Saturday, November 1, 2025

சிலம்போடு ஒரு பயணம்

 *நெஞ்சில் ஒரு நெருடல்*


வஞ்சக நெஞ்சினனாம் ஒரு 

பொற்கொல்லன் தவறிழைக்க 

தேரா  மன்னனாம் நெடுஞ்செழியன் ஆமோதிக்க 

ஊழ்வினை காரணமாய் 

மாசாத்துவான் மைந்தன் கோவலன் வாழ்வு 

பாழ்பட்டு போனதே.

உடலை விட்டு உயிரும் பறந்தங்கே போனதே.


தவறிழைத்தோர் இருவர் இருக்க 

மாமதுரை நகரத்தையே தீக்கிரையாக்கிய

கண்ணகியின் வெஞ்சினம் 

முறையாமோ...

எனும் நெருடல் நெஞ்சினில் எழ 

சிலம்போடு மேலும் நாம் பயணிக்கிறோம்.


முப்பெரும் காண்டங்களுக்குள் 

முப்பது காதைகளுக்குள் 

பயணிக்கத் துவங்கும் முன் 

*உரை பெறு கட்டுரை* தனை

உற்று நாம் 

நோக்கும் கால் 

வருத்துகிறது நம் நெஞ்சை 

இன்னொரு நெருடல் வந்து. 


நீதி நெறி மறந்து 

ஆராயாது தீர்ப்பு சொன்ன 

தேரா மன்னன் பாண்டியனோ 

வெண்குடை வீழ செங்கோல் தாழ

*யானோ அரசன் யானே கள்வன் –கெடுக என் ஆயுள்*

என்று உரைத்து

 உடனே மாண்டான். 

பட்டத்து அரசி கோப்பெருந்தேவியும் 

‘கணவனை இழந்தோருக்கு காட்டுவதில்’ – எனக் கூறி உயிர் மரித்தாள்.


வெஞ்சினம் அடங்கா கண்ணகியும் 

நெஞ்சில் பொங்கும் ரௌத்திரம் தீர 

மதுரை நகரை சுட்டு எரித்தாள்! 


இதனைக் கூறும் சிலப்பதிகாரம் 

*உரை பெறு கட்டுரை* 

தன்னில் 

மதுரை எரிந்து தணிந்த பின்னே 

நிகழ்ந்த நிகழ்வை படம் பிடிக்கிறது. 

என்னவென்று பார்க்கலாம் நாமும்:


"அன்றுதொட்டு, பாண்டியன் நாடு மழை வறம் 


கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு-நோயும் 


குருவும் தொடர, கொற்கையில் இருந்த 


வெற்றிவேல் செழியன் நங்கைக்குப் 


பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று, 


கள-வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, 


நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது."


என பதிவு செய்கிறது. 


தவறேதும் இழைக்கா கோவலன் தன்னை 

வஞ்சகக் கள்வன் பொற்கொல்லன் 

சூது செய்து மாட்டி விட 

ஆராயாது தீர்ப்பு சொன்ன 

பாண்டிய மன்னன் இறந்து பட, 

வெஞ்சினம் அடங்கா கண்ணகியும் 

மதுரை நகரை எரித்த பின்னும் 


மதுரையின் சாபம் விலகவில்லையாம். 

மழையும் அங்கே பெய்யவில்லையாம் 

வெப்பு நோயும் பஞ்சமும் அங்கே 

தடைகள் என்பது ஏதுமின்றி 

தலை விரித்து ஆட்டம் போட்டதாம். 


செய்த பாவம் தீர்ந்து விடவே 

விமோசனம் செய்ய 

வேண்டி இருந்ததாம் 

மாண்டு போன நெடுஞ்செழியன் 

வாரிசாய் வந்தவன் வெற்றி வேற் செழியன் 

எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன். 


கண்ணகி இட்ட சாபம் தீர 

பொற்கொல்லர் ஆயிரம் பேரை 

கொலையிட்டுப் பூசனை செய்தான். 

சாபம் நீங்கி மழையும் பொழிந்ததாம் 

பஞ்சம் நீங்கி வளமை வந்ததாம் 


ஓர் உயிர் போனதற்கு 

ஊரையே எரித்தல் நன்றாம்.


சாபம் தீர, தவறேதும் இழைக்கா

ஆயிரம் பேரை கொன்று தீர்த்தால் சாபம் அதுவும் நீங்கிடுமாம். 


இதனை நாமும் படிக்கையிலே

நமது நெஞ்சமும் வெந்து போகுதே! 


கண்ணகி கோவலன் மாதவி கதையை 

சிலம்புலியோடு சேர்த்துச் சொன்ன 

இளங்கோவடிகள் மனமும் இதனை ஏற்றுக் கொண்டதா! 


அடிகளின் வாய்மொழி உதிர்த்த 

சொல்லோவியம் கேட்ட 

மதுரை கூல வாணிகன் சாத்தனார் 

உண்மையிலேயே இன்புற்றாரா? 


பதில் அறிய தொடர்வோம் நாமும் 

சிலம்போடு நம் பயணம் தன்னை!


- ஸ்ரீவி & மோகன்,

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...