Friday, November 21, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{5} இளங்கோ அடிகளின் நண்பர் சாத்தனார் அவரை கண்ணகி வரலாறு எழுதச் சொல்லுதல்*


குன்றத்துக் குறவர்கள் கூறியதெல்லாம் 

செவி மடுத்த இளங்கோவும் சிலையாய் நின்றார் ..

சாத்தியந்தானா இதுவென்று மலைத்து நின்றார். ..


இளங்கோவின் முகக் குறிப்பினை பார்த்தார் சாத்தனார்.

அடிகளின் வியப்பை போக்குதல் தன் கடன் என்று உணர்ந்தார். 


*யான் அறிகுவன் அது பட்டது*

என இளங்கோவிடம் சொல்லலானார் 

தானறிந்த கண்ணகிக் கதையை 

அடிகள் அறிய கூறலானார். 


பூவுலகம் புகழ் 

புகார்ப் பட்டினத்தில்

மாசாத்துவான் 

மாநாய்க்கன்

எனும் வணிகப் பெருமக்கள் 

தம் வாரிசுகளான 

கோவலன்–கண்ணகி

மணம் முடித்த நிகழ்வோடு துவங்கி,


கோவலன் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையோடு

கொஞ்சிக் குலாவியதால் 

அரும் பொருள் கேடுற 


தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப்பிழைக்க மதுரை ஏகிய கதையும், 


*வினை விளை காலம்* ஆதலின்

தனை மணந்த கோவலனை கண்ணகி

தான் இழந்து போன கதையை 

கண்ணீரோடு சொல்லி முடித்தார். 


தன் கணவன் கொலைக்காக 

நீதி கேட்டுப் போராடிய 

கண்ணகியின் பெருமை சொன்னார்.

*யானே கள்வன்* என்று தன் உயிரைத் தானே விட்ட மதுரை மன்னன்

பாண்டியனும்,

*கணவனை இழந்தோருக்கு காட்டுவதில்* 

என அவனுடன் உயிர் நீத்த கோப்பெருந்தேவியும்,

கண்ணகியின் சீற்றத்தால் எரிந்து தணிந்த மதுரை நகரும்,

மதுரையை எரித்த பின்னர் கண்ணகி

சேர மன்னர்களின் தலைநகரான கொடுங்களூருக்குச் சென்று, 

அங்கு கொடுங்களூர் பகவதி அம்மன் கோவிலில் வணங்கி நின்ற போது,

விண்ணுலகத்தாரே தமது 

பறக்கும் பூப்பல்லத்தில் வந்து 

அழைத்துச் சென்ற நிகழ்வும்

என வரிசையாய் பட்டியலிட்டு உணர்ச்சி பொங்க அவர் பகர்ந்தார். 


கதை கேட்டு கலங்கிய இளங்கோவும் 

வினை விளை காலம்  என்றீரே..

விளக்குவீரோ நீரும் அதை 

எனக் கேட்டார்!


முற்பிறவியில் சிங்கபுரம் எனும் ஊரில் 

சிறந்து விளங்கிய சங்கமன் எனும் வணிகனை 

கோவலன் தன் முற்பிறப்பில் 

பொய் கூறி திருடன் என சொல்லி 

அவன் இறப்பிற்குக் காரணமானதால், 

சங்கமன் மனைவி இட்ட சாபம்

என சாத்தனார் விளக்கம் சொன்னார்.


கண்ணகி கதையை கண்ணீரோடு சொல்லிய பின், 

அடிகளிடம் அவர் விண்ணப்பமும் செய்திட்டார்.


‘நீரே இதனை காவியமாக வடித்திட வேண்டும்’ – என அன்போடு கேட்டுக் கொண்டார்.

அடிகள் அதற்கு என்ன சொன்னார்...! 


தொடர்வோம் தமிழ்ப் பயணத்தை.


*உங்கள் தோழன் ஸ்ரீதே*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...