Tuesday, November 18, 2025

அகில ஆண்கள் தினமாம்

 அகில ஆண்கள் தினமாம் 


பகலவன் வரும் முன்பே விழித்தெழுந்தேன்

   பால் காய்ச்சி " காஃபி " என குரல் கொடுத்தேன் 


வகைப்படுத்தி துவைத்தெடுத்தேன் ஆடைகளை

    வறுத்தெடுத்தேன் வாங்கி வந்த வேர்க்கடலை 


துகிலுரித்தேன் துச்சாதனனாய் உருளைக்கிழங்கை 

   துவையலுக்கு ஆய்ந்து தந்தேன் புதினாவை 


தகவல் வர ஓடிச் சென்று SIR நிரப்பினேன் 

   தண்ணீர் RO வில் அதையும் நிரப்பினேன்


" முகிலாம் கூந்தல் வெளுக்கிறதே " கேட்டேன் 

   முருங்கைக் கீரை வாங்கி வர பணிக்கப் பட்டேன் 


மகவாம் பேரன் அவனை பள்ளியில் விட ஏற்பாடு 

   மதியம் அவனோடு மட்டைப்பந்து விளையாட்டு 


குகை என அறியாமல் மாட்டிக் கொண்ட உணர்வு

   குத்தால அருவி என நினைத்தேன் அது தவறு 


அகிலமெங்கும் இன்று ஆண்கள் தினமாம் 

   ஆரும் வரா ஆற்றங்கரை, அவள், ...பகற்கனவாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 19/11/2025


================

சர்வதேச ஆண்கள் தினம்


ஆண்களை பெண்களும் பாட வேண்டுமோ?

ஆண் பாவம் பொல்லாததோ?


ஆண் பாவம் தான்...


ஆண்களை முன்னேற்ற

இயக்கம் உண்டோ? 


ஆண்களின் குறைகள் தீர்க்க சங்கம் தான் உண்டோ?


ஆணுக்கு நிகர் பெண் 

என்று சொல்லி

ஆணாதிக்க சமுதாயத்தில்

"ஆ" என்று ஊரார் பார்க்க தன் சரிபாதியாம் கண்ணம்மாவின்

தோள் மீது கை போட்டு 

கம்பீரமாய் நடந்த சிறந்த ஆண்மகனுக்கல்லவா இங்கு சங்கம் உண்டு!!!???


ஆண் பாவம் தான்..


பண்டிகை என்றால் கடனை உடனை வாங்கி இல்லத்தில் 

உள்ளோருக்கெல்லாம்

புத்தாடை வாங்கித் தந்து

தன் வியர்வை துடைக்க ஒரு துண்டும் வாங்கிக் கொள்ளாத ஆண் பாவம் தான்..


தன் பிள்ளைகள் கரையேற

உழைத்தே கரையும் 

ஆண் பாவம் தான்...


நேரம் இல்லையென்றாலும் தேவையெனில் அலுவலக சுமையோடு வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்யும் ஆண் பாவம தான்..



பொத்தி வளர்த்த பெண்ணை இன்னொரு ஆண்மகனுக்கு விட்டுத்தர 

தன் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் சிரித்துக் கொண்டே செலவழிக்கும் ஆண் பாவம் தான்..


மொத்தமாய் பிய்ந்து போனாலோ

தொலைந்து போனாலோ தான்

புதிதாய் வாங்கிக் கொள்வான்

ஆடையும் காலணியும் .

தனக்கென 

மூக்குக் கண்ணாடி மாற்ற

முன்னூறு முறை யோசிப்பான்...

மருத்துவமனை செல்ல

மறுத்து மறுத்து சமாளிப்பான்..


யாருக்காக ?? 

எல்லாம் யாருக்காக???


- சாய்கழல் சங்கீதா



 இத்தகைய ஆண்கள் மட்டுமே பாவம்..என் பதிவு பெண்களை மதித்து

குடும்பத்தை தாங்கும் ஆணி(ண்)வேர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம்..


==================

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...