எச்சரிக்கை! நீண்ட பதிவு- நல் உணர்வுகளுக்கு ஏது மடை!
-------
நம் மகாகவி பாரதி சங்கத்தினர் விழா எடுத்துக் குழந்தைகளைப் போற்றிய விழா- 14/11/2025
************
" குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
கொண்டாடினோம்; குழந்தைத் தெய்வங்களை, தரிசித்தோம்.
தமிழன்னையே என்றும் இளமைத்திறன் உடையாள். மழலைக்குரலில் வாழ்த்து கேட்டு இரு கரம் உயர்த்தி ஆசி வழங்கி இருப்பாள்.
அதற்குப்பின் திருமண விருந்தில் வரிசையாக வந்து கொண்டே இருக்கும் அறுசுவை உண்டிகள் போல , இங்கு கண்ணுக்கும் காதுக்கும் , ஏன் மனதுக்கும் விருந்து.
மூன்று மணி நேரமா? கடிகாரத்தை யார் பார்த்தார்கள்?
இரண்டடி குறளை நான்கடி கூட வளராத கிள்ளைகளின் வாய்வழி கேட்கையில், இன்பத்
தேன் பாய்ந்தது காதினிலே.
பேச்சரங்கத்தில் நமது வழக்கமான" பட்டையைக் கிளப்பும் "இளைய சொல்வீரர்களோடு, தயங்கிப்பின் நிற்கும் சிறாரையும் ஊக்குவித்து வருங்கால பேச்சாளராக, உருவெடுக்க, வழி வகுத்தது , தனிச்சிறப்பு.
வினாடி வினா!!- வினாடிகள் நகர்ந்ததே தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற வினாக்கள்; முண்டி அடித்து விடை கூற முன் வந்த ஆர்வக் குழாம்! இவர்களை சாமர்த்தியமாக வழி நடத்தி விடைகளயும் வரவழைத்த வினாடி வினா தொகுப்பாளர் சகோதரிகள்!
ஓஹோ!
ஒரு நெருடல்!
பல குழந்தைகளுக்கு, ஆங்கிலத்தில் விடை தெரிந்தது ; ஆனால் தமிழில் கூற இயலவில்லை. என் விரல் பெற்றோரையே சுட்டுகிறது.
மம்மி , டாடி போய் அம்மா, அப்பா என்றால் அம்மம்மா, அப்பப்பா , எவ்வளவு இனிமை!
திரை இசை- எப்படிதான் உடலின் எல்லா அங்கங்களும் தாளமிடும் வகையில் அமையும் பாடல்களைத் தேர்ந்து எடுக்கின்றனரோ?!அதுவும் இளைய இனிய குரல்கள் வழி கேட்கையில், பாதம் அல்வா சாப்பிடுகையில் மேலும் மேலும் சாப்பிட
தோன்றும் உணர்வு போல உண்டானது.
குறும்படம்- சமூக விழிப்புணர்வை, பொழுது போக்காக விளக்கி ஊட்டிய படம். நெடும்படமாக இருந்தாலும் ரசித்து இருப்பேன்.
சிறுவர், சிறுமிகளுக்கு நல்ல பயிற்சி அளித்து ஒரு " தொழில் முறை" ( professional) படத்தை விட சிறப்பான படைப்பை அளித்த திரு சாய்ராம் குழுவினருக்கு, நெஞ்சு நிறை நன்றி.
ஒரு " அஞ்சலி" படத்துக்கு ,இணையாக
ஒரு குறும்படத்தை உருவாக்க உதவிய பின்புலக் குழுவினருக்கு,நன்றி.
இளவயதினரை அவர்கள் வயோதிக்கத்தில் எப்படி இருப்பர் என்று செயற்கை நுண்ணறிவு உதவி இன்றி, காண்பித்த ஒப்பனைக்கலைஞர் துர்கா சாய்ராம் அவர்களுக்கு ஒரு சபாஷ்!
குழந்தைகளுக்கு, கொழு கொம்பாக இருந்து ஊக்கிய பெற்றவர்களுக்கு, நெஞ்சு நிறை நன்றி.
நம் திரைப்படங்களிலோ, தொலைக்காட்சித் தொடர்களிலோ, நல்ல கருத்தை, ஒரு முதியவர் கண்ணாடியைக் கழற்றியபடி" அடேய்ய்" என சொல்ல ஆரம்பிப்பார்.
நம்நல்ல காலம், இங்கு " தின்பண்ட தாத்தா" சொல்லாமல் , " வில்லன்" ஆக வரும் அலைபேசியே,தன்னைப் பயனபடுத்தும் முறை பற்றிக்கூறி முத்தாயப்பு வைப்பது நல்ல உத்தி.
மகாலட்சுமி அவர்களிடம் இருந்து இன்னும் பல எதிர்பார்ப்புகள்!
ஊன்றிப் பார்த்ததில், சாய்ராம் ஐயா, ஶ்ரீவித்யா அவர்கள் குரலையும் நடுவில் கேட்டு மகிழ்ந்தேன்.👍👍
அலை((பேசி) கள் மட்டுமா ஓய்வதில்லை? இந்தக்குறும்படத்தைப் பேசிப் பாராட்டும் வாய்களும் ஓயாது!
மொத்தத்தில் திருப்பதி லட்டு உண்ட உணர்வு, எல்லாப்பக்கமும் சுவையோ,சுவைதான்!
(பின் குறிப்பு:
சோளப்பொறி அமைப்பை வெளியில் வைத்து, தன்னார்வலர்களைக் கொண்டு சிறுவர்களுக்குக் கொண்டு குடுக்க ஏற்பாடு செய்தி இருந்தால், அரங்கத்தில் இடமும் கூடி இருக்கும், அமர; குழப்பமும், கூச்சலும் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். மன்னிக்கவும், என்தாழ்மையான கருத்து🙏🙏)
No comments:
Post a Comment