Saturday, January 18, 2025

தையலும் தையல் இயந்திரமும்

 ★०★०★०★०★०★०★०★०★०★०★०★

வாழிய வாழிய பெண்ணுரிமை

★०★०★०★०★०★०★०★०★०★०★०★


கணவனை இழந்த கைம் பெண்ணுக்கு

வாழ்வாதாரம் கேள்விக் குறியாம்

பொருளாதாரம் கானல் நீராம்

ஏளனப் பார்வை கூடுதல் சுமையாம்


சுயசார்பு என்றும் பகற் கனவாம்

சுற்றிச் சுழலும் துன்பமே துணையாம்

இந்நிலை மாறி நன்மை

பிறக்க

தையலுக்கு தையல் மெஷினே வழியாம்


சுயதொழில் செய்து பிழைத்திடவே

ஆனையை அடக்கும் அங்குசமாக

தையல் ஊசி உடன் வருமாம்

நூல்கண்டோ சுயபலம் தருமாம்


தையல் மெஷினோடு தேய்ந்தாலும்

தையல் அவளோ தலை நிமிர்வாளாம்

கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து

சமூகத்திற்கே பாடம்

சொல்வாளாம்.


இன்றோ பெண்கள் உலகாள

அன்றைய பெண்களே

அடிநாதம்

ஆணுக்கு நிகராய் பெண்கள் வாழ

பாரதி சொன்ன புரட்சி வாழிய


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்

போற்றுவதுதானே இன்றைய சமூகம்!


வாழிய! வாழிய பெண்ணுரிமை!

வாழிய வாழிய பாரதி கண்ட புரட்சிப் பெண்கள்!!


- ஸ்ரீவி

--- 

தையல் வாழ்க்கை 

------------------------------------

வாழ்க்கை யானை

மதம் கொண்டது

யானையை அடக்க...

ஊசி அங்குசமாக

நூல் சங்கிலியாக

தையல் அவள்

தையல் செய்தாள்

முகபடாம் கொண்டது யானை

பிள்ளைகளுக்கு..

வாசிக்க 

நூல் தந்தாள்

ஊசிக்கு

படிக்க வைத்தாள்

பழமை பூட்டுடைத்து

புதுமை பூண் செய்தாள்

புதியதோர் உலகம் செய்தாள்


-அமுதவல்லி


--------------------

தையலும் தையல் இயந்திரமும்

-----------------

தையல் என்றால் பெண் என்று  ஒரு பொருள்.

இணைப்பு என்று ஒரு பொருள்.


பெண் பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் இணைக்கும் பாலமன்றோ!


என்ன பெயர்ப்பொருத்தம்!


தையலுக்கு உதவும்

இயந்திரம்' தையல் மெஷின்'!


விதவை என்ற சொல்லில் கூட பொட்டுக்கள் இல்லை;

கைம்பெண் என்ற்சொல்லாவது இரண்டு பொட்டுக்களை

கொண்டிருக்கிறது!


கைம்மை நிலை  ஆடை, உணவு, புறஅழகு என மூன்று நிலைகளைப் பாதிக்கும்.


ஒருவனுக்கு ஒருத்தி

என்ற சங்க கால வழக்கத்தில் தலைவனை இழந்த  தலைவி,வைதவ்யம் கடைப்பிடிப்பது ஒரு முக்கியமான கடமையாக, கருதப்பட்டது. 


காலப்போக்கில், கைம்பெண்கள்

துரதிருஷ்டத்தின் சின்னமாக, கருதப்பட்டனர்.


என்னே கலாசாரத்தின்

சீரழிவு!


இன்று  கணவனை இழந்த பெண்களுக்கு,உணவு, உடை/ அணிகலனகள், அழகு/ஒப்பனை போன்றவற்றில் எந்த 

கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை,

சமூகத்தால்.


மறுமணம்

புரியத் தடை இல்லை.


சொந்தக்கால்களில்

நிற்க, தையல் இயந்திரமோ, 'லிஜ்ஐத்'

அப்பளங்களோ துணை புரிகின்றன. 


கால்களால் மிதித்து இயக்கும் தையல் மெஷின் அப்பெண் தன்சொந்தக் கால்களில் நிற்க உதவுகிறது!


ஆண்களுக்கு உண்டோ வைதவய நிலை?


தொல்காப்பியம்

'தபுதார நிலை' என்று கூறுகிறது, விதவன்( விதவையின் ஆண்பால்) பற்றி.


ஆனால் அவருக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை- அப்போதும், இன்று வரையிலும்.


 நம்ம பாரதி அப்போது இல்லையே,  கைம்பெண்டிருக்காக,

குரல் எழுப்ப!


- மோகன்

----------

கைமா மிசை கைம்பெண்


கையில் குழந்தை கைம்பெண் ஆனாள் ஒருத்தி

   காரணம் அரசுக் கொடை சாராய அருவி


மையாய், மதயானையாய் எதிர்காலம் முன்னே

   மடிய வேண்டியது தானோ நீ ! பெண்ணே! 


செய்வதறியாது திகைத்தாள், உறைந்தாள்

   தேம்பித் தேம்பியும் அழுதாள், கரைந்தாள்


உய்ய வேண்டும் என்ற உத்வேகம் உதித்தது

   ஒளிக்கதிர் ஒன்று வழியும் காட்டியது


தையல் அன்று கற்றது நினைவில் வந்தது

   தவறாது உதவிக் கரம் அவள் முனே நீட்டியது


*கைமா தையல் எந்திரம், இவள் இராணியாம்

   கத்தரிக்கோல், ஊசி அங்குசங்களாம்


நைந்த, பிய்ந்த ஆடை தைக்கத் தொடங்கினாள்

   நம்பிக்கை வலுக்க புத்தாடை குவிந்தன


ஐயன் நம் திருவள்ளுவன் அன்றே சொன்னது

   அதுதான் "முயற்சி திருவினை ஆக்கும்" என்பது. 


*கைமா -- யானை


__  குத்தனூர் சேஷுதாஸ்


---------------

மதம் கொண்ட யானை போல்.....

சதம் ஆண்கள் பெண்களை.......

நிதம் இங்கு நசுக்க.....அதை

வதம் செய்ய புறப்பட்டாளோ......

இந்த தையல்.....

(வக்கிரமான செயல்களை தைத்து சீர் செய்ய!)

😊 சாயி 😊

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...