Tuesday, November 12, 2024

மிதி வண்டி

 ●०●०●०●०●०●०●०●०

*மிதி வண்டி தரும்*

*வாழ்க்கைப் பாடம்*

●०●०●०●०●०●०●०●०


கொதி நிலையில் இருந்திடினும்

கூலாக இருத்தல் நன்றே

மிதி வண்டியிது சொல்கின்ற

வாழ்க்கைப் பாடம் இதுவே


துதி பாடி தூக்கி வைக்கும்

துச்சர்களே இழித்துரைப்பர்

சதி பலசெய்து குழியும் கூட

இச்சையோடு பறித்திடுவர்


வாழ்க்கைப் பயணம் நடக்கையிலே

வழுவாது பேலன்ஸ் செய்ய

வரங் கொடுக்கும் தேவதையாய்

சைக்கிள் ஓட்டுதல் கைகொடுக்கும்


நல்ல நண்பர்கள் தாங்கிப் பிடிக்க

நிலை தடுமாறா நிலையைக் கற்க

ஹேண்டில் பாராய் கொள்கைகளும்

மிதிக்கும் பெடலாய் கடின உழைப்பும்


நிச்சயமாகத் தேவையென

சைக்கிள் ஓட்டக் கற்கையிலே

சிறாராய் இருக்கும் நாள்முதலாய்

சிரத்தையோடு கற்றிடுவோம்


வாழ்க்கை நடத்த அடிப்படை பாடம்

போதிமரமாய் சைக்கிள் தந்திடும்

நிலைமாறா லாவகம் பெற்றிடின்

கீழே விழுதல் சிறிதும் இல்லையாம்


பேலன்ஸ் இல்லா வாழ்வு என்றால்

அல்லும் பகலும் மிகவும் தொல்லையாம்

நல்ல தோழர்கள் உடன் வரட்டும்

இனிதாய் வாழ நலம் தரட்டும்


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


-----------------------------------------------------------

மிதி வண்டி தரும் பாடம்

--------------------

மிதி வண்டி நம்வாழ்வின் தொடக்கத்தில்

சமநிலை(balance) கற்க உதவும் ஆசான்.


தந்தை பின் தள்ளி தரும் உந்துவிசை

வாழ்வு முழுவதும் நம்மை முன்நோக்கி நடத்தும் , மண்மிசை.


குரங்கு  போல மிதிக்கட்டையை அழுத்தி  நண்பர்களோடு போட்ட பந்தய

நாட்களை நினைக்கிறேன்

இனிக்கிறது

நெஞ்சம் எல்லாம்

மணக்கிறது.


மிதி மிதி என்று மிதித்தாலும்

அதை மதிக்காமல்

நம்மையும் ,சுமக்கும்

சுற்றுச்சூழலையும்,

மாசின்றி காக்கும்

உடற்பயிற்சிக்கூடம்((gym)

இந்த இரு சக்கர வண்டி


--மோகன்


-----------------------------------

அடி

----

இந்த அடிகள்தான் எத்தனை எத்தனையோ!


நமக்கு சொல்லடி கல்லடி  என்றுதான் பழக்கம்

வெங்கட் ஐயாவோ

குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி என்று

யாப்பில் பல சுற்று 

வருவார்.



அந்தக்காலம்:

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்

இந்தக்காலம்:

அடியும் உதவாது

அண்ணன் தம்பியும்

உதவ மாட்டார்!


அந்தக்காலம்:

அடி மேல்அடி வைத்தால் அம்மியும்நகரும்


இந்தக்காலம்:

அடி மேல்அடி வைத்தால் மம்மிக்கும்

மன்னிப்பு கிடையாது

சட்டத்தில்.


அடி நாக்கில் நஞ்சும்

நுனி நாக்கில் அமுதமும் உடையார்

உறவு கலவாமை வேண்டும்


- மோகன்

-------------------------

சொல்லடியோ தடியடியோ...

"நடி"ப்பை விட

அடி இனிது..

பண்பை ஊட்ட

அன்பால் அடித்தால்

அதனினும் இனிது!

தலையில் அடி வாங்கி சித்தம் 

கலங்கிய பித்தன்

சொன்னதல்ல...

மரத்தடியில் சித்தனாகிய

புத்தன் சொன்னது!

பலரும் பயணிக்கும் 

பேருந்தில்

மிதிவண்டி போல்

ஊன்றி மிதிக்க வேண்டியதில்லை!!!

சக பயணிகள் 

ஒருவருக்கொருவர்

கால்களை மிதிக்காமல்

ஒவ்வொருவரையும்   மதித்து..

இடம் கொடுத்து.. இடம் பிடித்து...

ஓட்டுனர்  இதமாய் "ஸ்டியரிங்" பிடித்து..

அளவாய் "ஆக்சிலரேட்டரை" மிதித்து

சாலை விதிகளை மதித்து 

சீரான வேகத்திற்காய்க் 

கட்டுப்படுத்தி 

போட வேண்டிய

"பிரேக்"குகளை வண்டியே

ஆட்டம் காணா வகையில்

மிதமாய்ப் உதைத்து..

நடத்துனர் சரியான பயணச்சீட்டைக் கிழித்து 

சரியாகக் கொடுத்து...

வழி நடத்த...

பாதுகாப்பான பயணம்!

நிறுத்தங்கள் இல்லாத

இனிமையான பயணம்!

யாரும் இறங்க விரும்பாத பேருந்து!

என்றென்றும் நமக்குண்டு

தமிழ் விருந்து!


தாய் அடித்தாலும் 

வலிப்பதில்லை!

தந்தை கடிந்தாலும்

வலிப்பதில்லை!

இவர்கள் அன்பில்

நடிப்பு இல்லை!

துன்புறுத்த வேண்டி 

தண்டிப்பதில்லை!

நமக்கொரு துன்பமெனில்

இவர்களுக்கு இணையாய்

யாரும் துடிப்பதில்லை!

இவர்கள் அன்பிற்கு

ஈடு இணையில்லை!

எனினும் இவர்களைப் போல் நடிப்பில்லா

அன்பால் அடியுங்கள்!

வலி தெரியாது!

நல்வழி தெரியும்!


அன்பால் அடியுங்கள்!

அடியாத மாடும் பூம்பூம்

மாடாய்த் தலை ஆட்டும்!


அன்பால் அடியுங்கள்!

படியாத மாடென்ன..

பலரும் அடி பணிகின்ற

நாடாளும் மன்னரும் 

நாடி வருவர்!!!


- சாய்கழல் சங்கீதா

-------

அடி மேல் அடி வைப்பின் அம்மியும் நகரும்.....

அடிக்குஅடி மிதித்து வீழ்வின்

மிதிவண்டியும் பழகும்......‌

😊 சாயி 😊

------

மிதிவண்டி


அதிகாலை அன்று அனைவர்க்கும் தெரியும்

   ஆனைச்சாத்தன் கூவும், அதுவும் பரிச்சயம்


புதிதாய் வாங்கித் தர அப்பாவிடம் காசில்லை

   புதிதே வேணுமென பிடிவாதமும் இல்லை


முதியோர் இனி முடியாதென மூலையில் வைத்தது

   முகுந்தன் துணையோடு வெளியே எடுத்து


எதிரே எமனாக வரும் லாரி, பேருந்தில்லை

   எருமைகளே வரும், நகர்வதே இல்லை


குதிகுதித்துக் கூட வரும் நாய்க் குட்டிகள்

   குத்தனூரில் இதுவே அன்று ட்ராபிக் பாருங்கள்


சதிகாரன் சங்கரன் தள்ளினான் பின்னே

   சற்றும் எதிர்பாராத சாந்தி மாமி குறுக்கே


மதிவாணன் எங்கிருந்தோ வந்து இடித்தான்

   மண்ணில் விழ, இரத்தம் வர, மண்ணே போட்டான்


மிதிவண்டி இவ்வாறு தான் அன்று கற்றேன்

   மிதிலையில் வில் முறித்துக் ஸ்கூட்டர் பெற்றேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-----------------



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...