தொடர்ந்து செய்தனர். பொன்னம்பலமும் மனந் தளராது தனது வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். காசுள்ளவர் பக்கமே சாய்ந்து நிற்கும் சமூகமும், அரசு எந்திரமும் பிரம்ம தேசத்தில் மட்டும் புது அவதாரமா எடுக்கும். தம்மை நோக்கி எறியப் படும் எலும்புத் துண்டுகளுக்காய் தமது வாலைத் தாராளமாக ஆட்டின.
நிலங்கள் பல ஆர்ஜிதப் படுத்தப் பட்டதாக ஆவணங்கள் புதிதாக அரிதாரம் பூசிக் கொண்டன. பொன்னம்பலத்தின் கைவசம் இருந்த நகல்கள் போலியானவை என பஞ்சாயத்து அலுவலகம் சொல்லி விட்டது. ஆவண முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது புகாரளிக்கப் போவதாக மிரட்டியது அதிகார வர்க்கம்.
மனந் தளராத விக்கிரமாதித்தனாய் பொன்னம்பலம் தனியாளாய் அந்த பெருந் தனக்காரர்களிடம் தொடர்ந்து பேசி அந்தக் குளத்தையாவது மீட்டெடுக்க முயற்சித்தார். தொய்வில்லாமல் அவர்களோடு பேசி வந்தார். நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த அக்கால கட்டத்தில் குளங்களை, ஏரிகளை ஆக்கிரமித்து அபகரிக்கும் நிலை பெரிதாகக் காலூன்றாத நிலை என்பதால், அந்தக் குளத்தின் நிலப் பரப்பு ஆக்கிரமிப்பால் பெருமளவில் பாதிக்கப் படவில்லை. எனவே, அந்த தனவந்தர்களும் தங்கள் நிலங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதி செய்த பின், குளத்தை சரி செய்ய பொன்னம்பலத்துக்கு தடை சொல்லாது விட்டனர். அவரும், தொடர்ந்து போராடி, அக்குளத்தைச் சுற்றி கல் நட்டு முள் கம்பி போட்டார் தன் சொந்த செலவில்.
இம்முயற்சிகளை மேற்கொண்டு குளத்தை மீட்டெடுக்க அவருக்கு பற்பல ஆண்டுகள் ஆகின. எப்படியோ தன் பாட்டனின் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் முதல் படியை ஏறி விட்ட திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஆயினும் குளத்தின் ஒரு பகுதி குப்பைமேடாகவும் மறு பகுதி சேறும் சகதியாகவும் உள்ள நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். அக்குளத்தை பராமரித்து நீர்நிலையாக மாற்ற இனி தன்னால் இயலுமா எனும் விரக்தி அவருக்கு உண்டானது. இதுவரை "அசையா நெஞ்சம்" கொண்டு செயல் பட்ட அவர் முதுமையைத் தொடும் தனது அறுபதாவது வயதில் இந்த மனச் சோர்வு கொண்டார்.
உள்ளம் நல்லதையே நினைத்தால், சிந்தனைகள் நல்லவைகளாக இருந்தால், செயல்கள் நல்லதாக அமைந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்பது சான்றோர்களின் அருள் வாக்கல்லவா! பொன்னம்பலத்தின் மகன் பொன்னரசு சிறு வயது முதலே தனது தந்தை எடுத்து வரும் அரிய பெரிய முயற்சிகளைப் பார்த்து வளர்ந்தவன். அவரது பேச்சும் மூச்சும் கோவில் நிலங்கள் பற்றியும் குளத்தை மீட்பது பற்றியும் இருந்து வருவதைக் கண்கூடாகக் கண்டு அவற்றை தனது இலட்சியமாக ஏற்றுக் கொண்டவன். மதுரைக்கு எஞ்சினீரிங் படிக்கச் சென்றவிடத்தில் கிடைத்த தனது என்.எஸ்.எஸ். நண்பர்கள் பலரோடும் பணவுதவி செய்யத் தயாராக இருந்த சில வணிக நிறுவனங்கள் துணையோடும் களமிறங்கினான். அக்குளத்தை தூர் வாற, குப்பைகளை அகற்ற, குளத்தின் மடுவில் (ஆழமான பகுதி) ஒரு தொட்டி கட்டி மோட்டார் வைக்க, குளக் கரையில் சுவரெழுப்பி வர்ணம் பூச ஒரு பெரிய பட்டாளம் பணி செய்தது. இத்தனை காலம் பொன்னம்பலத்தின் நடவடிக்கைகளைக் கிண்டல் செய்து ஏகடியம் பேசிய அவ்வூர் மக்கள் ஆச்சரியத்தில் பொன்னரசுவின் செயல்களைப் பார்த்து அதிசயப் பட்டனர். முப்பது நாற்பது ஆண்டுகளாக ஒற்றையாள் இராணுவமாகப் போராடி வந்தவனின் மகன் ஒரு பெரிய இராணுவப் பட்டாளத்தையே அழைத்து வந்தது அவர்களுக்கு வியப்பளித்தது இயற்கையே.
ஒரே வாரத்தில் குளத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, தூர் எடுக்கப் பட்டு, சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டு கம்பீரமாக காட்சி தந்தது. மழை நீர் சேகரிக்கும் கால்வாய்கள் மூலம் அக்குளத்தில் நீர் வந்து சேர ஏற்பாடுகள் செய்து முடிக்கப் பட்டன. குள மடுவில் பெரிய தொட்டி நிற்கிறது. குளக்கரையிலும், தொட்டி சுவர்களிலும் "இங்கு குப்பை கொட்டாதீர்" "நெகிழியைப் போடாதீர்" எனும் வாசகங்கள் பொறிக்கப் பட்டன.
அடுத்த மழை வந்த பிறகு வந்து பாருங்கள் அந்தக் குளத்தை. நீர் நிரம்பி இருக்கும் அக்குளத்தின் அழகை இரசித்து மகிழுங்கள். அப்படியே "அசையா நெஞ்சம் அருள்வாய்" என வாழ்ந்து வெற்றி பெற்ற பொன்னம்பலத்தையும் அவருக்குத் தோள் கொடுத்த அவரது புதல்வன் பொன்னரசையும் அவனுக்குத் துணை நின்றோரையும் வாழ்த்தி விட்டு வாருங்கள்!
No comments:
Post a Comment