தாயின் திதியில்...
பையாம் கருவறையில் குடிபுக அனுமதித்"தாய்"
பத்து மாதக் *குடக்கூலி கேளாமல் மறந்"தாய்"
கை,கால் முளைக்கும் வரை கண்ணிமை போல் காத்"தாய்"
காலால் உதைத்தேன் களித்"தாய்", கடிந்"தாய்"
வையம் காண விரும்பினேன் ஈன்றெடுத்"தாய்"
வாய் திறந்து அழுதேன் கண்விழித்"தாய்"
மையிட்டு, மலர் சூடி அழகு பார்த்"தாய்"
மறக்காமல் நாளும் *கண்ணேறு கழித்"தாய்"
கை பிடித்து எனக்கு நடையும் கற்பித்"தாய்"
காலில் தண்டை மாட்டிக் கற்பூரமாய்க் கரைந்"தாய்"
தெய்வ பக்தி, தேசபக்தி ஊட்டி வளர்த்"தாய்"
தேன் கசந்தால் தமிழ் ஒரு தேக்கரண்டி சேர்த்"தாய்"
பைங்கிளி கண்டெடுத்து எனக்கு மணமுடித்"தாய்"
பட்டான இரு குஞ்சுகள் கனிகள் கொடுத்"தாய்"
தைத் திங்கள், தேய்பிறை, நவமியில் மறைந்"தாய்"
தாயே! இத்தனைக்கும் தந்தேன் எள்ளும், நீரும்.
*குடக்கூலி_வாடகை
*கண்ணேறு_திருஷ்டி
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment