Saturday, November 23, 2024

கவி கேளாய் !

 கவி கேளாய் !


அலையாய்க் காற்றில் வரும் அதிர்வுகளைப் பிரிப்பாய்

   ஆனந்த இசை என்பாய், அபஸ்வரம் என்பாய்


தலையசைக்கச் செய்வாய், தாளம் போட வைப்பாய்

   தாங்க முடியாத போது பொத்திக் கொள்வாய்


உலை வைக்கும் கைகளில் வளையல் போடும் உலகு

   ஊர் சுற்றும் கால்களில் அதுவே மாட்டும் கொலுசு


வலை விரிக்கும் விழிகளுக்கு மையும் தீட்டும்

   வம்பளக்கும் வாயிலே வண்ணம் காட்டும்



சிலை என்பார், மலர் என்பார், யார் யாரையோ வர்ணிப்பார்

   சிலரே உனை எனைப் போல் "சங்குப் பூ  " என்பார்


விலையுயர்ந்த தோடு என்று குத்தி மாட்டுவார்

   வீட்டுச் செலவு எனச் சொல்லி மீட்டும் கேட்பார்


மலைக்கிறேன், வியக்கிறேன் செவியே ! உனைக் கண்டு

   மறக்கும் முன் மற்றொன்று சொல்ல உண்டு


தலையணை மந்திரம் வர தனி இருக்கை தருவாய்

   தாடி, மீசை வல்லினத்தை தவிடுபொடி ஆக்குவாய்



செம்மொழித் தமிழ் உன்னில் தேனாய்ப் பாயும்

   சேயாய்த் துள்ளுவாய், வாயில் நீர் ஊறும்


அம்பாய் வரும் வதந்தியை அப்படியே நம்புவாய்

   அறிவுரையை அடுத்த செவி வெளி அனுப்புவாய்


கம்பன், பாரதி எதைச் சொன்னாலும் களிப்பாய்

   கணேசன் கவிதை எனில் காற்றில் விடுவாய்


வம்பு வருமா என்று வாசல் திறந்து வைப்பாய்

   வாழிய செவிகளே ! உம்மால் வளரும் செய்திகளே.


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...