{3} *நெருடலை நீக்கிவிட்டு சிலம்பொடு பயணிப்போம்*
நெஞ்சிலே ஓரிரு நெருடல்கள்
நெருஞ்சி முள்ளாய் நெருடினாலும்
நெஞ்சுகுளிர் தீந் தமிழில்
நிறைவான காப்பியம் தந்தார்
நெருடல்களை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
சிலம்போடு நாம் பயணிப்போம் வாரீர்!
தமிழன்னையை அலங்கரிக்கும்
ஐம்பெரும் காப்பியங்களில்
இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படும்
காப்பியங்களில் இது
ஒன்று
மாதவியின் பொன்மகளாள்
மணிமேகலையை
முன்னிறுத்தி எழுதிய காப்பியம் மற்றொன்று.
சேர நாட்டின் அரச வம்சம்
செழுமையாய்த் தொடர பிறந்தவர் இருவர்
மூத்தவர் செங்குட்டுவனாம்
இளையவர் இளங்கோவாம்
அரண்மனை வந்த நிமித்திகன் ஒருவன்
இளங்கோவின் வதனத்தைப் பார்த்து
‘இவனே சேர நாட்டு அரசன் ஆவான்
அறமும் மறமும் இணைந்து
நல்லாட்சி புரிவான்’ –
என சோதிடம் சொன்னான்.
மூத்தவன் செங்கட்டுவனோ
முகம் வாடலானான்
மனம் சோர்ந்து போனான்.
தமையனின் முகவாட்டம் பார்த்த
தம்பியோ உறுதி பூண்டான்
அரியணை தமக்கில்லை என
சூளுரைத் தான்
துறவறமும் மேற்கொண்டான்.
அரச போகத்தை அண்ணனுக்காக தியாகம் செய்த
இளங்‘கோ’
அரண்மனை வாழ்க்கையைத் துறந்து
சமண அடிகளாய் மாறியது
காலத்தால் அழியாத காப்பியம் படைக்கவோ!
அரண்மனை வாழ்வில் அரியணையில் அமர்ந்து
ஆட்சியவர் செய்திருந்தாலும் இறவா புகழ் அவருக்குக் கிடைத்திருக்குமோ?
அண்ணனுக்காய் அரியணை துறந்தார்
அரச போக வாழ்வை முழுவதுமாய் மறந்தார்
அரசாளும் முடி துறந்ததோடு
தன் முடியையும் துறந்து
காவி உடுத்தி சமணத் துறவியும் ஆனார்.
சமணத் துறவியாய் ஆனவர்
தமிழன்னை தன் கால்களை அலங்கரிக்க
சிலம்பினை எப்போது அணிவித்தார்!
காலம் அவருக்கு எப்படி இந்தக் கட்டளை இட்டது!
அறிய வேண்டுமெனில்,
நம் பயணத்தைத் தொடர வேண்டும்.
தொடர்வோம் நாமும்!
- இ.ச.மோகன் & ஸ்ரீவி,
No comments:
Post a Comment