-------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
--------------------
★०★०★०★०★०★०★०★०★
(7) வேண்டா தனைத்தையும் நீக்கு
★०★०★०★०★०★०★०★०★
கல்லூரியின் விளையாட்டு மைதானம். கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த அரை இறுதிப் போட்டியில் இதுவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. நாக்-அவுட் கேம் என்பதால் பெனால்டி ஷூட் அவுட் மூலம் போட்டியின் முடிவு நிர்ணயிக்கப் படும். எப்போதும் அரை இறுதி வந்திராத அரசு கலைக் கல்லூரி இம்முறை அரை இறுதியில் இப்போது விளையாடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கோப்பையை வெல்லும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியோடு மோதிக் கொண்டு உள்ளது. அரசுக் கல்லூரி அணித் தலைவன் தாள முத்து தனது தனித் திறமையினால் செமிஸ் வரை தனது அணியைக் கொண்டு வந்துள்ளான். அந்த அணியின் கோச் அரவிந்த் மாஸ்டர் கொடுத்த பேராதரவும் பயிற்சியும் அதற்கு உதவின. வெகு சுலபமாக இவர்களை ஊதித் தள்ளிடலாம் என்ற மிதப்பில் இருந்த செயின்ட் ஜான்ஸ் கோல் ஏதும் போட முடியாமல் திணறியது. தாளமுத்து இரண்டு முறை கோல் அடிக்க நெருங்கியும் அவனது அணியினர் பாஸ் செய்வதில், எதிரணியினரை அணைகட்டி சமாளிப்பதில் காட்டிய தயக்கம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் அவனால் கோல் அடிக்க இயலாது போனது. செகண்ட் ஆஃப் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் எதிரணியின் கோல் கீப்பர் காலைப் பிடித்தவாறே நொண்டிக் கொண்டு கீழே அமர்ந்தான். மருத்துவ உதவிக்காக ப்ரேக் வந்தது. அதனைப் பயன்படுத்தி எதிரணி கோச் தனது அணியின் கேப்டனைக் கூப்பிட்டு வேகவேகமாக ஆலோசனை கூறினார். இதற்காகவே கோல் கீப்பர் அடிபட்டது போல் நாடகமாடி இருக்கக் கூடும் என தெரிகிறது. இதுவும் ஒரு கேம் ஸ்ட்ராடஜியே.
இந்த ப்ரேக்கை தாளமுத்துவும் சரியே பயன்படுத்திக் கொண்டான். தன்னோடு ஃபார்வார்டு ஆடும் லெஃப்ட் விங் மற்றும் ரைட் விங் இருவரையும் அழைத்து,
"இன்னும் மூணு அல்லது நாலு நிமிஷம் இருக்கு.. அதுக்குள்ள நாம கோல் அடிக்கணும். பெனால்டி ஷூட் அவுட் போகக் கூடாது. போனா அவனுக்கு ஈஸியா ஜெயிச்சுடுவானுங்க. பால் இப்போ இந்தக் கோர்ட்லதான் இருக்கு. ஃப்ரீ கிக்கை ரமேஷ்(ரைட் விங்) அப்துல் கிட்ட (லெஃப்ட் விங்) அடிக்கட்டும். எல்லாரும் அப்துல்ட்ட ஓடுவானுங்க. ரமேஷ் சென்டர் பாயின்ட் வந்து நிக்கட்டும். நான் லெஃப்ட் பொஷிசன்ல கோல் கீப்பர் சைட்ல நிக்கிறேன். ரமேஷ்கிட்ட அப்துல்... நீ திருப்பி தள்ளு. அவன் சென்டர் பாயின்ட்லேருந்து என் பக்கம் லாப் (lob) செய்யட்டும். அவனுங்க டிபன்ஸ்ங்கள நம்ம ஆளுங்க மார்க் பண்ணி அணை கட்டிட்டா இதெல்லாம் ஈஸியா செய்யலாம். நான் ஹெட்டர் பண்றதா .. இல்ல.. சிசர்ஸ் கிக் அடிக்கறதாங்கறத வர ஹைட்-ஐ வச்சு முடிவு செஞ்சுக்குறேன். " -இப்படி மளமளவென சொல்லி விட்டு ஒரு நொடி கண்ணை மூடி யோசித்து விட்டு காலையில் அவனது தாய் அவனுக்கு சொன்ன ஒரு விஷயத்தை நிதானமாக தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான்:
"நம்மால முடியாதுங்குற எண்ணத்தை நீக்குவோம். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களே நமக்கு பெரிய தடை. நமக்கு வேண்டாதவை. அதை நீக்கிட்டா, நம்மால முடியும் என்ற நம்பிக்கை தானே வரும்" - இதைச் சொல்கையில் அவனது கண்கள் ஒளிர்கின்றன. குரலில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த உற்சாகம் பிறரையும் தொற்றிக் கொள்கிறது. இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிகிறது. எல்லோரும் அவரவர் போசிஷன்களுக்கு விரைகிறார்கள்.
ப்ரேக் முடிந்து ரெஃப்ரீ விசில் ஊதுகிறார். வலது புறத்திலிருந்து ரமேஷ் புது உற்சாகத்துடன் பந்தை அப்துலிடம் லாவகமாகத் தள்ளி விட்டு, வேகமாக கோல் போஸ்ட்டுக்கு நேரே சென்டர் பாயின்ட்டுக்கு ஓடுகிறான். அப்துல் அதனை மேலும் இடது புறம் வெளியே தள்ளுவது போல் பாவ்லா செய்து விட்டு திரும்பி ரமேஷிடம் அடிக்கிறான். ரமேஷ் தயக்கமின்றி பந்தினை அடி பாகத்தில் எத்தி விட்டு தாளமுத்து வின் பக்கம் உயரே செல்லுமாறு தூக்கி அடிக்கிறான். அதிக உயரத்தில் வராததால், தாளமுத்து டைவ் அடிப்பது போல் சுழன்று இடது காலால் சிசர்ஸ் கிக் அடிக்க பந்து 'ஜிவ்'வென்று எழும்பி அதிக வேகத்தில், தடுக்கப் பாய்ந்த கோல் கீப்பரைத் தாண்டி வலையில் போய் மோதுகிறது. அரசுக் கலைக் கல்லூரி கோல் அடித்து விட்டது. அம் மாணவர்கள் குதித்துக் கும்மாளம் போடுகிறார்கள். அரங்கமே கூச்சலால் அதிர்கிறது. செயின்ட் ஜான்ஸ் கேம்ப் அதிர்ச்சியில் மூழ்குகிறது.
போட்டி முடிய இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் நிலையில் மிட் கோர்ட்டில் உள்ள பந்தை தங்களுக்குள் கடைந்து ஆடி காலம் கடத்துகிறார்கள் தாளமுத்து அணியினர்.
இதோ ஃபைனல் விசில் ஊதியாகி விட்டது. 1-0 என்ற கோல் கணக்கில் செமி ஃபைனலை அரசு கலைக் கல்லூரி வென்று ஃபைனலுக்கு முன்னேறி விட்டது.
பத்தாண்டுகளாக தொடர்ந்து கோப்பை வென்ற செயின்ட் ஜான்ஸ் ஃபைனலுக்கு வராமல் சோகத்தோடும் விரக்தியோடும் வெளியேறியது.
மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த தாளமுத்து நண்பர்கள் அவனின் தாயாரை சந்தித்து ஆசி பெறச் சென்றனர். தாளமுத்து தனது தாயாரின் அறிவுரைதான் தனக்குக் கைகொடுத்து உதவியதாகக் கூறியது, அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. தன்னைப் பார்க்க வந்த அவர்கள் அனைவரிடமும் அவனது தாய் சொன்னது இதுதான்:
"தம்பிங்களா! நமக்குள்ள அபார சக்தி இருக்கு. எதையும் செஞ்சு முடிக்கிற திறமையும் தெம்பும் நிறைய இருக்கு. ஆனா அது எல்லாத்தையும் 'வேண்டாத பயமும், சந்தேகமும், எதிர்மறை விஷயங்களும்' மனசுக்குள்ள வந்து குச்சியடிச்சு உக்காந்து கிட்டு அலைக்கழிக்கும். நாம அச்சப் பட ஆரம்பிச்சுடுவோம். தயக்கம் வந்துரும் ... அப்புறம் நம்மால எந்த விஷயத்தையும் உருப்படியா செய்யவே முடியாது. அதோட, உங்க வயசுல வரும் தடுமாற்றங்களான போதை, சூது, மாது போன்ற அரக்கர்களுக்கும் அடிமையாக வாய்ப்புகள் நிறைய வரும் - வேண்டாத அந்த அசுரன்களை நீக்கி வைக்குறது ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒங்க வாழ்க்கையவே முழுசா சீரழிச்சிடும். அதனால்தான் நம்ம பாரதியாரே 'வேண்டாத அனைத்தையும் நீக்கு' அப்படின்னு அறிவுரை சொல்லிருக்காரு. அதையேத்தான் சாமிகிட்டவும் வேண்டுறாரு. இதை நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கன்னா எப்பவுமே வெற்றி தான். போய் ஃபைனல ஜெயிச்சுட்டு வாங்க.. " - இப்படியாக வாழ்த்தி ஆசி கூறினாள்.
பிறகென்ன, ஒரு வாரம் கழித்து மீண்டும் அவளைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்த தாளமுத்து நண்பர்கள் கையில் கால்பந்து போட்டி வெற்றிக் கோப்பை தகதகத்தது எனக் கூறவும் வேண்டுமோ?
No comments:
Post a Comment