Friday, January 31, 2025

கௌரவம்

 கௌரவம்


காம்புக்கு வேறென்ன வேண்டும் கௌரவம்? 

   கருஞ்சிவப்பு ரோஜா பூத்தால் போதும்


பாம்புக்குச் சிறப்பு பரமசிவன் கழுத்து

   பைந்தமிழ்த் தனித்துவம் " ழ " அவ்வெழுத்து


ஆம்பூர் அடையாளம் பிரியாணி, (திரு).சுலைமான்

   ஆளுனர் மாளிகை அழகூட்டும் கலைமான்


வீம்பாம் இக்கவிதையும் படிக்க வைக்கும்

   வெல்லத் தமிழே தருமாம் கௌரவம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

திரிந்து திரிந்து...

 திரிந்து திரிந்து...


பாலைக் காய்ச்சினேன்!திரிந்துவிட்டது!

திரிந்தது தெரிந்தது!

கறந்து பல மணி நேரம் 

ஆகிவிட்டதோ?

குளிர்சாதனம் பாதுகாக்க வில்லையோ? 

காரணம் தேடி

எண்ணங்கள் திரிந்தது!


பாலைக் காய்ச்சி 

உறை ஊற்றினேன்..

தயிராகத் திரிந்தது!

அறிவியல் சொன்னது..

நுண்ணுயிர்கள் பாலில் 

ஓடித் திரிந்து பெருகி 

கக்கிய அமிலம் என்று!



பாலைக் காய்ச்சினேன்! 

காபியானது!

வயிறில் திரிந்தது தெரியவில்லை!

அறிவியல் ஆய்ந்து சொன்னது..

வயிற்றின் அமிலம் 

செய்த சாகசம் என்று!


வாழ்க்கையில்

காட்சிகளும் திரிவது

தெரிகிறது!

ஏன் திரிகிறது?

தெரியவில்லை! 

ஒரே காட்சி என்றால்

சலிப்பாகி விடுமென்றா? 

காரணம் தேடி

மனம் ஓயாமல் திரிந்தது!


திரிந்ததில் 

ஒன்று மட்டும் நன்கு தெரிந்தது..

எல்லாம் திரிந்து விடும்! 

திரிவதைப் புரிந்து ஏற்றுக் கொண்டால்

வாழ்க்கை புதிய வாயில்களைத் 

திறந்து விடும்!

மீண்டும் மீண்டும்

திரிவதற்கே!


- சாய்கழல் சங்கீதா

Thursday, January 30, 2025

தியாகிகள் தினம்

 தியாகிகள்தினம்

----------------

         இன்று


ஒரு நிமிடம் கண்கள் மூடி இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காலை, இமைகளை

உடைத்துப்பீரிட்டுப்

பாய்கிறது நெஞ்சு நிறை

கண்ணீர்!


இவர்கள்

தலை சாய்ந்தாலும்

நம்தலை நிமிர்ந்து

நடப்பது இவரலாறன்றோ!


இவர்கள் சிந்திய இரத்தம் நம்மகளிர்

நெற்றிகளில், குங்கும பொட்டாக, மங்கல சின்னமாக மாறி விட டது.


கத்தியின்றி இரத்தமின்றி இவர்கள்

செய்த யுத்தம்

கல்வீசி சாலை மறியல்

செய்யும் போராளிகளை சற்றே உள்நோக்கி மாற வைத்தால், அது

தியாகிகளுக்கு வருடம்

முழுவதும் செலுத்தும்

அஞ்சலி ஆகும்.


- மோகன்

-----------------------------

தியாகிகள் தினம் (30, ஜனவரி) 


சத்தியம், நேர்மை, வாய்மை அடிநாதமாம்

   சாகும் வரை அதை விடாப் பிடிவாதமும்


இரத்தம் சிந்தா அஹிம்சை இவர் ஆயுதம்

இராமன், ஹரிச்சந்திரா பிடித்த பாத்திரம்


சுத்தும் கைக் கொண்டு நூல் நூற்கும் இராட்டை

சுலபமா வெள்ளையரை விரட்டும் வேட்டை? 


உத்தமராம் காந்தியை நினைவு கூர்வோம்

உடன் நின்ற தியாகிகள் ஒருநாளும்  மறவோம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


Wednesday, January 29, 2025

தேசிய பத்திரிகைகள் தினம்

 தேசிய பத்திரிகைகள் தினம் இன்று

---------------------

ஐனநாயகத்தின் நான்காவது அதிகாரம்

பத்திரிகை/ ஊடகம்.


ஆனால் மற்ற அதிகாரங்களை விட

வலிமை வாய்ந்தது;எழுதுகோல் வாளை விடக் கூர்மை அல்லவா!


"மக்கள் குரலே( தமிழ் பத்திரிகைஅல்ல) மகேசன் குரல்" என்ற ஐனநாயகத்தின் எழுத்து வெளிப்பாடு.


நாம் சுதந்திரக் காற்றை இன்று சுவாசிக்க, அன்றே

ஆங்கில பீரங்கிகளை

எதிர்கொண்ட, எழுதுகோல்களாம், சுடுகலன்கள்!


லஜ்பத் ராய், திலகர், நமது பாரதி போன்ற எழுச்சி,

எழுத்துப் போராளிகளை

நினைவு கூறும் நாள்.


மின்னஞ்சலில் " அட கடவுளே" என்று கூட எழுத நேரமின்றி"omg" எனத் "தட்டிடும்"

இளைய தலைமுறை

காகிதமும் பேனாவும்

கொண்டு எழதப்பழக வேண்டும்.


பழகிப் பாருங்கள் மக்களே!

பிடித்துப்போகும்!


பரிமாண மாற்றங்கள

மனதில் உதிக்கும்.

---------------

எழுத்து வடிவில் எண்ணங்களைப் பதிவு

செய்வதை ஆங்கிலத்

தில் to put in black and white என்பார்கள.

அப்படித்தான் அக்கால பத்திரிகைகள் உணமையை கறுப்பு மை மூலமாக,மையப்படுத்தின.

ஓரிரு "மஞ்சள்" பத்திரிகைகளும் உண்டு!😊

இன்று செய்திகள்

பல்வண்ணங்களில்

தரப்படுகின்றன.

எதை எடுப்பது?

எதை விடுவது?

எங்கள் இளமைக்காலங்களில்

காலையில் பில்டர் காப்பியோடு, ஆங்கிலப் பத்திரிகை படித்து ஆங்கிலமும்

கற்றோம். 

இன்று? பத்திரிகைகளில் கசடு தான் நிறைய; கசடறக்

கற்பது எங்ஙனம்?

நவ 16ஆ்.  ஜன 29 ஆ?

" தினசரிகள்" தானே!

தினமுமே கொண்டாடலாமே!


-மோகன்

---------------------------

பாவம் பத்திரிகை


பத்திரிகை ஊடகம் பொறுப்பு அன்று அதிகம்

   பலருக்கும் செய்திகள் கொண்டு சேர்க்கும்


சத்தியமாய் உண்மைச் செய்திகளே வரும்

   சரித்திரம் படைக்கும், அரசியல் மாறும்

   

கத்தியாய், ஈட்டியாய்க் கட்டுரைகள் வரும்

   கயிற்றின் மிசை நடக்கும், கதிகலங்கும் அரசும்


கத்தும் சேவல், உடன் இது வரத் தொடங்கும்

   காபியும் இதுவும் நல்ஜோடிப் பொருத்தம்


தித்திக்கும் திரைப்படக் கிசுகிசுக்கள் வரும்

   தேநீர்க் கடைகளில் விற்பனையும் கூடும்


குத்தனூர்வாசிக்கும் நாட்டு நடப்புத் தெரியும்

   கொலை, கொள்ளைகள் அங்கும் நிகழும்


மொத்தமும் இன்றோ தலைகீழாம்

   மொபைல் பிடித்தது அதன் இடமாம்


அத்தனையும் இத் தலைமுறை பொய்யே என்னும்

   ICU இல் இருக்குமது எத்தனை நாள் இன்னும்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்


சூடான காபியுடன்

சுடச்சுட பரபரப்பான செய்திகள் அன்று!

சுடுதண்ணீரைக் காலில்

கொட்டியது போல் 

சடாரென்று படபடக்கும் செய்திகள் இன்று!( Tv flash news)

உண்மை செய்திகள் மட்டும் அன்று!

உளறும் செய்திகள் இன்று!

தரம் அன்று தாரக மந்திரம்!

" ரேட்டிங்" ஏற்றுவதே இன்றைய தந்திரம்!


சாய்கழல் சங்கீதா


Tuesday, January 28, 2025

பரவசமூட்டிய பயாஸ் கோப்

★★★★★★★★★★★`★

பரவசமூட்டிய பயாஸ் கோப்

★★★★★★★★★★★`★


தெருவின் முனையில் திரும்புகையிலே

கூவிக் கூவி அழைத்திடுவார்

வண்ண வண்ணமாய் மின்னுகின்ற

பெரிய பெட்டியோடு வந்திடுவார்


பெட்டியின் நடுவினிலே பெரிதாய் இருக்கும்

ஒளிப்பெருக்கி குவி ஆடியொன்று

துட்டு ஓரணா கொடுத்தோர் மட்டும்

களிப்போடு பார்த்திடலாம் காட்சிகளை


எம்.ஜி.ஆரின் சிலம்புச் சண்டை

சிவாஜியின் நவரச நடிப்பு

காதல் மன்னனின் டூயட் பாடல்

கண்டு நாமும் இரசித்திடலாம்.


காட்சிகள் திரையில் வருகையிலே

காமென்ட்ரியும் கொடுத்திடுவார்

சுழன்றடிக்கும் சிலம்பம் பார்

சிவாஜி கண்ணில் பாசம் பார் 


ஜெமினி முகத்தில் சிரிப்பைப் பார்

பத்மினி ஆடும் அழகைப் பார்!

பயாஸ் கோப் பார்த்து இரசிக்க

கூறும் வர்ணனை செவியில் சுழலும்


பார்க்கும் நமது உள்ளமோ மகிழும்

பாரு.. பாரு.. பயாஸ்கோப்பு பாரு

எனும் பயாஸ்காரரின் குரலே சொர்க்கம்

இக்காலக் குழந்தைகட்கு கிடைக்கா அமுதம்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி 

முள்ளும் மலரும்

 பலருக்கு விருப்பம்

 உன்னை அடைய; 

 எனக்கு மட்டுமே உரிமை

  உன்னை காக்க,

   மலரிடம் சொன்னது முள்!


- தியாகராஜன்

முள்ளின் பதில்


மலரது வாய் நெகிழ மணமும் அவிழும்

   மறைந்துள்ளிருக்கும் தேனும் கசியும்


பல கைகள் அதைப் பறிக்க உடன் நீளும்

   பாதுகாக்கும் முள்கள் முனியும், சீறும்


உலவித் திரியும் வண்டோ ஓடோடி வரும்

   உட்கார்ந்து தேனுண்டு உறங்கியும் போகும்


அலரும் கை இப்போது முள்ளோடு வாதிடும்

   "அதனால் நடக்குது இனப்பெருக்கம்" பதிலும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


----------------------------------------

பேச வேண்டியதை மட்டும் பேசு....

மனதிலிருந்து, யதார்த்தமாக பேசு.....

அப்படி பேசினால் நீ பேசும்போது மற்றவர்கள் கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதை தவிர்க்கலாம்.......

😊 சாயி 😊


-----------------

முள் மனசாட்சி


நம்"முள்" தான் இருக்கும்

வழி தவறினால்

முள்ளாகிக்

குத்தும்!

வேலியாம் இதுவே..

மனம் அலைபாயும்

ரோஜா செடி நாமே! 



சாய்கழல் சங்கீதா


Monday, January 27, 2025

*கற்கை நன்றே!*

 π•π•π•π•π•π•π•π•π•π

*கற்கை நன்றே!*

π•π•π•π•π•π•π•π•π•π


பிச்சை புகினும் கற்கை நன்றென

ஔவைப் பிராட்டி அன்றே சொன்னாள்

பச்சை பசேலென வாழ்வு செழிக்க

கற்றலே தேவையென நன்றே சொன்னாள்


வறுமையை விரட்டும் வலிய ஆயுதம்

பெருமையைக் கொணரும் அற்புத அமுதம்

இருள் நீக்கி அறியாமையை விரட்டும்

அருள் திரண்டு ஏழ்மையைத் துரத்தும்


படிப் படியாய் வாழ்வில் முன்னேற

படிப்பு ஒன்றே அடித் தளமாம்

துடிப்போடு நீயும் படித்திட்டால்

அகிலமே உனக்குப் படியுமாம்!


ஆதலால்,


படி படி தம்பி

விடாமல் படி

வெறியோடு படி

படிப்பே உனக்கான

வெற்றிப் படி!!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Sunday, January 26, 2025

நமது குடியரசு தினம்.

 விழைந்தது மலர்ந்தது


குடிக்க நீர் கேட்டுக் கதவைத் தட்டினார்

   கொடுத்த சோறுண்டு சதியும் தீட்டினார்


அடி மடியில் கை வைத்தார் கதையே போலாம்

   ஆங்கிலேயர் நமை அடிமை கொண்டதாம்


வடித்த இம் மண்ணார் கண்ணீர், குருதி

   வான்மழை வருமே அதனினும் மிகுதி


வெடிக்கப் புரட்சி அன்னார் விரைந்தார் தாயகம்

   விழைந்த குடியரசு மலர்ந்த நம் பாரதம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------------------------

நமது குடியரசு தினம்.

-------------------

இந்தியக் குடிமக்கள்

நாம்நெஞ்சை நிமிர்த்தி

தோளோடு தோள் சேர்க்கும் தினம்.


வருடாவருடம் வந்தாலும்

நமது தேசிய உணர்வைத்தூண்டும்

புதினம்.


நமது குழம உறுப்பினர்

யாவரும் இந்தியக் "குடியரசில்" பிறந்த

சுதந்திர சுவாசிகள்👌👏👏

நினைக்கையிலேயே

நெஞ்சம் விம்முகிறது.


"செப்பும் மொழி" பலவாயினும்

"நம்சிந்தை ஒன்று"தானே!


இருகரங்கூப்பி

வணங்குவோம்

நம் பாரத, தாயை!

நம் கரங்களில் எந்த தளையுமின்றி!

- மோகன்


---------------------------------------



Saturday, January 25, 2025

ஏன் வைத்தாய்?

 ஏன் வைத்தாய்? 


எது ஒன்று சொன்னாலும் இந்நாளில் தவறாம்

   ஏன் வைத்தாய் இறைவா, நீ ! இந்த வாயாம்? 


புதிய ஒன்று பேசினால் புரட்சிக்காரனாம்

   புளித்த மாவைச் சுவைத்தே பழகிப் போனதாம்


அதிகம் பேசும் மனிதர் வாயாடியாம்

   அமைதியானவரோ பேசாமடந்தையாம்


பொதுவாகப் பேசினால் புண்ணாகும் மனமாம்

   பொளந்து கட்ட அவரை ஊடகம் பலவாம்


முதுகுப் பின் பேசினால், அஞ்சுகிறேன் என்பார்

   மோனையில் பேசினால் "கவியோ நீ?" கேட்பார்


மெதுவாகப் பேசினால் ஏதோ அது சதியாம் 

   மேடை ஏறிப் பேசினால் அலட்டல் அதுவாம் 


எதிராகக் குரல் கொடுத்தால் என்ன திமிரென்பார்

   ஏனென்று வினவ "புரியாது உனக்கு" என்பார்


அதிரசம் கண்டால் தான் வாய் திறக்க வேண்டும்

   அப்பொழுது தான் இராது மேற்சொன்ன எதுவும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

நமக்கு நாமே நீதிபதி..


முன்னே போனால் முட்டும் என்பார்

பின்னே வந்தால் இடிக்கும் என்பார்

இருந்த இடத்திலே 

இருந்தோம் என்றால்

வாழ்வே வீண் என

கதை அளப்பார்.


இதெல்லாம் இருந்தாலும்

கட்டுப்பாடு சுயமாய் இருத்தலே

வாழ்வது சுகமாய் அமைந்திட நல்வழியாம்.

புலனக் குழுவுக்கும்

இது பொருந்துமாம்.


நன்கு சொன்னீர்

நயம்பட சொன்னீர்


--ஸ்ரீவி

ஏன் வைத்தான்

 அநியாயம் செய்வோரை சாடி

 அன்பு கலந்த சொற்களை கூறி

அழகான தமிழ் மொழியில் பேசி 

 அமைதியைத் தரும் இன்னிசை பாடி

 அகில உலகமும்  சுகிக்கவே வைத்தானோ?


 ஆயுதம் ஏந்தி போர்கள் புரிந்து

 ஆணவத்தாலே ஆக்கிரமிப்பு செய்து

 ஆழ் கடலையும் விட்டு வைக்காமல்

 நீர்மூழ்கி கப்பல் கொண்டு

 ஆரவாரமாய் அழிந்து சாகும் மானுடத்திற்கு ஆதரவாக  பேசி

 அமைதியை புகட்டி 

  அருஞ்சொற்களால் அகக்கண் திறந்து

 தழைக்கவே வைத்தானோ?


 இன்னா செய்தாரையும் ஒருக்க

 இனிமையாய் பேசி சண்டை தவிர்க்க

 இறைவனை போற்றி பூஜிக்க 

இன்பத்தில்  சிரிக்க

 இயலாமையின் போது புலம்ப

 இருகரம் பற்றிய  இல்லத்தாளை  புகழ

 இன் சொற்களால் மகிழ்விக்கவே  வைத்தானோ?


 இன்னும் பற்பல உண்டு உபயோகம்

  இன்றைய இன்றியமையா பணிகள் பல பாக்கியுள்ளது

 ஆதலால்  மீண்டும் தொடரும் என்று கூறி இத்தோடு முடிக்கிறேன்


-ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்


வாய்மையுடன் 

அறிவாய்

துணிவாய் 

பணிவாய்

கனிவாய் 

செறிவாய்

தெளிவாய் 

வாயாரப் பேசவே 

வாய்!!!


வாயால் ...

வாழ்வாய்

வீழ்வாய்

உயர்வாய் 

தாழ்வாய் 

மடிவாய் 

மீள்வாய்

- சங்கீதா



Friday, January 24, 2025

பெண்குழந்தை தினம்

 பெண்குழந்தை தினம் (24, ஜனவரி) 


துள்ளி வரும் நேரம் முயலாம், மானாம்

   துளைத்தெடுக்கும் போது வண்டாம், அம்பாம்


கள்ளமில்லா உள்ளமது பஞ்சாம், பாலாம்

   கழுத்தைக் கட்டும் போது கரும்பாம், கனியாம்


தள்ளி மணம் முடிந்து போகும் அந் நேரம்

   தாரைகளாய்க் கண்ணீர் கொட்டும் வானம்


கள்ளிப் பால் முற்றிலும் வற்றிப் போகட்டும்

   கண்மணியாம் பெண் குழந்தை காக்கப் படட்டும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


---------------------------

பெண் குழந்தை தினம்

----------------------

உறவுகளைப் பாசத்தால்பிணைக்கும்

மலர்க்கொடியாம் பெண் குழந்தை


இறைவன் மனநிறைவோடு இருக்கும் தருணத்தில்

அருளிய வரமாம்


கண்கள கருவண்டாக

சுற்றிச் சுழல, இவர்கள்

பார்த்தாலே பசி தீருமாம்


கால்களின் கழல்கள

கிண்கிணி ஓசை எழுப்பும் இவர்தம்

நடை அழகின் தேரோட்டமாம்


பூவிதழ்கள் சற்றே பிரிந்து உதிர்க்கும்

மழலை ஈன்றோர்

காதுகளில் இன்பத்

தேனைப் பாய்ச்சுமாம்


பெண்ணுக்குப் பெண்ணே யமனாக அமையும்"கள்ளிகள"

மனம்மாறி,"சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மாக்கள் "நிறைய உருவாக

இன்று பிரார்த்தனை

செய்வோமாம்


காத்திருப்போம், காலம் மாறும்!

- மோகன்


தெய்வத்தின் அருள் பெற்றால் பிறப்பது ஆண் குழந்தை (இது அறியாதோர் வாக்கு)........

தெய்வமே குழந்தையாய். பிறப்பது தான் பெண் குழந்தைகள்.....(இது அனுபவித்தவர் வாக்கு)....

😊 சாயி 😊


Thursday, January 23, 2025

வாழிய நேதாஜி சுபாஷ்

 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

23rd Jan/23 ஜனவரி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாரத அன்னையின் கரங்களில்

பூட்டியிருந்த அடிமைத் தளையினை

உடைத்தெறிய சிலிர்த்துக் கிளம்பிய

உன்னதப் போராளி அவன்.

கர்ஜித்துக் கிளம்பிய சிங்கம் அவன்.


புயலெனக் கிளம்பிய அடலேறாய்

சுழன்றடித்த சூறாவளியாய்

கண்ணுக்குக் கண் எடுப்போம்

தோட்டாவுக்கு பதிலடி கொடுப்போம்

என வீர முழக்கமிட்ட தீர தளபதி அவன்


வெள்ளை அரசினைக் கதறவைத்து

ஆதிக்கத்தை அடித்து நொறுக்கிட

இந்திய தேசிய ராணுவத்தை

கட்டமைத்த தானைத்தலைவன் அவன்.


பிரிட்டிஷ் அரசை கதிகலங்கடித்து

தினந்தினம் அவர்களைக் கதறவைத்து

அவர்களுக்கு சிம்ம சொப்பனமாய்

வலம் வந்த புரட்சிப் புயல் அவன்.


அவனைக் கட்டுக்குள் வைக்கவோ

பிடித்து சிறைதனில் வைக்கவோ

சீரிய வழியேதும் தெரியாது

தலைகால் கிஞ்சித்தும் புரியாது

தடுமாறி நின்றது ஆங்கிலேய அரசு


ஆயின் இயற்கையன்னையோ

வேறுவிதமாக நினைத்தாளோ

கொடுங்கோலரசுக்கு உதவினாளோ

ஆள்வோரின் சதிச்செயலோ

என்னதான் நடந்திட்டதோ

எவரும் அறியார் ஏதும் தெரியார்


சுதந்திரம் வந்த எழுபத்தேழு

ஆண்டுகள் உருண்டோடியும்

அரசினால்

உண்மையைக் கண்டறிய  முடியவேயில்லை 

உண்மைக் காரணமும் நமக்குத் தெரியவில்லை.


அந்த வீரமகனின் பிறந்த தினத்தில்

அவனுக்கு வீரவணக்கம் செய்திடுவோம்

நினைவேந்தல் செய்வதோடு

தலைநிமிர்த்தி அவன்புகழ் பாடிடுவோம்.


*வாழிய நேதாஜி சுபாஷ்!*


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


சுயாஷ் சந்திர போஸ்.......

உண்மையா நீங்கதான் பாஸ்.....

இன்னும் யிடியடலை உங்க

கேஸ்....,...ஆனா

எப்பவுமே நீங்கதான் மாஸ்....🙏❤️🙏


தாயின் திதியில்...

 தாயின் திதியில்... 


பையாம் கருவறையில் குடிபுக அனுமதித்"தாய்"

   பத்து மாதக் *குடக்கூலி கேளாமல் மறந்"தாய்"


கை,கால் முளைக்கும் வரை கண்ணிமை போல் காத்"தாய்"

   காலால் உதைத்தேன் களித்"தாய்", கடிந்"தாய்"


வையம் காண விரும்பினேன் ஈன்றெடுத்"தாய்"

   வாய் திறந்து அழுதேன் கண்விழித்"தாய்"


மையிட்டு, மலர் சூடி அழகு பார்த்"தாய்"

   மறக்காமல் நாளும் *கண்ணேறு கழித்"தாய்"


கை பிடித்து எனக்கு நடையும் கற்பித்"தாய்"

   காலில் தண்டை மாட்டிக் கற்பூரமாய்க் கரைந்"தாய்"


தெய்வ பக்தி, தேசபக்தி ஊட்டி வளர்த்"தாய்"

   தேன் கசந்தால் தமிழ் ஒரு தேக்கரண்டி சேர்த்"தாய்"


பைங்கிளி கண்டெடுத்து எனக்கு மணமுடித்"தாய்"

   பட்டான இரு குஞ்சுகள் கனிகள் கொடுத்"தாய்"


தைத் திங்கள், தேய்பிறை, நவமியில் மறைந்"தாய்"

   தாயே! இத்தனைக்கும் தந்தேன் எள்ளும், நீரும்.


*குடக்கூலி_வாடகை

*கண்ணேறு_திருஷ்டி


__  குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, January 22, 2025

தாத்தா தினமாம்

 தாத்தா தினமாம்


மூத்தோர்க்கு அந்நாள் முதலிடம் இருந்தது

   மூலையே இன்று போதும் என்றானது


ஆற்றுப் படுகை போல் அத்துணை அவரிடம்

   அள்ள அள்ளக் குறையா அரிய அனுபவம்


சாத்தனூர் அணை போல் சேமித்து வைப்பார்

  சங்கடம் வரும் நேரம் அளவாகக் தருவார்


ஆத்தா எனைக் கோபித்தால் ஆடிப்போவார்

   அப்பா அடிக்கும்போது அணைத்துத் தடுப்பார்


வாத்து போல் நடந்தும் ஓய்வெடுக்க மாட்டார்

   வாசல் வரை நாளும் வந்து டாடா காட்டுவார்


சாத்தான், பேய் சொல்லிச் சாப்பிட வைப்பார்

   சரியாக ஒன்பது மணி உறங்கச் செய்வார்


பாத்துக் கொண்டிருக்கும் கண்காணிக்கும் கேமரா (CCTV) 

   பழையதை அசைபோடும் பரியா? காளையா? 

   

தாத்தா தினமாம் இன்று ஊரே சொல்லுது

   தனியே தவிக்க விடுது, நாடகம் ஆடுது.


__  குத்தனூர் சேஷுதாஸ்


★०★०★०★०★०★०★०★०★

*ஆனந்தமோ ஆனந்தம்*

★०★०★०★०★०★०★०★०★


அம்மா கைபிடித்து நடப்பதும் ஆனந்தம்

கடைத் தெருவுக்கு போவதும் ஆனந்தம்


தாத்தாக் கடையில்

வாங்குவதும் ஆனந்தம்

கடலை மிட்டாயும் கமர்கட்டும் ஆனந்தம்


தாத்தாக் கொடுக்கும்

கொசுறும் ஆனந்தம்

வாயெல்லாம் இனிக்க மனதெல்லாம் மகிழ


உலகையே வென்ற

பெருமித நடைபோட்டு

வீட்டுக்குத் திரும்புவது

ஆனந்தமோ ஆனந்தம்.


*குறிப்பு: தேசிய தாத்தா தினத்தில் தாத்தாக் கடை நினைவுகளுக்கு அர்ப்பணம்*


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


-------------------------------

தாத்தா

-------

தா, தா என பெயரனோ,பெயர்த்தியோ, எது கேட்டாலும்

வாங்கித்தரும் கற்பகத் தரு, தாத்தா!


மகனோ, மருமகளோ

குழந்தை என்அப்பாவை

உரித்து வைத்திருக்கிறது என்று உரிமைப்போர்

கொடி தூக்க வைக்கும்

தாத்தாக்கள்!



தாம் பணி சுமை காரணமாக, தம்மக்களோடு 

வளரும் பருவத்தில்

நிறைய மனநிறையும் பொழுதுகளைக்கழிக்காத ஏக்கத்தில்

தம் ஓய்வுக்காலத்தில்

தம் பேராண்டிகளைக்

கண் போல் பேணும்

காவல் தெய்வம்.


இன்று ஒரு தினம் மட்டும் இவர்களை

நினைவு கூர்ந்து விட்டு

முதியோர் காப்பகத்தில் "பாதுகாப்பாக" விட்டுச்செல்லும்

இன்றைய சமுதாய நோக்கு மாறினால்

தினமுமே தேசிய தாத்தாக்கள் தினம்தான்!


நம் பூர்வா  'நுழைவாயில் சமூகத்தில்' வசிக்கும்

தாத்தாக்களுக்குப் பல

பெயரன், பெயர்த்திகள்

உறவுகள் ;இரத்த தொடர்பினால் மட்டும்

உருவாவதில்லை.


- மோகன்



Tuesday, January 21, 2025

பூ உதிர்ந்த போது

 தேன் உறிஞ்சிய எந்தத்

தும்பியும் (தேனி) செடியிடம் துக்கம் 

 விசாரிக்க வரவில்லை...

   பூ உதிர்ந்த போது!


-தியாகராஜன்,



ஆயினும் அவைகள் மனிதர்கள் போல் உண்ட வீட்டுக்கு  துரோகம் செய்வதில்லை!

மலரின் காலம் முடிந்தது!

கீழே அதுவும் உதிர்ந்தது!

தானே மண்ணில் 

விழுந்தது!

தேனீக்களுக்கு மனித குணம் இருப்பின்

தேனி உறிஞ்சிய கையோடு 

காம்பைக் கிள்ளி மலரை கீழே தள்ளியிருக்கும்!


ஐந்தறிவு எதுவும் இயற்கையின் சமநிலையை சீர் கெடுப்பதில்லை.. 

ஆறறிவோ...?

- ஸ்ரீவி


தேனை உறிஞ்சிய தேனீ அப்பூவின் மகரந்தத்தை அள்ளிச் சென்று 

சற்று தள்ளிச் சென்று வேறு பூவில் சேர்த்து

அப்பூவின்/ செடியின்  இனம் பெருக உதவியதல்லவா? 

தேனீ 

பரலோகம் செல்கையில் அப்பூவும் செடியும் துக்கம் விசாரிக்கப் போவதில்லை!

இருவரும் எடுத்தனர்! இருவரும் கொடுத்தனர்!

இயற்கையின் நியாயத் தராசு எந்தப் பக்கமும் 

சாய்வதில்லை!

மனிதனும் ஓரிடத்தில் எடுத்தால் அவ்விடம் திருப்பவில்லையெனில் 

வேறு இடத்தில் எடுக்கப்படுமன்றோ!

- சங்கீதா


ஐந்தறிவு இயற்கை வகுத்த கடமையை செய்து வளம் தரும்

ஆறறிவு இயற்கைக்கு கொடுமை செய்யாது இருந்தாலே வளம் கெடாது

- அமுதவல்லி


விசாரிக்காது!

ஏனெனில் 'மகரந்தச்சேர்க்கை'( pollination) செய்ய உதவுவதால் மலருக்கும்/ செடிக்கும்

தேனிகளிடம் உள்ள உறவு பரஸ்பர நன்மைக்காக.

- மோகன்


வண்ண இதழ்களைக் கொண்டு தேனீக்களை ஈர்த்தேன் 

என் இனம் பெருக உழைக்கும் உனக்காக பழரசம் கொடுத்தேன்

உன் இதழ் பட்டதால் தித்திக்கும் பழரசம் சுவை மிகுந்த தேனாக மாறியது 

நீ அடைந்த இன்பத்தை பிறருக்கும் பகிர்ந்தாய் 

ஒரு நாளில் மறையும் எனக்கு உன்னால் ஓங்கும் புகழ் கிடைத்தது

- சுல்தானா


Monday, January 20, 2025

நிறம் மாறும் மனிதா!

 நிறம் மாறும் மனிதா!


எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பாய்

   எல்லா உன் பிள்ளைகள் கான்வென்ட்டில் கற்பார்


சிங்கமென சிறு தானியம் சிறந்ததென முழங்குவாய்

   சிறிது நேரம் கழிய பீஸாவைக் கேட்பாய்


தங்கம் மேல் மோகம் தவிர்க்க வேண்டும் என்பாய்

   தவறாது அதை அட்சயதிருதியில் வாங்குவாய்


பெங்களூரில் உள்ள போது காவிரி தனதென்பாய்

   பேச்சிப்பாறையிலோ மூர்ச்சையாகி விடுவாய்


உங்க வீட்டுப் பிள்ளை என ஓட்டும் கேட்பாய்

   ஓரைந்து ஆண்டுகளும் ஓடி ஒளிவாய்


பொங்கலன்று மட்டும் உழவைப் போற்றுவாய்

   பொன்னான மற்ற நேரம் கிரிக்கெட்டில் மறப்பாய்


திங்களென மங்கையரைக் கவிதையில் வர்ணிப்பாய்

   தினம் தொலைக்காட்சியில் திட்டும்படி சித்தரிப்பாய்


அங்கமெல்லாம் மனிதா ! ஓடுவது குருதியா!

   அடிக்கடி நிறம் மாறும் நீ ! பச்சோந்தியா? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

வீக்கம்

 சாலையில் இருந்த ஸபீட் 

பிரேக்கரைப் பார்த்து, 

“விபத்து நடந்து அடிபட்டு

சாலைக்கு வீங்கிடுச்சா"

கேட்டது குழந்தை!

- தியாகராஜன்


எங்கள் காலத்தில்

பண வீக்கம்

இன்று சாலை வீக்கம்


- மோகன்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

 வாசகம் போட்ட டி- ஷர்ட்

அணிந்தவன்,  ஏடிஎம் *செலக்ட் 

லேங்வேஜில்* தேர்வு செய்தான்

ஆங்கிலத்தை!

- தியாகராஜன்


மேடையில் நீட்டி முழக்கியது

சிறுதானிய உணவின் பெருமை

கூட்டம் முடிந்து சாப்பிடச் சென்றது பீஸா ஹட்


--ஸ்ரீவி

Sunday, January 19, 2025

எருமையின் வாதம்...

 எருமையின் வாதம்... 


நானும் பால் தரேனே எனக்கில்லையே பொங்கல்

   நயவஞ்சக மனிதா! உன் மனதோ செங்கல்


மான் ஏதும் தருகிறதா? மலைத்துப் போகிறாய்

   மணக்குமுன் மங்கையை மான் விழி என்பாய்


தேன் ஒரு துளி வைத்து தீர்மானிக்கிறாய்

   தீந்தமிழும், அதுவும் ஒன்றே என்பாய்


வான் மழை என்றோ பெய்தும் வள்ளல் என்பாய்

   வகுப்பறையில் நீ பிழைத்தால் *வம்புக்கு இழுப்பாய். 


*வம்பு_எருமை மாடே! 


__  குத்தனூர் சேஷுதாஸ்



-----------------------

பாசக் கயிறோடு வருபவனின்

பாசமிகு வாகனம் என்பதால்

பதறிப் போய் ஒதுக்குகிறரோ

பயந்து ஓடி ஒளிகின்றனரோ.


ஒருவேளை தோலின் கருமை

மக்களின் பாராமுகத்தின் காரணியோ

மந்த புத்தி எனும்

எண்ணம் பொதுபுத்தி அதனை ஒதுக்கிட வைத்ததோ?


ஐயோ பாவம் எருமை.

கணேசரின் கடைக்கண் பார்வை பட்டது

அதற்குக் கிடைத்த பெருமை.

- ஸ்ரீவி

Saturday, January 18, 2025

தையலும் தையல் இயந்திரமும்

 ★०★०★०★०★०★०★०★०★०★०★०★

வாழிய வாழிய பெண்ணுரிமை

★०★०★०★०★०★०★०★०★०★०★०★


கணவனை இழந்த கைம் பெண்ணுக்கு

வாழ்வாதாரம் கேள்விக் குறியாம்

பொருளாதாரம் கானல் நீராம்

ஏளனப் பார்வை கூடுதல் சுமையாம்


சுயசார்பு என்றும் பகற் கனவாம்

சுற்றிச் சுழலும் துன்பமே துணையாம்

இந்நிலை மாறி நன்மை

பிறக்க

தையலுக்கு தையல் மெஷினே வழியாம்


சுயதொழில் செய்து பிழைத்திடவே

ஆனையை அடக்கும் அங்குசமாக

தையல் ஊசி உடன் வருமாம்

நூல்கண்டோ சுயபலம் தருமாம்


தையல் மெஷினோடு தேய்ந்தாலும்

தையல் அவளோ தலை நிமிர்வாளாம்

கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து

சமூகத்திற்கே பாடம்

சொல்வாளாம்.


இன்றோ பெண்கள் உலகாள

அன்றைய பெண்களே

அடிநாதம்

ஆணுக்கு நிகராய் பெண்கள் வாழ

பாரதி சொன்ன புரட்சி வாழிய


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்

போற்றுவதுதானே இன்றைய சமூகம்!


வாழிய! வாழிய பெண்ணுரிமை!

வாழிய வாழிய பாரதி கண்ட புரட்சிப் பெண்கள்!!


- ஸ்ரீவி

--- 

தையல் வாழ்க்கை 

------------------------------------

வாழ்க்கை யானை

மதம் கொண்டது

யானையை அடக்க...

ஊசி அங்குசமாக

நூல் சங்கிலியாக

தையல் அவள்

தையல் செய்தாள்

முகபடாம் கொண்டது யானை

பிள்ளைகளுக்கு..

வாசிக்க 

நூல் தந்தாள்

ஊசிக்கு

படிக்க வைத்தாள்

பழமை பூட்டுடைத்து

புதுமை பூண் செய்தாள்

புதியதோர் உலகம் செய்தாள்


-அமுதவல்லி


--------------------

தையலும் தையல் இயந்திரமும்

-----------------

தையல் என்றால் பெண் என்று  ஒரு பொருள்.

இணைப்பு என்று ஒரு பொருள்.


பெண் பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் இணைக்கும் பாலமன்றோ!


என்ன பெயர்ப்பொருத்தம்!


தையலுக்கு உதவும்

இயந்திரம்' தையல் மெஷின்'!


விதவை என்ற சொல்லில் கூட பொட்டுக்கள் இல்லை;

கைம்பெண் என்ற்சொல்லாவது இரண்டு பொட்டுக்களை

கொண்டிருக்கிறது!


கைம்மை நிலை  ஆடை, உணவு, புறஅழகு என மூன்று நிலைகளைப் பாதிக்கும்.


ஒருவனுக்கு ஒருத்தி

என்ற சங்க கால வழக்கத்தில் தலைவனை இழந்த  தலைவி,வைதவ்யம் கடைப்பிடிப்பது ஒரு முக்கியமான கடமையாக, கருதப்பட்டது. 


காலப்போக்கில், கைம்பெண்கள்

துரதிருஷ்டத்தின் சின்னமாக, கருதப்பட்டனர்.


என்னே கலாசாரத்தின்

சீரழிவு!


இன்று  கணவனை இழந்த பெண்களுக்கு,உணவு, உடை/ அணிகலனகள், அழகு/ஒப்பனை போன்றவற்றில் எந்த 

கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை,

சமூகத்தால்.


மறுமணம்

புரியத் தடை இல்லை.


சொந்தக்கால்களில்

நிற்க, தையல் இயந்திரமோ, 'லிஜ்ஐத்'

அப்பளங்களோ துணை புரிகின்றன. 


கால்களால் மிதித்து இயக்கும் தையல் மெஷின் அப்பெண் தன்சொந்தக் கால்களில் நிற்க உதவுகிறது!


ஆண்களுக்கு உண்டோ வைதவய நிலை?


தொல்காப்பியம்

'தபுதார நிலை' என்று கூறுகிறது, விதவன்( விதவையின் ஆண்பால்) பற்றி.


ஆனால் அவருக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை- அப்போதும், இன்று வரையிலும்.


 நம்ம பாரதி அப்போது இல்லையே,  கைம்பெண்டிருக்காக,

குரல் எழுப்ப!


- மோகன்

----------

கைமா மிசை கைம்பெண்


கையில் குழந்தை கைம்பெண் ஆனாள் ஒருத்தி

   காரணம் அரசுக் கொடை சாராய அருவி


மையாய், மதயானையாய் எதிர்காலம் முன்னே

   மடிய வேண்டியது தானோ நீ ! பெண்ணே! 


செய்வதறியாது திகைத்தாள், உறைந்தாள்

   தேம்பித் தேம்பியும் அழுதாள், கரைந்தாள்


உய்ய வேண்டும் என்ற உத்வேகம் உதித்தது

   ஒளிக்கதிர் ஒன்று வழியும் காட்டியது


தையல் அன்று கற்றது நினைவில் வந்தது

   தவறாது உதவிக் கரம் அவள் முனே நீட்டியது


*கைமா தையல் எந்திரம், இவள் இராணியாம்

   கத்தரிக்கோல், ஊசி அங்குசங்களாம்


நைந்த, பிய்ந்த ஆடை தைக்கத் தொடங்கினாள்

   நம்பிக்கை வலுக்க புத்தாடை குவிந்தன


ஐயன் நம் திருவள்ளுவன் அன்றே சொன்னது

   அதுதான் "முயற்சி திருவினை ஆக்கும்" என்பது. 


*கைமா -- யானை


__  குத்தனூர் சேஷுதாஸ்


---------------

மதம் கொண்ட யானை போல்.....

சதம் ஆண்கள் பெண்களை.......

நிதம் இங்கு நசுக்க.....அதை

வதம் செய்ய புறப்பட்டாளோ......

இந்த தையல்.....

(வக்கிரமான செயல்களை தைத்து சீர் செய்ய!)

😊 சாயி 😊

Thursday, January 16, 2025

ஐயன் வள்ளுவன் தாள் பணிந்துப் போற்றிடுவோம்!

 ★●★●★●★●★●★●★●★●★●

ஐயன் வள்ளுவன் தாள் பணிந்துப் போற்றிடுவோம்!

★●★●★●★●★●★●★●★●★●


௳லகப் பொதுமறை தந்திட்ட

உத்தமனாம் வள்ளுவதேவன்

உலகம் உய்யவே நம்மிடையே

உதித்திட்ட நந்நாள் தானிது..


அகம் பொருள் இன்ப மென

முப்பாலை முத்தான தமிழிலே

தெளிதேனுடன் கலந்தளித்த

அய்யன் தோன்றிய தினமிது..


ஐயன் வள்ளுவனின் தாள்

பணிந்துப் போற்றிடுவோம்..

தமிழ் நாட்டின் பெருமைபேண

சபதம் நாமும் ஏற்றிடுவோம்.!


விழிப்புடன் நாம் இருந்திடுவோம்

துடிப்புடன் தமிழ் காத்திடுவோம்

வந்தாரை வரவேற்போம் ஆயினும்

தமிழை அடக்கியாள அனுமதியோம்!


எத்திசையும் தமிழ்மணக்கச் செய்திடுவோம்

எக்கணமும் தமிழோசை ஒலிக்கச் செய்வோம்

தெக்கணமும் அதிற்சிறந்த நம் தமிழ்நாடும்

எப்போதும் வான்புகழ் கொள்ள வழிவகுப்போம்.


பிறப்பால் அனைவரும் ஒன்றெனச் சொன்ன

ஐயன் வள்ளுவனை நினைவில் நிறுத்தி

வாழிய வள்ளுவன் புகழ்!

வளர்க தமிழ்த் திருநாடு!!

என்று நாமும் முழங்கிடுவோம்..


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

Wednesday, January 15, 2025

காணும் பொங்கலில்...

 காணும் பொங்கலில்... 


சாணம் தெளித்த வாசல் கோலங்கள் மின்னட்டும்

   " சரியான போட்டி " என வீரப்பா வியக்கட்டும்


காணும் பொங்கல் இன்று கொண்டாடப் படட்டும்

   கயிறாம் உறவுகள் இன்னும் இறுகட்டும்


வேணும் வேணும் என்பார்க்குச் செல்வம் சேரட்டும்

   வீட்டின் கூரையதைப் பிய்த்துக் கொட்டட்டும்


ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கட்டும்

   அஸ்திவாரம் குடும்பத்தின் வலிமை கூடட்டும்


மூணேனும் பிள்ளைகள் இல்லமதில் பிறக்கட்டும்

   முதிய பெற்றோரருகில் யாரேனும் இருக்கட்டும்


நாணும் மலர்களாம் நம்மிடையே பெண்கள்

   நல்லதொரு தோழனாய் ஆணும் பழகட்டும்


தூணாக அங்கங்கே அறம்சார் அன்பர்கள்

   தூக்கிப் பிடிக்க இச் சமுதாயம் நிற்கட்டும்


காணும் இடமெல்லாம் தீந் தமிழே தெரியட்டும்

   கம்பன் பல முளைக்கட்டும், கவிதைகள் பூக்கட்டும்


__  குத்தனூர் சேஷுதாஸ்

இன்று மாட்டுப் பொங்கல்

 இன்று மாட்டுப் பொங்கல்


வேளா வேளை நாம் உண்ணும் உணவது

   வியர்வையால் வருவது, உழவு ஈவது


காளைகள், பசுக்கள் கட்டாயம் காரணிகள்

   கண் முனே கடவுளென தொழுதார் முன்னோர்கள்


தோள் கொடுக்கும் அவைகளைக் குளிப்பாட்டுவார்

   தூபம் காட்டி வணங்குமுன் அழகூட்டுவார்


மூளை முழுதுமான வள்ளுவன் போற்றிய தொழில்

   முன்னோர் அடியொற்றி இன்று மாட்டுப் பொங்கல். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


----------------

👍🙏

பசு என்ற சொல்லுக்கு

உயிர்(கள்) என்ற பொருளும் உண்டு.

பசுக்களின் மீது பாசம்

வைப்போம்; நேசிப்போம்;பாதுகாப்போம்.


இன்று சகோதர நலம்

வேண்டும் 'கனு' பொங்கலாகவும் சிலர்

கொண்டாடுவதும்

உண்டு.


அலங்கார இலக்குமிகளாக ஆநிரைகள் கழுத்தில்

கிண்கிணி மணிகள்

ஒலிக்க, பசுக்காவலர்கள் பெருமிதமாக , பின்னே 

ஓடி வர இவை வீடு வீடாக நின்று 'வந்தனம்'

பெற்று ,தலையாட்டி மகிழ்ந்து ஓடும் காட்சிகள் கண் முன்னே.

"வள்ளல்  பெரும் பசுக்கள்"

வணங்குவோம்.

--மோகன்

Tuesday, January 14, 2025

பொங்கலோ பொங்கல் (2025)

 பொங்கலோ பொங்கல்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


அன்பும் அறமும் பொங்கட்டும்

ஆயிரம் நன்மைகள் பெருகட்டும்

இல்லறம் எல்லாம் தழைக்கட்டும்

ஈகை குணமும் ஓங்கட்டும்

உலக முழுதும் செழிக்கட்டும்

ஊரே உம்மை மெச்சட்டும்

எளியோர் வாழ்வு செழிக்கட்டும்

ஏழைகள் நிலையும் உயரட்டும்

ஐம்பெரும் பூதங்கள் உதவட்டும்

ஒப்புரவு  ஓங்கி வளரட்டும்

ஓரணியில் உலகம் உய்யட்டும்

ஔடதமாய் அறநெறி இருக்கட்டும்


உலகின் உயிர்நாடி செங்கதிரை

உழவர் ஒன்றுகூடி வாழ்த்தட்டும்

கறந்த பாலும் கட்டி வெல்லமும்

களிப்பு தர பச்சரிசியோடு

பொங்கலாய் இங்கே பொங்கட்டும்

செங்கரும்பு தேனாய் இனிக்கட்டும்

பொங்கலோ பொங்கல் எனும்

ஆனந்த முழக்கம் விண்ணை சென்று முட்டட்டும்!


அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி



-------------------------

பொங்கலோ பொங்கல்


பனிநிரை மார்கழி "தை"க்கு வழி விட்டது

   பகலவன் வடக்கு நகர் உத்தராயணமிது


கனியாம் வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி

   காரிகைகள் கோலங்கள், பானை, பச்சரிசி


தனித்தமிழ் தாய்மொழியாம் தமிழினமாம்

   தரணியில் எங்கிருந்தும் கொண்டாடுமாம்


இனிய பொங்கல் இதோ பொங்கி வழியுதாம்

   இல்லங்கள், வீதிகளில் "பொங்கலோ பொங்கலாம்".


__  குத்தனூர் சேஷுதாஸ்


பூர்வாவில் பொங்கல் இன்று


கரும்புகள் முக்குழுவாம் காவலாய் நின்றன

   கழுத்தில் மஞ்சளோடு பானைகள் இருந்தன


துருதுருவென சேலையில் பெண்கள் இயங்கினர்

   தொப்பையோடு தயாரானார் இராஜவிநாயகர் 


முருகதாஸ் ஐயாவின் மேற்பார்வையிலாம் 

   மூன்று வித பொங்கல் எலாம் வழிந்தனவாம்


அருமையான வெண்பொங்கல், வெல்லப் பொங்கல், 

   அது மட்டுமா? இன்னும் கற்கண்டுப் பொங்கல். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-----------------------------

வீதியெல்லாம் கரும்புக் கூட்டம் கண்ணைச் சிமிட்டுதுங்க!

வீட்டிற்கு வாரேன்னு

வம்பு செய்யுதுங்க! 

உங்க வாழ்க்கையில

இனிப்பைக் கொட்டுவேன்னு

சத்தியம் செய்யுதுங்க!

கதிரவனுக்கு நன்றி

சொல்ல கிளம்பி

வந்ததுங்க!


மஞ்சள் கொத்தும்

மணக்க வாரேன்னு 

அன்பா கேட்குதுங்க!

மங்கலம் பொங்கச்

செய்வேன்னு 

மனசார சொல்லுதுங்க!


மாவிலையும் ஆவாரம் பூவூம் வாசலில் தொங்குதுங்க!

இனிப்புப் பொங்கல்

சாப்பிடத்தான் 

மனசு ஏங்குதுங்க!


பொங்கலோ பொங்கல்!

குக்கரில் விசில் வந்தாச்சு!

பொங்கலோ பொங்கல்!


அச்சு வெல்லம் பச்சரிசி

பொங்கலாச்சுங்க!

நெய்யில் வறுத்த

முந்திரி திராட்சை

சுவையைக் கூட்டுதுங்க!


அனைவருக்கும் இனிய பொங்கல்

நல்வாழ்த்துகள்!


தை மகளே வருக!

நலமே என்றும் தருக!


- சாய்கழல் சங்கீதா

--------------------------

உன்னதமான உழவர் திருநாள்.

பொங்கிடும் பொங்கல் போல்

உங்களிடம் மகிழ்ச்சி தங்கட்டும்.

சாத்திவைத்த கன்னல்போல்

உங்கள்வாழ்வில்

இனிமை கூடட்டும்.

கட்டிவைத்த மஞ்சள்போல்

உங்கள்வாழ்வில் 

மங்கலம் சேரட்டும்.

போட்டுவைத்த கோலம்போல்

உங்கள்வாழ்வில் 

முன்னேற்றம் நிறையட்டும்.

தொடுத்துவைத்த தோரணம்போல்

உங்கள் வாழ்வில் 

நன்மைகள் தொடரட்டும்.

இலை அமர்ந்து சிரிக்கும் இனிப்பைப்போல்

உங்கள் வாழ்வில்

மகிழ்வு பெருகட்டும்.

தைத்திங்கள் நன்னாளில்

வாழ்த்திடும் என்னோடு உங்கள் நட்பு இறுகட்டும்.


..அன்புடன்

சா.இராசா முகமது


-----------

தமிழர் ,உழவர் பெருமக்களைப்

போற்றிக் கொண்டாடும்

பொங்கல் திருவிழாக்கள்.


பல பாரம்பரியங்களையும்

வாழையடி வாழையாகப்

போற்றி நன்றியும்

கூறும் நிகழ்வுகள்.


உலகில் உயிர் வாழ உணவு தேவை. 


வான்மழை, நீர், மண்,உழவர் பெருங்குழாம் மற்றும்

ஆநிரைகள் கூட்டணி

உணவை உற்பத்திசெய்து உயர்களை உய்விக்கின்றன.


போகிப் பண்டிகை

மழைத்தேவதையைப்

போற்றி நன்றி கூறும் நாள்.

அறுவடைகள் முடிந்து

உழைப்பின் பலனை

கொண்டாடும்போது

பழையன கழித்து சுற்றத்தாரொடு கூடி மகிழ சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கும் நாளும்போகித் திருநாள்தான்.


வெளிக்குப்பைகள் மற்றும் மனக்குப்பைகளை

அகற்றி புதிய ஆண்டைப் புத்துணர்வோடு

எதிர் கொள்ள செய்யும்ஏற்பாடுகள்.


(இது எப்படி திரிந்து 

ஓலைகளுக்குப்பதில்

எழுத்தோலைப்  போன்ற பொக்கிஷங்களையும்

இரப்பர் சக்கரங்களயும் எரித்துக்

'குளிர்' காயும் நிகழ்வாயிற்று?)


ஒரே புகை  மூட்டம்

ஆதவனுக்கு இரட்டிப்பு வேலை!


பொங்கல்திருநாள்

உழவர் கூட்டத்தையும்

'நம்' மண்ணில் விளைந்த தானியங்கள் மற்றும் காய்கனிகளைப் போற்றி மண்பானைகளில் பொங்கல் பொங்கி'பொங்கலோ பொங்கல்' எனக் குலவையிட்டு நமக்கு ஒளி தந்து வழி நடத்தும் பரிதிக்குப் படையலிட்டும் மகிழும

நாள்.


உழவர் குடும்பங்களின் அங்கங்களாகத் திகழ்பவை பசுக்களும், காளைகளும் மற்றும் எருமைகளும். 

அவற்றைக் குளுப்பாட்டி அலங்காரங்கள்செய்து

அணிகள் பூட்டித் 'தாயினும் சாலப் பரிந்து உபசரிக்கும்

நாளே மாட்டுப்பொங்கல்..

சகோதர நலன் வேண்டி சகோதரிகள்

காக்கை, குருவிகளுக்கு உண்ண பொங்கலைப் 'பிடி' வைக்கும் கனுப்பொங்கலாகவும்

கொண்டாடப்படுகிறது.

'உழந்தும் உழவே தலை' எனப்போற்றிய அய்யனை நினைவு கூறாமல் விழா கொண்டாடுவது முறையா?திருவள்ளுவர் தினம் அன்று அவரைப் பணிந்து நினைவு

போற்றுகிறோம்.


பண்டைய நாட்களில்

அவரவர் இல்லங்களில்

விழாக்களை கொண்டாடி முடித்து

ஏர் பூட்டி உழுத மக்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் 

சென்று உற்றத்தையும்

சுற்றத்தையும்'கண்டு கொள்ள 'சென்று இருப்பர் போலும்.

(இன்று காணும் பொங்கலாகத்திரிந்து

கடற்கரைகளை மாசுபடுத்தும் நாளாக மாறிவிட்டது.)


இந்த உழவர் திருநாள் விழாக்கள்

நம்தமிழரின் இயற்கையோடு ஒன்றி ,

ஒட்டி வாழ்வது, நன்றி போற்றுவது, சுற்றுச்சூழலைகண்போலப் பாதுகாப்பது

எனப் பல நற்பணபுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன.


-மோகன்


Monday, January 13, 2025

போகித் தீயும் தமிழ்த் தாத்தாவும்

 ★●★●★●★●★●★●★●★●★●★●★

போகித் தீயும் தமிழ்த் தாத்தாவும்

★●★●★●★●★●★●★●★●★●★●★


பழையன கழிதலும் புதியன புகுதலும்

போகிப் பண்டியின் அடிநாதமாம்

தேவையற்ற பழையனவற்றை

தீக்கிரையாக்கி அழிப்பது வழக்கமாம்


தமிழ்த் தாத்தா உ.வே.சா என்பார்

இன்பந்தரும் இலக்கியச் சுவடிகளை 

தேடியலைந்து சேகரித்த காலமதில்

சுவடிகள் இருந்த விலாசத்தைப் பெற்றார்.


காடு கழனி மேடு பள்ளம்

எல்லாம் அலைந்து உழன்று

ஓலைச் சுவடிகளைத் தேடியவர்

பொக்கிஷம் கிடைத்த மகிழ்வில் திளைத்தார்


பலகாத தூரம் பயணம் செய்து

மார்கழி மாத கடைசி நாளில்

சுவடிகளிருந்த வீட்டினை அடைந்தார்

சுவடிகள் வேண்டி வாசலில் நின்றார்.


கற்பூர வாசனை அறியா மூடர்

சுவடிகள் இருந்த வீட்டுக் காரர்

தேவையற்ற குப்பை கூளமே

ஓலைச் சுவடிகள் என்றுரைத்தார்


கருக்கலில் வந்து வாசலில் நின்ற

உ.வே.சா-வை ஏசி விரட்டினார்

விடியலில் ஏற்றப் போகும் தீயில்

விறகோடு சுவடி எரியுமென மிரட்டினார்


குடும்ப வழக்கம் அதுவே என்றார்

இறைஞ்சிக் கேட்டாலும் தர மறுத்தார்

மார்கழி மாத பின்பனிக் குளிரில்

தெருவிலே உ.வே.சா தவமிருந்தார்.


விடியலில் ஏற்றிய போகித் தீயில்

சுவடிகள் வந்து விழுந்ததைப் பார்த்தார்

தாவிச் சென்று தீக்குள் கைகள் விட்டு

சுவடிகள் எல்லாம் மீட்டு எடுத்தார்.


உடலெல்லாம் தீப்பொறியின் எச்சங்கள்

உள்ளம் முழுதும் மகிழ்வின் உச்சங்கள்

ஐம் பெருங் காப்பியங்களும்

ஐங் குறுங் காப்பியங்களும்

உலகிற்கு கிடைத்த மிச்சங்கள்.


திருக்குறள் சுவடிகளை அடுப்பெரிக்க

எரித்தழித்த மூடர் உலகமதில்

தமிழ் மொழியை சீர் குலைக்க 

நடந்த சதிகளில் அழிந்தது ஏராளம்


தமிழ்த் தாத்தா விடா முயற்சியில்

தமிழுலகிற்கு கிடைத்தது சில மீதம்

போகிப் பண்டிகை என்றாலே

குறு மதியாளரின் சதிச் செயலே


நம் மனங்களில் வந்து நிற்கிறது

இனி வரும் நாட்களில் தமிழரெலாம்

சிறு மதியாளர்களின் எண்ணங்களை

போகித் தீயில் இட்டு பொசுக்குவோம்


செம்மொழியாம் நம் மொழியை

சீர்குலைக்கும் முயற்சிகளை நசுக்குவோம்!


போகி நல் வாழ்த்துகள்!


குறிப்பு: தமிழ்த் தாத்தா உ.வே.சா பற்றி எனது 'புதிய ஆத்திசூடிக் கதைகள்' (பாகம் 2) நூலில் 108-ஆம் தலைப்பான 'புதிய வேதம் செய்' என்ற கதையினில் எழுதியுள்ளேன்.


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Sunday, January 12, 2025

தேசிய இளைஞர் தினம்:

 தேசிய இளைஞர் தினம்:

********

அன்னியன் ஆட்சியில்

அடக்கப்பட்ட இந்து

மதம் தனை அந்நிய நாட்டிலேயே சென்று

அவன் மொழியிலேயேஇந்து மதப்பெருமைகளைப்

பரக்க , உரக்கப்பேசி

வையம் அறியச்செய்தவர்,

ஊடகங்கள் உதவி இன்றி.


""எழுமின் விழிமின்

என உறங்கிக் கிடந்த

இளைஞர்களை உசுப்பி எழச் செய்தவர்


அவர் உலகு உய்ய உதித்த 12 ஆம் திங்கள் ஜனவரி, தேசிய இளைஞர்

தினமாக, கொண்டாடப்படுகிறது


39 வயதில் பூத உடலை விடுத்து, புகழுடம்பை அடைந்த

என்றும் இளமையுடன்

திகழ்ந்து அறிவையும்

ஆனந்தத்தையும் ஊட்டும் அமர இளைஞர்.


நம்ம சென்னைக்கு ஒரு பெருமை-

அவர் வெளி நாடு செல்ல உதவியது தமிழர்களே. 

அந்த நன்றி பாராட்டி

அவருடைய அகில வெற்றிப்பயணம்

முடிந்ததும் சென்னை வந்தார்.

அதன் நினைவாக

சென்னைக் கடற்கரையில் விவேகானந்தர் இல்லம்

கம்பீரமாக அமைந்திருக்கிறது.


உன்னை அகழ் உன்னை உணர்வாய்

உன்வலிமை உனக்குத்

தெரியும் என்று இளைஞர்களுக்கு

அவர்கூறியது

இன்றைய இளஞைர்

குழாம் உளமேற்கொண்டு

பின்பற்ற வேண்டிய

தலையாய அறிவுரை.


பெண்ணுரிமை, மன வலிமை என்பன போன்ற பல  கொள்கைகளில்

ஸ்வாமி விவேகானந்தருக்கும்

மகாகவி பாரதிக்கும் ஒற்றுமைகள் பலப்பல.

மிக்பெரிய ஒற்றுமை

இருவரும் இளம்வயதிலேயே மறைந்தனர். ஒருவர் அமர சன்னியாசி; மற்றவர் அமரகவி.

இறைவனுக்கும் இளைஞர்களை மிகவும் பிடிக்கும் போலும்!

ஒரே வேற்றுமை-

அவர் காவி முண்டாசு

அணிந்தார்

இவர் வெள்ளை முண்டாசு!


- மோகன்

Monday, January 6, 2025

செருக்குடன் சொல்வேன்...

 செருக்குடன் சொல்வேன்... 


கொம்பனாம் நேற்றவர் இன்றில்லையானார்

   குவலயத்தின் பெருமை ஈதென்றார் வள்ளுவர்


கம்பனும், பாரதியும் காணாமல் போனார்

   கண்ணதாசன், வாலி அவ்வாறே ஆனார்


தம் மொழியை இவர்கள் தாயாய் கொண்டாடினார்

   தமிழர்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்


செம்மொழி நம் தமிழைச் சிரமேற் கொண்டேன்

   செருக்குடன் சொல்வேன் நானும் வாழ்வேன். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, January 1, 2025

ஆங்கிலப் புத்தாண்டு (2025)

 ★●★●★●★●★●★●★●

புதிய ஆங்கிலப் புத்தாண்டு

நல் வாழ்த்துகள்

★●★●★●★●★●★●★●


காலமகள் எனும் 

கற்பக விருக்ஷத்தின்

இன்னொரு பழுத்த கனி 

உதிரப் போகிறது.


நற்கனியாய் 

உருவெடுக்க 

புதிய பூ ஒன்று 

முகிழப் போகிறது.


முகிழும் அம்மலரை

முகமன் கூறி

வரவேற்று அகிலமே

மகிழப் போகிறது


கால ஓட்டத்தில் 

கனக மழையும்

கடின நிலையும்

மாறி மாறி வருதல் இயற்கையே


புதிய பூ மலர்கையில்

மாந்தர் எலாம்

மகிழ்ச்சியுறுவதும்

உலகின் 

வழி முறையே


உதிரும் கனியாம்

2024~ம் வருடத்துக்கு

நன்றி கூறி 

விடை கொடுப்போம்

உளச் சுத்தியோடு.


மலரவிருக்கும் பூவாம்

2025~ம் வருடத்துக்கு

வாழ்த்துரைத்து

வரவேற்போம்

மன மகிழ்வோடு


முகிழும் புதுமலராம் 

இப்புத்தாண்டில்

மனிதம் தழைக்கட்டும்

அன்பு பெருகட்டும்

அறம் நிலைக்கட்டும்

அமைதி தவழட்டும்


அனைவருக்கும் இனிய

ஆங்கிலப் புத்தாண்டு

நல் வாழ்த்துகள்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


--------------------

இனிய புத்தாண்டு 2025

புத்தம் புது வருடம்! 

தொலைக்காட்சி சோதிடர்களின் பரபரப்பான ஆரூடம்!

என்ன பலன் என்றாலும்

வருடம் பறக்கும்!

முயற்சியுடையாருக்கே  வெற்றிக் கதவுகள் திறக்கும்!


வேண்டாத சிந்தனைகளைப்  புறந்தள்ளி...

நன்மைகளை மட்டும் அதிகம் அள்ளி..

ஒவ்வொரு வினாடியும் வாழ்வோம் !

புது வருடத்தை முழுவதுமாய் துய்ப்போம்!


கடந்த வருடங்களோ அனுபவம்!

புதிய வருடமோ வைபவம்!  

புதிய வருடம்!

புதிய வாய்ப்பு!

சிரிக்க.... சிறக்க...


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐


- சாய்கழல் சங்கீதா

-----------------------

“2025”

இனியப் புத்தாண்டில்

இல்லாமையொழிந்து

இழிச்சொற்களகன்று

இச்சைகள் குறைந்து

இடர்பாடு இன்றி

இருள் வாழ்வு நீங்கி

இனிமைகள் நிறைந்து

இதைக்காண்போரனைவரும்

இறையருள் பெற்று

இன்புற்று வாழ்க.💐👏

..சா.இராஜா முகமது

-------------------

புத்தாண்டே வருக

புதுமைகள் தருக

புன்னகை நல்க


அன்பு பொங்கட்டும் 

அறம் பெருகட்டும் 

அறிவு வளரட்டும் 


வெறுப்புகள் மறைய

நலம் பெருக

வளங்கள் நிறைய


புத்தாண்டே வருக

வாழ்வில் ..

மலர்ச்சியே தருக!!!

- அமுதவல்லி


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...