திரிந்து திரிந்து...
பாலைக் காய்ச்சினேன்!திரிந்துவிட்டது!
திரிந்தது தெரிந்தது!
கறந்து பல மணி நேரம்
ஆகிவிட்டதோ?
குளிர்சாதனம் பாதுகாக்க வில்லையோ?
காரணம் தேடி
எண்ணங்கள் திரிந்தது!
பாலைக் காய்ச்சி
உறை ஊற்றினேன்..
தயிராகத் திரிந்தது!
அறிவியல் சொன்னது..
நுண்ணுயிர்கள் பாலில்
ஓடித் திரிந்து பெருகி
கக்கிய அமிலம் என்று!
பாலைக் காய்ச்சினேன்!
காபியானது!
வயிறில் திரிந்தது தெரியவில்லை!
அறிவியல் ஆய்ந்து சொன்னது..
வயிற்றின் அமிலம்
செய்த சாகசம் என்று!
வாழ்க்கையில்
காட்சிகளும் திரிவது
தெரிகிறது!
ஏன் திரிகிறது?
தெரியவில்லை!
ஒரே காட்சி என்றால்
சலிப்பாகி விடுமென்றா?
காரணம் தேடி
மனம் ஓயாமல் திரிந்தது!
திரிந்ததில்
ஒன்று மட்டும் நன்கு தெரிந்தது..
எல்லாம் திரிந்து விடும்!
திரிவதைப் புரிந்து ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை புதிய வாயில்களைத்
திறந்து விடும்!
மீண்டும் மீண்டும்
திரிவதற்கே!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment