★●★●★●★●★●★●★●★●★●★●★
போகித் தீயும் தமிழ்த் தாத்தாவும்
★●★●★●★●★●★●★●★●★●★●★
பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகிப் பண்டியின் அடிநாதமாம்
தேவையற்ற பழையனவற்றை
தீக்கிரையாக்கி அழிப்பது வழக்கமாம்
தமிழ்த் தாத்தா உ.வே.சா என்பார்
இன்பந்தரும் இலக்கியச் சுவடிகளை
தேடியலைந்து சேகரித்த காலமதில்
சுவடிகள் இருந்த விலாசத்தைப் பெற்றார்.
காடு கழனி மேடு பள்ளம்
எல்லாம் அலைந்து உழன்று
ஓலைச் சுவடிகளைத் தேடியவர்
பொக்கிஷம் கிடைத்த மகிழ்வில் திளைத்தார்
பலகாத தூரம் பயணம் செய்து
மார்கழி மாத கடைசி நாளில்
சுவடிகளிருந்த வீட்டினை அடைந்தார்
சுவடிகள் வேண்டி வாசலில் நின்றார்.
கற்பூர வாசனை அறியா மூடர்
சுவடிகள் இருந்த வீட்டுக் காரர்
தேவையற்ற குப்பை கூளமே
ஓலைச் சுவடிகள் என்றுரைத்தார்
கருக்கலில் வந்து வாசலில் நின்ற
உ.வே.சா-வை ஏசி விரட்டினார்
விடியலில் ஏற்றப் போகும் தீயில்
விறகோடு சுவடி எரியுமென மிரட்டினார்
குடும்ப வழக்கம் அதுவே என்றார்
இறைஞ்சிக் கேட்டாலும் தர மறுத்தார்
மார்கழி மாத பின்பனிக் குளிரில்
தெருவிலே உ.வே.சா தவமிருந்தார்.
விடியலில் ஏற்றிய போகித் தீயில்
சுவடிகள் வந்து விழுந்ததைப் பார்த்தார்
தாவிச் சென்று தீக்குள் கைகள் விட்டு
சுவடிகள் எல்லாம் மீட்டு எடுத்தார்.
உடலெல்லாம் தீப்பொறியின் எச்சங்கள்
உள்ளம் முழுதும் மகிழ்வின் உச்சங்கள்
ஐம் பெருங் காப்பியங்களும்
ஐங் குறுங் காப்பியங்களும்
உலகிற்கு கிடைத்த மிச்சங்கள்.
திருக்குறள் சுவடிகளை அடுப்பெரிக்க
எரித்தழித்த மூடர் உலகமதில்
தமிழ் மொழியை சீர் குலைக்க
நடந்த சதிகளில் அழிந்தது ஏராளம்
தமிழ்த் தாத்தா விடா முயற்சியில்
தமிழுலகிற்கு கிடைத்தது சில மீதம்
போகிப் பண்டிகை என்றாலே
குறு மதியாளரின் சதிச் செயலே
நம் மனங்களில் வந்து நிற்கிறது
இனி வரும் நாட்களில் தமிழரெலாம்
சிறு மதியாளர்களின் எண்ணங்களை
போகித் தீயில் இட்டு பொசுக்குவோம்
செம்மொழியாம் நம் மொழியை
சீர்குலைக்கும் முயற்சிகளை நசுக்குவோம்!
போகி நல் வாழ்த்துகள்!
குறிப்பு: தமிழ்த் தாத்தா உ.வே.சா பற்றி எனது 'புதிய ஆத்திசூடிக் கதைகள்' (பாகம் 2) நூலில் 108-ஆம் தலைப்பான 'புதிய வேதம் செய்' என்ற கதையினில் எழுதியுள்ளேன்.
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment