Friday, November 21, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *{4} இளங்கோவிடம் மலைக்குறவர்கள் தாங்கள் கண்டதைச் சொல்வது*


மணி மகுடம் துறந்து 

அரண்மனை வாழ்வும் துறந்து 

சுகபோக இன்பங்கள் மறந்து 

துறவறம் பூண்ட இளங்கோவோ 

நகரை விட்டு வெளியேறி நாடோடியாய் 

அலைந்து திரிந்தார்.


மலைக்குன்றங்கள் இடையே 

தொட்டில் போல் அமைந்திருந்த 

குணவாயிற் கோட்டம்

எனும் இடம் 

ஒரு பூவுலக சொர்க்கம்.


வானளாவி உயர்ந்திருக்கும் குன்றங்கள்,

குறிஞ்சித் திணையின் வளமையைக் காட்டின 


அடர்ந்த காடுகளும் அதில் வாழ்ந்த உயிரினங்களும் முல்லைத் திணையை முழங்கிக் கூறின.


பச்சை பசேல் 

வயல் வெளிகளோ

மருதத் திணையின் பசுமையை விளம்பின. 


மோகத்தை துறந்து இன்பத்தை மறந்து 

யோக வாழ்வைத் தேடி 

அலைந்திட்ட இளங்கோவும் 

குணவாயிற் கோட்டத்தில்

அமைதியை கண்டார்;

மகிழ்வு கொண்டார்; 

அங்கேயே தங்கினார். 


ஒரு நாள் காலை,

குன்றத்துக் குறவர்கள் 

அடிகளைக் காண 

கூட்டமாய் வந்தனர்.

தேனுடன் திணைமாவும் 

அன்பாய்த் தந்தனர்.

அடிகளின் அடிபணிந்து 

வணங்கி நின்றனர். 


அவர்களோடு அடிகளின் தோழர் சாத்தனாரும் இருந்திட்டார்.

மணிமேகலை எழுதிய 

சீத்தலைச் சாத்தனார்

அடிகளாரின் உற்ற நண்பர். 

தமிழன்னை ஆசி பெற்ற புதல்வர்களில் ஒருவர். 


ஒன்று திரண்டு வந்த 

மலைவாழ் மக்கள் 

அடிகளிடம் 

தாங்கள் கண்ட அதிசய நிகழ்வை 

வியப்பு மேலிட கூறலுற்றனர்.


சினம் கொண்ட பார்வையும் 

சீற்றத்துடன் விட்ட பெரு மூச்சும் 

தலைவிரி கோலமும் 

ஒற்றை மார்பும் 

கொண்ட 

நங்கை நல்லாள் ஒருவளை 

விண்ணுலகத்தார் 

பறக்கும் பூப்பல்லக்கில்

அவள் கணவனுடன் 

வந்திறங்கி 

கையோடு விண்ணுலகம் அழைத்துச் சென்றதை 

கண்கள் விரிய 

வியப்பு மேலிட 

விவரித்தனர். 


சிலப்பதிகாரம் எனும் காவியம் படைக்க

அங்கு தான் விழுந்தது முதற் புள்ளி.

தமிழன்னையும் வழங்கினாள் 

ஆசிகளை அள்ளி.


சிலம்பில் இந்நிகழ்வை விளக்கும் பதிகம்:


"குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,


குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-


குன்றக்க குறவர் ஒருங்குடன் கூடி 


‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,


ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,


அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்


காதல் கொழுநனைக்

காட்டி, அவளொடு, எம்


*கட்புலம் காண, விட்புலம் போயது*


இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ’ என- 


(இந்த வரிகளில் எங்கள் கண்முன்னே வந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றனர் என்பது சிறப்புற உள்ளது 

*கட்புலம்* என்பது *கண் புலம்* எனப் பிரிக்கலாம். எங்கள் கண்முன்னே என்ற பொருள். *விட் புலம்* என்பது *விண்புலம்* ஆகிடும். அதாவது விண்ணுலகம் என்று பொருள்)


பயணம் தொடரும்...


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...