பொங்கலோ பொங்கல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்பும் அறமும் பொங்கட்டும்
ஆயிரம் நன்மைகள் பெருகட்டும்
இல்லறம் எல்லாம் தழைக்கட்டும்
ஈகை குணமும் ஓங்கட்டும்
உலக முழுதும் செழிக்கட்டும்
ஊரே உம்மை மெச்சட்டும்
எளியோர் வாழ்வு செழிக்கட்டும்
ஏழைகள் நிலையும் உயரட்டும்
ஐம்பெரும் பூதங்கள் உதவட்டும்
ஒப்புரவு ஓங்கி வளரட்டும்
ஓரணியில் உலகம் உய்யட்டும்
ஔடதமாய் அறநெறி இருக்கட்டும்
உலகின் உயிர்நாடி செங்கதிரை
உழவர் ஒன்றுகூடி வாழ்த்தட்டும்
கறந்த பாலும் கட்டி வெல்லமும்
களிப்பு தர பச்சரிசியோடு
பொங்கலாய் இங்கே பொங்கட்டும்
செங்கரும்பு தேனாய் இனிக்கட்டும்
பொங்கலோ பொங்கல் எனும்
ஆனந்த முழக்கம் விண்ணை சென்று முட்டட்டும்!
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
-------------------------
பொங்கலோ பொங்கல்
பனிநிரை மார்கழி "தை"க்கு வழி விட்டது
பகலவன் வடக்கு நகர் உத்தராயணமிது
கனியாம் வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி
காரிகைகள் கோலங்கள், பானை, பச்சரிசி
தனித்தமிழ் தாய்மொழியாம் தமிழினமாம்
தரணியில் எங்கிருந்தும் கொண்டாடுமாம்
இனிய பொங்கல் இதோ பொங்கி வழியுதாம்
இல்லங்கள், வீதிகளில் "பொங்கலோ பொங்கலாம்".
__ குத்தனூர் சேஷுதாஸ்
பூர்வாவில் பொங்கல் இன்று
கரும்புகள் முக்குழுவாம் காவலாய் நின்றன
கழுத்தில் மஞ்சளோடு பானைகள் இருந்தன
துருதுருவென சேலையில் பெண்கள் இயங்கினர்
தொப்பையோடு தயாரானார் இராஜவிநாயகர்
முருகதாஸ் ஐயாவின் மேற்பார்வையிலாம்
மூன்று வித பொங்கல் எலாம் வழிந்தனவாம்
அருமையான வெண்பொங்கல், வெல்லப் பொங்கல்,
அது மட்டுமா? இன்னும் கற்கண்டுப் பொங்கல்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------------------
வீதியெல்லாம் கரும்புக் கூட்டம் கண்ணைச் சிமிட்டுதுங்க!
வீட்டிற்கு வாரேன்னு
வம்பு செய்யுதுங்க!
உங்க வாழ்க்கையில
இனிப்பைக் கொட்டுவேன்னு
சத்தியம் செய்யுதுங்க!
கதிரவனுக்கு நன்றி
சொல்ல கிளம்பி
வந்ததுங்க!
மஞ்சள் கொத்தும்
மணக்க வாரேன்னு
அன்பா கேட்குதுங்க!
மங்கலம் பொங்கச்
செய்வேன்னு
மனசார சொல்லுதுங்க!
மாவிலையும் ஆவாரம் பூவூம் வாசலில் தொங்குதுங்க!
இனிப்புப் பொங்கல்
சாப்பிடத்தான்
மனசு ஏங்குதுங்க!
பொங்கலோ பொங்கல்!
குக்கரில் விசில் வந்தாச்சு!
பொங்கலோ பொங்கல்!
அச்சு வெல்லம் பச்சரிசி
பொங்கலாச்சுங்க!
நெய்யில் வறுத்த
முந்திரி திராட்சை
சுவையைக் கூட்டுதுங்க!
அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்!
தை மகளே வருக!
நலமே என்றும் தருக!
- சாய்கழல் சங்கீதா
--------------------------
உன்னதமான உழவர் திருநாள்.
பொங்கிடும் பொங்கல் போல்
உங்களிடம் மகிழ்ச்சி தங்கட்டும்.
சாத்திவைத்த கன்னல்போல்
உங்கள்வாழ்வில்
இனிமை கூடட்டும்.
கட்டிவைத்த மஞ்சள்போல்
உங்கள்வாழ்வில்
மங்கலம் சேரட்டும்.
போட்டுவைத்த கோலம்போல்
உங்கள்வாழ்வில்
முன்னேற்றம் நிறையட்டும்.
தொடுத்துவைத்த தோரணம்போல்
உங்கள் வாழ்வில்
நன்மைகள் தொடரட்டும்.
இலை அமர்ந்து சிரிக்கும் இனிப்பைப்போல்
உங்கள் வாழ்வில்
மகிழ்வு பெருகட்டும்.
தைத்திங்கள் நன்னாளில்
வாழ்த்திடும் என்னோடு உங்கள் நட்பு இறுகட்டும்.
..அன்புடன்
சா.இராசா முகமது
-----------
தமிழர் ,உழவர் பெருமக்களைப்
போற்றிக் கொண்டாடும்
பொங்கல் திருவிழாக்கள்.
பல பாரம்பரியங்களையும்
வாழையடி வாழையாகப்
போற்றி நன்றியும்
கூறும் நிகழ்வுகள்.
உலகில் உயிர் வாழ உணவு தேவை.
வான்மழை, நீர், மண்,உழவர் பெருங்குழாம் மற்றும்
ஆநிரைகள் கூட்டணி
உணவை உற்பத்திசெய்து உயர்களை உய்விக்கின்றன.
போகிப் பண்டிகை
மழைத்தேவதையைப்
போற்றி நன்றி கூறும் நாள்.
அறுவடைகள் முடிந்து
உழைப்பின் பலனை
கொண்டாடும்போது
பழையன கழித்து சுற்றத்தாரொடு கூடி மகிழ சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கும் நாளும்போகித் திருநாள்தான்.
வெளிக்குப்பைகள் மற்றும் மனக்குப்பைகளை
அகற்றி புதிய ஆண்டைப் புத்துணர்வோடு
எதிர் கொள்ள செய்யும்ஏற்பாடுகள்.
(இது எப்படி திரிந்து
ஓலைகளுக்குப்பதில்
எழுத்தோலைப் போன்ற பொக்கிஷங்களையும்
இரப்பர் சக்கரங்களயும் எரித்துக்
'குளிர்' காயும் நிகழ்வாயிற்று?)
ஒரே புகை மூட்டம்
ஆதவனுக்கு இரட்டிப்பு வேலை!
பொங்கல்திருநாள்
உழவர் கூட்டத்தையும்
'நம்' மண்ணில் விளைந்த தானியங்கள் மற்றும் காய்கனிகளைப் போற்றி மண்பானைகளில் பொங்கல் பொங்கி'பொங்கலோ பொங்கல்' எனக் குலவையிட்டு நமக்கு ஒளி தந்து வழி நடத்தும் பரிதிக்குப் படையலிட்டும் மகிழும
நாள்.
உழவர் குடும்பங்களின் அங்கங்களாகத் திகழ்பவை பசுக்களும், காளைகளும் மற்றும் எருமைகளும்.
அவற்றைக் குளுப்பாட்டி அலங்காரங்கள்செய்து
அணிகள் பூட்டித் 'தாயினும் சாலப் பரிந்து உபசரிக்கும்
நாளே மாட்டுப்பொங்கல்..
சகோதர நலன் வேண்டி சகோதரிகள்
காக்கை, குருவிகளுக்கு உண்ண பொங்கலைப் 'பிடி' வைக்கும் கனுப்பொங்கலாகவும்
கொண்டாடப்படுகிறது.
'உழந்தும் உழவே தலை' எனப்போற்றிய அய்யனை நினைவு கூறாமல் விழா கொண்டாடுவது முறையா?திருவள்ளுவர் தினம் அன்று அவரைப் பணிந்து நினைவு
போற்றுகிறோம்.
பண்டைய நாட்களில்
அவரவர் இல்லங்களில்
விழாக்களை கொண்டாடி முடித்து
ஏர் பூட்டி உழுத மக்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில்
சென்று உற்றத்தையும்
சுற்றத்தையும்'கண்டு கொள்ள 'சென்று இருப்பர் போலும்.
(இன்று காணும் பொங்கலாகத்திரிந்து
கடற்கரைகளை மாசுபடுத்தும் நாளாக மாறிவிட்டது.)
இந்த உழவர் திருநாள் விழாக்கள்
நம்தமிழரின் இயற்கையோடு ஒன்றி ,
ஒட்டி வாழ்வது, நன்றி போற்றுவது, சுற்றுச்சூழலைகண்போலப் பாதுகாப்பது
எனப் பல நற்பணபுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன.
-மோகன்
No comments:
Post a Comment