----------------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
----------------------------
★०★०★०★०★०★०★०★०★०★०★
*(6) பகைமை ஒன்றின்றி பயந் தவிர்த்தல்*
★०★०★०★०★०★०★०★०★०★०★
மதுரை நகரில் மையத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவ மனை. உலகத் தரம் வாய்ந்த நவீன கருவிகள், தேர்ந்த மருத்துவர்கள், ISO நற்சான்று பெற்ற கட்டமைப்பும் கட்டடங்களும் என கொடி கட்டிப் பறக்கும் மருத்துவ மனை. 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தூங்கா நகரத்தில் இம்மருத்துவ மனையும் தூங்கா மருத்துவ மையமாகத் திகழ்கிறது.
ஆங்காலஜி பிரிவின் ஸ்பெஷல் ரூமில் 55 வயதான கே.ஜி. ராவ் படுக்கையில் படுத்திருக்கிறார். சில நாட்களாக ஷேவிங் செய்யாததால் முகத்தில் வெள்ளை முட்களாய் தாடியும் அடர்ந்த சால்ட் அன்ட் பெப்பர் மீசையுமாக இருக்கிறார். டை அடித்த தலைமுடி ஆங்காங்கே பல்லிளித்து பழுப்பும், வெள்ளையும், கருப்பும் திட்டுத் திட்டாகத் தெரிகிறது. முகம் மிக வாடியுள்ளது. மார்பு வரை மூடப் பட்டிருக்கும் வெளிர் நீல போர்வையினுள் உடம்பு இருக்கிறதா என ஐயமுற வைக்கும் அளவு உடல் மெலிந்துள்ளது.
யார் இந்த கே.ஜி. ராவ்.! அவருக்கு என்ன? என எழும் கேள்விகளுக்கு விடையறியலாம். அவர் முழுப் பெயர் கே. கங்காதர ராவ். வயது 55 ஆகிறது. இந்திய இராணுவத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்து விருப்ப ஓய்வில் சென்றாண்டு ஓய்வு பெற்றவர். சில மாதங்களில் நான்கு நட்சத்திரங்கள் பெற்று ஜெனரலாக வர வாய்ப்பிருந்தும், அவர் VRS-ல் ஓய்வு பெற்றது பலருக்கு வியப்பைத் தந்தது. அதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் அவர் ஏன் மதுரையில் அந்த மருத்துவ மனையில் படுத்திருக்கிறார் என்பது தெரிந்திடும்.
எட்டு மாதங்களுக்கு முன் டேராடூன் இந்திய இராணுவ அகாடமி மையத்தில் காலை பரேட் பார்த்து விட்டு காலை உணவு அருந்திய பின் கை கழுவச் சென்றவர் வாஷ் பேஷினில் வாந்தி எடுக்கிறார். சத்தம் கேட்டு பலரும் அவரை நோக்கி ஓடி வருகையில், ஒன்றுமில்லை என கை காட்டி விட்டு வாய் கொப்புளிக்கிறார். மீண்டும் வாந்தி. இம்முறை பெரிய சத்தத்துடன். இரத்தமும் கலந்து வருகிறது. அருகிலிருந்த சிலர் உதவி செய்ய வருமுன் சரிந்து கீழே விழுகிறார். வாயெல்லாம் இரத்தக் கறை. உடையெல்லாம் இரத்தம். அவரை உடனே ஸ்ட்ரெச்சரை வரவழைத்து மிலிட்டரி ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கின்றனர். அனைவரும் அஜீரணம் என எண்ணினாலும், இரத்தம் வாந்தியுடன் வந்தது சிறிது அச்சத்தைத் தருகிறது.
மிலிட்டரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளித்தாலும், அங்கிருக்கும் சி.எம்.ஓ. சொல்லியபடி டெல்லி அனுப்பப் படுகிறார். ஒருவாரம் விரைவாக ஓடுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் ஸ்கேன் எடுக்கப் பட்டு அவருக்கு குடலில் கேன்சர் உள்ளது என கண்டறியப் பட்டது. கடந்த சில வாரங்களாக வயிற்று வலி, காலைக் கடன்களில் அசௌகரியங்கள் என தொந்தரவு இருப்பினும், அவர் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது கேன்சர் மூன்றாம் நிலையில் (தேர்ட் ஸ்டேஜ்) என்று கண்டறியப் பட்டுள்ளது. நீண்ட நாள் உயிர் வாழ்தல் துர்லபம் எனவும் மருத்துவ அறிக்கை கூறியது.
போர்முனையில் நவீன ஆயுதங்களுடன் வரும் எதிரிகளை அஞ்சாது எதிர் கொண்டவர், கேன்சர் எனும் பகையைக் கண்டு பயந்தார். உள்ளம் ஒடுங்கினார்.
நிர்வாகம் அவரை இன்வேலிடேஷனில் அனுப்புவதை விட அவரை விருப்பப் பணி ஓய்வு கொடுக்கச் சொல்லலாம் என முடிவு செய்தது. அவரிடம் இதனை வாய்மொழியாகத் தெரிவித்தது.
தான் தனது இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற செய்தி ஒரு மனிதனுக்குத் தெரிவது போல பெரிய கொடுமையானது உலகில் வேறெதுவும் இல்லை. அந்தக் கொடுமையை ராவ் அனுபவிக்கத் துவங்குகிறார். இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு அவரது குடும்பம் வந்து அவரை மதுரை அழைத்துச் சென்றது. ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ளது அவரது வீடு. அது ஒரு வசதியான பெரிய பங்களா. அவரது இரு மகன்களும் வெளி நாட்டில் பணங் கொழிக்கும் பதவிகளில் உள்ளனர். நிலைமையின் தீவிரம் உணர்ந்து இருவரும் விடுப்பில் தாயகம் வந்தனர். வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே உடல்நிலை மிகவும் மோசமானதால் ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை தொடர்ந்து கொடுத்தும் பெரிய முன்னேற்றமில்லை. இந்நிலையில் சீஃப் டாக்டர் அவரது பிள்ளைகளை பேச அழைக்கிறார். பேசி விட்டு வந்தவர்கள் முகங்களில் குழப்ப ரேகைகள் ஓடுகின்றன. மூத்த மகன் கணபதி ராவ் அம்மா சுதாங்கியைத் தனியே அழைத்து கிசுகிசுவென ஏதோ சொல்கிறான். அவளோ உடனே உடைந்து அழத் துவங்குகிறாள்.
"அம்மா... ஒண்ணுமில்லேம்மா... அண்ணா ... அம்மாவ கூட்டிட்டுப் போய் காஃபி வாங்கிக் கொடு.. காலைலேர்ந்து வெறும் வயித்துல இருக்கா... மயக்கம் வந்துறப் போகுது..." - இரண்டாம் மகன் கஜபதி ராவ்
"ஆமாம்மா... அழுது ஆகாத்தியம் பண்ணாத... வா.. மொதல்ல கான்டின் போயி காஃபி குடிக்கலாம்.. வா.வா.." - இது கணபதி.
"ஏன்டா... என்னடா நடக்குது... குசுகுசுன்னு பேசுறீங்க.. அம்மா அழறா.. ஒங்க மொகங்கள்ல குழப்பம் தெரியது.. நான் ஆர்மில இருந்தவனாடா... என் கைமேலயே என் சகாக்கள் செத்து விழுந்ததைப் பாத்தவன்.. மெடிகல் ஹாஸ்பிடல்ல எங்கிட்ட சீக்கிரம் செத்துடுவேன்ற ரிபோர்ட்ட காமிச்சுருக்காங்க... இங்க சீஃப் என்ன சொன்னாரு... நாளைக்கே போயிடுவேன்னாரா..." - திக்கித் திக்கி ராவ் பேசினார்.
சுதாங்கி கேவிக் கேவி அழுகிறாள். இரு மகன்களும் அவளை அடக்கி விட்டு ராவிடம் சமாளிக்கிறார்கள்.
"டேய் கணபதி... டாக்டர் என்ன சொல்லிருப்பான்னு எனக்குத் தெரியும். பிழைக்கிறது கஷ்டம். இங்க ஆஸ்பத்ரிலே இருந்தா செலவு.. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க.. ஒங்க சாய்ஸ்... அப்படின்னு சொல்லிருப்பாரு... அதானே.. ஒங்க கொழப்பம்.. இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்குறது.. அதானே..! "- என்கிறார் ராவ்
மலங்க மலங்க முழித்தபடி நின்றிருக்கும் அவர்களை அருகில் அழைக்கிறார்.
"என்னோட கடைசி ஆசை.. நிறைவேத்துங்க... மொதல்ல டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நம்ம வீட்டுக்குப் போலாம்... நாளை காலைல ஒரு கார்ல என்னை பழனி மலைக்குக் கூட்டிட்டுப் போகணும். அங்க ஒரு குகைல போகரின் வழி வந்த ஒரு சித்தர் இருக்காரு.. என்கிட்ட இருந்த ஹவில்தார் ஜவ்வாது மலைப் பகுதிலேர்ந்து வந்தவரு. அவர் சொன்னாரு. அந்த சித்தரப் போய் பாக்கச் சொனானாரு.. அந்த லொகேஷனும் ஷேர் பண்ணிருக்காரு.. அங்க போனா அந்த சித்தர் அனுமதி கொடுத்தா நாம பாக்கலாம்னு சொன்னாரு.. எனக்கு ஏன்னவோ நேத்துலேருந்து அங்க போகணும்னு ஒரு அர்ஜ் இருக்கு.. ஏற்பாடு பண்ணுங்க" - ராவ்
டிஸ்சார்ஜ் செய்வதில் உடன்பாடு இருந்தாலும், இப்போது உள்ள நிலையில் பழனி மலைக் குகைக்கு அழைத்து செல்வது சாத்தியமா என்ற பெருங் குழப்பம் அவர்களைச் சூழ்ந்தது. ஆயினும் ராவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவானது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு தங்கள் பி.எம்.டபிள்யூ. வில் அனைவரும் கிளம்பினர். இரண்டு மணி நேர பயணம் முடிந்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு ஒரு கல் மண்டபம் இருந்தது. அதிக ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நீண்ட தாடியுடன் அரையில் கௌபீனத்துடன் ஒரு சாமியார் நின்றிருந்தார்.
"வாப்பா... கங்காதரா... ஒனக்குத்தான் காத்திட்ருக்கேன்... இந்தா இத சாப்பிடு" - என ஒரு கொய்யாப் பழத்தைக் கொடுக்கிறார்.
எல்லோரும் அதிசயமாகப் பார்க்க ராவ் அப்பழத்தை வாங்கி சாப்பிடுகிறார். எதையும் சாப்பிட மிகவும் அவஸ்தைப் படும் அவர் அக்கொய்யாப் பழத்தை கடித்து சாப்பிடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். எதற்கும் முரண்டு பிடிக்கும் ராவ் எப்படி உடனே பழத்தை வாங்கி சாப்பிடுகிறார் என்பதும் புரியவில்லை. ராவ் அந்த சாமியாரைப் பார்த்தவாறே பழத்தை முழுவதும் தின்று முடிக்கிறார். அதுவும் ஒரு நிமிடத்திற்குள். பிறகு,
"நீங்கள்லாம் கிளம்புங்க.. கங்காதரன் மட்டும் எங்கூட இருக்கட்டும். இன்னிலேந்து நாலாம் நாள் இதே நேரத்துக்கு இதே எடத்துக்கு வந்துடுங்க. கங்காதரனை ஒங்களோட அனுப்பி வைக்கிறேன் அப்போ.. இப்போ எல்லாரும் கெளம்புங்க.. இன்னும் நாலு மணி நேரத்துல மழை கொட்டப் போகுது.. அதுக்கு முன்னாடி ஊர் போய் சேருங்க.. வழில எங்கயும் நிக்க வேணாம்" - சாமியார் கடகடவென சொல்கிறார்.
மற்றவரெல்லாம் தயங்கி நிற்க ராவ் தலையசைத்துப் போகச் சொல்கிறார்.
"அவங்க கிளம்பட்டும். எழுந்திரி.. நாம அந்தப் படியில ஏறி நம்ம எடத்துக்குப் போவோம் வா.." - என சாமியார் ராவிடம் கூற, தானே எழுந்து நின்ற ராவ் தடுமாற்றம் ஏதுமின்றி நடக்க ஆரமாபிக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக வீல் சேரிலேயே வாழ்க்கையைக் கழித்த அவர் இப்போது நடப்பது அவரது குடும்பத்தாரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இல்லந் திரும்பி ஒரு மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது அவர்களின் ஆச்சரியத்தை இரட்டிப்பாக்கியது.
மூன்று நாட்களும் சாமியார் காலையில் மூலிகைப் பொடி கலந்த கஷாயமும், மாலையில் சூரண உருண்டைகளும் தந்தார். உணவு அறவே இல்லை. மூன்றாம் நாள் ராவ் நிம்மதியாக மலம் கழிக்க இயன்றது. மாதக் கணக்கில் மலங் கழிக்காது அவதியுற்றிருந்த அவரது உடல் உபாதை இப்போது நிறையக் குறைந்திருந்தது. நிறையப் பசியும் எடுத்தது. மறுநாள் அதிகாலை ஒரு சட்டி நிறைய சுடச்சுட பால் அருந்தச் சொன்னார். அதனை ஒரே மூச்சில் ராவ் குடித்து முடித்தார். பின் பெரிய ஏப்பம் ஒன்று விட்டார். உயிரை வாங்கிய வயிற்று வலி அறவே இல்லை. சாமியார் தாடியை வருடிய வாறே,
"கங்காதரா.. என் வேலை முடிந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் கார் வந்து விடும். நாம் சந்தித்த அந்தக் கல் மண்டபத்தில் மையத் தூணில் சாய்ந்தவாறு தியானம் செய். உனது மகன் குரல் கேட்டதும் விழி. அதுவரை இங்கு என்ன நடந்தாலும் கண் விழிக்காதே" - சித்தர் சொல்லிவிட்டு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். மத்தியிலிருந்த தூண் மற்றவைகளை விடப் பெரிதாக இருந்தது. அங்கு போய் சாய்ந்து அமர்ந்து கண்மூடி ராவ் தியானம் செய்யலானார். ஏதோ ஒரு பேரொளி கண்ணைக் கூசச் செய்வது போல் மூடிய கண்களை உறுத்தியது. சூறைக் காற்று அடிப்பது போல் இரைச்சலும் கேட்டது. ராவ், சித்தர் சொல்லிய படி, ஆடாமல் அசையாமல் சிலை போல அப்படியே அமர்ந்திருந்தார். வானவெளியில் சஞ்சரிப்பது போல, அவரது உடல் மேகங்களின் ஊடே பறப்பது போல அவருக்குத் தோன்றியது. சிலுசிலுவென குளிர்ந்த காற்று அவரைத் தழுவியவாறே இருந்தது. ஒரு பேரானந்த நிலையில் அவர் வீற்றிருந்தார். அவரது மனக் கண்ணில் அந்த சித்தரின் திருவுருமே நீக்கமற நிறைந்திருந்தது. எவ்வளவு நேரம் கடந்தது என அறியாது மோன நிலையில் இருந்தார். திடீரென,
"அப்பா... அப்பா.. ஒக்காந்துகிட்டே தூங்கறீங்களா... எழுந்திருங்கப்பா.." - என கஜபதி கூப்பிடும் ஓசை கேட்டு கண் திறக்கிறார். அவரருகில் கஜபதி நிற்க, மண்டபத்தின் கீழே சுதாங்கியும், கணபதியும் ஆர்வமாய் இவரைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நீட்டப் பட்டிருந்த கஜபதியின் கைகளைப் பிடிக்காமல் தானே எழுந்து நின்றதோடு மண்டபத்திலிருந்து குதித்து கீழே இறங்குகிறார் ராவ். கண்களை நம்ப முடியாமல் இருக்கும் குடும்பத்தைப் பார்த்து தான் முழுமையாகக் குணமாகி விட்டதாக சந்தோஷமாகக் கூறுகிறார். கேன்சர் எனும் பெரும் பகை நீங்கியது என்கிறார். "பகைமை ஒன்றின்றி பயந் தீர்ந்தது" என உற்சாகமாய் உரக்கச் சொன்னார். என்ன நடந்தது என அவர் விளக்கியதும் கேட்டவர்கள் நம்ப முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். சுதாங்கியின் கண்களில் நீர் பெருகிறது. அப்போது அங்கு வந்த ஒரு முதியவரிடம் அந்த சாமியார் பற்றி விசாரிக்க,
"நிசமாவா சொல்றீங்க.. சித்தர் சாமிய பாத்தீங்களா.. ஒங்க நைனாவுக்கு வைத்தியம் செஞ்சாருங்களா.. ஒங்கள மாதிரி கொடுப்பின யாருக்குக் கிடைக்கும்.. அந்த சித்தரு போகர் வழி வந்தவரு.. தன்வந்திரி மருத்துவக் கலை அறிஞ்சவரு.. அவர பாத்தவங்க அதிகமா யாருமில்ல.. ஒரு நிமிஷம் நம்ம பக்கம் நிப்பாரு.. அடுத்த நிமிஷம் மாயமாயிடுவாறு.. ஒங்ககூட மூணு நாளு இருந்திருக்காரு.. பழம், கஷாயம்லாம் தன் கையால கொடுத்துருக்காரு.. நீங்களும் தெய்வம் சாமி" - என ராவைப் பார்த்துக் கும்பிடுகிறார்.
எல்லாரும் விடைபெற்றுக் கிளம்புகிறாராகள். காரை ராவ்தான் ஓட்டுகிறார். மதுரை வந்த மறுநாள் அதே ஆஸ்பத்திரி போகிறார்கள். ஸ்கேன் செய்து பார்த்த சீஃப் டாக்டர் திகைத்துப் போய் 'இது எப்படி சாத்தியம்' என அதிசயிக்கிறார். நடந்ததைக் கேட்ட அவர் தனது டீமுடன் ராவை அதே கல் மண்டபத்துக்குப் போகிறார். பலமுறை முயன்றும் அந்த சித்தரை அவர்களால் பார்க்கவே இயலவில்லை. நீங்கள் பழனி பக்கம் போனால் அவரைப் பார்த்தால் சொல்லுங்களேன். வியாதிகள் பெருகிப் போன இந்த நாகரீக உலகில் அவரது சேவை மிகவும் தேவையென சொல்லுங்களேன்.
குறிப்பு: சமீபத்தில் எங்கள் குடியிருப்பில் வசிக்கும் 80 அகவையைத் தாண்டிய ஓர் அன்பர் அவரது உறவினருக்கு கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அந்த உரையாடல் கொடுத்த கருவே இக்கதையின் கரு. (சொன்னவர் பெயரையும் உடனிருந்தவர் பெயர்களையும் அவர்களின் ப்ரைவசிக்காகத் தவிர்க்கிறேன்)
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment