ஏன் வைத்தாய்?
எது ஒன்று சொன்னாலும் இந்நாளில் தவறாம்
ஏன் வைத்தாய் இறைவா, நீ ! இந்த வாயாம்?
புதிய ஒன்று பேசினால் புரட்சிக்காரனாம்
புளித்த மாவைச் சுவைத்தே பழகிப் போனதாம்
அதிகம் பேசும் மனிதர் வாயாடியாம்
அமைதியானவரோ பேசாமடந்தையாம்
பொதுவாகப் பேசினால் புண்ணாகும் மனமாம்
பொளந்து கட்ட அவரை ஊடகம் பலவாம்
முதுகுப் பின் பேசினால், அஞ்சுகிறேன் என்பார்
மோனையில் பேசினால் "கவியோ நீ?" கேட்பார்
மெதுவாகப் பேசினால் ஏதோ அது சதியாம்
மேடை ஏறிப் பேசினால் அலட்டல் அதுவாம்
எதிராகக் குரல் கொடுத்தால் என்ன திமிரென்பார்
ஏனென்று வினவ "புரியாது உனக்கு" என்பார்
அதிரசம் கண்டால் தான் வாய் திறக்க வேண்டும்
அப்பொழுது தான் இராது மேற்சொன்ன எதுவும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
நமக்கு நாமே நீதிபதி..
முன்னே போனால் முட்டும் என்பார்
பின்னே வந்தால் இடிக்கும் என்பார்
இருந்த இடத்திலே
இருந்தோம் என்றால்
வாழ்வே வீண் என
கதை அளப்பார்.
இதெல்லாம் இருந்தாலும்
கட்டுப்பாடு சுயமாய் இருத்தலே
வாழ்வது சுகமாய் அமைந்திட நல்வழியாம்.
புலனக் குழுவுக்கும்
இது பொருந்துமாம்.
நன்கு சொன்னீர்
நயம்பட சொன்னீர்
--ஸ்ரீவி
ஏன் வைத்தான்
அநியாயம் செய்வோரை சாடி
அன்பு கலந்த சொற்களை கூறி
அழகான தமிழ் மொழியில் பேசி
அமைதியைத் தரும் இன்னிசை பாடி
அகில உலகமும் சுகிக்கவே வைத்தானோ?
ஆயுதம் ஏந்தி போர்கள் புரிந்து
ஆணவத்தாலே ஆக்கிரமிப்பு செய்து
ஆழ் கடலையும் விட்டு வைக்காமல்
நீர்மூழ்கி கப்பல் கொண்டு
ஆரவாரமாய் அழிந்து சாகும் மானுடத்திற்கு ஆதரவாக பேசி
அமைதியை புகட்டி
அருஞ்சொற்களால் அகக்கண் திறந்து
தழைக்கவே வைத்தானோ?
இன்னா செய்தாரையும் ஒருக்க
இனிமையாய் பேசி சண்டை தவிர்க்க
இறைவனை போற்றி பூஜிக்க
இன்பத்தில் சிரிக்க
இயலாமையின் போது புலம்ப
இருகரம் பற்றிய இல்லத்தாளை புகழ
இன் சொற்களால் மகிழ்விக்கவே வைத்தானோ?
இன்னும் பற்பல உண்டு உபயோகம்
இன்றைய இன்றியமையா பணிகள் பல பாக்கியுள்ளது
ஆதலால் மீண்டும் தொடரும் என்று கூறி இத்தோடு முடிக்கிறேன்
-ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்
வாய்மையுடன்
அறிவாய்
துணிவாய்
பணிவாய்
கனிவாய்
செறிவாய்
தெளிவாய்
வாயாரப் பேசவே
வாய்!!!
வாயால் ...
வாழ்வாய்
வீழ்வாய்
உயர்வாய்
தாழ்வாய்
மடிவாய்
மீள்வாய்
- சங்கீதா
No comments:
Post a Comment