Wednesday, November 6, 2024

செவிகளே!!!

 செவிகளே!!!


* "தோடுடைய செவியன்" 

என்று எம்பிரானைப் பாடுகையில் உம்மையும் ஏற்றிப் பாடுவதை மறந்தீரோ?


*செல்வத்துள் எல்லாம் தலை என்று எங்கள் தலை வள்ளுவன் சொன்னதாக 

எங்கள் பள்ளி விழாவில் தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர் வாய் வழியே சொன்னதை எம் தலையில் உள்ள உங்கள் வழியே கேட்டு உங்களை எம் தலையில் வைத்துக் கொண்டாடினோமே..

கேட்க மட்டுமே முடியும் என்பதால் நினைவில் இல்லையோ?

நீங்கள் மூளைக்குத் தானே 

தகவல் அனுப்பி வைத்தீர்?

தலையில் உள்ள மூளை சொல்லவில்லையா? அல்லது மூளை சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? 


*உங்களுக்கு உணவளித்த

பின்பு வேறு வழியில்லாமல்  உங்களுக்கே மீண்டும் மீண்டும் உணவளிக்க விரும்பி எம் வயிற்றுக்கு உணவளித்து

உயிர் வளர்த்து உம் செல்வத்தைக் கேட்டோமே! 

இதையும் மறந்தீரோ?


*இவையெல்லாம் போதாதென்று "காதணி விழா" என்று உங்களுக்காக 

ஊரையும் உறவையும் கூட்டி 

தடபுடலாக விழா எடுத்து தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் என்று சொல்லி உங்களைக் குத்தினால் எங்கள் குழந்தைகள் கத்துவர் என்று தெரிந்தும்  

உங்களுக்கு  நட்சத்திர கம்மல் அணிவித்து அழகு பார்த்தோமே...எல்லாம் மறந்து போனதா? உங்களுக்கு விழா எடுக்க வசதியற்ற குடும்பங்கள் "கைல காதுல" இருந்ததை அடகு வைத்தும் உங்களைக்

கொண்டாடித் தீர்த்த போது 

ஒலி பெருக்கியில் நீங்களே அதிரும்படி ஒளித்த

" காதொடு லோலாக்கு"

" காதோடு தான் நான் பேசுவேன்"  ஆகிய திரைப்படப் பாடல்களைக் 

கேட்காமல் விட்டீர்களோ??


*உங்களைப் பாடவில்லை என்று ஏன் சென்னீர்கள்?

எங்கள் ழகரக் கவியரங்கத்தில் " சங்குப்பூ செவிகளாம்" என்று எங்கள் அவைப்புலவர் கவிதை பாடியது உங்களுக்கு எட்டவில்லையோ?



*உங்களை இரட்டையர் என்று யார் சொன்னது?

எங்கள் மனம்/ ஆன்மா என்ற கருவறைக்கு வெளியே காவல் காக்கும் துவார பாலகர்கள் அல்லவா நீங்கள்?

எதை அனுமதிக்கலாம்?

எதை உள்ளே விடாமல் காற்றில் விட்டுவிடலாம் என்று உமக்குத் தானே அதிகாரம் கொடுத்துள்ளோம்!

இரு காதுகளே...

இனியும் உங்களுக்கு எங்கும் முக்கியத்துவம் 

இருக்"காது" என்று காது கிழிய பேச வேண்டாம்!




- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...