Thursday, November 27, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{6} இளங்கோ காவியம் எழுத ஒப்புதல்*


குறிஞ்சி மக்கள் கூறியதைக் கேட்டு 

கற்சிலையாய் நின்ற இளங்கோவிடம் 


கூல வாணிகன் தாமே முன்வந்து 

கற்பு நிறை நின்ற கண்ணகிக் கதையை 


மனம் உவந்து சொல்லியதோடு 

அக்காப்பியத்தை அடிகளே வடித்தெடுக்க 

வேண்டுகோளும் வைத்திடவே 


மணி மகுடம் துறந்து சமண துறவியாய் ஆன இளங்கோ அடிகளும் 

தன் நண்பர் கூறியதைக் கேட்டு


*அரைசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று ஆவதூஉம்* – எனப் பகன்று 

கண்ணகி காப்பியத்தை எழுதவும் முடிவெடுத்தார்.


தன் தோழர் சாத்தனாரிடம் 

*உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் எனும் பெயரால், நாட்டுதும் யான் ஓர் பாட்டுடைச் செய்யுள்* என உறுதி சொன்னார்.


இளங்கோ அடிகளின் இந்தக் கூற்றில் 

ஊழ்வினை காரணமாக 

கோவலன் மாண்டான் 

எனும் கருத்து எதிரொலிப்பதை 

காணலாம் நாமும்.


சிலம்பொடு நாம் பயணிக்கையில் 

நமக்கு ஒன்று உறுதியாய் புலப்படுகிறது. 

ஐம்பெருங் காப்பியங்கள் ஐந்திலுமே 

ஊழ்வினையே முந்தி வந்து நிற்கிறது.


உலகப் பொதுமறை தந்த 

ஐயன் வள்ளுவனும் 

ஊழ்வினைக்கென ஓர் அதிகாரமே படைத்தான்.


சங்க இலக்கியங்களில் முந்தைய தான பதினெண்மேற் கணக்கு நூல்களில் 

ஊழ்வினை பற்றி குறிப்புகள் இல்லை. 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளில் மட்டும் ஓர் அதிகாரம் ஊழ்வினைக்காய் உண்டு. 


சங்க இலக்கிய காலத்தைத் தொடர்ந்து 

வந்திட்ட ஐம்பெருங் காப்பியங்களில்

ஊழ்வினையே முக்கிய பாத்திரம் 

வகிப்பதை அறிக! 


சங்ககாலத்தில் 

தொல்குடியினர் யாவரும் 

ஊழ்வினை என்ற ஒன்று 

இருப்பதாகக் கருதவில்லை 

எனக் கொள்க!!


சங்ககாலத்திற்கு பின்னரே, 

காப்பியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் 

ஊழ்வினை என்பது 

கருப்பொருளாய் ஆனது

என்பதை உணர்க.


இளங்கோ உறுதி கூறிய பின், 

சீத்தலைச் சாத்தனார் 

மனம் குளிரக் கூறலானார்:


*முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக* என மகிழ்வோடு வழிமொழிந்தார். 


(சிலம்பொடு நம் பயணத்தை தொடர்வோம்..)


*ஶ்ரீவி*

Tuesday, November 25, 2025

காத்திருந்து....

 நற்சுனை 24


காத்திருந்து....


காத்துக் கொண்டிருக்கின்றன...

துரத்தப்படாத கனவுகளும்..

மன்னிக்கப்படாத உறவுகளும்..


உறங்கிக் கொண்டிருக்கின்றன...

முயலாமையின் மடியில் 

முளைத்து எழும் முயற்சியும். 

இயலாமையின் மடியில் 

மன்னித்துவிடும் முதிர்ச்சியும்..


இன்று விழிக்கவேயில்லை!


நாளை 

அடுத்த வாரம்

அடுத்த மாதம்

அடுத்த வருடம்

என்றோ ஒரு நாள்.....

உறக்கம் கலைந்துவிடும் என

காத்திருக்கலாம்...


காத்திருப்பது கடினமில்லை..

ஏனோ காலத்தற்கு காத்திருக்க தெரியவில்லை...


- சாய்கழல் சங்கீதா

தாத்தாவின் பெருமை

 பெயர்த்தியைப் 

பள்ளியிலிருந்து 

அழைத்து வரும் 

மதிய வேளையில் 


சாலையில்,

தேர்க் காலில் 

அடிபட்ட கன்று போல 

தண்ணீர் லாரியில் 

அடிபட்ட ஒரு 

நாகப்பாம்புக்குட்டி.


நியாயம் கேட்க 

சோழனுமில்லை 

ஆராய்ச்சி 

மணியுமில்லை.


பாம்பைப் பார்த்துப் 

பயந்த பெயர்த்தியை 

சமாதானப் படுத்த,


தாத்தா இளவயதில் 

கிணற்றில் தண்ணீர்ப் 

பாம்புடன் விளையாடிக் 

கடி பட்ட கதையைச் 

சொல்ல,  


பெயர்த்தி 

நாளை பள்ளியில்,

வகுப்புத் தோழர்களிடம்

நா.முத்துக்குமாரின் 

"சுண்டு விரல் தாத்தாக்கள்"

போல தாத்தாவின் 

பெருமையைச் 

சொல்வாளோ?


- முகம்மது சுலைமான்,

Sunday, November 23, 2025

23.11.25 : வாசிப்பு வட்டம் அமர்வு விவரணம்

 *23.11.25 : வாசிப்பு வட்டம் அமர்வு விவரணம்*


23 11 25 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது.   


கலந்துகொண்ட குழந்தைகள்:

வருண், 

அகரன், 

ஆதவன், 

ஹர்ஷிதா, 

ஆராதனா, 

ஜனனி, 

சாய் பிரணவ், 

ருத் விக்ரம், கௌசலேஷ், அவினாஷ், 

ஸ்ரீராம், 

அர்ஃபா, 

அர்மான், 

ஸ்ரீ நிகேதன், 

நித்தின், 

இளமாறன்.


வழக்கம் போல புதிய செயல் திட்டங்களுடன் பொறுப்பாளர் திருமதி. மகாலட்சுமி அந்த அமர்வை நடத்தினார். நவம்பர் 14 நடந்த குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கிய நூல்களை படித்த குழந்தைகள் அதனைப் பற்றி பேசலாம் என்று சொன்னதும், ஜனனி, நித்தின், அர்மான், வருண் ஆகியோர் தாங்கள் படித்த கதைகளை கூறினர். அதன்பின் கலந்து கொண்ட குழந்தைகளை மூன்று அணியினராகப் பிரித்து, அவர்களிடம் ஓர் எழுத்து அடங்கிய சிட்டுகளைக் கொடுத்து அவற்றை வைத்து சொற்களை எழுதுமாறு கூறினார். குழந்தைகள் மிகச் சிறப்பாக அதனை செய்து முடித்தனர். முதல் அணி 40 சொற்களையும் இரண்டாவது அணி 35 சொற்களையும் மூன்றாவது அணி 33 சொற்களையும் கண்டுபிடித்து இருந்தனர். இந்த விளையாட்டை குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடியதோடு, பல்வேறு புதிய சொற்களைக் கண்டுபிடித்தது மிகச் சிறப்பாக இருந்தது. இதனை வடிவமைத்த மகாலட்சுமி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 


பின்னர் பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு தொடங்கியது. அதில் கலந்து கொண்டோர்: 


ஸ்ரீவி, 

சிவகாமி, 

மல்லிகா, 

தேவி அருண், 

நா கணேசன், சுல்தானா, தியாகராஜன், 

தியா அனில்,  

லட்சுமி நாராயணன். 


இந்த அமர்வில் லட்சுமி நாராயணன் அவர்கள் *திரு. ஜெயமோகன் எழுதிய அறம்* கதைத் தொகுப்பிலிருந்து அறம் எனும் கதையை வாசித்தார். 

1950 களில் எழுத்தாளர்களின் நிலை எவ்வளவு வறிய நிலையில் இருந்தது என்பதும் பதிப்பகத்தார் அவர்களை எப்படி வஞ்சித்தார்கள் என்பதும், இரு எழுத்தாளர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் மூலம் விளக்கியது மிக அருமையாக இருந்தது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதனைப் படித்து பிறரை மகிழ்விக்கின்ற திரு. லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி. 


நேரமின்மை காரணத்தாலும் அதிக நபர்கள் இல்லாத காரணத்தாலும்

இலக்கண வகுப்பு இன்று நடைபெறவில்லை.


இந்த அமர்வுகளில் குழந்தைகளுக்கான அமர்வில் 15 க்கும் குறையாத குழந்தைகள் தொடர்ந்து கலந்து கொள்வது சிறப்பானது என்றாலும் அந்த எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும். 


மற்ற அமர்வுகளை விட இந்த அமர்வில் கலந்து கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது என்பது கவலையைத் தருகிறது. இதைப் பற்றியும் சரியான திட்டமிடுதலும் நடைமுறைப் படுத்துதலும் தேவை.  


இவற்றை மனதில் கொண்டு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணிகளை செய்திட வேண்டும். 


*ஶ்ரீவி*

தலைவர்.

Friday, November 21, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{5} இளங்கோ அடிகளின் நண்பர் சாத்தனார் அவரை கண்ணகி வரலாறு எழுதச் சொல்லுதல்*


குன்றத்துக் குறவர்கள் கூறியதெல்லாம் 

செவி மடுத்த இளங்கோவும் சிலையாய் நின்றார் ..

சாத்தியந்தானா இதுவென்று மலைத்து நின்றார். ..


இளங்கோவின் முகக் குறிப்பினை பார்த்தார் சாத்தனார்.

அடிகளின் வியப்பை போக்குதல் தன் கடன் என்று உணர்ந்தார். 


*யான் அறிகுவன் அது பட்டது*

என இளங்கோவிடம் சொல்லலானார் 

தானறிந்த கண்ணகிக் கதையை 

அடிகள் அறிய கூறலானார். 


பூவுலகம் புகழ் 

புகார்ப் பட்டினத்தில்

மாசாத்துவான் 

மாநாய்க்கன்

எனும் வணிகப் பெருமக்கள் 

தம் வாரிசுகளான 

கோவலன்–கண்ணகி

மணம் முடித்த நிகழ்வோடு துவங்கி,


கோவலன் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையோடு

கொஞ்சிக் குலாவியதால் 

அரும் பொருள் கேடுற 


தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப்பிழைக்க மதுரை ஏகிய கதையும், 


*வினை விளை காலம்* ஆதலின்

தனை மணந்த கோவலனை கண்ணகி

தான் இழந்து போன கதையை 

கண்ணீரோடு சொல்லி முடித்தார். 


தன் கணவன் கொலைக்காக 

நீதி கேட்டுப் போராடிய 

கண்ணகியின் பெருமை சொன்னார்.

*யானே கள்வன்* என்று தன் உயிரைத் தானே விட்ட மதுரை மன்னன்

பாண்டியனும்,

*கணவனை இழந்தோருக்கு காட்டுவதில்* 

என அவனுடன் உயிர் நீத்த கோப்பெருந்தேவியும்,

கண்ணகியின் சீற்றத்தால் எரிந்து தணிந்த மதுரை நகரும்,

மதுரையை எரித்த பின்னர் கண்ணகி

சேர மன்னர்களின் தலைநகரான கொடுங்களூருக்குச் சென்று, 

அங்கு கொடுங்களூர் பகவதி அம்மன் கோவிலில் வணங்கி நின்ற போது,

விண்ணுலகத்தாரே தமது 

பறக்கும் பூப்பல்லத்தில் வந்து 

அழைத்துச் சென்ற நிகழ்வும்

என வரிசையாய் பட்டியலிட்டு உணர்ச்சி பொங்க அவர் பகர்ந்தார். 


கதை கேட்டு கலங்கிய இளங்கோவும் 

வினை விளை காலம்  என்றீரே..

விளக்குவீரோ நீரும் அதை 

எனக் கேட்டார்!


முற்பிறவியில் சிங்கபுரம் எனும் ஊரில் 

சிறந்து விளங்கிய சங்கமன் எனும் வணிகனை 

கோவலன் தன் முற்பிறப்பில் 

பொய் கூறி திருடன் என சொல்லி 

அவன் இறப்பிற்குக் காரணமானதால், 

சங்கமன் மனைவி இட்ட சாபம்

என சாத்தனார் விளக்கம் சொன்னார்.


கண்ணகி கதையை கண்ணீரோடு சொல்லிய பின், 

அடிகளிடம் அவர் விண்ணப்பமும் செய்திட்டார்.


‘நீரே இதனை காவியமாக வடித்திட வேண்டும்’ – என அன்போடு கேட்டுக் கொண்டார்.

அடிகள் அதற்கு என்ன சொன்னார்...! 


தொடர்வோம் தமிழ்ப் பயணத்தை.


*உங்கள் தோழன் ஸ்ரீதே*

சிலம்போடு ஒரு பயணம்

 *{4} இளங்கோவிடம் மலைக்குறவர்கள் தாங்கள் கண்டதைச் சொல்வது*


மணி மகுடம் துறந்து 

அரண்மனை வாழ்வும் துறந்து 

சுகபோக இன்பங்கள் மறந்து 

துறவறம் பூண்ட இளங்கோவோ 

நகரை விட்டு வெளியேறி நாடோடியாய் 

அலைந்து திரிந்தார்.


மலைக்குன்றங்கள் இடையே 

தொட்டில் போல் அமைந்திருந்த 

குணவாயிற் கோட்டம்

எனும் இடம் 

ஒரு பூவுலக சொர்க்கம்.


வானளாவி உயர்ந்திருக்கும் குன்றங்கள்,

குறிஞ்சித் திணையின் வளமையைக் காட்டின 


அடர்ந்த காடுகளும் அதில் வாழ்ந்த உயிரினங்களும் முல்லைத் திணையை முழங்கிக் கூறின.


பச்சை பசேல் 

வயல் வெளிகளோ

மருதத் திணையின் பசுமையை விளம்பின. 


மோகத்தை துறந்து இன்பத்தை மறந்து 

யோக வாழ்வைத் தேடி 

அலைந்திட்ட இளங்கோவும் 

குணவாயிற் கோட்டத்தில்

அமைதியை கண்டார்;

மகிழ்வு கொண்டார்; 

அங்கேயே தங்கினார். 


ஒரு நாள் காலை,

குன்றத்துக் குறவர்கள் 

அடிகளைக் காண 

கூட்டமாய் வந்தனர்.

தேனுடன் திணைமாவும் 

அன்பாய்த் தந்தனர்.

அடிகளின் அடிபணிந்து 

வணங்கி நின்றனர். 


அவர்களோடு அடிகளின் தோழர் சாத்தனாரும் இருந்திட்டார்.

மணிமேகலை எழுதிய 

சீத்தலைச் சாத்தனார்

அடிகளாரின் உற்ற நண்பர். 

தமிழன்னை ஆசி பெற்ற புதல்வர்களில் ஒருவர். 


ஒன்று திரண்டு வந்த 

மலைவாழ் மக்கள் 

அடிகளிடம் 

தாங்கள் கண்ட அதிசய நிகழ்வை 

வியப்பு மேலிட கூறலுற்றனர்.


சினம் கொண்ட பார்வையும் 

சீற்றத்துடன் விட்ட பெரு மூச்சும் 

தலைவிரி கோலமும் 

ஒற்றை மார்பும் 

கொண்ட 

நங்கை நல்லாள் ஒருவளை 

விண்ணுலகத்தார் 

பறக்கும் பூப்பல்லக்கில்

அவள் கணவனுடன் 

வந்திறங்கி 

கையோடு விண்ணுலகம் அழைத்துச் சென்றதை 

கண்கள் விரிய 

வியப்பு மேலிட 

விவரித்தனர். 


சிலப்பதிகாரம் எனும் காவியம் படைக்க

அங்கு தான் விழுந்தது முதற் புள்ளி.

தமிழன்னையும் வழங்கினாள் 

ஆசிகளை அள்ளி.


சிலம்பில் இந்நிகழ்வை விளக்கும் பதிகம்:


"குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,


குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-


குன்றக்க குறவர் ஒருங்குடன் கூடி 


‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,


ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,


அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்


காதல் கொழுநனைக்

காட்டி, அவளொடு, எம்


*கட்புலம் காண, விட்புலம் போயது*


இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ’ என- 


(இந்த வரிகளில் எங்கள் கண்முன்னே வந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றனர் என்பது சிறப்புற உள்ளது 

*கட்புலம்* என்பது *கண் புலம்* எனப் பிரிக்கலாம். எங்கள் கண்முன்னே என்ற பொருள். *விட் புலம்* என்பது *விண்புலம்* ஆகிடும். அதாவது விண்ணுலகம் என்று பொருள்)


பயணம் தொடரும்...


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Wednesday, November 19, 2025

 {3} *நெருடலை நீக்கிவிட்டு சிலம்பொடு பயணிப்போம்*


நெஞ்சிலே ஓரிரு நெருடல்கள் 

நெருஞ்சி முள்ளாய் நெருடினாலும் 

நெஞ்சுகுளிர் தீந் தமிழில் 

நிறைவான காப்பியம் தந்தார் 


நெருடல்களை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு 

சிலம்போடு நாம் பயணிப்போம் வாரீர்!


தமிழன்னையை அலங்கரிக்கும் 

ஐம்பெரும் காப்பியங்களில்

இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படும்

காப்பியங்களில் இது

 ஒன்று 


மாதவியின் பொன்மகளாள் 

மணிமேகலையை 

முன்னிறுத்தி எழுதிய காப்பியம் மற்றொன்று. 


சேர நாட்டின் அரச வம்சம் 

செழுமையாய்த் தொடர பிறந்தவர் இருவர் 

மூத்தவர் செங்குட்டுவனாம் 

இளையவர் இளங்கோவாம்


அரண்மனை வந்த நிமித்திகன் ஒருவன் 

இளங்கோவின் வதனத்தைப் பார்த்து 

‘இவனே சேர நாட்டு அரசன் ஆவான் 

அறமும் மறமும் இணைந்து 

நல்லாட்சி புரிவான்’ –

என சோதிடம் சொன்னான். 


மூத்தவன் செங்கட்டுவனோ 

முகம் வாடலானான்   

மனம் சோர்ந்து போனான். 


தமையனின் முகவாட்டம் பார்த்த 

தம்பியோ உறுதி  பூண்டான்

அரியணை தமக்கில்லை என 

சூளுரைத் தான்

துறவறமும் மேற்கொண்டான்.


அரச போகத்தை அண்ணனுக்காக தியாகம் செய்த 

இளங்‘கோ’

அரண்மனை வாழ்க்கையைத் துறந்து 

சமண அடிகளாய் மாறியது 

காலத்தால் அழியாத காப்பியம் படைக்கவோ!


அரண்மனை வாழ்வில் அரியணையில் அமர்ந்து 

ஆட்சியவர் செய்திருந்தாலும் இறவா புகழ் அவருக்குக் கிடைத்திருக்குமோ?


அண்ணனுக்காய் அரியணை துறந்தார் 

அரச போக வாழ்வை முழுவதுமாய் மறந்தார்

அரசாளும் முடி துறந்ததோடு 

தன் முடியையும் துறந்து 

காவி உடுத்தி சமணத் துறவியும் ஆனார். 


சமணத் துறவியாய் ஆனவர் 

தமிழன்னை தன் கால்களை அலங்கரிக்க 

சிலம்பினை எப்போது அணிவித்தார்! 


காலம் அவருக்கு எப்படி இந்தக் கட்டளை இட்டது! 


அறிய வேண்டுமெனில், 

நம் பயணத்தைத் தொடர வேண்டும்.


தொடர்வோம் நாமும்!


- இ.ச.மோகன் & ஸ்ரீவி,

Tuesday, November 18, 2025

சர்வ தேச ஆண்கள் தினம்

 சர்வ தேச ஆண்கள் தினம் 19/11/2025

-------

சொற பொழிவு:

இத்தினம் உலகளவில் கொண்டாடப்படும் இன்று ஆறு முக்கிய(முதலாம்)கருப்பொருள்களைக் கொண்டது. 

சுருக்கமாக,

ஆண்களின் நல்வாழ்வு, பாலின சமத்துவம், மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரிப்பது.


இன்றைய தினத்துக்கான இரண்டாம் கருப்பொருள்:

ஆண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பது.


ஓர் ஆணின் பார்வையில்:


ஆண்கள் என்றால் பாலன் முதல் விருத்தன் வரை அடக்கமாம்.


இன்று பெண்சிறார்கள் போல் ஆண்சிறார்களையும் பாதுகாக்க வேண்டிய காலகட்டம்.


பாலியல் தொல்லை, போதைப்பொருள்களின் வசீகரம்

எனப்பலப்பல அரக்கர் பிடிகள்😔


காந்திஜியின் சத்திய சோதனையிலருந்து இன்று சமூகம் சுய சோதனை செய்ய வேண்டிய நேரம்.


இந்த நாளிலிருந்தாவது ஆரம்பிக்கலாம்.


ஆண்கள் தினம் என்றால் பெண்கள் நினைக்கப்பட மாட்டாரா?


        எப்படிங்க?!


பெண்வயிற்றில் 10 மாத சுக வாசம்தானே ஒரு ஆண்மகனை சமூகம் அறியச்செய்கிறது!


தனித்தனி தினமாக ஆண்களையும், பெண்களையும் போற்றுதல் அவர்தம் தனிச்சிறப்புகளை , குடும்ப, சமூக பங்களிப்புகளை நன்றியுடன் நினைவு கூறதான்.


ஆண்களின் குறை தீர்க்க நாம் இங்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவங்க வேண்டுமோ?!


குகையா , குத்தால அருவியா?

பார்வைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்.


 ஒவ்வொரு ஆண்மகனுக்கும்(( வெற்றிகனமானவரோ இல்லையோ!) அவருக்குத்துணை நிற்கும்  பெண்மகளுக்கும் சேர்த்து வாழ்த்து கூறுவோம்🙏🙏


- மோகன்



--------------------

சர்வதேச ஆண்கள் தினம்…

ஆண்களைப் பெண்களும் பாட வேண்டுமா?

ஆண் பாவம் பொல்லாததா?

ஆம்… ஆண் பாவம் தான்.

ஆனால் அந்தப் பாவத்தனத்துக்கு ஒரே காரணம்,

அவனுடைய மிகப்பெரிய weakness:

*புகழ்ச்சிக்கு மயங்குவது.*

நல்லவன், பொறுப்புள்ளவன், குடும்பத்தைக் காப்பாத்துறவன்

என்று சொல்லி சொல்லியே அவனை ஒரு இளிச்சவாயனாக,

ஒரு manufacturing defect-ஆக மாற்றி விட்டார்கள்.

மூத்தவனாகப் பிறந்துவிட்டால்?

தம்பி-தங்கைகளுக்கு திருமணம் முடித்து,

சொத்து எழுதிக் கொடுத்து,

கடைசியில் தன்னை யாராவது *ஏத்துக்குவாங்களா* ன்னு

காத்திருந்து 40 வயசில் திருமணம் பண்ணுவான்.

இல்லையென்றால் தனிமையோடு செத்துப் போவான்.

*ஆண் அழக் கூடாதாம்.*

*ஆம்பிளையா இருந்துட்டு அழுதா எப்படி?*

என்று சினிமாவும் சமூகமும் சொல்லி சொல்லியே

அவன் கவலையை விழுங்கி, இரவு முழுக்க தூங்காமல்

இதய நோயோடு 50 வயசிலேயே போய் சேருவான்.

சொத்தில் பங்கு

பெண்ணுக்கும் சட்டப்படி வரும்.

ஆனால் அப்பாவின் கடன், அம்மாவின் மருத்துவச் செலவு,

வீட்டுக் கடன் என்று வரும்போது!

*நாங்க வேற குடும்பத்துக்குப் போய்விட்டோம்*

என்று சொல்லி விலகிக் கொள்வார்கள்.

கடைசிவரை தூக்குறது ஆண் மட்டும்தான்.

யாருக்காக இவ்வளவு தியாகம்?

யாருக்காக இந்த இளிச்சவாய்த் தனம்?

பெண்ணை மதிக்கிற, குடும்பத்தைத் தாங்க

தன் உயிரையே கொடுக்கத் தயாரான ஆண்களுக்கு

இந்தச் சமூகம் ஒரு பரிசு கொடுத்திருக்கு

அவனை ஒரு “பயன்படுத்தி எறியும் tool” ஆக மாற்றியிருக்கு.

ஆண் பாவம் மட்டும் அல்ல…

ஒரு மடையன், ஒரு இளிச்சவாயன்,

ஒரு manufacturing defect.

இனியாவது புரிந்துகொள்ளுங்கள் 

*ஆண்களுக்கு ஒரு தினம் போதாது.*

அவனுக்கு ஒரு புரட்சி தேவை.

அழ அனுமதிக்கிற புரட்சி.

*இல்லை* என்று சொல்ல அனுமதிக்கிற புரட்சி.

தன் வலியை உரக்கச் சொல்ல அனுமதிக்கிற புரட்சி.

இனிமேல் நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லை.

நாங்கள் மனிதர்கள் என்று கூற…

சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துகள்…


- தியாகராஜன்

அகில ஆண்கள் தினமாம்

 அகில ஆண்கள் தினமாம் 


பகலவன் வரும் முன்பே விழித்தெழுந்தேன்

   பால் காய்ச்சி " காஃபி " என குரல் கொடுத்தேன் 


வகைப்படுத்தி துவைத்தெடுத்தேன் ஆடைகளை

    வறுத்தெடுத்தேன் வாங்கி வந்த வேர்க்கடலை 


துகிலுரித்தேன் துச்சாதனனாய் உருளைக்கிழங்கை 

   துவையலுக்கு ஆய்ந்து தந்தேன் புதினாவை 


தகவல் வர ஓடிச் சென்று SIR நிரப்பினேன் 

   தண்ணீர் RO வில் அதையும் நிரப்பினேன்


" முகிலாம் கூந்தல் வெளுக்கிறதே " கேட்டேன் 

   முருங்கைக் கீரை வாங்கி வர பணிக்கப் பட்டேன் 


மகவாம் பேரன் அவனை பள்ளியில் விட ஏற்பாடு 

   மதியம் அவனோடு மட்டைப்பந்து விளையாட்டு 


குகை என அறியாமல் மாட்டிக் கொண்ட உணர்வு

   குத்தால அருவி என நினைத்தேன் அது தவறு 


அகிலமெங்கும் இன்று ஆண்கள் தினமாம் 

   ஆரும் வரா ஆற்றங்கரை, அவள், ...பகற்கனவாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 19/11/2025


================

சர்வதேச ஆண்கள் தினம்


ஆண்களை பெண்களும் பாட வேண்டுமோ?

ஆண் பாவம் பொல்லாததோ?


ஆண் பாவம் தான்...


ஆண்களை முன்னேற்ற

இயக்கம் உண்டோ? 


ஆண்களின் குறைகள் தீர்க்க சங்கம் தான் உண்டோ?


ஆணுக்கு நிகர் பெண் 

என்று சொல்லி

ஆணாதிக்க சமுதாயத்தில்

"ஆ" என்று ஊரார் பார்க்க தன் சரிபாதியாம் கண்ணம்மாவின்

தோள் மீது கை போட்டு 

கம்பீரமாய் நடந்த சிறந்த ஆண்மகனுக்கல்லவா இங்கு சங்கம் உண்டு!!!???


ஆண் பாவம் தான்..


பண்டிகை என்றால் கடனை உடனை வாங்கி இல்லத்தில் 

உள்ளோருக்கெல்லாம்

புத்தாடை வாங்கித் தந்து

தன் வியர்வை துடைக்க ஒரு துண்டும் வாங்கிக் கொள்ளாத ஆண் பாவம் தான்..


தன் பிள்ளைகள் கரையேற

உழைத்தே கரையும் 

ஆண் பாவம் தான்...


நேரம் இல்லையென்றாலும் தேவையெனில் அலுவலக சுமையோடு வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்யும் ஆண் பாவம தான்..



பொத்தி வளர்த்த பெண்ணை இன்னொரு ஆண்மகனுக்கு விட்டுத்தர 

தன் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் சிரித்துக் கொண்டே செலவழிக்கும் ஆண் பாவம் தான்..


மொத்தமாய் பிய்ந்து போனாலோ

தொலைந்து போனாலோ தான்

புதிதாய் வாங்கிக் கொள்வான்

ஆடையும் காலணியும் .

தனக்கென 

மூக்குக் கண்ணாடி மாற்ற

முன்னூறு முறை யோசிப்பான்...

மருத்துவமனை செல்ல

மறுத்து மறுத்து சமாளிப்பான்..


யாருக்காக ?? 

எல்லாம் யாருக்காக???


- சாய்கழல் சங்கீதா



 இத்தகைய ஆண்கள் மட்டுமே பாவம்..என் பதிவு பெண்களை மதித்து

குடும்பத்தை தாங்கும் ஆணி(ண்)வேர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம்..


==================

Monday, November 17, 2025

காலையில் கண்ணில் பட்டது

 காலையில் கண்ணில் பட்டது 


சிலிர்த்துச் சிரிக்கும் செடிகள், மரங்கள் அவை

   சிறு மழை தான் ஆனாலும் குளிர்ந்தது சென்னை 


உலையில் வெந்த அரிசியாய் தரையில் பூக்கள் 

   ஒருக்காலும் தப்பாது "அக்ரி" அவர் கண்கள் 


எலிவளையாம் வீடு வாங்க கோடிகளை அழுகிறோம் 

   ஏசி, பொய்க்  கூரையில் பொய்யாய் வாழ்கிறோம்


வலியில் இயற்கையின் ஓலம் என்று தான் கேட்கும் 

   வரும் தலைமுறை பாவம் வட்டியும் கட்டும் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 18/11/2025

ஊடல்

 நற்சுனை 23


ஊடல்


எதற்காக உன் மீது கோபப்பட்டேன்?

அடிக்கடி மறந்துவிடுகிறது...

எனக்கு நானே நினைவுறுத்திக் கொண்டே

நியாயப்படுத்திக் கொண்டே

மறந்துவிடுவேனோ என்றும்

மறக்காமலே இருந்துவிடுவேனோ

என்றும் பயந்துகொண்டே

எதிரியில்லா உன்னிடம்

எதிரில் வராமல் உன்னிடம்

மனதில இருக்கும் உன்னிடம் 

போர் புரிந்துகொண்டும்

கோபமாகவே இருக்க 

முயற்சித்துக் கொண்டும்

எப்போதும் உன்னையே

நினைத்துக் கொண்டும் 

இருக்கிறேன்...


உடைக்கப்படாத ஊடலில்

நான்..



- சாய்கழல் சங்கீதா

Sunday, November 16, 2025

கழுதைகள் எங்கே?

 உப்புமா 20 


கழுதைகள் எங்கே?


விதியே என்று பொதி சுமப்பாய்

வண்ணார் வீட்டுப் பிள்ளையாய் நீயும் வளர்வாய்


வைக்கோல் புல் கிடைக்காவிட்டால் 

பசியோடு தூங்க முடியுமா இரவு? 

உனக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிக்க பாரதியும் வரமாட்டான் என்பதால தானே

காகிதத்தோடு உனக்கு உறவு!

நீ உண்ணும் காகிதத்தை எரித்து உண்டுவிடும் கற்பூரத்தின் வாசனை

உனக்கு ஏன் தெரிந்திருக்க வேண்டும்?  

ஊர் மக்களின் எதிர்ப்பார்புக்கெல்லாம் நீயா

நோக வேண்டும்? 



தெருத்தெருவா சுத்தறே  

குட்டிச்சுவர் கண்டால் நிக்கிறே

ஏன் இப்படி கழுதை மாதிரி கத்தறே?உன்னை கேட்க முடியுமா

என்று தானே நினைக்கிறே????!!!!


குழந்தை கத்தவும் உந்தன் பால்

குளிக்க கிளியோபாட்ராவுக்கு வேண்டும் உந்தன் பால்

குள்ளமாகிப் போன குதிரை இனமே! 

உன்னை மீண்டும் பார்க்க ஏங்குது மனமே!




- சாய்கழல் சங்கீதா

சிலம்போடு ஒரு பயணம்

 {2} *நெருடலின் நீட்சி*


பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் செய்வித்த 

உயிர் பலி மூலம் 

மதுரை மாநகருக்கு 

வளமை திரும்பியது 

என படிக்கையில்

நெஞ்சத்தில் நெருடல் வந்தது 

என நாம் 

முதல் பதிவில் பகன்றோம். 


*உரை பெறு கட்டுரை* 

மேலும் உரைக்கிறது இவ்வாறு:


மதுரையில் நடந்த 

ஆயிரம் உயிர் பலியால் 

மதுரை செழித்தது என அறிந்த

பன்னாட்டு மன்னர்களும் 

பலி கொடுத்து விழா எடுத்தனராம்.

ஆதலால் அந்நாடுகளில் 

மழை பொழிந்ததாம் வளம் கொழித்ததாம்.

வரிசையையும் பார்த்திடுவோம்:


கொங்கு நாட்டு இளங்கோசர் 

நங்கைக்கு  

விழா எடுத்தான்.

பலி கொடுத்தான்.

கொங்கு நாட்டிலும் 

மழை பொழிய 

வளம் கொழித்தது.


அது கேட்டு,

ஈழ நாட்டு கயவாகு

என்பான் 

கண்ணகிக்கு 

பீடிகைக் கோட்டம் அமைத்து- 

நாள் பலி கொடுப்ப,

ஆங்கு, 

‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், 

ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் 

பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி,

ஈழமும் 

*பிழையா விளையுள் நாடு* ஆயிற்று. 


அது அறிந்து, சோழன் பெருங்கிள்ளி

எத்திறத்தானும் 

வரம் தரும் இவள் 

ஓர் பத்தினிக் கடவுள் ஆகும்’ என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து, 

நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே. சோனாட்டிலும் மும்மாரி மழை பொழிந்து 

வளம் பெருகியது.


தவறிழைத்த 

பாண்டிய

நெடுஞ்செழியனால் 

மதுரைக்கு பங்கம் வந்தது. 

பொற்கொல்லன் இழைத்த சூதினால்

ஆயிரம் பொற்கொல்லர்கள் 

பலி பீடத்தில் மாண்டார்கள். 


மதுரை செய்த தவறுக்கு மதுரை பலி கொடுத்தது.

சரி ... புரிகிறது..!


கொங்கு நாடும் 

ஈழ நாடும் 

சோழ நாடும் 

ஏன் வரிசை கட்டி 

பலி கொடுத்தன? 

கண்ணகிக்கு விழா எடுத்தல் 

புரிகிறது எனினும்,

பலி கொடுத்தல் எவ்விதத்தில் நியாயம்!

கோயில்களில் பலி கொடுத்தல் 

அக்கால வழக்கம் என 

கோயில்கள் அனைத்திலும்

பலி பீடங்கள் உள்ளதால்

புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனாலும் இதனைப் படிக்கையில் 

மனம் தான் பதறுகிறது 

நெருடலின் நீட்சி 

நெஞ்சினை 

உறுத்துகிறது.


பற்பல காவியங்கள் 

எழுதப்பட்ட  காப்பியங்கள் 

இறைவனையோ அரசனையோ பாடுபொருள் ஆக்கின. 


சிலப்பதிகாரமோ

மானுடப் பெண்ணை கற்புக்கரசியாக்கி தெய்வமாக்கி மகிழ்கிறது. 

அம் முயற்சியை முன்னெடுக்க 

ஒவ்வொரு நாட்டிலும் 

கோட்டங்கள் அமைத்து 

உயிர்பலி கொடுத்து 

தெய்வமாய் வழிபட்ட 

நிகழ்வினை 

வரிசையாய் குறிப்பிட்டு 

தன் பணி முடிக்கிறது. 


உரை பெறு கட்டுரை 

இளங்கோவின் கைவண்ண மன்று 

இடைச்செருகல் என 

சான்றோர் ஆய்வு செய்து கூறியுள்ளனரா 

எனப் பார்த்தால் 


சிலம்புச் செல்வர் 

ம. பொ. சி. அவர்களோ 

நம்மைப் போன்ற நெருடலுக்கு ஆளாகி 

தவறிழைத்தோம் எனத் தெரிந்ததும் 

உயர்நீத்த பாண்டிய நெடுஞ்செழியன் 

வம்சத்தில் வந்த

பாண்டியன் வெற்றிவேல் செழியன் 

தவறிழைக்கா 

ஆயிரம் பொற்கொல்லரை 

கொன்றிருக்கக் கூடுமோ 

என அங்கலாய்க்கிறார்..


சிலம்பபொலி 

சு. செல்லப்பன் அவர்களோ 

உரை பெறு கட்டுரை பற்றி 

இடைச்செருகல் என

ஏதும் கூறிடவே இல்லை.


நெஞ்சில் முள்ளாய் நம் நெருடலின் நீட்சி 

நிலைத்து நிற்கிறது. 


இருப்பினும் சிலம்பொடு நாம் பயணிப்போம்.

நெருடல் நீங்க 

வழியையும் பார்த்திடுவோம்.

Friday, November 14, 2025

குழந்தைகள் தின சிறப்பு பல்சுவை நிகழ்ச்சிகள் விவரணம்

 *குழந்தைகள் தின சிறப்பு பல்சுவை நிகழ்ச்சிகள் விவரணம்*


நவம்பர் 14 2025, வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு பூர்வா வின்டர்மியர் பன் பயன்பாட்டு அரங்கத்தில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. 


சரியாக மாலை 5:30 மணிக்கு ஐந்து குழந்தைகள் குத்து விளக்கை ஏற்றியதோடு நிகழ்ச்சி துவங்கியது. அக்குழந்தைகள்: 


ஸ்ரீநிகேதன், 

திருவிக்ரம், 

அர்ஃபா,

ஜனனி அருண் மற்றும் சாதனா ஸ்ரீ.


குத்துவிளக்கு ஏற்றியதும், சிறுவன் கிருஷ்ணா தனது மழலை குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தான். 


வரவேற்புரையை சிறப்பாக செல்வி. சாதனா ஸ்ரீ நிகழ்த்தினார். 


தங்களது மழலைக் குரலில் திருக்குறள் சொல்லியும், கம்பீரமாக உரையாற்றியும், இனிமையாகப் பாடியும் குழந்தைகள் அரங்கத்தில் இருந்தோரை மகிழ்வித்தனர். 


*திருக்குறள் கூறிய மழலையர்:*


ஜனனி அருண், 

சாய் மகிழன்,

ரித்திப்ரதா + சித்திப்ரதா,

வர்ஷா, 

சங்கமித்ரன். 


பாரதியின் வைர வரிகளுக்கு உயிரூட்டி உரை வீச்சு நிகழ்த்திய *பேச்சரங்க பேச்சாளர்கள்:*


1. திருவிக்ரம் : *பாதகம் செய்வோரைக் கண்டு பயம் கொள்ளலாகாது.*


2. முகமது அர்மான் :

- *ஓடி விளையாடு நீ ஓய்ந்திருக்கலாகாது*


3. கௌசலேஷ் :       *தெருவெல்லாம்    தமிழ் முழக்கமசெழிக்கச் செய்வோம்*


4. நித்தின் :

       *சின்னஞ் சிறு குருவி போலே - நீ திரிந்து பறந்துவா*


5. ரோஷனா:

     *எல்லோரும் ஒருகுலம் -எல்லோரும் ஓர் இனம்* 


தங்கள் இனிய குரலால் மெல்லிசையில் மயக்கியவர்கள்: 


பாடகர்கள்:

ஸ்ரீநிகேதன்- *தூளியிலே,*


தீப்தி- *அஞ்சலி அஞ்சலி,*


சஹானா- *அகநக முகநக*, 


சம்யுக்தா - *மருதாணி*,


நிவர்ஷனா- *நன்னாரே.*


திருக்குறள் பேச்சரங்கம் மெல்லிசை பாடல்கள் என மேடையில் குழந்தைகள் கலக்கிய பின் அவர்களுக்கான *வினாடி வினா* நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மஞ்சுளா மற்றும் ஸ்ரீவித்யா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். ஐந்து முதல் எட்டு வயது, ஒன்பது முதல் 11 வயது, 12 முதல் 15 வயது என மூன்று பிரிவுகளாக வினாடி வினாக்கள் நடத்தப்பட்டன. குழந்தைகள் விதிகளை ஒழுங்காக பின்பற்றி கைகளை உயர்த்தி அனுமதி வழங்கப்பட்ட பின், துடிப்போடு பதில் சொன்ன விதமும் அவர்களது ஒழுங்கும் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தன. மகிழ வைத்தன. குழந்தைத் தனமாக ஓரிரு கேள்விகளுக்கு தவறாக விடை அளித்த போதும் எழுந்த சிரிப்பொலி அடங்க சில வினாடிகள் ஆகின. டெலிவிஷன் என்பதன் தமிழாக்கம் என்ன என்று கேட்டதற்கு ஒரு சிறுமி டிவி என்று சொன்னது மிகப்பெரிய சிரிப்பு அதிர்வலைகளை உண்டாக்கியது.


அதைப்போலவே,

பழமொழியை பூர்த்தி செய்யச் சொல்லி புலிக்குப் பிறந்தது என்று கேட்டதும் ஒரு சிறுவன் புலிக்குட்டி என்று சொன்னதும் சிரிப்பலைகளால் அரங்கமே அதிர்ந்தது. கலந்துகொண்டு சரியான பதில் சொன்ன அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பேனா பரிசளிக்கப்பட்டது அதோடு சாக்லேட்டும் கொடுக்கப்பட்டன.


பிறகு தலைவர் ஸ்ரீவி ஐயா அவர்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும் திரையிடப்படவிருக்கும் குறும்படம் பற்றியும் பேசினார். 


நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்கள் குறும்படம் பற்றி அறிமுக உரையாற்றினார். 


நாடகாசிரியர் மகாலட்சுமி அவர்கள் ஒரு சிறு உரை வழங்கினார். 


அதன் பிறகு எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த *அலை(பேசி)கள் ஓய்வதில்லை* எனும் குறும்படம் திரையிடப் பட்டது.

படம் நன்றாக தெரிவதற்காக அரங்கத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப் பட்ட பிறகு இருளில்  திரையிடப்பட்ட அந்தக் குறும்படம் உலக மக்களுக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டிய அவசியத்தை – அதாவது அலைபேசி எனும் மோகத்தால் கட்டுண்டு, அடிமைப்பட்டு, குடும்பங்களையே – உறவுகளையே மறந்து போகும் நிலையில் இருக்கும் மனித குலத்தை எச்சரித்து கைப்பிடித்து வெளிச்சத்தை நோக்கி அழைத்து வரும் விதமாக இருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. நடித்த குழந்தைகள் மிக இயல்பாக அருமையாக நடித்திருந்த விதமும் எந்த ஒரு கேமரா அச்சமும் இல்லாமல் நடித்த பாங்கும் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது. இயக்கிய சாய்ராம் அவர்களுக்கும் 

நாடகாசிரியர் மகாலட்சுமி அவர்களுக்கும் துணை புரிந்த தயாரிப்புக் குழுவைச் சார்ந்த துர்கா சாய்ராம், தேவி அருண் ஸ்ரீவித்யா, மலர்விழி, லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. 


குறும்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்:


ஆதவன், 

அகரன், 

யாழினி, 

அர்ஃபா, 

பிரிதிவ், 

வருண், 

ஆராதனா,

லக்ஷித்,

ஆயிஷா, 

ஆதிரா,

ஹர்ஷிதா


 குறும்படம் திரையிடப்பட்ட பின், குறும்படத்தை தயாரித்த குழுவினரோடு குழந்தை நட்சத்திரங்களும், கேமராமேன் பாலா அவர்களும் மேடை ஏறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம் மிக குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். 


நிறைவு நிகழ்ச்சியாக பல் சுவை நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பிய குழந்தைகளுக்கு அன்பு பரிசாக சிறுவர்களுக்கான நூல்கள், *சிறப்பு விருந்தினர் திரு ஜவகர் கிருஷ்ணன், தாளாளர் விவேகானந்தா பயிலகம்* அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டன.


திரு ஜவகர் அவர்களுக்கும் திரு பாலா அவர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பில் நூல்கள் அன்பளிக்கப் பட்டன. பிறகு, அவர் குழந்தைகள் தின செய்தியாக நல்லதொரு சிறப்புரை ஆற்றினார். 


மொத்த நிகழ்ச்சியையும் செல்வி. ஆராதனா மிகத் திறம்பட தொகுத்து வழங்கினார். 


நன்றியுரை செல்வன் சத்யன் வழங்கினார்.


பின்னர் தேசியப்பண் இசைக்கப் பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


*நன்றி நவிலல்*


மிகச் சிறப்பானதொரு குறும்படத்தை நமது கன்னி முயற்சியிலேயே வெற்றிகரமாக எடுக்க உதவிய திரு சாய்ராம் அவர்கள் தலைமையிலான தயாரிப்புக் குழுவிற்கு நமது உளம் நிறைந்த நன்றிகள்.


ஐந்து பயிற்சி அமர்வுகளிலும் கலந்து கொண்டு தங்களை தாங்களே பட்டை தீட்டிக் கொண்டு மேடையில் ஏறி கலக்கிய அனைத்து பேச்சரங்க திருக்குறள் ஒப்பித்த மெல்லிசையில் பாடிய குழந்தைகளுக்கு நெஞ்சு நிறை நன்றிகள். 


பயிற்சிக்கு இடம் கொடுத்து உதவிய சிவகாமி அவர்களுக்கும் பயிற்சிகளை ஒருங்கிணைத்த சிவகாமி மற்றும் மல்லிகாமணி அவர்களுக்கும் நமது நன்றிகள். 


கடந்த 15 20 நாட்களுக்கு மேலாக குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்பியும் குறும்பட தயாரிப்பிற்கு அனுப்பியும் உதவியதோடு இல்லத்திலும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பெற்றோர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகள். 


வழக்கம் போல சிறப்பாக காணொளி எடுத்து யூடியூபில் பதிவேற்ற இருக்கின்ற *திரு விஜய் கணேஷ்*  அவர்களுக்கும் மிகச் சிறந்த ஒலி அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த *திரு. சசிகுமார்* அவர்களுக்கும் நமது நன்றிகள். 


பெயரை வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனைவருக்கும் நேற்று பாப்கார்ன் வழங்க ஏற்பாடு செய்த அந்த நல்ல இதயத்திற்கும் நமது நன்றிகள். 


நமது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பித்த நமது *குடியிருப்பு நலச் சங்க உதவி தலைவர் திரு சரவணன்* அவர்களுக்கும் நமது நன்றி. 


அதுபோலவே நமது இந்த கொண்டாட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு குறும்படத்தை ஒளிப்பதிவு செய்து உதவிய *திரு பாலா* அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். 


திரு ஜவகர் ஐயா அவர்களின் இணையரும் விவேகானந்தா பயிலகம் தலைமை ஆசிரியையும் ஆன *திருமதி திலகவதி ஜவகர்* அவர்கள் நமது அழைப்பினை ஏற்று வந்திருந்து சிறப்பித்தார்கள். அவர்களுக்கும் நமது நன்றி.


*நன்றி நவிலலில் நிறைவாக, ஒரு மிக நிறைவான நன்றியை சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் தரத்தை பார்த்து மனம் மகிழ்ந்த நமது உறுப்பினர் திருமதி. லலிதா கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடமே ₹. 2000/–  நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.*


நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த சங்கத்தின் உறுப்பினராக இல்லாத பிற பூர்வாகுடி வாசிகளுக்கும் நமது நன்றிகள் அவர்கள் நமது சங்கத்தில் இணைந்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என விரும்பி வேண்டி மகாகவி பாரதி தமிழ் சங்கம் கேட்டுக் கொள்கிறது. 


நன்றி🙏


- ஸ்ரீவி

குழந்தைகள் தினத்தில்...

 குழந்தைகள் தினத்தில்...


வாராது வந்த நம் பாரதியின் தமிழ்ச் சங்கம் 

   வரலாறு படைத்தது "குழந்தைகள் தினம்" 


"நீராரும்" என இசைத்த மழலைக்கு ஒரு ஷொட்டு 

   நிச்சயம் மகிந்திருப்பாள் தமிழன்னை கேட்டு 


வேராம் உறவுகளை விலக்கி வைக்கும் அலைபேசி 

   விளக்கமாகச் சொன்னார் நம் மகாலட்சுமி 


சீரான ஒப்பனையுடன் சிகையலங்காரம்

   செய்து அசத்தினார் நம் துர்கா சாய்ராம் 


தீராத விளையாட்டுக் கன்றுகளை ஒன்று கூட்டி 

   திறமைகளைக் கொட்டிய நம் சாய்ராம் சாட்டை


தேரிழுக்க வந்தவர் இன்னுமாம் பல சிறார்கள் 

   தெள்ளுதமிழ்ப் பேசி, பாடி திகைக்க வைத்தார்கள்


பேரப் பிள்ளைகள் தின்னும் "பாப்கார்ன்" மணம் 

   பெரியோர்கள் முகத்திலோ ஏக்கம் பாவம்


கார்மேகங்கள் கொட்டியதாய் இருந்தது நிகழ்ச்சி 

   "காத்திருக்கிறேன் flight modeல்" கெஞ்சிய கைபேசி


__. குத்தனூர் சேஷுதாஸ்  14/11/2025


===============

குதூகலமான குழந்தைகள் தினம்..

மகாகவியே குழந்தைகளாய்

உருவெடுத்து வந்ததே நிதர்சனம்..

உலகெங்கும் முதல் முறையாக மழலை கொஞ்சிய தமிழ்த்தாய் வாழ்த்து

சொப்புவாயால்

திருக்குறள் செப்பிய

சின்னஞ்சிறு சொப்புகள்..

தமிழோடு விளையாடிய

"தமிழ்ப் பேச்சு "முரசுகள்..

இன்னிசையால் இன்னமுதூட்டிய இளங்குயில்கள் 

இனிக்க இனிக்க 

வரவேற்பு,தொகுப்பு, நன்றி என தமிழை 

இழைத்த சந்தன மரங்கள்...

கற்ற தமிழை சோதித்து

கற்கத் தூண்டிய போட்டிகள்..

முத்தாய்ப்பாய் அறையின் இருளையும்

மனங்களின் இருளையும்  விரட்டிய

"டீச்சர்"...


"அலைபேசிகள் ஓய்வதில்லை" பற்றி தனிப் பதிவு எழுத ஆசை..தற்போதைக்கு இரத்தினச்  சுருக்கமாய்...

"அலைபேசிகள் ஓய்வதில்லை" மனதில் ஏற்படுத்திய அதிர்வலைகள்

(தாக்கம்) இன்னுமும் ஓயவில்லை.

குழந்தைகளையும் குழுவினரையும் பாராட்ட வார்த்தையில்லை.



அடடா.. நேரம் நகர்ந்ததோ ..பறந்ததோ...


- சங்கீதா

-----------------------------------

பூர்வாவில் குழந்தைகள் தினம்


குறும்பு செய்யும் வயதில்‌ மழலை...

குயிலாக இசைத்தது தமிழ்த்தாய் வாழ்த்து

குறிப்புணர்த்தியது நிகழ்ச்சியின் சிறப்பை


பாரதியின் சீர்மிகு வரிகளாம்...

பாலகர்கள் பேச்சின் வீச்சில் 

பாரதி சங்கம் கொண்டது பெருமை


குறள்களை வள்ளுவர் செதுக்கினார்...

குதூகலமாக உயிர் தந்தனர் மழலையர் 

குளிர்ந்தது கேட்டோர் மனம்


இன்னிசையில் மயங்காதோர் இலர்..

இளங்குயில்களின் மெல்லிசையில்

இதயம் அடைந்தது பேரானந்தம் 


வினாடி வினா வினாடிகள்...

விடைகள் சரியோ தவறோ

வியந்து அதிர்ந்தது அரங்கம் 


முத்தாய்ப்பாக தமிழ்ச்சங்க குறும்படம்

முதல் முயற்சியே அமர்க்களம் 

முல்லை ரோஜாவானது அலங்காரத் திறனால்

முத்து முத்தாய் குழந்தைகள் பேச்சு

முக பாவனைகளோ அசத்தல்

முழுமை தந்தது இயக்கமும் தொகுப்பும்

முத்திரை பதித்தனர் உதவியாளர்கள்

முழக்கம் இட்டது படமல்ல பாடமென

முற்றிலும் மனதைக் கவர்ந்தது...


வரவேற்பும்  நன்றி உரைகளும் அழகு 

வந்த சிறப்பு விருந்தினரின் உரையும் நன்று

வழிகாட்டும் தலைவர்களுக்கு நன்றி

வந்து சிறப்பித்த உறுப்பினர்களுக்கும் நன்றி 


- அமுதவல்லி

நம் மகாகவி பாரதி சங்கத்தினர் விழா எடுத்துக் குழந்தைகளைப் போற்றிய விழா

 எச்சரிக்கை! நீண்ட பதிவு- நல் உணர்வுகளுக்கு ஏது மடை!

-------

நம் மகாகவி பாரதி சங்கத்தினர் விழா எடுத்துக் குழந்தைகளைப் போற்றிய விழா- 14/11/2025

************

" குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"

கொண்டாடினோம்; குழந்தைத் தெய்வங்களை, தரிசித்தோம்.


தமிழன்னையே  என்றும் இளமைத்திறன் உடையாள். மழலைக்குரலில் வாழ்த்து கேட்டு இரு கரம் உயர்த்தி ஆசி வழங்கி இருப்பாள்.


அதற்குப்பின்  திருமண விருந்தில் வரிசையாக வந்து கொண்டே இருக்கும் அறுசுவை உண்டிகள் போல , இங்கு கண்ணுக்கும் காதுக்கும் , ஏன் மனதுக்கும் விருந்து.


மூன்று மணி நேரமா? கடிகாரத்தை யார் பார்த்தார்கள்?


இரண்டடி குறளை நான்கடி கூட வளராத கிள்ளைகளின் வாய்வழி கேட்கையில், இன்பத்

தேன் பாய்ந்தது காதினிலே.


பேச்சரங்கத்தில் நமது வழக்கமான" பட்டையைக் கிளப்பும் "இளைய சொல்வீரர்களோடு, தயங்கிப்பின் நிற்கும்  சிறாரையும் ஊக்குவித்து வருங்கால பேச்சாளராக, உருவெடுக்க, வழி வகுத்தது , தனிச்சிறப்பு.


வினாடி வினா!!- வினாடிகள் நகர்ந்ததே தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற வினாக்கள்; முண்டி அடித்து விடை கூற முன் வந்த ஆர்வக் குழாம்! இவர்களை சாமர்த்தியமாக வழி நடத்தி விடைகளயும் வரவழைத்த வினாடி வினா தொகுப்பாளர் சகோதரிகள்! 

      ஓஹோ! 

ஒரு நெருடல்! 

பல குழந்தைகளுக்கு, ஆங்கிலத்தில் விடை தெரிந்தது ; ஆனால் தமிழில் கூற இயலவில்லை. என் விரல் பெற்றோரையே சுட்டுகிறது.


மம்மி , டாடி போய் அம்மா, அப்பா என்றால் அம்மம்மா, அப்பப்பா , எவ்வளவு இனிமை!


திரை இசை- எப்படிதான் உடலின் எல்லா அங்கங்களும் தாளமிடும் வகையில் அமையும் பாடல்களைத் தேர்ந்து எடுக்கின்றனரோ?!அதுவும் இளைய இனிய குரல்கள் வழி கேட்கையில், பாதம் அல்வா சாப்பிடுகையில் மேலும் மேலும் சாப்பிட

தோன்றும் உணர்வு போல உண்டானது.


குறும்படம்- சமூக விழிப்புணர்வை, பொழுது போக்காக விளக்கி  ஊட்டிய படம். நெடும்படமாக இருந்தாலும் ரசித்து இருப்பேன்.


சிறுவர், சிறுமிகளுக்கு நல்ல பயிற்சி அளித்து ஒரு " தொழில் முறை" ( professional) படத்தை விட சிறப்பான படைப்பை அளித்த திரு சாய்ராம் குழுவினருக்கு, நெஞ்சு நிறை நன்றி.  


ஒரு " அஞ்சலி" படத்துக்கு ,இணையாக

  ஒரு குறும்படத்தை உருவாக்க உதவிய பின்புலக் குழுவினருக்கு,நன்றி.   


 இளவயதினரை அவர்கள் வயோதிக்கத்தில் எப்படி இருப்பர் என்று செயற்கை நுண்ணறிவு உதவி இன்றி, காண்பித்த ஒப்பனைக்கலைஞர் துர்கா சாய்ராம் அவர்களுக்கு ஒரு சபாஷ்!

குழந்தைகளுக்கு, கொழு கொம்பாக இருந்து ஊக்கிய பெற்றவர்களுக்கு, நெஞ்சு நிறை நன்றி.


நம் திரைப்படங்களிலோ, தொலைக்காட்சித் தொடர்களிலோ, நல்ல கருத்தை, ஒரு முதியவர் கண்ணாடியைக் கழற்றியபடி" அடேய்ய்" என சொல்ல ஆரம்பிப்பார். 

நம்நல்ல காலம், இங்கு " தின்பண்ட தாத்தா" சொல்லாமல் ,  " வில்லன்" ஆக வரும் அலைபேசியே,தன்னைப்  பயனபடுத்தும் முறை பற்றிக்கூறி முத்தாயப்பு வைப்பது நல்ல உத்தி.


மகாலட்சுமி அவர்களிடம் இருந்து இன்னும் பல எதிர்பார்ப்புகள்!


ஊன்றிப் பார்த்ததில், சாய்ராம் ஐயா, ஶ்ரீவித்யா அவர்கள் குரலையும் நடுவில் கேட்டு மகிழ்ந்தேன்.👍👍



அலை((பேசி) கள் மட்டுமா ஓய்வதில்லை? இந்தக்குறும்படத்தைப் பேசிப் பாராட்டும் வாய்களும் ஓயாது!



 

மொத்தத்தில் திருப்பதி லட்டு உண்ட உணர்வு, எல்லாப்பக்கமும் சுவையோ,சுவைதான்!


(பின் குறிப்பு:

சோளப்பொறி அமைப்பை வெளியில் வைத்து, தன்னார்வலர்களைக் கொண்டு சிறுவர்களுக்குக் கொண்டு குடுக்க ஏற்பாடு செய்தி இருந்தால், அரங்கத்தில் இடமும் கூடி இருக்கும், அமர; குழப்பமும், கூச்சலும் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். மன்னிக்கவும், என்தாழ்மையான கருத்து🙏🙏)



Thursday, November 13, 2025

இனிய குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்👫


மீண்டும் மீண்டும் குழியில்...


மறுபடியும் குழியில் விழுந்துவிட்டேன்..

சத்தமில்லை

கத்தவில்லை

லேசான கீறல் கூட இல்லை

குருதி துளியும் கசியவில்லை 

மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படவில்லை...

எதுவும் தவறாய் நடக்கவில்லை..

கொஞ்ச நேரத்திற்கு மயக்கம் மட்டும் தெளியவில்லை..


அப்படி ஒரு குழியா? 

கேட்போருக்கு மட்டும் இரகசியம் சொல்கிறேன்..


விழுந்தது என் செல்லக் குழந்தையின் கன்னக் குழியில்!



- சாய்கழல் சங்கீதா



இனிய குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்👫

இலவசமாய்...

 நற்சுனை 22


இலவசமாய்...


கீரை ஆய்ந்து கொடுத்தார் பாட்டி

கீரைக்குழம்பு செய்தார் அம்மா


பால் வாங்கி வந்தார் தாத்தா 

சுகர் ப்ரீ போட்ட காபியை கொடுத்தார் பாட்டி


தாத்தாவின் துணிகளை இஸ்திரி போட்டு வாங்கி வந்தார் அப்பா

அப்பாவுக்குப் பிடித்த புத்தகத்தை தேடி வாங்கி வந்தார் தாத்தா


பாட்டிக்கு தைலம் தேய்த்துவிட்டாள் அக்கா

அக்காவின் தலைமுடிக்கு சாம்பிராணி போட்டார் அம்மா


அக்காவின் குழந்தை கக்கா போய்விட்டது

துடைத்துவிட்டேன் நான்..

புன்னகை சிந்தியது குழந்தை..


அழுத குழந்தையை தூளியில் எட்டிப் பார்த்தேன்

எந்தப் பணிவிடையும் செய்யவில்லை

இப்போதும் புன்னகையைப் பூப் போல் உதிர்த்தது


அதே புன்னகை!


- சாய்கழல் சங்கீதா

Tuesday, November 11, 2025

கெட்ட வார்த்தை

 நற்சுனை 21


கெட்ட வார்த்தை


எட்டி மிதிப்பது போல்

எறியப்படும் கடும் சொற்கள்

எழுந்து கொள்ளவே முடியாமல் செய்யும்

எட்ட முடியா உயரங்களையும் 

எட்ட வைக்கும்

கெட்ட வார்த்தையும் நமக்கு

நல்ல வார்த்தை தான்..


சிதைக்காமல் செதுக்கியதென்றால்!



- சாய்கழல் சங்கீதா


உப்புமா 18


கெட்ட வார்த்தை




கனியிருப்பக் காய் எதற்கு?


(ஒருவரை)வறுத்தெடுக்க தான்!😀



- சாய்கழல் சங்கீதா


ஈதல் நன்றே

 ஈதல் நன்றே


கருதுதல் எல்லாம் நல்லதே என்றால் 

வருபவை எல்லாம் நன்மையே ஆகிடும் 

தருகின்ற மனமும் வந்தது என்றால் 

பெறுபவை எல்லாம் 

பொக்கிஷங்களாம்.


அற்றார் அழிபசி தீர்த்தோம் என்றால் 

உற்றார் ஆவர் உலகோர் எல்லாம்

கற்றார் கூறியது இதுவே தானே 

சுற்றம் அனைத்தும் மகிழ்வு 

பெறுமே..


உங்கள் தோழன் ஸ்ரீவி

Monday, November 10, 2025

வறுமை

 வறுமையின் கொடிய கரங்கள் 

சின்னஞ்சிறு குடும்பம் தன்னை 

வாட்டி வதக்கி கசக்கிடும் போது

கையறு நிலையில் அன்னையவளும் 

என் செய்வாள்  ஐயோ பாவம்!


புன் முறுவல் தவழும் இன்முகம் காட்டி 

வாழ்வை மலர்த்தும் மழலைச் செல்வம் 

கைப்பிடித்து அன்போடு நிற்கையில் 

கவலையுறு தாயும் கை கழுவிச் செல்வாளோ 

உழைத்துப் பிழைக்க உறுதி பூணுவாளோ!


அருமைத் தாயும்

உழைத்துக் களைத்து

ஆற அமர அமரும்போது 


நெற்றியில் வழியும்  வியர்வையை 

ஒற்றி எடுத்து ஆசுவாசப் படுத்தும் 


அழகுக் குழந்தையின் அன்பினைப் பாரீர்!

பாரினில்

இதற்கேதும் இணையுண்டோ கூறீர்..!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

கொடுத்தது இயற்கை வெவ்வேறே..

 கொடுத்தது இயற்கை வெவ்வேறே..


மாடு மேய்த்தவன் புல்லாங்குழல் இசையில் 

   மயங்கின உயிரெலாம் கேட்டோம் கதையில் 


ஆடு மேய்த்தாலும் அகிலத்தை மயக்கலாம் 

   அறிந்து தன் திறமை வளர்த்தால் வெல்லலாம்


கூடு கட்டவும் தெரியா குயிலிடம் இன்னிசை

   கொடுத்தது நமக்கு வெவ்வேறே இயற்கை 


ஏடில்லா தாய்ப் பாலில் எழுந்த மழலை முன்னே 

   எந்த இசைக் கருவியும் நில்லாது தோற்குமே.


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/11/2025

வாசிப்பு வட்டம் - இலக்கண பயிற்சி

 சாரதி   யாவோம் தமிழன்னைத் தேருக்கு 

பாரதி தமிழ்ச் சங்கத்தால்

- ,ஸ்ரீவி 


=================================

செந்தமிழ் பூமணம் எங்கும் பரவுதே 

பாரதி சங்கத் தினால்

- சுல்தானா


==============================

ஊரெலாம் தீந்தமிழே ஒலிக்கும் நாள் தூரமிலை


பாரதி சங்கத் தினால்

- குத்தனூர் சேஷுதாஸ்


==================================


Sunday, November 9, 2025

வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (நான்காம் அமர்வு) விவரணம்

 *வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (நான்காம் அமர்வு) விவரணம்*


9.11.2025 ஞாயிறு மாலை 5 மணிக்கு நான்காம் அமர்வு துவங்கியது. 


சிறார்களுக்கான வாசிப்பு அரங்கில் கலந்து கொண்ட சிறார்கள்: 


நிவர்சனா, 

ஜனனி, 

அகரன், 

ஆதவன், 

ஸ்ரீயாழினி, 

திருவிக்ரம், 

ஸ்ரீநிகேதன், 

ஆதவ், 

அர்மான், 

அர்ஃபா, 

சாய் பிரணவ், 

ஆதிரா, 

ஸ்ரீராம்,

ஸ்ரீவத்சன், 

சம்ரித்,

ஜியோ, 

கௌசலேஷ்


பெரியோருக்கான வாசிப்பு அரங்கில் கலந்து கொண்டவர்கள்: 


ஸ்ரீவி, 

மகாலட்சுமி, 

சிவகாமி, 

காமாட்சி, 

சுல்தானா, தியாகராஜன், லட்சுமி நாராயணன், சாய்ராம், 

தேவி அருண், 

துர்கா, 

மல்லிகா, 

லக்ஷ்மி,

ஆர். சண்முகசுந்தரம், லதா, 

வெ. நாகராஜன் 

சு .தே. நாகராஜன், 

அ. ராபர்ட் சேம், 

ஆர். சுப்பிரமணியன் மல்லிகாமணி


நமது இந்த நான்கு அமர்வுகளில், முதன் முறையாக தமிழ் சங்க உறுப்பினர் அல்லாத ஓர் அன்பர் கலந்து கொண்டார். அவர் பெயர் திரு. ராபர்ட் சேம். அவரது சுய அறிமுகம் அவரது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. அவரை நம் சங்க உறுப்பினராக இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.


சிறார்களுக்கான வாசிப்பு அரங்கில் வழக்கம் போல ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கதைப் புத்தகங்கள் தனித்தனியே வழங்கப்பட்டன. அவர்கள் அதனை வாசித்த பின், அக்கதையை நடித்துக் காட்டச் சொல்லி பொறுப்பாளர் மகாலட்சுமி கூறினார். குழந்தைகளின் வாசித்தலின் வேகம் அதிகரித்துள்ளதை நம்மால் உணர முடிந்தது. பல குழந்தைகள் தாங்கள் வாசித்த கதையினை கதாபாத்திரங்களாக மாறி நடித்துக் காண்பித்த விதம் மிக அருமையாக இருந்தது. நேரத்தை மிகப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும், அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த பொறுப்பாளர் மகாலட்சுமி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய செயல் திட்டங்களோடு இந்த அமர்வினை நடத்துவதும் மகாகவி பாரதி தமிழ் சங்கத்திற்கு மிகுந்த  பேருவகையையும்

திருப்தியையும் தருகிறது. இம்முயற்சியை ஊக்குவிக்க, பெற்றோர்கள் தொடர்ந்து தங்களது குழந்தைகளை வாசிப்பு வட்டத்திற்கு அனுப்பிட நமது சங்கம் கேட்டுக் கொள்கிறது.


*ஒவ்வொரு அமர்விலும் மிகச் சிறப்பாக புதிய செயல் திட்டங்களுடன் வந்து நடத்துகின்ற மகாலட்சுமி அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.*


அதன் பிறகு பெரியோருக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது. இதன் பொறுப்பாளர் லட்சுமி நாராயணன் 

அவர்கள் திரு கி. ரா. அவர்கள் தொகுத்து வழங்கிய *கரிசல் கதைகள்*  என்னும் நூலில் இருந்து *வெயிலோடு போய்* என்கின்ற *திரு தமிழ்ச்செல்வன்* எழுதிய கதையினை வாசித்தார். கோவில்பட்டி மண்ணின் மைந்தரான இவரது எழுத்தில் கோவில்பட்டியின் கரிசல் மண் வாசனை தெரிந்தது. இயல்பான நடையில் மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்த எளியவர்களின் மன ஓட்டங்களை அருமையாக படம் பிடித்த அந்த கதை அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது. இந்தக் கதையினை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வந்துள்ளது என லட்சுமி நாராயணன் கூறியதும், *‘பூ’* என்கின்ற தமிழ் திரைப் படம் இக்கதையை வைத்து எடுக்கப்பட்டதை திருமதி லக்ஷ்மி நினைவு கூர்ந்தார்.


*பொறுப்பாளராக இருந்து மிகப் பொறுப்பாக இந்த அமர்வினை நடத்தி பல புதிய கதைகளை படித்து உறுப்பினரை மகிழ்வுறச் செய்யும் லட்சுமி நாராயணனுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்.*


அதன் பின்னர், இலக்கண வகுப்பு துவங்கியது. திரு. சண்முகசுந்தரம் ஐயா மிகச்சிறப்பாக இலக்கண வகுப்பை நடத்தினார். கடந்த வகுப்புகளின் பாடங்களை நினைவு படுத்தியம் புதிய பாடங்களை எடுத்தும் பல கேள்விகளை கேட்டு மிக உற்சாகமாக வகுப்பினை நடத்தினார். அவர் கேட்ட பல்வேறு கேள்விகளை மிகுந்த ஆர்வத்துடன் நமது உறுப்பினர்கள் பலர் சரியாக பதிலளித்தது இலக்கண வகுப்புகள் சரியான பாதையில் மிகச் சிறப்பாக பயணிக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. இன்றைய நாளில் தளை பிரித்தலும் வெண்பா செய்யுள் பற்றியும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பலர் மிகச் சரியாக தளை பிரித்து வெண்பாவின் விதி பொருந்துகிறதா எனப் பார்த்த விதம் அனைவரையும் உற்சாகம் கொள்ள வைத்தது. 


*சிறப்பான முறையில் வகுப்பு எடுத்து வரும் திரு. ஆர். சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு தமிழ்ச் சங்கம் நன்றியறிதல்களை உரித்தாக்குகிறது.*


*நம் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்!:*


மாதம் இருமுறை கூடும் இந்த அமர்வுகளில் நம் உறுப்பினர்கள் பலரும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும். தங்கள் இல்லத்து குழந்தைகளை இந்த அமர்வுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்ச்சங்கம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.



- ஸ்ரீவி

Saturday, November 8, 2025

நிலை- வண்ணநிலவன் ஒரு கண்ணோட்டம்

சிறுகதை-

நிலை- வண்ணநிலவன்

ஒரு கண்ணோட்டம்

-------------

கோமு ஒரு பெரிய வீட்டில் பணியாள்; பல பணிகளை ஒரே சமயத்தில் ஆளுபவள். 


ஊர்த்திருவிழாவில்அன்று தேர். ஊரே கூடி இழுத்து, கூடி இருந்து குதூகலிக்கும் நாள். 


கோமுவுக்கும் சென்று பார்க்க ஆசைதான். ஆனால் முடியாதே!


வீட்டை இவள் பொறுப்பில் விட்டுவிட்டு, " எசமான்" கூட்டம் இறையருள்  பெற சென்றுவிட்டது. 

படுத்துக்கிடக்கும் பெரிய ஆச்சியைப் பேண வேண்டிய கடமை வேறு.


தேர் நிலைக்கு வந்த பிறகு, வீட்டோர் வந்த பிறகு, தேர் முட்டிக்கு சென்று வடம்தொட்டு கும்பிடுகிறாள்.


இதுதான் சார் கதை!

இதற்குள் எத்தனை எழுத்தோவியங்கள்!


உதாரணங்கள்:

" எதிர் வீட்டுத் தையல்கார ர் வீட்டில்  பச்சை வெட்டுத்துணி; திக்குப்பச்சை இல்லை; ஈர விறகுக்கு, தோலி உரித்த மாதிரி."


" லாலா சத்திர முக்கில் இருந்து ராயல் டாக்கீஸ் முக்கு வரை தேர் ஒரே ஓட்டமாக ஓடியதாம்; தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறதுசரியாகத்தான் இருக்கிறதாம்" - 


சொல்லோவியங்கள்!


வட்டார வழக்கு மொழிகள் அறிய அறிய இன்பம்-அழிக்கதவு,ஓட்டுச்சாய்ப்பு,மச்சுத்தட்டோட்டி,கிரு கிரு மிட்டாய்க்காரனின், ரோஸ், ரோஸ் ஆன கம்மாளிக்கொட்டை......


தேர் நிலைக்கு வந்த பின்பே, கோமுவால் பார்க்க முடிந்தது; அது அசையாமல் இவளைப் பார்த்து " நிலை " கொண்டது. 


இவள் நிலை ?


துவையலுக்குப் பொரிகடலையும், தேங்காயும் வாங்கிக்கொண்டு ஓட வேண்டுமே?!


சின்னக்கருவை வைத்து, சிறப்புச்சிறுகதை!


சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏

Sunday, November 2, 2025

கொழுத்தாடு பிடிப்பேன் - ஒரு கருத்துக் கண்ணோட்டம்

 கொழுத்தாடு பிடிப்பேன்

அ. முத்துலிங்கம்

ஒரு கருத்துக் கண்ணோட்டம்


இலங்கைத் தமிழில் சித்தரிக்கப்பட்ட

சிறுகதை.


அகதியாக கனடா நாட்டுக்கு வளமான எதிர் காலத்தை நோக்கிச்சென்று, சகலையின வீட்டில் தங்கியவனின்கதை. 


சந்தர்ப்ப வசமாக கடும்சிறையில்

அடைபட்டு , அரசி எலிசபெத்துக்கு விடுதலை வேண்டி லிகிதம்எழுதுவதாக , கதை.


இச்சம்பவங்கள் 1980களில் நடந்து இருக்க வேண்டும். 

அப்போது வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத் 

தமிழர்கள் பட்ட சிரமத்தை இக்கதையின் மூலம்அறியலாம்.


மனவி, மக்களைப் பிரிந்து சகலன் வீட்டில் வாழ்கையில், அவர் மனைவி மேல் ஏற்படும் நாட்டங்களை நாசூக்காக விவரிக்கிறார், ஆசிரியர்.


 சகலன் மகளோடு  " கொழுத்தாடு" விளையாடுகையில் ஏற்பட்ட " பொருத்தமற்ற  சூழ்

நிலை "காரணமாக கடும் சிறை வாசத்தை அனுபவிக்க நேருகிறது.


இக்கதையைப் படித்தால் இலங்கைத்தமிழின் மணத்தை உணரலாம்.

வளம்தேடி வெளிநாடு சென்றாலும்  ,மனம் , வளமில்லா பெற்ற நாட்டையே  நாடுகிறது என்பதை, சுட்டுகிறது இக்கதை.


சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு  மிக்க நன்றி.


பின் குறிப்பு:

கொழுத்தாடு விளையாட்டு" என்பது உண்மையில் "கொழுத்தாடு பிடிப்பேன்" என்ற ஒரு குழந்தைகள் விளையாட்டு ஆகும். இதில் ஒரு குழந்தை "கொழுத்தாடு பிடிப்பேன்" என்று சொல்ல, மற்றொன்று "கொல்லியாலே சுடுவேன்" என்று கூறி ஓடும்.


நம் ரஜினியின்" மாத்தாடு மாத்தாடு மல்லிகே"

விளையாட்டை நினைவுபடுத்துகிறது!


- இ.ச.மோகன்,

மரபா..? புதிதா..?

ʥåååååååå

மரபா..? புதிதா..?

•√•√•√•√•√•√•√•√•


உள்ளம் நினைப்பதை 

ஊற்றுநீராய் பெருகுவதை

உள்ளபடியே கூறிடவே 

உலகிற்கு உணர்த்திடவே 

உளமகிழ் சொல்லாட்சியால் 

உரைத்தலே கவிதை எனில் 


அதிலே,


மரபென்ன! புதிதென்ன..!

தமிழன்னை சூடியுள்ள 

மதிப்பிலா மாசறு 

பொன் நகையில்

உயர்ந்ததென்ன ..!

தாழ்ந்ததென்ன..!


பொன் நகையில் 

பழையது எனவும் 

புதியது எனவும் 

பேதம் பார்ப்போர் 

பூவுலகு மீதினிலே

யார் உண்டு சொல்லிடுவீர்!


ஒளிரும் அணிகலன் 

இரண்டுமே அழகுதானே 

தமிழன்னைக்கு 

சூடுதல் பெருமைதானே! 

தமிழ் தந்த நல்லுறவே 

தயங்காமல் கூறிடுவீர்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

Saturday, November 1, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *நெஞ்சில் ஒரு நெருடல்*


வஞ்சக நெஞ்சினனாம் ஒரு 

பொற்கொல்லன் தவறிழைக்க 

தேரா  மன்னனாம் நெடுஞ்செழியன் ஆமோதிக்க 

ஊழ்வினை காரணமாய் 

மாசாத்துவான் மைந்தன் கோவலன் வாழ்வு 

பாழ்பட்டு போனதே.

உடலை விட்டு உயிரும் பறந்தங்கே போனதே.


தவறிழைத்தோர் இருவர் இருக்க 

மாமதுரை நகரத்தையே தீக்கிரையாக்கிய

கண்ணகியின் வெஞ்சினம் 

முறையாமோ...

எனும் நெருடல் நெஞ்சினில் எழ 

சிலம்போடு மேலும் நாம் பயணிக்கிறோம்.


முப்பெரும் காண்டங்களுக்குள் 

முப்பது காதைகளுக்குள் 

பயணிக்கத் துவங்கும் முன் 

*உரை பெறு கட்டுரை* தனை

உற்று நாம் 

நோக்கும் கால் 

வருத்துகிறது நம் நெஞ்சை 

இன்னொரு நெருடல் வந்து. 


நீதி நெறி மறந்து 

ஆராயாது தீர்ப்பு சொன்ன 

தேரா மன்னன் பாண்டியனோ 

வெண்குடை வீழ செங்கோல் தாழ

*யானோ அரசன் யானே கள்வன் –கெடுக என் ஆயுள்*

என்று உரைத்து

 உடனே மாண்டான். 

பட்டத்து அரசி கோப்பெருந்தேவியும் 

‘கணவனை இழந்தோருக்கு காட்டுவதில்’ – எனக் கூறி உயிர் மரித்தாள்.


வெஞ்சினம் அடங்கா கண்ணகியும் 

நெஞ்சில் பொங்கும் ரௌத்திரம் தீர 

மதுரை நகரை சுட்டு எரித்தாள்! 


இதனைக் கூறும் சிலப்பதிகாரம் 

*உரை பெறு கட்டுரை* 

தன்னில் 

மதுரை எரிந்து தணிந்த பின்னே 

நிகழ்ந்த நிகழ்வை படம் பிடிக்கிறது. 

என்னவென்று பார்க்கலாம் நாமும்:


"அன்றுதொட்டு, பாண்டியன் நாடு மழை வறம் 


கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு-நோயும் 


குருவும் தொடர, கொற்கையில் இருந்த 


வெற்றிவேல் செழியன் நங்கைக்குப் 


பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று, 


கள-வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, 


நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது."


என பதிவு செய்கிறது. 


தவறேதும் இழைக்கா கோவலன் தன்னை 

வஞ்சகக் கள்வன் பொற்கொல்லன் 

சூது செய்து மாட்டி விட 

ஆராயாது தீர்ப்பு சொன்ன 

பாண்டிய மன்னன் இறந்து பட, 

வெஞ்சினம் அடங்கா கண்ணகியும் 

மதுரை நகரை எரித்த பின்னும் 


மதுரையின் சாபம் விலகவில்லையாம். 

மழையும் அங்கே பெய்யவில்லையாம் 

வெப்பு நோயும் பஞ்சமும் அங்கே 

தடைகள் என்பது ஏதுமின்றி 

தலை விரித்து ஆட்டம் போட்டதாம். 


செய்த பாவம் தீர்ந்து விடவே 

விமோசனம் செய்ய 

வேண்டி இருந்ததாம் 

மாண்டு போன நெடுஞ்செழியன் 

வாரிசாய் வந்தவன் வெற்றி வேற் செழியன் 

எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன். 


கண்ணகி இட்ட சாபம் தீர 

பொற்கொல்லர் ஆயிரம் பேரை 

கொலையிட்டுப் பூசனை செய்தான். 

சாபம் நீங்கி மழையும் பொழிந்ததாம் 

பஞ்சம் நீங்கி வளமை வந்ததாம் 


ஓர் உயிர் போனதற்கு 

ஊரையே எரித்தல் நன்றாம்.


சாபம் தீர, தவறேதும் இழைக்கா

ஆயிரம் பேரை கொன்று தீர்த்தால் சாபம் அதுவும் நீங்கிடுமாம். 


இதனை நாமும் படிக்கையிலே

நமது நெஞ்சமும் வெந்து போகுதே! 


கண்ணகி கோவலன் மாதவி கதையை 

சிலம்புலியோடு சேர்த்துச் சொன்ன 

இளங்கோவடிகள் மனமும் இதனை ஏற்றுக் கொண்டதா! 


அடிகளின் வாய்மொழி உதிர்த்த 

சொல்லோவியம் கேட்ட 

மதுரை கூல வாணிகன் சாத்தனார் 

உண்மையிலேயே இன்புற்றாரா? 


பதில் அறிய தொடர்வோம் நாமும் 

சிலம்போடு நம் பயணம் தன்னை!


- ஸ்ரீவி & மோகன்,

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...