{2} *நெருடலின் நீட்சி*
பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் செய்வித்த
உயிர் பலி மூலம்
மதுரை மாநகருக்கு
வளமை திரும்பியது
என படிக்கையில்
நெஞ்சத்தில் நெருடல் வந்தது
என நாம்
முதல் பதிவில் பகன்றோம்.
*உரை பெறு கட்டுரை*
மேலும் உரைக்கிறது இவ்வாறு:
மதுரையில் நடந்த
ஆயிரம் உயிர் பலியால்
மதுரை செழித்தது என அறிந்த
பன்னாட்டு மன்னர்களும்
பலி கொடுத்து விழா எடுத்தனராம்.
ஆதலால் அந்நாடுகளில்
மழை பொழிந்ததாம் வளம் கொழித்ததாம்.
வரிசையையும் பார்த்திடுவோம்:
கொங்கு நாட்டு இளங்கோசர்
நங்கைக்கு
விழா எடுத்தான்.
பலி கொடுத்தான்.
கொங்கு நாட்டிலும்
மழை பொழிய
வளம் கொழித்தது.
அது கேட்டு,
ஈழ நாட்டு கயவாகு
என்பான்
கண்ணகிக்கு
பீடிகைக் கோட்டம் அமைத்து-
நாள் பலி கொடுப்ப,
ஆங்கு,
‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள்
பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி,
ஈழமும்
*பிழையா விளையுள் நாடு* ஆயிற்று.
அது அறிந்து, சோழன் பெருங்கிள்ளி
எத்திறத்தானும்
வரம் தரும் இவள்
ஓர் பத்தினிக் கடவுள் ஆகும்’ என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து,
நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே. சோனாட்டிலும் மும்மாரி மழை பொழிந்து
வளம் பெருகியது.
தவறிழைத்த
பாண்டிய
நெடுஞ்செழியனால்
மதுரைக்கு பங்கம் வந்தது.
பொற்கொல்லன் இழைத்த சூதினால்
ஆயிரம் பொற்கொல்லர்கள்
பலி பீடத்தில் மாண்டார்கள்.
மதுரை செய்த தவறுக்கு மதுரை பலி கொடுத்தது.
சரி ... புரிகிறது..!
கொங்கு நாடும்
ஈழ நாடும்
சோழ நாடும்
ஏன் வரிசை கட்டி
பலி கொடுத்தன?
கண்ணகிக்கு விழா எடுத்தல்
புரிகிறது எனினும்,
பலி கொடுத்தல் எவ்விதத்தில் நியாயம்!
கோயில்களில் பலி கொடுத்தல்
அக்கால வழக்கம் என
கோயில்கள் அனைத்திலும்
பலி பீடங்கள் உள்ளதால்
புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனாலும் இதனைப் படிக்கையில்
மனம் தான் பதறுகிறது
நெருடலின் நீட்சி
நெஞ்சினை
உறுத்துகிறது.
பற்பல காவியங்கள்
எழுதப்பட்ட காப்பியங்கள்
இறைவனையோ அரசனையோ பாடுபொருள் ஆக்கின.
சிலப்பதிகாரமோ
மானுடப் பெண்ணை கற்புக்கரசியாக்கி தெய்வமாக்கி மகிழ்கிறது.
அம் முயற்சியை முன்னெடுக்க
ஒவ்வொரு நாட்டிலும்
கோட்டங்கள் அமைத்து
உயிர்பலி கொடுத்து
தெய்வமாய் வழிபட்ட
நிகழ்வினை
வரிசையாய் குறிப்பிட்டு
தன் பணி முடிக்கிறது.
உரை பெறு கட்டுரை
இளங்கோவின் கைவண்ண மன்று
இடைச்செருகல் என
சான்றோர் ஆய்வு செய்து கூறியுள்ளனரா
எனப் பார்த்தால்
சிலம்புச் செல்வர்
ம. பொ. சி. அவர்களோ
நம்மைப் போன்ற நெருடலுக்கு ஆளாகி
தவறிழைத்தோம் எனத் தெரிந்ததும்
உயர்நீத்த பாண்டிய நெடுஞ்செழியன்
வம்சத்தில் வந்த
பாண்டியன் வெற்றிவேல் செழியன்
தவறிழைக்கா
ஆயிரம் பொற்கொல்லரை
கொன்றிருக்கக் கூடுமோ
என அங்கலாய்க்கிறார்..
சிலம்பபொலி
சு. செல்லப்பன் அவர்களோ
உரை பெறு கட்டுரை பற்றி
இடைச்செருகல் என
ஏதும் கூறிடவே இல்லை.
நெஞ்சில் முள்ளாய் நம் நெருடலின் நீட்சி
நிலைத்து நிற்கிறது.
இருப்பினும் சிலம்பொடு நாம் பயணிப்போம்.
நெருடல் நீங்க
வழியையும் பார்த்திடுவோம்.
No comments:
Post a Comment