Monday, March 30, 2026

ஹூஸ்டன் நகரின் சாலை & ரயில் -ஒரு பயணியாக…(பாகம் 11)

 


பாகம் 11

பயணங்கள் முடிவதில்லை…


*ஹூஸ்டன் நகரின் சாலை & ரயில் -ஒரு பயணியாக…

ஹூஸ்டன் இந்த அமெரிக்க நகரம், வானத்தை நோக்கி உயரும் கட்டிடங்களுக்கும், பூமியைத் தொடும் பசுமைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேசுகிறது. நான் இங்கு பயணித்த அனுபவம், போக்குவரத்து எப்படி ஒரு நகரத்தின் உயிரோட்டமாக மாறும் என்பதை எனக்குக் கற்றுத் தந்தது. இங்கு ரயில் என்பது தனியொரு உலகமல்ல; அது சாலையின் இயல்பான பகுதியாக, நகரத்தின் ஓட்டத்தோடு கலந்துவிட்ட ஒரு புத்திசாலித்தனமான அம்சம்.

சாலையோடு சேர்ந்து ஓடும் ரயில்

ஹூஸ்டனின் METRORail லைட் ரயில் பாதைகள் சாலையின் நடுப்பகுதியில், தரை மட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. கார்களும், பேருந்துகளும், ரயிலும் ஒரே சாலையில் பக்கம் பக்கமாக நகரும் காட்சி முதலில் ஆச்சரியத்தையும் நம் கல்கத்தாவையும் நினைவு படுத்தியது.

டிராஃபிக் சிக்னல்களைப் பகிர்ந்துகொண்டாலும், ரயிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், ஒழுங்கான ஓட்டம்.

ரயில் என்றாலே தனி தடம், கேட், நீண்ட காத்திருப்பு என்ற எண்ணம் வரும். ஆனால் இங்கு ரயில் நகரத்தின் இரத்த ஓட்டத்தில் கலந்துவிட்டது. அது நகர வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நான் தங்கியிருந்த Hilton Americas-Houston ஹோட்டலுக்கு அருகிலேயே METRO ரயில்  நிலையம் இருந்தது. ரயிலில் இறங்கினால் சில அடிகள் நடந்து, நேராக ஹோட்டல் வளாகத்துக்குள் நுழையலாம். வழி தெரியாமல் அலைவது, டாக்ஸி தேடுவது போன்ற சிரமங்கள் இல்லை. பயணிகளுக்காக நகரம் எப்படி அறிவார்த்தமாக திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

ஹூஸ்டனின் சாலைகள் நகரத்தின் பரப்பை உணர்த்துகின்றன, ரயில் அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. வசதியையும், நேரத்தையும் சேமிக்கும் திறன்.

இரண்டும் இணைந்தபோது, நாம் ஒரு சுதந்திர உணர்வைப் பெறுகிறோம். போக்குவரத்து என்பது வெறும் இடத்திலிருந்து இடத்துக்கு செல்லும் வழி மட்டுமல்ல; அது வாழ்க்கையை எளிதாக்கும், இனிமையாக்கும் ஒரு வடிவமைப்பு.


ஹூஸ்டன் என்றாலே NASA, Johnson Space Center விண்வெளி ஆராய்ச்சியின் உச்சம் நினைவுக்கு வருகிறது. மனிதன் விண்ணை எட்ட முயலும் இடம் இது. ஆனால் இந்த உயரத்தில் நின்றாலும், மண்ணை மறக்கவில்லை.

சாலையோரங்களில் நட்ட மரங்கள் அனைத்தும் திட்டமிட்டு பாதுகாக்கப்படுகின்றன. புதிய மரங்களுக்கு வலுவான ஆதரவுக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன. காற்று அல்லது வெளிப்புற அழுத்தங்களால் சாயாமல் இருக்க, மரத்தின் தோலை காயப்படுத்தாத மென்மையான பாதுகாப்புப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மரத்தின் அடிப்பகுதியில் நீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டு, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. கான்கிரீட் காட்டுக்குள் மரங்களுக்கு தேவையான இடம், காற்றோட்டம், வளர்ச்சிக்கான சூழல், அனைத்தும் கவனமாக வழங்கப்படுகின்றன.

விண்வெளியை நோக்கிப் பறக்கும் நகரமாக இருந்தாலும், பூமியுடனான உறவைப் பாதுகாக்கும் இந்த மனப்பான்மைதான் ஹூஸ்டனின் உண்மையான மேன்மை. விண்ணைத் தொட்டாலும், மண்ணை மறக்காத மனம் இதுவே ஹூஸ்டனின் அடையாளம்.


ஹூஸ்டனிலிருந்து டல்லாஸ் நோக்கி மேற்கொண்ட அந்த இரவுப் பயணம், சாதாரணமாகத் தொடங்கி ஒரு பாடமாக மாறியது.

Google Maps தொடர்ந்து 71 மைல் வேக வரம்பைக் காட்டியது. ஆனால் நமது ஓட்டுநர், “10% வரை அதிகமாக ஓட்டலாம்” என்ற நம்பிக்கையில் 78 மைல் வரை சென்றார். நேர அழுத்தம், வேகம் 91 மைல் வரை உயர்ந்தது.

திடீரென காரின் கணிப்பொறி “Police Ahead” என்று எச்சரித்தது. சினிமாவில் மட்டும் பார்த்த அமெரிக்க போலீஸ் துரத்தல், நிஜமாக நம்மை வந்தடைந்தது.

சில நொடிகளில் போலீஸ் வாகனம் முன்னால் நின்றது. அதிகாரி டார்ச் ஒளியை காரை நோக்கி வீசினார். ஓட்டுநர் உடனே இரு கைகளையும் ஸ்டீரிங்கிலிருந்து எடுத்து உயர்த்திக் காட்டினார் “என்னிடம் ஆயுதம் இல்லை” என்ற அமைதியான சைகை.

அதிகாரி மெதுவாக வந்து, ஜன்னல் வழியாக உரிமத்தைக் கேட்டார். எந்த வாக்குவாதமும் இல்லை. சில நிமிடங்களில் $200 அபராத ரசீது (challan) வழங்கப்பட்டது.

அதிகாரி கூறிய விதிகள்:

ஒரு மாதத்துக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

இல்லையெனில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

அபராதம் செலுத்தினாலும் ஓட்டுநர் உரிமத்தில் black mark பதிவாகும்.

மூன்று முறை இத்தகைய குற்றம் சேர்ந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

அந்த இரவுப் பயணம் வேகத்தின் கவர்ச்சியையும், சட்டத்தின் கடுமையையும் ஒரே நேரத்தில் உணர்த்தியது. அமெரிக்காவில் சட்டம் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல, சாலையிலேயே உயிரோட்டமாக இயங்குகிறது.

ஹூஸ்டன் விண்ணை எட்டும் கனவுகளுக்கும், மண்ணைப் பாதுகாக்கும் பொறுப்புக்கும் இடையே சரியான சமநிலையைக் காட்டும் அழகான நகரம். ஒரு பயணியின் பார்வையில், இது ஒரு பயணம் மட்டுமல்ல… ஒரு பாடமும் கூட.

தெரிந்து கொள்வோம்-இட்லி

 *****தெரிந்து கொள்வோம்***


*”இட்லி"* தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். 


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.


 *வரலாறு* 


இட்லியின் பூர்வீகம் இந்தோனேசியா என உணவு வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சுமார்  கிபி 800-1000  காலப்பகுதியில், இந்தோனேசியாவின் இந்து அரசர்களால் ஆளப்பட்ட பகுதியில் உருவான புளிக்கவைக்கப்பட்டு ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு, காலப்போக்கில் தென்னிந்தியா வந்து தமிழக பாணியில் அரிசி உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நவீன இட்லியாக உருமாறியதாக கூறப்படுகிறது.


10ம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.


உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு, முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது.


சென்னையைச் சேர்ந்த இட்லி ஆர்வலர் இனியவன் என்பவர், 2015-ஆம் ஆண்டு மார்ச் 30-ஐ முதல் உலக இட்லி தினமாக அறிவித்தார்.


ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், தமிழ்நாட்டின் முதல் சாய்ஸ் இட்லி தான்.


கொழுப்புச் சத்து அறவே இல்லாத இட்லிக்கு, பல்வேறு வகையான சைட் டிஷ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயாராகிறது. கிராமப் புறங்களில் இன்றளவும் பல வீடுகளில் கறிக் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும் தான் ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் ஸ்பெஷல் டிஷ் ஆக திகழ்கின்றன.


சாம்பாரில் மட்டுமின்றி பல வகை சட்னிகளுடன் இட்லி சாப்பிடுவதை சைவப் பிரியர்கள் பெரிதும் விரும்புவர்.


தமிழகத்தில் சாலையோர தள்ளு வண்டிக் கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இட்லி கிடைக்காத உணவகங்களே இல்லை எனக் கூறலாம்.


சென்னை போன்ற பெரு நகரங்களில் இட்லிக்காகவே பிரத்யேக உணவகங்களும் வியாபித்திருக்கின்றன.இட்லியில் இத்தனை வெரைட்டியா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு ரகங்களை இந்த உணவகங்களில் ருசிக்க முடியும்.


ஜீரண சக்தி குறைவாக இருக்கும் மழலையர்களுக்குக் கூட தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக இட்லியை தயக்கமின்றி ஊட்டுவார்கள் தமிழகத் தாய்மார்கள்.

 மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கும் மருத்துவர்களின் உணவு லிஸ்ட்டில் இடம்பெறும் முதல் சாய்ஸ் இட்லி தான்.


உலகளவில் ஆரோக்கியமான உணவுகளை பட்டியலிட்டால் முதல் 10 இடங்களில் இட்லியும் இடம்பிடிக்கும்.


இத்தனை சிறப்புகளை பெற்ற இட்லியை  இன்ஸ்டண்ட் உணவுகள் போல்  சில நிமிடங்களில் தயாரித்து விட முடியாது என்பது மட்டுமே இதில் உள்ள சிக்கலாகும்.


 *அக்ரி சா.இராஜா முகமது *

Friday, March 27, 2026

அந்த கால காபி ஹோட்டல்:/கிளப் (II)

இன்றும் தோசை மாஸ்டரின் தோழன் விளக்குமாறும் ஒரு எவர்சில்வர் கப்பும் !!

கைமுறையில் செய்யும் தோசையே மேலும் உண்ண ஆசையைத் தூண்டும். ஐசிஐசிஐயில், வங்கியும் அதுவும் இணையும் முன்,  ஒரு தொழில் முனைவர் தோசை செய்யும் இயந்திரம்  உருவாக்கிப் பல தடவை செயல் முறை விளக்கம் அளித்தார். அது இயந்திர தோசைதான். இன்று செயற்கை நுண்ணறிவு மூலம் கூட தோசை சுடலாம். ஆனா நம்ப ஊர் மாஸ்டருங்களை, அடிச்சிக்க முடியாது, அடிச்சிக்க முடியாது!!

- நாகராஜ்


==========================

அத்தனை உணவகங்கள் பற்றி பதிவுகள் போட்டாலும் எங்கள் ஊர் காளியாகுடி பற்றி யாரும் போடாதது ஒரு குறை என்பதால் நானே போடுகிறேன்.

அங்கு அதிகாலையில் அதிகாலை என்றால் ஆறு மணிக்கு  முன்னால் மட்டுமே கிடைக்கும் பொங்கல்!

உங்கள் இலையில் சுடச் சுட கொண்டு வந்து வைப்பார்கள். அது வழுக்கி கொண்டு ஓடும். அவ்வளவு நெய். அந்த சூட்டில் இலை லேசாக கருக ஆரம்பிக்கும். அதற்கு அற்புதமான ஒரு சட்டினி மற்றும் சாம்பார். 6 மணிக்கு மேல் போனால் கிடைப்பது அரிது. அதே போல காபி. ஆனால் எங்களுக்குப் பிடித்தது அங்கு காலை 11 மணிக்கு மேல் கிடைக்கும் ஒரு முறுகலான ஊத்தப்பம், வேறு வகையான சட்னி.

எங்கள் பள்ளி தேசிய உயர் நிலைப்பள்ளி அதன் அருகில் இருப்பதால் மதிய உணவு சமயங்களில் அங்கு செல்வோம்.


ஒரு முறை அங்கு சென்றபோது நடந்தது இன்றும் மனதில் நிற்கிறது. அன்று வகுப்பில் நாங்கள் நிறைய சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் வந்த தலைமை ஆசிரியர் மதிய உணவு இடைவெளி விடாமல் இரண்டு வகுப்பு நீட்டித்து விட்டார். எங்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் தம்பிக்கும். என் தம்பி வேறு வகுப்பில் இருந்தாலும் எனக்காக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். இருவரும் காளியாகுடி போவதாக திட்டம். ஆனால் போகும்போது மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய சாப்பாடு எல்லாம் முடிந்து மேஜை மேல் நாற்காலிகள் கவிழ்ந்து இருந்தன. நாங்கள் அடிக்கடி அங்கு செல்வோம் என்பதால் எங்களுக்கு அங்குள்ள பரிமாறுபவர்கள் மற்றும் முதலாளி அனைவரையும் நன்கு தெரியும். எங்கள் பசி முகத்தை பார்த்தவுடன் உள்ளே போய் சாப்பிடுங்கள் என்று சொன்னார். அப்போது காளியாக்குடியில் இரண்டு பகுதிகள் இருக்கும். முன் பகுதியில் மேசை நாற்காலி. உள்ளே தரையில் பலகைகள் போட்டிருப்பார்கள். அங்கு ஆசாரம் பார்ப்பவர்கள் சாப்பிடுவார்கள். அங்கு சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரிமாறுபவர் மட்டும் இருந்தார். அப்போது அவர்  சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்தவுடன் இருங்கள், ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் சாப்பிட்டு முடித்து என்று சாப்பாட்டைத் தொடர்ந்தார். கொடூர பசியுடன் அமர்ந்திருந்தோம். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் தயிர் சாதத்துக்கு வந்து விட்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தயிர் சாதத்தை ஒரு யானைக்கு போடும் கவளம் போல உருட்டினார். இலையில் வைத்தார் ஊறுகாய் மூன்று விரல்களால் எடுத்து நெற்றியில் திருநீறு இடுவது போல அந்தக் கவளத்தின் மீது இட்டார். தயிர் சாத உருண்டை மேல் அந்தச் சிவப்பு அற்புதமாக காட்சியளித்தது. கையால் எடுத்து வாயை நன்றாகத் திறந்து போட்டுக் கொண்டார்.


பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு வயிறு நிறைந்து விட்டது!

- சண்முகசுந்தரம்


===========================


-அனைவரும் தங்கள் இளமைக்காலத்தில் உணவகங்கள் சென்று உண்ட நினைவுகளைப் பதிவிட்டதும் பெண்கள் ஏன் பகிரவில்லை என்ற கேள்வி தோன்றியது. பண்டமாற்று பதிவு ஒன்று தான் வந்திருந்தது. சரி நாம் பதிவிட சிந்திப்போம் என்றால் காலணாவுக்கு மாம்மை(தாய்வழிப்பாட்டி) வாசலுக்கு வரும் வயதான பாட்டியிடம் அவித்த மொச்சையை வாங்கித் தந்தது மட்டுமே நினைவில் உள்ளது. அந்த பயறின் சுவையும் மணமும் தனித்தன்மையானது. அதன் பிறகு நினைவில் வருவது சம்பள நாள் மட்டும் அப்பா அருகில் கடையில் வாங்கித் தரும் மசாலா தோசை. அதன் பிறகு கல்லூரி காலத்தில் பக்கத்தில் பேக்கரி உண்டு. புகை சூழ்ந்த அவ்விடத்தில் பெண்கள் இருக்க மாட்டார்கள்.‌என்றாலும் ஒரு முறை 4 பெண்கள்  சேர்ந்து தேநீர் அருந்த நுழைந்தோம். ஈக்களைவிட அதிகமாக மொய்த்தன கண்கள்.  சமீபத்தில் அலுவலகம் அருகில் இது போல் ஒரு தேநீர் கடை. புகை மற்றும் ஆண்கள் நிறைந்த அவ்விடத்தில் பெண்கள் சென்றோம். அவ்வளவு கண்கள் மொய்க்க வில்லை...என்பதே பெரிதாக இருந்தது.  சிறப்பாக கவனிக்கப்பட்டோம். முன்னேற்றம் ...நான் இந்த புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால் இந்த நிகழ்வுகள் நான் படிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கும் புத்தகத் தலைப்பை நினைவுறுத்தும் (இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை).


உண்ட மயக்கத்தில் 

சாய்வு நாற்காலியில் 

டீக்கடை நினைவுகளை 

இதமாக அசைபோடும்...

தாத்தாவின் மனம்.


தேநீர் போடும் நேரம்

கணக்கில் கொண்டு 

சற்றே கண்ணயர்வாள்

டீக்கடை கடந்து செல்வதே

போராட்டமாகக் கடந்த பாட்டி



- அமுதவல்லி

அந்த கால காபி ஹோட்டல்:/கிளப்

 அந்த கால காபி ஹோட்டல்:/கிளப் 


(A)காலை

                   

1.1960 களில்  அதிகம் உடுப்பி ஹோட்டல் என்ற பெயர் இருக்காது.  2. ஒரு பெயர் கூடவே காப்பி ஹோட்டல் என்றும் காபி கபே  என்றும் இருக்கும். 

                    

3.சிமெண்ட் தரை; சுத்தம் என்று சொல்ல முடியாது. 


4.நுழைவில் ஒரு கல்லாப்பெட்டி டேபிள்  அதன் மேல் பில் குத்தி  வைக்கும் ஒரு குத்தூசி, ஒரு ஹார்லிக்ஸ் மற்றும் ரகோடின்  பாட்டில் / டப்பி இருக்கும். 


5.பின்னால் சில சாமி படம். அதில் அழுது வடியும்  ஸிரோ வாட்ஸ் பல்பு. 


6.கதம்பம் பூ இருக்கும்.


7.படம் இருத்தி வைத்த கட்டையில் ஊதுவத்தி சொருகி இருக்கும். 


8.சாப்பிட வருபவர்கள் உக்கார பெரும்பாலும் மர டேபிள், அதன் மேல் ஒரு வெள்ளை கல், உக்கார மர சேர், அவைகள் எல்லாம் விரைவில் உயிர் விட்டு விடுவேன் என்று சொல்லாமல் சொல்லும் நிலையில் இருக்கும் . 

                 

9.ஒரு கண்ணாடி வைத்த ஷோ கேஸ்.


10.அதன் ஓரம் கொஞ்சம் வழி...அது வழியாக சமையல் அறைக்கு போக வேண்டும் .


11.ஒரு மூலையில் கை கழுவும் இடம்.


12.வெகுவாய் அதை சுற்றி சுத்தம் இருக்காது. 

                   

13.ஷோ கேஸ் கீழே ஒரு பெரிய மர பென்ச் இருக்கும். 


14.அதில் மந்தார இலை இருக்கும்.


15.அல்லது ஷோ கேஸ் உள்ளே ஒரு மூலையில் இருக்கும்.


16.அப்போதிருந்த மந்தாரை இலை பற்றி ஒரு காவியம் எழுத வேண்டும்; அற்புத வாசனை இருக்கும்.


17.அதில் கட்டித் தரும் பகோடா பொட்டலம், (பட்டிணம் பகோடா) வாசம் வேறு லெவல். 


18.பார்சல் மசால் தோசை, இந்த மந்தாரை இலையில் சுருட்டப்பட்டு, கூடவே கெட்டி தேங்காய் சட்னி. ம்ம்ம்!  இன்றும் நினைவில்.


19.எப்போதாவது வாங்கி வந்தால், வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு போட்டு ஆளுக்கு ஒரு துண்டு. 


20.இப்படி கிடைத்ததே ஒரு அற்புதம். 

                     

21.காலை நேரம் ஷோ கேசில் மெது வடை, இட்லி  ஒரு அலுமினிய டிரேயில் இருக்கும்.


22.அப்போதெல்லாம் ஒரு தேங்காய் சட்னி மட்டுமே; கூடவே ஒரு சாம்பார் உண்டு.


23.சின்ன வெங்காயம் சாம்பார், அதன் வாசம், சுவை ஒரு அற்புதம்.


24.உள்ளே சமையல் அறையில் பெரும்பாலும் ஒரு கனவு காட்சி போல புகை மண்டலம்   இருந்து கொண்டே இருக்கும்.


25.அப்போதெல்லாம் கட்டை அடுப்புதான்.


26.அவ்வப்போது, சொய் என்று தோசைக்கல் சத்தம் இருக்கும்.


27.சமையலறை மூலையில் ஒரு மேடை அங்கே ஒரு திரி ஸ்டவ்.


28.அதில் பால் காய்ந்து கொண்டிருக்கும். 


29.ஒரு அலுமினிய ட்ரே, அதில் பித்தளை டவரா செட் சிலது இருக்கும். 


30.ஒரு எவர்சில்வர் கிண்ணம்;அது தேய்த்து பல யுகம் ஆகி இருக்கும். 


31.அதில் தான் சக்கரை இருக்கும்;அதில் இருக்கும் ஸ்பூனில் பாதி சக்கரை ஈஷிக்கொண்டு இருக்கும்.


32.கீழே தரையில் பித்தளை பில்டர்; அதில்தான் காபி டிகாக்க்ஷன்  இருக்கும். 


33.அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி  வைத்திருப்பார்கள்.


34.எப்போதாவது ஹார்லிக்ஸ், ஓவல் , என்று ஆர்டர் வந்தால், டபரா செட் கெல்லா பெட்டி பக்கம் போய், முதலாளி  ஏதோ தர்மம் போடுவது போல அதில் ஸ்பூனால் எடுத்து போடுவார். 


35.மறுபடி சமையலறை வந்து, அதற்கு பால் அபிஷேகம் ஆகி, சக்கரை சேர்ந்து ஒரு ஆத்து, கூடவே டவராவில் கொஞ்சம் பால் ஊற்றி பின் டேபிளுக்கு வரும்.


36.பதினோரு மணிக்கு மேல் கொஞ்சம் மந்தம்தான்.  


(B)மதியம் சாப்பாடு உண்டு. 


1.பெரும்பாலும் அளவு சாப்பாடு தான். 


2.இலை போட்டு,கூட்டு பொரியல் எல்லாம் இரண்டாம் தரமும் உண்டு. 


3..சாதம் மட்டும் ஒரு பட்டை. கூடவே ஒரு அப்பளம். பித்தளை டம்பளரில் குடிக்க தண்ணீர். 


4.பில் என்றால், உள்ளங்கை அளவில் ஒரு சிறு புத்தகம்,  வேட்டியை (அழுக்கு) மடித்து  கட்டி, மேல் பட்டன் போடாது, காதில் சொருகிய பென்சில். என்ன எத்தனை பேர் சாப்பிட்டாலும், அற்புதமாய் கூட்டி பென்சிலில் கிறுக்கி கொடுத்திடுவார். 


5.டாக்டர் சீட்டை படிக்கும்  பார்மசி ஊழியர் போல, கல்லாவில் இருப்பவர் , சுலபமாய் இதை புரிந்து கொள்வார். 


(C).மாலை 


1.மெதுபக்கோடா, மைசூர் போண்டா,  தோசை ,கிச்சடி என்று ஒரு களை கட்டும். 


2.இந்த மெது பகோடா  கூடவே கெட்டி தேங்காய் சட்னி.


3.அதுவும் போண்டா சூடாக இருக்க, ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு. 


(D)இரவு சாப்பாடும் உண்டு.

    

1.இந்த வெஜிடேரியன்  ஹோட்டல்களில்  ஸ்வீட் கிடைக்கும். 


2.மைசூர் பாக் , பாதுஷா, அம்மி குழவி போல, குலாப் ஜாமூன் ...இவைகள் சில நாள் அந்த ஷோ கேசில் கொலு விருக்கும். 


3.காலை வேலை சேமியா பாயசம் கிடைக்கும். 


4.எது எப்படி இவர்கள் மெனு  லிஸ்டில் வந்தது என்று தெரியவில்லை; ஆனால் கிடைக்கும்.  


5.அவை எல்லாம் அன்று எங்களுக்கு ஒரு எட்டாத கனவு போல 


6.கொஞ்சம் இன்னும் சற்று பெரிய ஹோட்டல்களில் பாஸந்தி  கிடைக்கும்.


7.நான் இதை எழுத வந்ததின் முக்கிய காரணம் மந்தார இலை. 


8.எங்கே பேய்க்கரும்பு இனிக்கும் என்று பட்டினத்தார் தேடினாரோ, நானும் அது போல, அந்த வாசம் உள்ள மந்தார இலையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.


9.இன்னொன்று, அந்த கண்ணாடி ஷோ கேஸ்; அதன் உள்ளே ஒரு தகர  டப்பா அதில் இருந்து வரும் நூல், ஒரு திரௌபதி சேலை போல வந்து கொண்டே இருக்கும்.


10.என்ன சாபிடறீங்க ? என்று  கைவிரல் எல்லாம் அந்த பித்தளை டம்ளரில் நனைத்து, 


11."நங் " என்று வைத்துவிட்டு, "ஒரு மாசால் தோசை " என்று குரல் கொடுக்க, உடனே ஒரு வாழை இலை உங்கள் டேபிளுக்கு வந்து விடும்.


11.இவை எல்லாம் இன்று இல்லை; அவைகள் எல்லாம், நம் வீட்டில் இருந்த வயதான பெரியவர்கள் இல்லாது போனது போல, காணாது போய்விட்டது. 


12.அவர்கள் இல்லை என்றாலும், அவர்கள் பற்றிய நினைவு இன்னும் உள்ளே இருக்கிறது;இந்த, அந்த நாட்கள்  ஹோட்டல்கள் போல.


13.ஒரு மறக்க முடியாத சுவை அன்று அந்த உணவில் இருந்தது; அந்த மந்தார இலை வாசனை போல


14.ஒரு தக்காளிக்காய் பொரிச்ச கூட்டு; தண்ணியாகதான் இருக்கும்.


15.ஆனால் அந்த சுவை இன்னும் தொண்டையில் இருந்து கொண்டு இருக்கிறது.


16.பொடி போட்ட கத்தரிக்காய் பொரியல், சாம்பார், ரசம்  எல்லாமே ஒரு அற்புதம். 


17.பின்னால் கால போக்கில் சமையலே படிப்பாக கொண்டு வேலையும் அதன் தொடர்பாய் ஆகிட, இப்போதும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் முப்பது வருடமாய் பல நூறு கல்யாணம் செய்து கொடுத்த அற்புத அனுபவம்  அமைந்தது போல, வாழ்வில் , அந்த பழைய கால ஹோட்டல்களின் நினைவுகள் என்றுமே ஒரு அற்புதம்.


ஆனால், பழங்காலத்தில் சத்தியமாக பழைய எண்ணெய் வாசனை கிடையாது, பழைய எண்ணெய் அடுத்த நாள் சாலையோரக் கடைக்காரர்களுக்கு விற்பனை கிடையாது. கட்டுப்பாடாக கண்டிப்பாக சுத்த புது எண்ணெய் வாசனையுடன் வந்த தரமான பலகாரங்கள் ...ஆஹா. ... இனி அந்த ஹோட்டல் முதலாளி களைப்போல ஒரு மஹானுபாவர்களை பரோபகாராகளையும் காண முடியாது. அவர்கள் ஏதோ யாரோ சம்மந்திகள் வரூவதுபோல ' வாங்கோ வாங்கோ சாப்பிடுங்கோ என்று நமக்கு வரவேற்பு மரியாதையுடன் பணிவுடனும் பரிவுடனும் இருக்கும்


அதேபோல் திருவல்லிக்கேணியில் சைடோஜி மெஸ்,ஐயர் ஓட்டல், உடுப்பி ஓட்டல்களும் ப்ரசித்தமாக இருந்தன .


அதுமட்டுமல்ல ...மாம்பலம் ரங்கநாதன் தெரு 'பட்ஸ் ஓட்டல் ,பாண்டி பஜார் கீதா கேப், வசந்த பவன் ஓட்டல் இவைகள் ஒரிஜினலாக முதல் முறை துவக்கப்படபோது எந்த முதலாளியிடம் இருந்ததோ ....அவைகளின் தரம் சுவையை எங்களைப்போல 70 வயதை கடந்த வர்களுக்கு தான் தெரியும்.


அந்த பழங்கால ஓட்டல்களில் தரம் அலாதியானது .


இன்று நாங்கள் ஏதோ நேரத்திற்கு உணவு செய்து கொடுக்க ஆட்கள் இருந்தால் போதும்...சுவை சுமாராக தான் இருக்கும். 


ஒன்று மட்டும் நிச்சயம்....நாங்க அனுபவித்த சுவையை ...பாவம்....இந்த கால இளைஞர்களுக்கு சாப்பிட கொடுப்பனையில்லை. கிடைத்ததை சாப்பிட்டு நேரத்துடன் போட்டி...ஓட்டம்...அவசரம்....ஆனால் தரமான உணவு கிடைக்க Kitchen master காணோம்.


- சாய் ராம்


================================

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ட்ரிப்ளிகேன் (Triplicane) ரத்னா கஃபே, 1948 முதல் அதன் தனித்துவமான சாம்பார் இட்லிக்கு புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய உணவகம். வெல்லம் கலந்த, அடர்த்தியான மற்றும் சூடான சாம்பார் இட்லி மீது ஊற்றப்பட்டு பரிமாறப்படும் விதம், இவர்களின் அடையாளமாகும். 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதே சுவையைத் தக்கவைத்துள்ள இந்த உணவகம், காலை உணவு, வடை மற்றும் பில்டர் காபிக்கு மிகவும் சிறந்தது.  


எனது பள்ளிப் பருவம் முதல் கல்லூரி காலம் வரை  பல முறை இங்கு சுவைத்திருக்கிறேன். இங்கு இட்லிக்கு சாம்பார் சாப்பிடுகிறவர்களை விட சாம்பருக்கு இட்லியை சாப்பிடுகிறவர்களே அதிகம் நானும் உட்பட 😂😂😂

- ஷங்கர்

=============================

எப்போதும் நமது இளமைக்கால நினைவுகளை தூண்டும் விதத்தில் பதிவுகளை பார்த்தவுடன் மனம் துள்ள ஆரம்பிக்கும். 

வார்த்தைகள் தானே வந்து விழ ஆரம்பிக்கும். 


மதுரையில் வடக்கு மாசி வீதியில் நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி மூன்று காபி கிளப்கள்/கஃபேகள்.

ஹரிஹர விலாஸ், குருவாயூரப்பன் காபி கிளப், எஸ்.எஸ். கஃபே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஐட்டத்துக்கு ஸ்பெஷல். இதைத் தவிர வடக்கு வடம்போக்கு தேர்வில் லட்சுமி கஃபே அதைத் தாண்டி சரஸ்வதி கஃபே. இவையே எனது இளமைக் கால உணவகங்கள். வீட்டில் கடைக்குட்டி என்பதால் செல்லம் சிறிது அதிகம். ஹரிஹர கஃபேயில் இருந்த ஒரு சரக்கு மாஸ்டர் ஆமைவடை மிக அருமையாகப் போடுவார். அவர் பேரே 'ஆமை வடை மாமா'. 


முருகல் தோசை எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னது லட்சுமி கஃபே. பொன் முறுவலான அந்த முருகல் தோசை அதன் பிறகு இதுவரை நான் எங்கும் பார்க்கவில்லை.. ருசித்ததில்லை. இங்கே முருகல் தோசை என்றால் கருகல் தோசையாக கொடுப்பதுதான் நடக்கிறது. 


எஸ் எஸ் கஃபே ரோஸ் மில்க் மிகவும் பிரசித்தம். குருவாயூரப்பன் காபி கிளப் ஸ்பெஷல் அடை- அவியல். நினைத்தாலே இப்போதும் நாவில் எச்சில் ஊறுகிறது..


சரஸ்வதி கஃபே யில் போட் லோ என்று ஒரு குளிர்பானம். விளையாடி விட்டு அந்த போட் லோ குடித்தால் சொர்க்கமே நம் முன் வந்து கைகட்டி நிற்கும். 


மேலக் கோபுர வாசலில் இருக்கும் டெல்லிவாலா  சப்பாத்தி/சாகு- விற்கு ஈடு இணை எதுவும் இல்லை.


இது எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் வீட்டருகே இருந்த *செண்டாச்சி*  எனும் பாட்டி இரவு நேரங்களில் போடும் இட்லி - கெட்டி சட்டினிக்கு அந்தத் தெருவே அடிமையாக இருந்தது. அந்த பாட்டியின் நினைவாகத்தான் நான் எழுதிய கதை ஒன்றில் *செம்பாச்சி* என்ற ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்தேன்.


இதையெல்லாம் எழுதுகையில், நமது நாவில் சுவை அரும்புகள் ஏங்கத் துவங்குகின்றன.


- ஸ்ரீவி

==============================

பழங்கால உடுப்பி ஓட்டலகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். சாய்ராம் ஐயாவை இவ்வளவு நீண்ட பதிவு போட வைத்து விட்டனவே!👍ஐயா, எங்கள் உலகத்துக்கு( நீண்ட பதிவாளர்) உங்களை  வரவேற்கிறோம்🙏🙏



என்பதிவும் சற்று நீண்டது. பல ஆங்கில சொற்களுக்கு மன்னிக்கவும்.


சரவண பவன் இராஜ கோபால் அவர்கள் வருவதற்கு முன், சென்னையில் உடுப்பி ஓட்டல்களே அதிகம். டிபன் பத்ததியை வணிக முறையில் அறிமுகப்படுத்தியவர்களே உடுப்பி மக்கள்தாம் என்பர்.

இரண்டு இட்லி 10 பைசா அதற்கு 3 அல்லது 4 அலுமினிய மக்கில் சாம்பார்  கேட்டால் ஊற்றுவார்கள். கெட்டி தேங்காய் சட்னி வேறு.சுலபத்தில் கெட்டுப்போகாது.


ஐயா விவரித்தபடிதான் ஓட்டல் செட்டிங் இருக்கும்.


எக்மோர் கெங்கு ரெட்டி தெருவில் பத்மாவதி, எக்மோர் ஐரோட்டில்பங்கஜா, உடுப்பி( இன்றைய மத்ஸ்யா), ப்பூந்த மல்லி ஐரோட்டில், தாசப்பிரகாஷ், புரசவாக்கத்தில் கௌரிசங்கர், கார்டன்,  எக்மோர் ஸ்டேஷன்எதிரில் குருபிரசாத்,

பெரிய மேட்டில் மர்ச்சண்ட்ஸ் கபே, பிராட்வேயில் மாடர்ன் கபே என்று உடுப்பி ஓட்டல்களின் சூழலில் வாழ்ந்தவன் 

நான்.



இன்றும் கார்டன்,  மாடர்ன் கபே போன்றவை உள்ளன.


சர்வர் பற்றி இரண்டு குறிப்புகள்:

- டபராவுக்கும் டம்ளருக்குமாக காபியை ஆற்றும் இலாவகம்( சர்வர்சுந்தரம் நாகேஷ்!)

-நண்பர்கள் சர்வர் சரியாக பில் போடுகிறாரா என்று சோதனை செய்ய கூட்டமாக சென்று கண்டபடி( வழக்கமான வரிசை ப்படி இல்லாமல் ) - சிலர் முதலில் காப்பி, பின்பு இட்லி, சிலர் முதலில் தோசை, பின்பு ஐஸ்க்ரீம்,இப்படி மாற்றி மாற்றிக்கேட்டு அவரை ஏமாற்றப்பார்த்தனர். அவர்எத்தனுக்கு எத்தன். உள்ளே சென்று 

ஒரு பேப்பரில் கிரமமாகஎல்லா அயிட்டங்களையும் எழுதி சரியான பல்லைக்கொடுத்தார்!


இந்த சர்வர்கள் மாலை போண்டா, பஜ்ஜி போன்றவை சூடாக இல்லை எனில் சொல்லிவிடுவார்கள்.

ஐஸ் க்ரீம் 60 களில் அவ்வளவாக இந்த ஓட்டல்களில் கிடைக்காது. ரோஸ் மில்க் கிடைக்கும்.

அக்காலத்தில் உணவை விற்றாலும், சுற்றுச்சூழல் அவ்வளவு சுத்தமாக இருக்காது என்றாலும்

அவர்களின் கரிசனம் உணவைச்சுவை ஆக்கியதோ!


மந்தார இலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. 

சூடாக காராசேவை மந்தார இலப்பொட்டணத்திலிருந்து எடுத்து உண்பதே தனி சுவை!

மேடவாக்கம் நாட்டு மருந்து கடையில் கூட  இந்த இலைக்கட்டைப் பார்த்த ஞாபகம்.


- ,இ.ச.மோகன்


===================

எல்லோரும் அவரவர் நாவின் ருசியைச் சொன்னவுடன் நான் மட்டும் விலக்கா?


எங்களூர் (மணப்பாறை) புகைவண்டி நிலையத்தில் மணி ஐயர் நடத்தி வந்த வி.எல்.ஆர் .(வெஜிடேரியன் லைட் ரெஃப்ரஷ்மென்ட்) ஸ்டால் மிக பிரசித்தம்.

அங்கு கிடைக்கும் உணவுப் பதார்த்தங்களின் ருசி இன்று நினைத்தாலும் நா ஊறும்.

இரண்டு முன்று விரைவு வண்டிகளும், நான்கைந்து பாஸஞ்சர் வண்டிகளுமே நின்று செல்லும். அந்த வண்டிகளில் பயணம் செய்வோர் அருகில் உள்ள

பெரிய ஊர்களான திருச்சியிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சிற்றுண்டி சாப்பிடாமல் மணி அய்யர் கடையைத் தெரிவு செய்து மணப்பாறையில் வந்து சாப்பிடுவார்கள். அதற்காகவே புகை வண்டிகளும் சிறிது நேரம் தாமதித்தே கிளம்பும்.

வண்டிகள் வரும்போது டிரைவருக்கும் கார்டுக்கும் தனித்தனி உணவுப் பொட்டலங்கள் மணி ஐயரால் அனுப்பி வைக்கப் படும்.

அங்கு கிடைக்கும் இட்டிலி, மெதுவடை, மசால்வடை, பூரி கிழங்கு,

நெய் ஒழுகும் ரவா கேசரி, பட்டணம் பக்கோடா, வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி.

அடடா ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.

கள்ளிச்சொட்டாட்டம் ஃபில்டர் காபி,

திக்கான பாலில் போட்ட டீ.

பட்டணம் பக்கோடா (இதை மெது பக்கோடா என்றும் சொல்வார்கள்)

வெளிப்புறம் மொறு மொறுவென்றும் உள்ளே மெத்தென்று நாக்கில் கரையும் பக்குவத்தில் இருக்கும்.

ஒரு பூரியைக் கீழே வைத்து அதன் மேல் கிழங்கை வைத்து மேலே இன்னொரு பூரியால் மூடி வாழை இலையில் வைத்துக் கொடுக்கும் போது ஆஹா அதற்கு இந்த உலகையே எழுதி வைக்கலாம்.

பூரிகிழங்கில் வெங்காயத்தை அதிகம் போட்டு உருளைக்கிழங்கை குறைவாகப் போட்டு இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாய் அரிந்து போட்டு

கூடவே பட்டாணியும் போட்டு, அடடா இப்போதும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. 

மணப்பாறை முறுக்கு பிரசித்தி பெற 

மணி ஐயரும் ஒரு காரணம்.

அரிசியால் செய்த மொறுமொறுப்பான முறுக்கும் சிறப்பு.

நான் திருச்சியில் கல்லுரியில் படிக்கும் போது கல்லூரித் தோழர்களுக்கு அடிக்கடி வாங்கிச் செல்வேன்.

மணி ஐயரின் கடைப் பதார்த்தங்களுக்கு இரயில் பயணிகள் மட்டுமல்ல மணவை நகரம் மக்கள் அனைவருமே அடிமைகள்.


கொசுறு:

மணப்பாறை அரசுப் பள்ளியில், தேசிய மாணவர் படை ( என்.சி.சி)

பரேட் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும்.

பரேட் முடிந்தவுடன் சிற்றுண்டியாக 

மணி ஐயர் கடை பூரி கிழங்கு வழங்கப்படும். இதற்காகவே தேசிய மாணவர் படையில் சேர கூட்டம் 

அலைமோதும்.


- முகம்மது சுலைமான்

==========================

அதே போல் நானும் தஞ்சையில் KHS பள்ளியில் படித்த போது NCC  பயிற்சி நடக்கும் நாளில் சரவண பவன் ஓட்டலில் இருந்து வரும் பூரி மசாலா மற்றும் ரவா உப்புமா இப்போதும் நினைவில் நிற்கிறது. நினைத்தாலே இனிக்கிறது.


- சந்திரசேகரன் 

=======================


மும்பை நாட்களில் மாதுங்கா உணவு மிக அரியது....சாம்பார் மீதம் வைத்தாலும் அபராதம் குடுக்கணும்...சுத்தமாக ஹிந்தி தெரியாமல், நவி மும்பையில் இருந்து மாதுங்கா வரை போய் வருவது இன்று நினைத்தாலும் சிறப்பு...


-திருவள்ளுவன்

==============



சிலம்பொடு ஒரு பயணம்-{14} கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை சிறப்புற நடந்தது

 •••••••••••••••••••••••••••••••


*{14} சிலம்பொடு ஒரு பயணம்*


*கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை சிறப்புற நடந்தது*

•••••••••••••••••••••••••••••••


கயமலர்க் கண்ணியாம் கண்ணகியும் 

காதல் கொழுநனாம்

கோவலனும் 

இயைந்த இல்வாழ்க்கையை இனிமையாய்த் 

துய்க்கின்றனர்.

அடிகள் அந்த அழகை *சூரியனும் சந்திரனும் போல* எனும் பாடலில் அழகாக விவரிக்கிறார்: 


*கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,               வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த*


ஏழெடுக்கு மாளிகையில், 

நிலா முற்றத்தில் தென்றல் வந்து இதமாய் வருட,

வண்ண வண்ண வாசமிகு மலர்கள் பாங்குற அழகாய் அமைக்கப்பட்டிருக்க, மலர் தேடி வந்த வண்டுகள் ரீங்காரமிட 

ஆணிப்பொன் கட்டிலில் அமர்ந்தபடி 

இருக்கும் கண்ணகியையும் கோவலனையும் பார்த்தால் 

'பகலில் உலகை வலம் வரும் சூரியனும், 

இரவில் உலகைக் குளிர்விக்கும் சந்திரனும் 

ஒருங்கே அமர்ந்திருப்பது' போல் இருக்கிறதாம் அடிகள் பார்வையில்.


இந்த நயமிகு வரிகளை படிக்கையில் கண்முன்னும் அதே காட்சி விரிகிறது அல்லவா! 


தீராக் காதலில் திளைத்த கோவலன் என்ன செய்கிறானாம்! அதையும் பார்க்கலாம்... வாருங்கள்!


*தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறும் ஓர் குறியாக்  கட்டுரை* 

என்கிறார் ஆசிரியர். 


காதல் எனும் பெரு நதியில் நீந்திக் களிக்கும் கோவலன் தீராக் காதலுடன் கண்ணகியைப் பார்த்து புகழ்ந்து உரைக்கிறானாம். 

(கட்டுரை : புகழுரை)


எவ்வாறு புகழ்ந்து உரைக்கிறான் தெரியுமா! 

சமீபகால திரைப்பட பாடல்கள் துவங்கி பற்பல கவிஞர்கள் பெண்களை வர்ணிக்கும் வர்ணனைக்கெல்லாம் முன்னோடி இந்த *கண்ணகி அழகை கோவலன் புகழ்தல்* எனும் ஒரே பாடல் தான். இந்த கவிநயம் மிகு பாடலிலிருந்து ஒளிரும் சில வைர வரிகளைப் பார்ப்போம்:


*பெரியோன் தருக திரு நுதல் ஆக*


(உலகைக் காக்கும் இறைவன், தன் தலைமேல் இருக்கும் பிறை நிலவையே உன் நெற்றித் திருநுதலாக அமைக என்று அன்பளித்தானோ!)


*உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் ஆக ஈக்க*


(உருவமற்ற அரூபியான மன்மதன், நீ என்னோடு காதல் களத்தில் போரிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காகவே தன் கரும்புவில்லை உன் விற்புருவமாக அமைத்துக் கொடுத்தானோ!)


*தேவர் கோமான் தெய்வக் காவல் படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கிடை என*


(தேவருக்கு அரசன் இந்திரன் வானுலகைக் காக்க கைக்கொண்ட வச்சிரப் படையையே உன் இடையாக இருக்க விட்டு விட்டானோ)


*அறுமுக ஒருவன்...... சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது*


(ஆறுமுகம் கொண்ட முருக பெருமான் என்னை வெல்வதற்காகவே தன்னுடைய ஒளி பொருந்திய 

வேல் படையை உன்னிரு கண்களிலும் பொருந்தச் செய்து விட்டானோ!)


என்றெல்லாம் வர்ணித்துவிட்டு இதுவெல்லாம் போதாது என, வர்ணனையின் உச்சமாக என்ன சொல்கிறார் பாருங்கள்: 


*பீலி மணி நிற  மஞ்ஞை,  சாயற்கு அடைந்து தன் கான் அடையவும்*


(நீல மணி கழுத்தும், கருந்தோகையும் உடைய கோலமயில் உன் சாயலை கண்டு நாணி காட்டுக்குள் போய் விட்டன) 


*அன்னம் நல் நுதல் மெல் நடைக்கு அழிந்து நல்நீர்ப் பண்ணை நனி மலர்ச்செறியவும்*


(அழகிய நடைக்கு அடையாளமான அன்னப் பறவையோ உன் நடையை கண்டு நாணி, நீர் நிறைந்த தடாகத்தில் மலர்களுக்கு இடையே போய் ஒளிந்து கொண்டது)


*பசுங்கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும்,* 


(பச்சைக்கிளியும் குழலும் யாழும் அமுதோடு சேர்த்து கலந்தது போல் இனிக்கும் உன் மழலைப் பேச்சுக்கு முன்னே தோற்றுப் போனதை எண்ணி வருந்தி நிற்கின்றன)


என்று அவள் அழகை அற்புதமாக வர்ணித்து விட்டு, நிறைவாக ஒரு வரியில் வரப்போகும் துன்பவியல் நிகழ்வை மறைமுகமாக குறிப்பு உணர்த்துகிறாரோ ஆசிரியர்? அந்த வரியும் பார்க்கலாமே:  


*மடநடை மாது நின்மலர்க் கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின*


(இவ்வாறெல்லாம் காதல் எனும் கடலில் மூழ்கித் திளைத்து முத்துக் குளித்த கோவலன் கண்ணகியைப் பார்த்து, 'உன்னுடைய மலர்க் கையை விட்டு பிரியாது என்றும் இணைந்து மகிழ்ந்திருக்கும் இனிமை உடையதாக இருக்க வேண்டும் என் கரங்கள்' என இறைஞ்சுகிறான். விரைவில் அவன் அவள் கரங்களை விட்டு விலகிச் செல்லப் போகிறான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறாரா இளங்கோவடிகள்) 


இதோ இப்பயணத்தில் நம் கரம் பிடித்து கண்ணகி கோவலன் இல்வாழ்வை படம் பிடிக்க வருகிறார் நம் மழலைக் கவி:


ஐயா ,


தாங்கள் சிறப்புறவே கோவலனும் கண்ணகியும் இல் வாழ்வைத் துய்த்த  பாங்கை விவரித்தீர் உம் பார்வையில். மிகச்சிறப்பான எழுத்தோவியம்!


இனி நான் முயற்சிக்கிறேன்.


கோவலன் "கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி" என்கிறார்.

கரும்பு வில்லும், ( காதல்  சின்னம்) ,மலர்க்கொடியும், ( பெண்மையின் மென்மை குறிக்கும்) சந்தனக்குழம்பு கொண்டு, கண்ணகியின் பெருந்தோளில் வரைகிறான். 

இல்லற இணக்கத்தைக் குறிக்கும், இரண்டு சின்னங்கள்.

இந்த வரைதல் "தொய்யல் "எனப்படும். 

நவீன " டாட்டூ" ( tatoo)போல!

இன்றைய அலங்கார முறைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த முன்னோடி.


இவர்கள் கூடி இருந்தது , சூரிய, சந்திர சேர்க்கை போல என்கிறார். வெங்கதிரும் தண்கதிரும் ஒன்று கூடின- ஆண் மகனின் வெம்மையைப் பெண்மையின் தண்மை தணிப்பதை நாசூக்காக, கூறும் பாங்கு நம்மை வியக்க வைக்கிறது. 


இவர்கள் சேர்கையில் தாரும், மாலையும்

" மயங்கிக் கையற்று " இருந்ததாம். தார்- ஆண் அணியும்மாலை,  மாலை பெண்அணியும் மாலை எனக்கொள்க.


கோவலன் மனையாளைப் புகழ்வதை "குறியாக் கட்டுரை" என்கிறார். அதாவது, திட்டமிடாத, இயல்பாக உள்ளத்தில் அப்போது உதித்த காதல் உணர்வுகள்; புகழுரைகள். உண்மையான உள்ளக்கிடக்கைகள்!


ஐயா, தாங்கள் கூறியது போல நாயகியை வர்ணிக்கும் இன்றைய திரைப்பாடல்களுக்கு அடிகளின் வர்ணனை வழி காட்டலாக அமைந்தது என்பது

வெள்ளிடைமலை.


கவிஞர் வாலி அவர்களின் " கூனல் பிறை நெற்றியில் குழலாட" என்பதுஅடிகளின்"" பெரியோன் தருக திருநுத". லோடு ஒப்பு நோக்கத்தக்கது.


அடிகள் கண்களுக்கு வேலையும் , இடைக்கு வச்சிராயுதத்தையும் ஒப்பிடுகிறார் . ஆயுதங்கள்! கண்ணகிக்கு கால்சிலம்பே ஆயுதம்!


கண்ணகியின் எழில் எத்தகையதாம், கோவலன் பார்வையில்?

கண்ணகி பனிரெண்டு வயதினள்- மங்கை!

மங்கைக்கு அழகு,  நற்சாயல்,மெல்லிய நடை மற்றும் மென்மையான பேச்சு.


"கோலமயில்... அடைந்து" நாணி கானகம் புக்கும்" சாயலாம்.

சாயல் என்பது பிம்பம் என்றால் இவள் திருவின் சாயலன்றோ! மயில் ஏன் நாணாது?


அவளின் " நல்நுதல் மெல்நடை"கண்டு அன்னம்" அழிந்து தடாகத்தில் ஒளிந்து கொண்டது.சாதாரண தடாகமன்று, " "நன்நீர்ப்பண்ணை" - அக்கால நீர் மேலாண்மையின் மேன்மை.


இவள்" மெல்நடை" இக்கால கவிஞரை" ஒரு நாடகமன்றோ நடக்குது" என வியக்க வைத்திருக்கும்!


பேச்சு ஏச்சாக இன்றி இவளின் "குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் கிளவி" கேட்டு பச்சைக்கிளி வருந்தியது.

இவள் மழலை  ,குழல், யாழோடு அமிழ்தும் கலந்தது  போன்ற இனிமையோ இனிமை. வள்ளுவர் கேட்ட குழல், யாழ் இசைகளில் அமிழ்து கலக்கவில்லையோ?! 

(கிளவி- பேச்சு!)


இன்ப இல்லாளை இவ்வாறெல்லாம் வர்ணித்து

மகிழ்ந்த  கோவலன் "நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய்" என்கிறான்.

இவன்கரங்கள் அவள் கரங்களை  விட்டுப்பிரியமலிருக்க வேண்டுகிறான்.


இவன் கரங்கள் பிரியுமே தவிர, அவள் கரங்கள் பின்னால் சிலம்பை ஏந்தி இவன் நேர்மையை நிலைநாட்டும்!


*பயணம் தொடரும்*

Monday, March 23, 2026

மனித முயற்சியின் மகத்துவம்-பயணக் கட்டுரை(10)

 பாகம் 10

பயணங்கள் முடிவதில்லை…

ஹூஸ்டன் நகரத்தின் அமைதியான பகுதியில் அமைந்துள்ள இந்த Space Center-இல் நுழைந்தவுடன், ஒரு உற்சாகம் மனதில் எழுகிறது. இது ஒரு சாதாரண சுற்றுலா அனுபவம் அல்ல; மனிதன் கனவு கண்ட உயரங்களை நினைவூட்டும் ஒரு பயணம்.


நுழைந்த அந்த நொடியிலேயே, நாம் ஒரு அறிவியல் அருங்காட்சியகத்தில் அல்ல; *மனிதன் விண்ணை வென்ற வரலாற்றின் மையத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு வருகிறது. ஒவ்வொரு மாடலும், புகைப்படமும், தகவல் பலகையும் *மனித முயற்சியின் மகத்துவத்தை அமைதியாகச் சொல்கின்றன.*


Saturn V ராக்கெட்டை புத்தகங்களில் பார்த்திருப்போம்; ஆனால் அதை நேரில் காணும் அனுபவம் முற்றிலும் வேறு. அதன் அளவும் அமைப்பும் மனிதன் சாதித்ததின் பெருமையை உணர்த்துகின்றன.


Apollo காலத்தின் Mission Control அறையைப் பார்த்தபோது, அந்த அறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மனித வரலாற்றை மாற்றியவை என்ற எண்ணம், உள்ளத்தில் ஒரு அமைதியான மரியாதையை உருவாக்கியது.


Tram மூலம் Johnson Space Center வளாகத்திற்குள் சென்றபோது, விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறும் சூழலை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. *இது சினிமா காட்சி அல்ல; நிஜ வாழ்க்கையின் கட்டுப்பாடும் கடின உழைப்பும் சேர்ந்த ஒரு உலகம்.*


*என்னுள் எழுந்த எண்ணம்*


விண்வெளி என்பது வெறும் அறிவியல் சாதனை அல்ல; *அது மனிதனின் “முடியுமா?” என்ற கேள்விக்கான உறுதியான பதில்.* அங்கு கழித்த சில மணி நேரங்கள், *சாதனைகள் ஒரே நாளில் உருவாகாது; எண்ணற்ற மனிதர்களின் அர்ப்பணிப்பின் பலனாக தான் உருவாகும் என்பதை உணர்த்தின.*


விண்ணை எட்டிய மனிதனின் கதை,

மனதை எட்டிய ஒரு பயணமாக மாறியது.


*Visitors Training – ஒரு சிறிய அனுபவம்*


இங்கு பார்வைக்கு மட்டுமல்ல, செயலில் ஈடுபடும் அனுபவமும் கிடைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. விண்வெளி கருவிகள் பற்றிய விளக்கங்களும், mission control simulation போன்ற அனுபவங்களும் இதில் அடங்கும்.


*Rocket Diagram Activity*


ஒரு ராக்கெட் வரைபடம் வழங்கப்படுகிறது. அதை தங்கள் விருப்பப்படி நிறம் தீட்டி, பின்னர் scan செய்தால், அது திரையில் ஒரு உண்மையான ராக்கெட்டாக பறக்கும். ஒரு சிறிய கற்பனை, கண்முன்னே உயிர் பெறும் தருணம்.


*Launch Simulation*


Countdown ஒலி, engine ignition, lift-off காட்சி, இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு *உண்மையான launch அனுபவத்தை தருகின்றன.*


*கற்றலும் மகிழ்ச்சியும் சேரும் இடம்*


இவை வெறும் விளையாட்டு அல்ல. *அறிவியல் மீது ஆர்வத்தை வளர்க்கின்றன;* கற்பனைக்கும் அறிவுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சமமாகப் புதிய உணர்வை அளிக்கின்றன.


Johnson Space Center-இல் கிடைத்த அனுபவம் ஒரு எளிய உண்மையை நினைவூட்டுகிறது:


*ஒரு சிறிய வரைபடம் கூட, சரியான வழிகாட்டுதலுடன் விண்ணைத்தொட முடியும்.*


ஒரு கணம், நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல; விண்வெளி வீரர்கள் போல உணர்கிறோம். கையில் இருந்த காகிதம், கண்முன்னே விண்ணில் பறக்கும் ராக்கெட்டாக மாறும் அந்த நொடியில், அறிவியல், கற்பனை, மகிழ்ச்சி மூன்றும் அமைதியாக ஒன்றாக இணைகின்றன.

Sunday, March 22, 2026

உலக தண்ணீர் நாள் (22, மார்ச்)

 உலக தண்ணீர் நாள் (22, மார்ச்)


ஆராரோ வருவதும், போவதும் இவ் வையம் 

   அனைவர்க்கும் நீர் தேவை உண்டோ ஐயம்?


நீரின்றி அமையாது இவ்வுலகு என்றான் 

   நெஞ்சை தமிழரின் நிமிரச் செய்தான் 


பாரில் நீர் இல்லை என்றால் நினைத்துப் பாரும் 

   பச்சை வண்ணம் அஃது இல்லாமலே போகும் 


போர் அதால் நேரும் அத்தனை அழிவும் 

   *புனல் இன்றி புவி ஆகும் ஒரே மயானம் 


கார் மேகம் கருக்கொண்டு மேலே எழும் 

   கானமயில் மட்டுமா உலகே மகிழும் 


தேரில் பவனி அது எத்தனை சுற்றும்? 

   தெண்ணீர் இலாமல் தொண்டை வற்றும் 


வேர் நேராம் நீரும் பூமியின் அடியில் 

   விவசாயம் நிகழ்வது அவளின் மடியில் 


சீரான நீர்த் தேக்கம் உயிர்கள் இங்கே உய்யும் 

   செய்யாவிடிலோ வரும் தலைமுறை வையும்.


* புனல் - நீர் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 22/3/2026


======================

நீர்

உயிர் இயக்கத்தின் ஆதாரம்

நிலத்தின் அடியிலும்

கிடைக்கும் மூலாதாரம்


நன்னீரைத் தொலைத்து

கண்ணீரில் கரையும்

மாந்த இனம்


இயற்கையின் போக்கை மாற்றி

இரண்டகம் செய்யும் மனிதர்

வன்முறை


வெள்ளமும் வறட்சியும்

விரட்டிடும் தேசம்

இந்தியா


நீருக்காய் போர்

நீண்ட நாட்களில்லை

விரைவில்


தண்ணீரைக் காத்திட

தேசம் கடந்து

கை கோர்ப்போம்🙏

- ஷங்கர்

===============

உலக தண்ணீர் தினம்

        இன்று 22/03/2026)


" நீரின்றி அமையாது. உலகு" என்றார் வள்ளுவர். அன்றைய மயிலை நீர்வளம் மிக்கதாக இருந்திருக்குமோ!


இன்று நீரின்றி , குமையும் உலகு எனப்புலம்புவாரா?


நீர் மேலாண்மை  என்பது

 நீர் மேல் ஆளுமை( ஆக்ரமிப்பு?) என்றாகிவிட்டது. 


இந்த நீரின் மகத்துவம்

 நம்செம்மொழியில் ஆறு என்பதால் அறியப்படுகிறது. 

ஆறு என்றால் நதி  என்றும் வழி என்றும் பொருள் கொள்ளலாம் . 

இந்த  வழி என்பது நீர் செல்லும்வழி. 

 போரினால்,எங்கோ நீர் வழியை அடைத்தால், நாம் நம் வீட்டில் கட்டை அடுப்பு 

மூட்ட ,கற்றுக்கொள்ள வேண்டிய நிலை, இன்று!


என்ன தீர்கதரிசனம்!

நீரின்றி உலகோ  உலையோ அமையாதுதான்!


- இ.ச.மோகன்,

முச்சக்கரத்தில் உலகளக்கும்- வாமனன்

இத்தாலியிலே பிறந்து

இந்தியாவிலே வளர்ந்தேன்!


முதுகெல்லாம் தத்துவம் பேசும்-

குறளகமான நூலகம்தான்!


ஊக்கு நுழையாத சந்திலும்

மூக்கை நுழைப்பேன்!


சந்து பொந்துகளே நகர்வலம் -அதிலும்

குன்றும் குழியும் எனக்கு குதூகலம்!


பிரசவத்துக்கு இலவசம்தான்-

அதிசியமாய் சுகபிரவசமும் ஆவதுண்டு!


அன்பு என்றால் குறுக்கு வழி-அதுவே

வம்பு வந்தால் சுற்று வழி!


மணமூட்டி, குளீரூட்டியுடன் ஒய்யாரமாக

நாலு சக்கர மேனாமினிக்கி - மகிழுந்து!🚗


குறுக்கே புகுந்து குலை நடுக்கும் 

இரண்டு சக்கர மினுமினிக்கி- விசையுந்து!🏍️


பச்சை மூக்குத்தி மஞ்சள் பல்லக்கு -நான் 

ஏழை பங்காளியின் நல்மருந்து !


நடிகரெல்லாம் நாட்டை ஆள 

புகைப்படத்தை முகத்தில் சுமந்து-நான்

ஏற்றிவிட்ட  எத்தனைபேர்  அரசியலில்

எனக்கோ  ஓட்டளிக்க அங்கீகாரம் தரலை?


மூன்று சக்கரத்தில் ஆறை(ளை) சுமந்து—

ஒவ்வொரு பயணமும் சிறிய யுத்தம்


கஞ்ச பயணிகள் தஞ்சம் கேட்டால்

ஒற்றை அங்குலமே ஓட்ட  மிஞ்சும்!


திரும்பி வர சவாரிக்குதான் பஞ்சம்!


அதனால் அத்துவான காடே  மஞ்சம் !


வீட்டின் கவலைகள் காற்றோடு பறக்க…


முன்னே அமர்ந்து முறுக்கிப் பிடி—


ஒலிகொம்பால்   வீதியை அழைப்பேன்!


வலி வியர்வையால் சாதியை துடைப்பேன்!


முச்சக்கரத்தில் உலகளக்கும்-

வாமனன் நான்!


பயணிக்கு தேவை என்றால் -ரத்தம் 

கொடுக்கும் சிபி சக்கரவர்த்தி நான்!

🛺

Saturday, March 21, 2026

இராஜதந்திரம்

 இராஜதந்திரம்


 இன்று. உலகமே போர் மேகங்கள் ,இல்லை இல்லை போர் சூறாவளியில் சிக்கித்தவிக்கிறது. எங்கோ அடிக்கிறார்கள், இங்கு சமையல் செய்ய எரிபொருள் தட்டுப்பாடு!

இன்னும் இணைசேதம்( collateral damage) வேறு. ஒரு பாவமும் அறியா 150 பள்ளி சிறார்கள் மாண்டுபட்ட காட்சி இன்னும் நெஞ்சை நடுங்க வைக்கிறது.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? இராஜ தந்திரம் எங்கு சென்று ஒளிந்தது?

இன்று  இது சம்பந்தமாக,ஒரு ஆங்கிலப்பதிவை ஓர் ஆங்கிலப்பத்திரிகையில் பார்த்தேன். அதன தாக்கம்தான்

இந்தப்பதிவு.


தகடூரை ஆண்ட அதியமானுக்கும் , காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கும்பகை. போர் மூளும் தருணம். அதியமானின் அவையை அலங்கரித்தவர் ஔவையார். அவர் தொண்டைமானிடம் தூது  செல்கிறார். அவன் பெருமையுடன் அவன் படைக்கலங்களைக் காட்டுகிறான்.எல்லாம் "நெய் பூசி" பளபள என மின்னுகின்றன.ஔவையார் கூறுகிறார்:

"என் தலைவன் அதியமான் பயன்படுத்திய வேல்கள் 

பகைவரைக் குத்தி, 

நுனி ஒடிந்தும் மழுங்கியும் சிதைந்து, 

செப்பம் செய்வதற்காகக் 

கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன.உன்னிடம் படை இருக்கிறது. 

வீரர்களின் பயிற்சி இல்லை

என் தலைவனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வீரர்கள் மிகுதிமக்களுக்கும் அவனுக்கும் நெருங்கிய உறவு. 

போர் என்றால் அவனைவிட அவன் மக்கள் முன்வந்து நிற்பர்."என்கிறார்.

தொண்டைமான் விவரமானவன்; புரிந்து கொண்டான். போர்செய்யவில்லை!


புறநானூறு பாடல் 95(நீண்ட பதிவு காரணமாக பாடல் பதிவு செய்யவில்லை. நூலகம் சென்று படிக்க வைக்க ஓர் உத்தி!!)


என்னே ஒரு இராஜ தந்திரம் மக்களே!


இந்திய வெளியுறவுத்துறைப்பணியில் பயிற்சி இல்லாது எண்ணங்களாலும், எழுத்தாணியினாலும் உலகை மாற்றியவர்🙏🙏


இவரைப்போன்றவர்கள் எங்கு போனார்கள்? கடற்கரையில் சிலையாக நிற்கிறார்களே!







இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,

கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய்அணிந்து,

கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,

பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,

கொல் துறைக் குற்றில மாதோ என்றும்         5

உண்டாயின் பதம் கொடுத்து,

இல்லாயின் உடன் உண்ணும்,

இல்லோர் ஒக்கல் தலைவன்,

அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.

சிலம்பொடு ஒரு பயணம்-{13}மனை அறம் படுத்த காதை

 •••••••••••••••••••••••••••••••


*{13} சிலம்பொடு ஒரு பயணம்*


*மனை அறம் படுத்த காதை*

•••••••••••••••••••••••••••••••


இரண்டாம் பாதையாம் *மனை அறம் படுத்த காதை* யில் பயணம் தொடர்கிறது.


மத்தளங்கள் ஆர்ப்பரிக்க 

வரி சங்கம் நின்றூத 

புகார் நகரே விழா கோலம் கொண்டு 

சிறப்புற நடந்த திருமணத்தில் 

மங்கலகரமான வாழ்த்தொலிகள் விண்ணை முட்ட

இரு மனங்கள் ஒன்றே இணைந்தன. 


இல்லற வாழ்வு இனிதே துவங்கியது. 

இனிமையான இல்லறத்தை முதல் பாடல் தெளிவாக உரைக்கிறது. 


புகார் நகரின் பெருமையை 


*உரைசால் சிறப்பின் அரைசு விழை திருவின் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்* 


அதாவது பலரும் போற்றிப் பாராட்டும் சிறப்பும், அரசர்களே ஆசைப்படும் அளவு செல்வச் செழிப்பும் உடைய நெய்தல் நில மக்கள் நிறைந்த வாழும் வளமெல்லாம் நிறைந்தது புகார் நகரம் எனத் துவங்கி,


*முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்...*

*கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட....*


என்ற வரிகளின் மூலம் அலை முழக்கமிடும் கடல் சூழ்ந்த நாடுகளில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும் கப்பலில் வந்தாலும் கால்நடையாய் கொள்வதற்கு நிறைய வளங்கள் இருந்த புகார் நகரம் என அடுக்கடுக்காய் விவரித்தபின் கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை பற்றி இப்படியாக கூறுகிறார்: 


*கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்*

(கண்ணகியும் கோவலனும்) 


*மயன்விதித்த தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்து வழி*


அதாவது, 

தேவதர்ஷனே செய்திட்ட மாணிக்க கால்கள் இருந்த கட்டிலின் மேல் அமர்ந்து இருநிலை மாடத்தின் கீழ் ஒரு மாடத்தில் இனிதே இன்புற்று இருந்தன ராம். 


இவ்வாறாக *இல்லற வாழ்வு இனிதே நடந்த காலம்* எனும் பாடலில் விவரித்தபின்,


அடுத்து வரும் *ஏழெடுக்கு மாளிகை* எனும் பாடலில் எவ்வாறு இன்புற்று இருந்தனர் எனக் கூறுகிறார்: 


*கழுநீர் ஆம்பல் முழு நெறிக் குவளை அரும்பொதி அவிழ்ந்த கரும்பு இமிர் தாமரை* 


*வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக் கோதை மாதவி செண்பகப் பொதும்பர்..*


செங்கழுநீர் பூ, செவ்வாம்பல், நன்கு மலர்ந்த குவளைப் பூ, இதழ் விரிந்து வண்டு வந்து மொய்க்கின்ற தாமரை, வயல்வெளிகளில் மலர்ந்து உள்ள பூக்கள், மற்றும் உள்ள வேறு வகை பூக்கள், வெள்ளைத் தாழை மடல் விரிந்த தாழம்பூ, மலர்ந்து தொங்கும் செண்பகப்பூ என பூக்கள் நிறைந்த நந்தவனத்திலிருந்து வரும் வண்டுகள் ரீங்காரமிடும் இடமாம் அது. வண்டுகள் நுழையும் சாளரத்தின் வழியே தென்றல் இனிமையாய் வீசுகிறதாம். 


உள்ளம் மகிழ, உணர்வில் இன்பம் ஊற்றெடுக்க, இருவரும் - காமனும் ரதியும் போல ஏழடுக்கு மாளிகை நிலா முற்றத்தை வந்தடைந்தனராம். 


இத்தனை பூக்கள் இருக்கும் நந்தவனம் பற்றி படிக்கையிலேயே அகம் மகிழ்கிறது. அகக்கண்ணில் அக்காட்சி திரைக் காவியமாய் விரிகிறது.


இதோ மழலைக் கவி தொடர்கிறார்:


மணவாழ்வு கண்ட காவியத்தலைவியும் தலைவனும் இல்லறம்  ஆரம்பித்த காட்சி. 


ஐயா, தாங்கள் புகார் நகர் சிறப்பை நன்கு விளக்கி ரசித்தீர்கள்.


இந்நகர் *"தவாஅ வளம்"* - வற்றாத செல்வமும், வளமையும் உள்ள நகராம்.உணவுக்குப் பஞ்சமில்லை; " சோழ வளநாடு சோறுடைத்தன்றோ! உள்நாட்டு , வெளிநாட்டு வர்த்தகங்களால், இலக்குமி எப்போதும் தங்கி உள்ள நகரம்.  *"உத்தரக்குருவின் ஒப்பத்தோன்றிய "நகரம்*

"குரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய மேனிலையுலகம். போகபூமி, வடக்கில் உள்ள வளமான தேசங்களைப்போல எனக்கொள்ளலாம்."


இனி மனையறத்தைக் காண்போம்.


அறம் இருவகைப்படும். இல்லறம், துறவறம் என்பதாக.

இங்கு அடிகள் இல்லறத்தை மனையறம் என்கிறார். அன்பு, கற்பு, விருந்தோம்பல், பிறர்நலம் பேணுதல் , ஒழுக்க நெறியிலிருந்து வழுவாதிருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தொழுகும் பெண்ணே இல்லத்தின் நீங்கா முனைவர், ஆம்.. தாம்கொண்ட நெறி, கடமை, கொள்கைகளிலருந்து வழுவாது இருப்பவர்.  ( முனைவர்) 


எனவே இல்லறம், நல்லறவழிப்பட்டு, மனையறம் ஆயிற்று.

படுத்த என்றால் இங்கு, இன்று நாம் கொள்ளும் பொருள்அல்ல; அமைத்த என்று கொள்ள வேண்டும்.


மனையறம் வளர்க்க வந்த கண்ணகி" *"கயமலர்கண்ணி"* என்றும் *"காதல் கொழுநன்"* என்று கோவலனும் வருணிக்கப் படுகின்றனர்.

குவளை மலர் போன்ற கண்களை உடையவளாம் கண்ணால் நகும் கண்ணகி!

" காதல் 

கொழுநன்" - அன்பான கணவன் என்று கண்ணகியின் 

பார்வையில் கோவலனைக் குறிப்பிடுகிறார். 

கோவலன்  அறிமுகத்தில், *"மடவார் ..... பாராட்டிக் கண்டேத்தும் கிழமையான்"* எனப்படுகிறான்.

கண்ணகி தன் கணவன் மீது கொண்ட காதலில்  உறுதியாக நிற்க, கோவலன்  பின்னர், பிற மாதர் வயப்படக்கூடியவன் என்று சூசகமாக, அடிகள் உணர்த்துகிறாரா?


 இன்றய பல அடுக்கு மாடிகளின் முன்னோடி, இவர்கள் கூடிய பலமாடக்கூடல். " அரமிய" த்தில் ( மாளிகையின் மேல் நிலை மாடம்) பல் வேறு  மலர்களின்  " மணங்களை சுமந்து வந்த *"வண்டோடு புக்க மணவாய்த் தென்றல் கோலச்சாமரக் குறுங்கண்"* வழி நுழைந்து  நிலா முற்றத்தில் காதலில் கட்டுண்ட இருவரையும் அரவணைத்தது. *நதியில் விளையாடி கொடியில் தலை சீவி* வந்த தமிழ்த் தென்றல்!


என்னே ஓர் எழுத்தோவியம்!

அடிகள் கைகளில் உள்ளது எழுத்தாணியா அல்லது தூரிகையா? 

எதையும் துறந்த இவர் அகப் பொருளை எவ்வளவு இலாகவமாக, கையாளுகிறார்?!

வியப்பு, ஆச்சரியங்களுக்கு நம் தமிழ் இலக்கியங்களில் குறைவே கிடையாது என்பதை நாம் இப்போது கண்ட காட்சியே சாட்சி.

காதலர் இருவர்" *செம்புலப் பெயல்நீர் போல்,* ஒன்றிணைந்த  காட்சிகளைக் காண,

ஆயிரம் கண்கள் நமக்கு வேண்டும். 


*நம் பயணம் தொடரும்.*

Friday, March 20, 2026

20.3.26 "சிட்டுக்கு௫விகள் தினம்"



"சிட்டுக்கு௫வி"


சிட்டென பறந்து விடுவதால் சிட்டுக்கு௫வி ௭ன்று பெயர் வந்ததோ!!!


(நம் சிறு வயதில்) சிறுவர் முதல் senior citizens வரை சிட்டுக்கு௫வியை ரசிக்காதவர்கள் யாரேணும் ௨ண்டோ?


சிடு மூஞ்சிகள் கூட சிரித்து ரசித்து மகிழும் சின்னக்கு௫விகள் ௮வை.


௭த்தனை பெரிய வீடுகளாயினும், யாரிடமும் பர்மிசன் கேட்காமல், பரணியில் கூடு கட்டி  பரவசமாய் வாழும் பறவை இது  !


௨ள் வாடகை கூட தராமல் ௨ல்லாசமாக சத்தமிட்டு ௨ரிமையாய் வாழும் பறவை இது.


ஒற்றை கம்பி தம்புராவின் சீர் செய்த ரீங்காரத்தில், சிலிர்ப்பு சிறிதே கலந்து  சிட்  சிட் என்று சிங்கார இசை ௭ழுப்பும்  சிறிய பறவை இது.!


தரையில் சிதறியி௫க்கும் சோறும்  தானியங்களும் சிற்றுண்டியாய் ௨ண்டு வாழ்ந்த சிட்டுக்கு௫வி,வயல்களும் வரப்புகளும், செடிகளும் மரங்களும் காணாமல் போய் ௮டுத்தடுத்து இ௫ந்த வீடுகளெல்லாம் ௮டுக்கு வரிசை வீடுகளான பின், ௨ணவை தேடி  ௮ரிசி மில்களின் ௮௫கே ௮டைக்கலம் புகுந்து விட்டன இக்கு௫விகள் !!


கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்களுக்கு நடுவில் குதூகலமாக வாழ்ந்த சிட்டுக்கு௫விகள்,

தனிக்குடித்தனங்களை பார்க்கப்பிடிக்காமல் தள்ளியே தூரமாய் போய் விட்டனவோ?


சிட்டுக்கு௫விகள் காணாமல் போனவுடன், சிவனே ௭ன்று நிற்கும் செல்போன் டவர்களை குறை சொல்லாதவர் யா௫ம் ௨ண்டோ? !


மனிதர்களோடு நெ௫ங்கி வாழ்ந்த சிட்டுக்கு௫விகளின் ஓசையும் சிலிர்ப்பும் , மறுபடியும் மனித வர்க்கத்திற்க்கு கிடைக்குமா ௭ன்று தெரியவில்லை!!!


               A. RAVI ,  BSNL.

Thursday, March 19, 2026

சிலந்தி வலை

 சிலந்தி வலை


பூமியைப் பிளக்கும் சண்டைகள்,

மழையாய் பொழியும் கொஞ்சல்கள் 


அக்னியின் சீற்றமாய் கோபம்

பனியாய் பொழியும் அன்பு


 விடுதியில் சேர்க்க சொல்லும் வாக்குவாதங்கள்

தனி அறைக்குக் கூட செல்ல முடியாத பாசப் பிணைப்புகள்


வெறுப்பின் உச்சத்தில் வார்த்தை மோதல்கள் 

வாஞ்சையாய் அழைக்கும் அழைப்புகள்


இவ்வலையில் வசிக்கும் 

அண்ணன் தங்கை

சிலந்திகளுக்கே புரியும்- 

வலையின் பின்னல்கள்!!!


இதையறியாது வண்டாய் 

சிக்கிக் கொள்ளும் அம்மா நான்!!!

Wednesday, March 18, 2026

அமெரிக்க அணில்கள்-பயணக் கட்டுரை(9)

 பாகம் 9

பயணங்கள் முடிவதில்லை…

*கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்… நான் அமெரிக்காவில் கண்டுபிடித்ததை பார்க்கலாமா?” Buc-ee’s, World Famous Restrooms, மற்றும் ‘கட்டுமானத்தில் பங்கு பெறாத’ அமெரிக்க அணில்கள்!*


San Antonio நகரிலிருந்து Houston நோக்கி Interstate 10 (I-10) நெடுஞ்சாலையில் சுமார் 80 மைல் பயணம் செய்தால் Luling என்ற சிறிய நகரம் வருகிறது. அந்த நகரத்தில் அமைந்துள்ள Buc-ee’s Luling இது ஒரு சாதாரண இடமல்ல; ஒரு தனி அனுபவம்.


முதலில் பார்த்தபோது இது ஒரு பெட்ரோல் நிலையம் போலவே தோன்றியது. ஆனால் அருகில் சென்றபோது அதன் பரப்பளவு, அமைப்பு,அனைத்தும் சேர்ந்து ஒரு சிறிய நகரத்தை நினைவுபடுத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிபொருள் நிரப்பக்கூடிய அளவிற்கு fuel pumps!


1982ஆம் ஆண்டு Arch “Beaver” Aplin III மற்றும் Don Wasek ஆகியோர் தொடங்கிய இந்த நிறுவனம் இன்று டெக்சாஸின் மிகவும் வெற்றிகரமான convenience store நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.


உள்ளே சென்றால் அது ஒரு பெரிய supermarket போல இருக்கும். Beaver Nuggets எனப்படும் இனிப்பு ஸ்நாக்ஸ், Texas BBQ brisket sandwich, பலவிதமான sweets, snacks, Buc-ee’s லோகோவுடன் T-shirts மற்றும் souvenirs — இவை அனைத்தும் பயணிகளை கவரும்.


அங்கு சுற்றி பார்த்துக் கொண்டிருந்தபோது, *ஒரு அணில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.* இதைப் பற்றி எழுதினால் சிலர் “இந்த மனிதருக்கு வேறு வேலை இல்லையா?” என்று நினைக்கலாம்!


ஆனால் அந்த அணிலைப் பார்த்தபோது ஒரு சின்ன உண்மை புலப்பட்டது. நம் நாட்டில் உள்ள *அணில்களின் முதுகில் மூன்று வெள்ளை கோடுகள் இருக்கும்.* அதற்கு ஒரு ஆன்மீகக் கதையையும் நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் இங்கு பார்த்த *அணில்களுக்கு அந்த கோடுகள் இல்லை!*


அதனால் மனதில் ஒரு நகைச்சுவையான எண்ணம்

*அந்த புனிதப் பணியில் இங்குள்ள அணில்கள் பங்கேற்கவில்லையோ!*


Buc-ee’s-ஐ உலகப்புகழுக்கு கொண்டு சென்றதில்  அதன் restrooms ம் ஒரு காரணம். உள்ளே சென்றவுடன் “World Famous Restrooms” என்ற பலகை பெருமையாக வரவேற்கிறது.


அந்த restrooms, உலர்ந்தது, சுத்தம், ஒழுங்கு எல்லாம் மிக உயர்ந்த தரத்தில் பராமரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இவை மிகப் பிரபலமானவை.


*எந்த காரியத்தையும் சிரத்தையுடன் செய்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.*


இதைக் கண்டபோது, 2023ஆம் ஆண்டு ஐரோப்பாவில் என் அனுபவம் நினைவுக்கு வந்தது. அங்கு பல இடங்களில் restroom பயன்படுத்த 2 euro கட்டணம் வசூலித்தார்கள். பயணிகள் restroom-க்கு என்றே தனி budget வைத்துக்கொள்ள வேண்டிய நிலை!


ஆனால் அமெரிக்காவில், நான் கவனித்தவரை, restroom பயன்படுத்த எந்த செலவும் இல்லை. Walmart, Target, Costco போன்ற கடைகளிலும், McDonald’s, Subway, Taco Bell போன்ற உணவகங்களிலும் எளிதாக இலவசமாக பயன்படுத்த முடிகிறது.


இந்த எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது:

ஒரு நல்ல சாலைப் பயணத்திற்கு சுத்தமான, எளிதில் கிடைக்கும் restrooms மிகவும் அவசியம்.


அந்த தேவையை Buc-ee’s போன்ற இடங்கள் சிறப்பாக நிறைவேற்றுகின்றன.


Luling நகரிலுள்ள Buc-ee’s 

ஒரு சாதாரண fuel station அல்ல…

ஒரு சிறிய அனுபவ உலகம்!

Tuesday, March 17, 2026

நிம்மதி

 !"*நிம்மதி!"*

 

 அணு ஆயுதப் போரை தவிர்த்தால் அவனியி ல் அனைவருக்கும் நிம்மதி!!

 அனைவரும் தவறாமல் வாக்களித்தால் நாட்டிற்கு நிம்மதி!!


 ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் மக்களுக்கு நிம்மதி!!


 அரசு ஊழியர்கள் அருமையாக வேலை செய்தால் அரசுக்கு நிம்மதி!!


 கொடுத்த கடன்                வட் டியுடன் திரும்ப வந்தால் கடன் கொடுத்தவருக்கு நிம்மதி!!


 கடன் கொடுத்தவர் கேட்காமல் விட்டாலோ கடன் வாங்கியவருக்கு நிம்மதி!!


 வலையில் தப்பித்து தண்ணீரில் திரும்ப விழுந்தால் மீனுக்கு நிம்மதி!!


 நோயில்லாமல் வாழ்வு கிடைத்தால் மானிடனுக்கு நிம்மதி!!


 பெற்றோர் சொல்படி பிள்ளைகள் நடந்தால் பெற்றோருக்கு நிம்மதி!!


 பருவத்தில் மழை பெய்தால் விவசாயிக்கு நிம்மதி!!

 வாய்க்கு ருசியாக உணவு உண்டால் அந்த நேரத்திற்கு நிம்மதி!!


 வேலை செய்யாமல் ஊதியம் பெற்றால் தொழிலாளிக்கு நிம்மதி!!


 சொல்வதை எல்லாம் தொண்டர்கள் கேட்டால் தலைவருக்கு நிம்மதி!!


 கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்தால் இருவருக்குமே நிம்மதி!!


 விளையாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி பெற்ற அணிக்கு நிம்மதி!!


 எழுதிய எழுத்துக்கள் பாராட்டினை பெற்றால் எழுத்தாளருக்கு நிம்மதி!!


 நல்ல தொழில் தர்மம் உடைய மருத்துவர் கிடைத்தால் நோயாளிக்கு நிம்மதி!!


 செவிக்கு சிறந்த செய்திகள் கேட்டால் கேட்பவருக்கு நிம்மதி!!


 காவல் ஆய்வாளர் கண்டுக்காம இருந்தால் திருடனுக்கு நிம்மதி!!


 திருடு போனது திரும்ப கிடைத்தால் திருடு கொடுத்தவருக்கு நிம்மதி!!


 நல்ல நகைச்சுவை உடைய நண்பர்கள் அமைந்தால் நண்பர்களுக்கு நிம்மதி!!


 ஊர்  பாராட்டும் படி பிள்ளைகள் பெற்றால் பெற்றோருக்கு நிம்மதி!!


 தடையில்லா தண்ணீரும், மின்சாரமும் கிடைத்தால் அனைவருக்கும் நிம்மதி!!


 சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் அவரை அண்டி இருப்போருக்கு நிம்மதி!!


 கடனும், படுக்கை கஷ்டமும் இல்லாமல் பெற்றோர் இறக்கும் 

போது கண்களை மூடினால் பிள்ளைக ளுக்கு நிம்மதி!!

!*சிசு*!

Monday, March 16, 2026

மூடநம்பிக்கை

•••••••••••••••••••••••••

*மூடநம்பிக்கை*

•••••••••••••••••••••••••


பண்பட்ட தமிழ்ச் சமூகம் 

தடுமாறி - தடம் மாறிப் 

போனதினால் 


புண்பட்டுப் போன 

புலவர் ஒருவர் புலம்பியே 

சொல்லிச் சென்றார் 


கண்மூடிப் பழக்கமெல்லாம் 

மண்மூடிப் போகட்டும் 

என்றுரைத்தார்.


உண்மை இதுவென 

யாவரும் உணர்வீர்

உணர்ந்து தெளிவீர்


கண்மை ஒத்த காரிருளில் 

எவரும் மூழ்காதீர்

தெளிவுற வாழ்வீர்.


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Saturday, March 14, 2026

சிலம்பொடு ஒரு பயணம்-{12}திருமண விழாவும் வாழ்த்துரைகளும்

 °`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°

*{12} சிலம்பொடு ஒரு பயணம்*

திருமண விழாவும் வாழ்த்துரைகளும்

°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°


நாயகியையும் நாயகனையும் அறிமுகப் படுத்திய அடிகள் 


நலம் பல அவர்கள் பெற 

நானிலம் போற்றும் வகையில் 

திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வை 

நயம் பட விவரிக்கிறார் *திருமணக் காட்சி* எனும் பாடலில் 


மாநாயக்கனும் மாசாத்துவானும் தமது செல்வங்களை தம்பதியராக்க நல்ல நாள் ஒன்றில் நிச்சயித்தனர். யானை மேல் மணமகளை அமர வைத்து 

நகர்வலம் வந்து அறிவித்தனர். 


இப்பாடலில் சில வைர வரிகள் 

நம் கருத்தைக் கவருகின்றன. 

அவையாவன:


*முரசு இயம்பின முருகு அதிர்ந்தன முறை எழுந்தன*


அதாவது திருமணம் நிச்சயிக்கப் பட்ட அந்நாளில், முரசுகள் முழங்கினவாம். மத்தளங்கள் ஆர்த்தனவாம். சங்கொலி நகரெங்கும் ஒலித்ததாம்.


திருமண நாளில் திகழ்ந்த காட்சியை இப்படிக் கூறுகிறார் நம் அடிகளார்: 


*நீல விதானத்து நித்திலம் பூம் பந்தற் கீழ்*


நீலப் பட்டாடையை மேல் விதனமாக அமைந்திருந்த முத்துப் பந்தலின் கீழே திருமணம் நடந்ததாம். கோவலன் முதுமறையான் கூறிய விதிப்படி தீவலம் வந்து கண்ணகியை மணம் புரிந்தானாம். இப்படி எழுதிய அடிகள் அக்காட்சியை கண்ட கண்கள் செய்த புண்ணியத்தை சிலாகிக்கிறார். 


*காண்பார் கண் நோன்பு என்னை* 


என பதிவு செய்கிறார்.  இக்காட்சியை கூறும் இவ்வரிகளைப் படிக்கும் கண்களும் அதே புண்ணியத்தை செய்துள்ளனவோ! 


திருமணம் முடிந்ததும் அடுத்தது என்ன வாழ்த்துகள் தானே!


*வாழ்த்துரைகள்* எனும் தலைப்பில் அடுத்த பாடலை எழுதுகிறார். 


*விரையினர் மலரினர் விளங்கு மேனியர்*


 *உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்*


*சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்*


திருமணத்திற்கு வந்த மகளிர் வாசனை நறுமணம் சுமந்து வந்தனராம். சிலர் மலர் கொண்டு வந்தனராம். வேறு சிலர் பெண்மைக்கு விளக்கமாக அணிமணி புனைந்து அழகாக வந்தனராம்.


இவர்கள் அனைவரும் கூறிய வாழ்த்துரையில் விண்ணும் மண்ணும்  நிறைந்ததாம்.

அப்பகுதியில் வரும் வைர வரிகள்:


*காதலர் பிரியாமல் கலவுக்கை நெகிழாமல்*


*தீது அறுக என ஏத்திச் சின்மலர் கொடு தூவி*


அதாவது, 'கட்டிய கணவனைப் பிரியாமல், ஒட்டிய கைகளை விலக்காமல், ஒரு குறையுமின்றி நலமாக வாழ்க' என வாழ்த்தினராம்.


மணமக்களை மக்கள் வாழ்த்தினர். 

அந்நிகழ்வை நம் கண் முன்னே தீந்தமிழில் ஓவியமாய் தீட்டிய அடிகளாரை நாம் வாழ்த்துவோம்.


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


இப்போது நம் மழலைக் கவி என்ன சொல்கிறார் பார்ப்போம்.


*திருமண விழாவும் வாழ்த்துரைகளும்.*

--------------------


ஐயா, 

மணவிழாவுக்கு, புகாரே எப்போதும் கூறாத எளியவன் எனக்கும் அழைப்பு  வந்தது. நான்கண்டு களித்த காட்சி:


சம்பந்திகள் - சம ( செம) செல்வந்தர்கள்:

மாசாத்துவான் பெரும் உள்நாட்டு வணிகன் (சாத்து  என்பது உள்நாட்டு வாணிபத்தைக் குறிக்கிறதாம்)

மாநாய்கன் பெரும் கடல்  ஒடி திரவியம் கைப்பட்டவன் (நாய்கன் என்றால் நாவாயோடு தொடர்புடையவன்).

பணம் பணத்தோடு சம்பந்தம் வைத்தால், அங்கே மங்கல இலக்குமியின் ஆட்சிதான்! நம்ம அம்பானி அடானி சம்பந்தம் வைத்தால் போல்!


மணமகள் ஊர்வலம்:

நாம் மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் ஊர்வலங்கள் பார்த்திருக்கிறோம். இங்கு மணமகள் கண்ணகி யானை மீதமர்த்தப்பட்டு ஊர்வலமாக வருகிறாள். 12 வயது சிறுமிக்குக் கொண்டாட்டம்தான்!

பல  இசைக் கருவிகள் மங்கல இசை கூட்ட,  பல வண்ண அழகு மலர்க் கூட்டங்கள்  ஒன்று திரண்டு வந்தாற் போல மகளிர் கூட்டம் புடை சூழ மணமகள் ஊர்வலம்.  தமிழ்ப்பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே,அரசன் பவனி வருவது போல!

ஆனால் சோழன் செம்பியன் விழாவில் பங்கேற்றதாக, தகவல் இல்லை. பக்கத்து நாட்டுக்குப் படையெடுத்துச்சென்று விட்டாரா?!

இந்த காட்சியை அடிகள் எழுத்தோவியமாகத் தீட்டியது, பிரமாண்டத் திரையில் பாகுபலி படம்  பார்த்த உணர்வை ஊட்டுகிறது.


மண மண்டபம்:

மண மண்டப அலங்காரம் பற்றி, ஐயா, தாங்கள் சிலாகித்துக் குறிப்பிட்டீர்கள். கடற்கரையில் பெரிய விதானங்கள்  கொண்ட அமைப்பு: ஊரே  திரண்டு விழாவுக்கு  வரும்நேரம் அனைவருக்கும் இடம்தரும் அமைப்பு.இன்று" தனித்துவமான " இடங்களை, கடற்கரை உள்ள இடங்களை,  (destination wedding) வெளிநாடுகளில் தேடி அங்கு மணம் புரிவது மேட்டுக்குடியினரின்  படாடோபச்செயல். இங்கோ, அழகான கடற்கரையில் தமிழ்சூழலில்  மண்டபம் அமைந்து விட்டது  புகார் தந்த சிறப்பு.


மண நிகழ்வுகள்:

மணவிழாவில், கோவலன் கண்ணகி இணையல் "சகடு அணைய" என்கிறார். சந்திரன் பிரிய துணைவி ரோகிணியோடு கூடியது போன்றதாம். கற்புக்கு உதாரணமாம் அருந்ததியோடு கற்புக்கனலாக விளங்கப் போகும் நம் கண்ணகியை ஒப்பிடுகிறார்.


வாழ்த்துகள்:

இவ்விழாவில் பங்கேற்று  வாழ்த்துகள் கூறி மங்கலத்துக்கு மங்கலம் கூட்டியதாக பல்வகை மகளிரைக் குறிப்பிடுகிறார். ஓரக்கண்ணால் பார்ப்பவர் "ஒசிந்த நோக்கு", தயங்கித்தயங்கி பார்ப்பவர்( " தயங்கு கோதையர்) , இடித்த சுண்ணத்தர் ( இக்கால "முகப் பவுடர்" போல வண்ணப்பூச்சு பூசியவர்கள்!) எனப்பலரை இத்துறவி விவரிக்கிறார்.


வாழ்த்துரை:

"காதலர் பிரியாமல் கலவுக்கை நெகிழாமல்","தீது அறுக என ஏத்திச் சின்மலர் கொடு தூவி"

என்பார்அடிகள்.

ஐயா, இதற்கு விளக்கம் தாங்கள் அளித்து விட்டீர்கள்.


ஏன், பிரியாமல், நெகிழாமல்,தீது அறுக போன்ற " அறம் " விளைக்கும் சொற்கள்?

"இன்று போல்என்றும் வாழ்க, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க" என்பது போல வாழ்த்தியிருக்கலாமோ,எனத் தோன்றலாம். அடிகள் வருங்காலத்தில் வரும் பிரிவுத் துயரை, சூசகமாக உணர்த்துகிறாரா? அவரவர் பார்வைக்குத் தக்கபடி உணரலாம்.


நல்அமளி என்கிறார் , கண்ணகியும் கோவலனும் சேர்ந்த கட்டிலை. அமளி என்றால் கட்டிலாம் .இன்று நாம் கொள்ளும் பொருள்வேறு.


சில சொல்லாடல்கள்: 

அதிசயிக்க வைக்கின்றன, அவற்றின்நயம்;

முரசு இயம்பின- இனிமை ஒலி தந்தன.

முருடுஅதிர்ந்தன - மத்தளங்களின்ஆவர்த்தனங்கள்

முறை எழுந்தன பணியம்- வரிச்சங்கங்களின் வரிசை முழக்கம். 

ஒவ்வொரு கருவி எழுப்பும் இசைக்கும் தனித்தமிழ் சொற்கள். செம்மொழி நம்மொழி ஐயா!


முரசு, முருடு, முறை- " மு"னாக்கு " மு" னா!

நீல விதானம், நித்திலப்பூம்பந்தர்- " நீ" க்கு நீ"

எழுத்துகளின் அபிநயம் அற்புதம்.


விருந்துண்ணும் அறையை நோக்கி நடக்கின்றன கால்கள், நாக்கும்,மூக்கும்வழி காட்ட!!


*பயணம் தொடரும்*

Friday, March 13, 2026

இக் கொடிய போரால்.

 இக் கொடிய போரால்...


போரால் உலகில் எத்தனையோ கேடுகள் 

   புரிந்து கொள்ளுமா போரிடும் நாடுகள்?


ஈரான், அமெரிக்கா இடையே சண்டை 

   இடையே சுழற்றுகிறது இஸ்ரேல் கம்பை 


வீரமதைக் காட்டும் போர் அன்று நிகழ்ந்தது 

   வீட்டில் இருந்து வேலை (WFH) என்பது போலானது 


தூரத்தில் எங்கோ இருக்கும் இலக்கு அதை

   துல்லியமாய்த் தாக்கும் கொடும் ஏவுகணை 


பாரின் இயக்கமது கச்சா எண்ணெயால்

   பற்றி எரியுது ஐயோ ! கப்பல் கப்பலாய்

   

காரசாரமான சாம்பார் கிடைக்கவில்லை 

   கெட்டி சட்னியுடன் இட்லி இறங்கவிலை


தாரம் சுவையாகச் சமைத்ததை உண்டோம் 

   தங்க வளையல் மாட்டி அழகும் பார்த்தோம் 


ஆரம்பமாகுமா வீட்டுச் சமையல் மீண்டும் 

   அடுத்தடுத்து உணவகம் மூடுதே கதவும்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 13/3/2026

பணம் எனும் மனம் மயக்கும் மந்திரம்

 !!*பணம் எனும் மனம் மயக்கும்  மந்திரம்*!!


 பாசத்தைக் கட்டி பணத்தை சேர்த்து கண்ணம்மா, 

  அதை பாங்காக வைக்காவிட்டால் கண்ணம்மா!!


 பார்ப்பவர் பரிகசிப்பார் கண்ணம்மா,               

  அந்த பாவம் நமக்கு வேண்டாமடி 

கண்ணம்மா!!


 கண்டிப்பாய் கட்டி காத்தால் கண்ணம்மா,

 அந்த கஷ்டம் நம்மை

 விட்டோடிம் கண்ணம்மா!!


 காசேதான் கடவுளடி கண்ணம்மா,               

  அதை அந்த கடவுளும் அறிவாரடி கண்ணம்மா!!


 இதை நான் சொல்லாவிட்டால் கண்ணம்மா,          

 உண்மை இன்பம் அங்கே வாரது கண்ணம்மா!!


 சத்தியமாய் நான் சொல்வேன் கண்ணம்மா,   

தினம் சந்தோஷமாய் வாழ்ந்திடுவோம் கண்ணம்மா.                

     சிசு.

அலாமோ – ஒரு வரலாற்றுப் பயணம்-பயணக் கட்டுரை(8)

 பாகம் 7

பயணங்கள் முடிவதில்லை

*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*


*அலாமோ – ஒரு வரலாற்றுப் பயணம்*

San Antonio நகரின் மையத்தில் அமைந்துள்ளது Alamo. இன்று இது ஒரு சுற்றுலா இடமாக இருந்தாலும், அதன் பின்னால் மறைந்து கிடப்பது மிகப் பெரிய வரலாறும் இரத்தத்தால் எழுதப்பட்ட போர்கதையும் ஆகும்.


அலாமோ கட்டிடத்தை பார்க்கும் போது அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்பதே உண்மை. வெளியே பார்த்தால் அது ஒரு சிறிய *பழமையான தேவாலயக் கட்டிடம் போலவே தெரிகிறது.*


அங்கு நுழைவதற்கு நுழைவுச்சீட்டு இலவசம். உள்ளே செல்லும் முன்பே மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் வழிநடத்துகிறார்கள். பார்வையாளர்கள் குழப்பமடையாமல் எங்கு செல்ல வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்று மிக நுட்பமாக வழிகாட்டுகிறார்கள்.


அங்கு உள்ள ஒரு அதிகாரப்பூர்வ வழிகாட்டி மிகுந்த உணர்ச்சி பூர்வமாக அலாமோவின் வரலாற்றை விளக்கத் தொடங்கினார். அப்போது தான் அந்த இடத்தின் உண்மையான மகிமை மெதுவாக புரிய ஆரம்பித்தது.


1836 ஆம் ஆண்டு நடைபெற்ற Alamo போர் பற்றி அவர் விளக்கினார். மெக்சிகோவின் அதிபரும் படைத்தலைவருமான Santa Anna தலைமையிலான பெரிய படை San Antonio நகரை முற்றுகையிட்டது.


அந்த நேரத்தில் அலாமோ கோட்டைக்குள் இருந்தவர்கள் சுமார் 200 டெக்சாஸ் போராளிகள் மட்டுமே.அந்த நேரத்தில் அலாமோ கோட்டைக்குள் இருந்தவர்கள் சுமார் 200 டெக்சாஸ் போராளிகள் மட்டுமே. அவர்களில் முக்கியமானவர்கள்:

William B. Travis

James Bowie

Davy Crockett


ஆயிரக்கணக்கான மெக்சிகோ படைகளை எதிர்த்து அவர்கள் பல நாட்கள் வீரமாக போராடினர்.


1836 மார்ச் 6 அன்று நடந்த இறுதி தாக்குதலில் அந்த 200 போராளிகளும் கிட்டத்தட்ட அனைவரும் உயிரிழந்தனர்.


அந்த சம்பவத்தை கூறும் போது அந்த அதிகாரியின் குரல் இன்றும் உடைகிறது.  இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்வு அவர்களுக்கு எவ்வளவு ஆழமான உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை அப்போது உணர முடிந்தது.


அங்கிருந்து வெளியே வரும் போது என்னுள் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. ஏனோ தெரியவில்லை, என் நினைவில் ஜாலியன்வாலாபாக் வந்தது.


அலாமோவில் உயிரிழந்தவர்கள் எல்லாம் ஒரு வீரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். தங்கள் நிலத்தை காக்க போராடியவர்கள்.


ஆனால் ஜாலியன்வாலாபாக்?


அங்கு *ஆயுதமே இல்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.* நிராயுதபாணி மக்கள் சிக்குண்டு உயிரிழந்த அந்த சம்பவம் இந்திய வரலாற்றின் வேதனையான பக்கங்களில் ஒன்று.


அலாமோவில் பார்வையாளர்களுக்கு அந்த வரலாற்றை தெளிவாக விளக்கும் அலுவலகமும் வழிகாட்டிகளும் உள்ளனர். அவர்கள் அந்த நிகழ்வின் பின்னணியை உணர்ச்சியோடு விளக்குகிறார்கள். அதனால் அந்த இடத்தின் முக்கியத்துவம் மனதில் ஆழமாக பதிகிறது.


அப்படியிருக்கையில்,


நம் ஜாலியன்வாலாபாக் போன்ற வரலாற்று இடங்களில் ஏன் அதேபோல் ஒரு மையம் அமைத்து பார்வையாளர்களுக்கு அந்த நிகழ்வின் பின்னணியை முழுமையாக விளக்குவதில்லை?


வரலாற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றால்,

அதை பார்க்க மட்டும் அல்ல, புரிந்து கொள்ளவும் செய்ய வேண்டும்.


சில இடங்கள் கற்களாலும் சுவர்களாலும் கட்டப்படுவதில்லை.

அவை வீரமும் தியாகமும் நினைவுகளும் சேர்ந்தே கட்டப்படுகின்றன.

Wednesday, March 11, 2026

மாதராய் பிறக்கவே மாதவம் செய்திட வேண்டும் அம்மா

 "மாதராய் பிறக்கவே 

மாதவம் செய்திட வேண்டும் அம்மா"


"பெண்கள் நம் நாட்டின் கண்கள்"


"ஒரு பெண் கற்கும் கல்வி 

ஒரு தலைமுறைக்குக் கற்பிக்கும் கல்வி "


அடுத்தடுத்து அடுக்கினார் ஆசிரியர் 

ஆமோதித்து கேட்டனர் அங்கிருந்த மக்கள் 


பள்ளியின் சேர்க்கை படிவத்தில் 

ஐந்து பெண் பிள்ளைகளின் பெயர்கள் 


பெருமையுடன்  ஒரு பார்வை பார்த்து 

பகட்டாய் கிளம்பினார் வீட்டிற்கு


வீட்டின் முன் அறை

கயல்விழி ! அடியே கயல்விழி!!


வீடு திரும்பிய வீட்டுக்காரருக்கு 

விருந்தளிக்க வராமல் 


அங்கென்ன செய்கிறாய் ??

விழுந்தடித்து ஓடி வந்தாள் கயல்விழி


நாளை தேர்விற்கு படித்து கொண்டிருந்தேன் 

மென்று விழுங்கினாள் அப்பேதைப்பெண் 


வீட்டில் வசிக்கும் கழுதைக்கு படிப்பென்ன முக்கியம் ?


விருந்துண்ண வரலாமா ?

விடாமல் கேட்டார் ஆசிரியர் 


விறுவிறுப்பாய் வேலை பார்த்தாள் கயல்விழி

விரைந்து விருந்துண்ண தொடங்கினார் 


உடனே உன் படிப்பை நிறுத்திவிடு

சொல்லி முடித்தார் ஆசிரியர்


திடுக்கிட்டு திரும்பினாள் கயல்விழி

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு !! என்று வினவினார்


இருமுகம் கொண்ட தன் தந்தையின் 

நிஜமுகம் எதுவென்று திகைத்து நின்றாள் கவிமகிழினி !!!!!

Tuesday, March 10, 2026

வேண்டாம் நாற்பது

 ** வேண்டாம் நாற்பது**


 அணு ஆயுதங்கள் வேண்டவே வேண்டாம்!

 அளவுக்கு மேல் அதிகம் உண்ண வேண்டாம்!

 அதிகார துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்!

 அடுத்து கெடுக்க வேண்டாம்!

 வதந்தியை பரப்ப வேண்டாம்!

 வக்கிரமாய் பேச வேண்டாம்!

 புற முதுகு பேச வேண்டாம்!

 புண்ணியம் செய்வோரை தடுக்க வேண்டாம்!

 பொது சொத்தை அழிக்க வேண்டாம்!

 பொய்சாட்சி சொல்ல வேண்டாம்!

 போலி மருந்துகளை விற்க வேண்டாம்!

 நன்றியை எப்பொழுதும் மறக்க வேண்டாம்!

 நயவஞ்சகம் செய்ய வேண்டாம்!

 கோள் மூட்டி வாழ்வில் முன்னேற வேண்டாம்!

 ஏழைகளைப் பார்த்து ஏளனம் செய்ய வேண்டாம்!

 ஆசிரியர்களை அவமதிக்க வேண்டாம்!

 உண்ணும் உணவை வீணடிக்க வேண்டாம்!

 காற்றை மாசு படுத்த வேண்டாம்!

 சட்டத்தை ஒருபோதும் மீற வேண்டாம்!

 நதி நீரில் கழிவுநீரை கலக்க வேண்டாம்!

 கடமை ஒருபோதும் தவற வேண்டாம்!

 கொடுத்த வாக்கினை மீற வேண்டாம்!          உறவுகளை ஒருபோதும் ஒதுக்க வேண்டாம்!


 நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டாம்!

 பெற்றோரை எக்காலத்திலும் இழிவு செய்ய வேண்டாம்!

 உண்ணும் உணவில் கலப்படம் செய்ய வேண்டாம்!

 சிசுவதை எப்பொழுதும் வேண்டாம்!

 லாகிரி வஸ்துக்களை உபயோகிக்க வேண்டாம்!

 பெருமைக்காக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம்!

 சுயமரியாதையை ஒரு பொழுதும் இழக்க வேண்டாம்!

 உயிர்வதை செய்ய வேண்டவே வேண்டாம்!!

 உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டாம்!

 சுய தொழில் செய்வோரை தடுக்க வேண்டாம்!

 ஓட்டிற்கு ஒருபோதும் விலை போக வேண்டாம்!!

 தேவையில்லாமல் எரிபொருளை வீண் செய்ய வேண்டாம்!

 பணத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுக்க வேண்டாம்!!

 கூட்டு பலாத்காரம் ஐயோ செய்யவே வேண்டாம்!!

 பேருந்து படியில் பயணிக்க வேண்டாம்!

 தீவிரவாதம் வேண்டவே வேண்டாம்!!

 கடைசி மூச்சு வரை காசு வைத்துக் கொள்வதை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க வேண்டாம்!!!

 சிசு 10 3 26

Monday, March 9, 2026

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்

 *மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்*


ஏழு பிப்ரவரி 2026 மாலை 5:30 மணியளவில் பன் பயன்பாட்டு பெருவரங்கம்  நிரம்பி வழிந்தது. ஆர்வமுடன் நமது உறுப்பினர்கள் அணி அணியாய் வந்து அமர்ந்தனர். மங்கலகரமான குத்து விளக்கு ஏற்றலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. குத்துவிளக்கை ஏற்றியோர்:


குத்துவிளக்கு ஏற்றியவர்கள்

1. திரு. சி. சுப்ரமணியன்,

2. திரு. IB. ஶ்ரீநிவாசன்,

3. திருமதி. புவனேஸ்வரி திருஞான சம்பந்தம்,

4. திருமதி. லலிதா கிருஷ்ணன் மற்றும்

5. திரு.சாம்பசிவம்


அழகிய தமிழில் நல்லதொரு வரவேற்புரையினை 

திருமதி. ஹேமா வெங்கட்ராமன் வழங்கினார். 


முதலாவதாக மகளிரைப் பற்றி அவர்தம் மேன்மை குறித்து நடைபெற்ற பேச்சரங்கத்தில் எட்டு ஆடவர் தங்கள் சிறப்புரைகளை நல்கினர். 


*பேச்சரங்கத்தின் எண்மரும் அவர்கள் பேசிய தலைப்பும்*:


1. திரு. திருஞான சம்பந்தம் (மறக்கவியலா பெண்மணி - புற்றுநோய் மருத்துவர். சாந்தா)

2. திரு. IB . ஶ்ரீனிவாசன் (மனைவி)

3. திரு. வெங்கட் ராமன் (அம்மா)

4. திரு. செங்கதிர்ச் செல்வன் (மாமியார்)

5. திரு. இ.ச.  மோகன் (பாட்டி)

6. திரு. செல்வகுமார் (மகள்)

7. திரு. லக்ஷ்மி நாராயணன் (மறக்கவியலா பெண்மணி: பெண் கல்விக்கு வித்திட்ட திருமதி. சாவித்ரி பாய் புலே)

8. திரு. நாகராஜன் (சகோதரி)


இந்த எட்டு பேரும் தடையில்லா நடையில் நல்ல தமிழில் தத்தம் தலைப்புகளை மெருகேற்றும் வகையில் மிக அருமையாக உரையாற்றியது எத்திக்கும் மகளிர் பெருமை பேசும் அளவிலே தித்திக்கும் படி அமைந்திருந்தது. 


எண்மர் பேச்சு எண்திசையிலும் 

நம் தமிழ்ச் சங்க பெருமையை பறைசாற்றியது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்து தங்கள் கடமையை செவ்வனே ஆற்றிய மலர்விழி மற்றும் மகாலட்சுமியை நம் சங்கம் பாராட்டி மகிழ்கிறது.


பேச்சரங்கம் முடிந்ததும் நம் பூர்வாவின் பெண்மணிகள், பாரதி தமிழ்ச்சங்கத்தின் கண்மணிகள், 

பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடை அணிந்து மிகச் சிறந்ததொரு அணிவகுப்பினை நடத்திக் காட்டினர். 

வண்ணமிகு உடை அணிந்து, அந்தந்த மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் செவிகளுக்கு விருந்தாக நல்ல இசை பின்னணியில் ஒலிக்க, வண்ணமிகு ஆடையுடன் எழில் மிகு நடையில் நடந்து வந்து கண்களுக்கு விருந்து கொடுக்க,  நம் கண் முன்னே பாரதத்தின் பல்வேறு மாநிலங்களை கொண்டு வந்து நிறுத்திய அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களது அயராத பயிற்சி யின் காரணமாக ஒரு மினி பாரத விலாசை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். 


இந்த *பாரம்பரிய உடை அணிவகுப்பு* ஒட்டுமொத்த அரங்கின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இடைவிடாது ஒலித்த கரவொலி நிகழ்ச்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறியது.


இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்த செயல்பட்ட ஸ்ரீவித்யா மற்றும் சிவகாமி இருவருக்கும் அவர்களுக்கு உதவிகரமாக தங்கள் கரங்களை நீட்டி உதவிய பிற நிர்வாகிகளுக்கும் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டுதல்கள்.


*பாரம்பரிய உடை அணிவகுப்பு பங்கேற்பாளர்கள் - அவர்கள் தேர்ந்தெடுத்த பாரம்பரிய உடை*:

1. திருமதி. மல்லிகா மற்றும் திருமதி. நல்லம்மை (களத்து மேட்டு கண்ணம்மாக்கள் - தமிழகத்தின் கண்டாங்கி சேலை)

2. திருமதி. மைதிலி நீலகண்டன், திருமதி. லக்ஷ்மி, திருமதி. ஹேமா வெங்கட்ராமன் (மடிசார் மாமிகள்)

3. திருமதி. மல்லிகாமணி (மலையாள மங்கை - முண்டு)

4. திருமதி. சுபாஷிணி, திருமதி. சுவாதி (தெலுங்கு தேவசேனாக்கள் - கச்சம் )

5. திருமதி. ரமா (குஜராத்தி)

6. திருமதி. ரம்யா வெங்கட்ராமன் (கூர்கி)

7. திருமதி. பிரபுகுமாரி (மராத்தி)

8. திருமதி. விமலா (ராஜஸ்தானி)

9. திருமதி. துர்கா சாய்ராம் (பெங்காலி - கல்கத்தா காளி)


இந்த நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் வடிவமைக்கப் படாமல் மகளிரே நாட்டின் மேன்மைக்கு அடித்தளம் எடுபவர்கள் என்கின்ற கருத்தோடு, பலதரப் பட்ட கலாச்சாரமும் நடை உடை பாவனைகள் இருந்தாலும் *வேற்றுமையில் ஒற்றுமை* என்பதை உயர்த்தி பிடிக்கும் பாரதத்தின் மேன்மையை போற்றுவதாகவும், ஒன்பது மாநிலங்களின் சிறப்பான பாரம்பரிய உடை அலங்காரத்தோடு கம்பீரமாக மேடை ஏறி தமது திறமைகளை பூர்வ மகளிர் பலர் வெளிப்படுத்தும் நோக்கிலும், ஒரு மினி பாரத விலாசாக, *தாய் மண்ணே வணக்கம்* எனப் போற்றி புகழும் விதத்திலும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. பார்வையாளர்களின் மனங்களை இந்நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது. அணிவகுப்பில் கலந்து கொண்ட சகோதரிகளின் நல்ல பயிற்சிக்கு உறுதுணையாக நின்ற பொறுப்பாளர்களோடு உடன் நின்று வழிகாட்டி அணிவகுப்பை வடிவமைத்த பிரபு குமாரி மற்றும் துர்கா அவர்களை நமது சங்கம் மனதார பாராட்டுகிறது.


நமது தமிழ்ச் சங்க வரலாற்றில் இல்லாத புதுமையாக நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்ச்சியை அரங்கம் நிறைந்த கர ஒலியோடு தலைவர் அறிவித்தார். நமது தமிழ்ச் சங்கத்தின் ஆணி வேராக இருந்து, சங்க வளர்ச்சிக்கு தனது முழு பங்களிப்பை செலுத்தி வரும் *நமது நிதிச் செயலர் - பன்முக கலைஞர் சாய்ராம் ஐயா*  அவர்களின் 40 ஆண்டு கால கலை உலக வாழ்வின் அங்கீகாரமாக தமிழக அரசு விருது கொடுத்து பாராட்டிய கௌரவத்தை ஒட்டி நமது தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அவருக்கு விருது வழங்கும் விழா நடந்தது. *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொன்வசந்தம்* என்கின்ற விருதினை தமிழ்ச் சங்கம் வழங்கி மகிழ்ந்தது. சாய்ராம் ஐயா அவர்களின் 30 ஆண்டுகால நண்பரும் இயக்குனரும் வெள்ளித்திரை சின்னத்திரை நடிகரும் ஆன *திரு.அபிஷேக் சங்கர்* அவர்கள் நமது வேண்டுகோளை ஏற்று அவ்விருதினை வழங்கினார்கள். திரு. சாய்ராம் அவர்களுக்கு பொன்னாடையை சங்கத் தலைவர் திரு ஸ்ரீவி அவர்களும் சாய்ராம் அவர்களின் நண்பர் மேடைப் பாடகர் மோகன் அவர்களும் இணைந்து அணிவித்தனர்.


பிறகு *பூர்வாவின் சிறந்த பெண்மணி* விருது நமது நிர்வாக குழு உறுப்பினரும் இயன் முறை மருத்துவருமான *திருமதி. சுபாஷினி* அவர்களுக்கு திரு. அபிஷேக் சங்கர் அவர்களால் வழங்கப் பட்டது.


விருதுகள் வழங்கப்பட்ட பின் தலைவர் உரையோடு விருதுகள் பெற்ற சாய்ராம் ஐயா அவர்களும் திருமதி சுபாஷினி அவர்களும் ஏற்புரை வழங்கினர்.  பிறகு, சிறப்பு விருந்தினர் திரு. அபிஷேக் சங்கர் அவர்கள் ஒரு நல்லதொரு சுவையான சிறப்புரையை வழங்கினார்கள். பின் சாய்ராம் ஐயாவின் சிறுவயது நண்பர் திரு. மோகன் அவர்கள் உரையாற்றினார். நேயர் விருப்பத்திற்கு இணங்க கமல் அவர்களின் பாடலையும் பாடினார்.


அதன்பின், சிறப்பு நிகழ்ச்சியின் நிறைவாக *விளையாடலாம் வாங்க* எனும் கலகலப்பான போட்டிகள் மகளிருக்காக நடத்தப் பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,  பாலை என ஐந்து அணிகளாக ஐந்து திணைகளின் பெயர்களில் மொத்தம் 20 மகளிர் கலந்து கொண்டனர்.

*காவியத்தை தேடி*

*சாதனைப் பெண்களை தேடி*

*பாடலின் முதல் வரியைத் தேடி* போன்ற பல சுவையான போட்டிகள் நடந்தேறின. இப் போட்டிகளின் வெற்றியாளர்கள்:


1. திருமதி. துர்கா சாய்ராம் 

2. திருமதி. ஶ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்

3. திருமதி. கிருஷ்ணவேணி

4. திருமதி. காமாக்ஷி.


இந்தப் போட்டிகளை வடிவமைத்து திறம்பட நடத்திய பொறுப்பாளர்கள் அனிதா பாரதி, தேவி அருண், அமுதவல்லி,

மற்றும் சுல்தானா  . இவர்களுக்கு தமிழ் சங்கத்தின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.


திருமதி லட்சுமி அவர்கள் நல்ல தமிழில் அருமையாக நன்றியுரை கூறினார். 


பின் நாட்டுப் பண் இசைக்கப் பட்டதோடு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது..


இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் தனது அழகான சொல்லாட்சியாலும் அனைவரின் மனம் கவரும் குரல் வளத்தாலும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய நமது சங்கத்தின் செயலர். திருமதி. மலர்விழிக்கு நமது சங்கத்தின் உளம் நிறை நன்றிகளும் பாராட்டுதல்களும். 


கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு தங்களது திறமைகளை மேடையில் காட்டி அனைவரையும் மகிழ்வித்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.


பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பயிற்றுவித்து பயிற்சி கொடுத்து தங்கள் பொன்னான நேரத்தை நிகழ்ச்சியின் வெற்றிக்காக செலவழித்து உழைத்திட்ட அமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. 


வழக்கம்போல தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக நிகழ்ச்சியின் வெற்றிக்கு கருத்தாலும் கரத்தாலும் உழைத்திட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றிகள் பற்பல.🙏


*ஶ்ரீவி*

*தலைவர்*

San Antonio ஆற்று நடை-பயணக் கட்டுரை(7)

 பாகம் 7

பயணங்கள் முடிவதில்லை

*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*

*San Antonio River Walk ஒரு மனிதரின் கனவு ஒரு நகரத்தின் நனவு*


*ஒரு நகரம் தனது நதியை மறைக்க நினைத்தது…*

*ஒரு மனிதர் அதை உலகம் பார்க்கும் அழகாக மாற்ற கனவு கண்டார்…*

 

*அந்த கனவின் பெயர்தான் San Antonio ஆற்று நடை.*


டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரின் இதயத்தில் அமைந்துள்ள San Antonio ஆற்று நடை (Paseo del Río) அமெரிக்காவின் மிகவும் அழகான நகர்ப்புற நடைபாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நகரத்தின் நடுவே ஓடும் சான் அன்டோனியோ ஆற்றங்கரையை சுற்றி, தெரு மட்டத்திலிருந்து சில படிகள் கீழே அமைந்துள்ள பசுமையான Cypress மரங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள், தனித்துவமான அனுபவத்தை தருகிறது.

ஆற்றின் இருபுறமும் உணவகங்கள், கடைகள், உணவகங்கள், சிறிய கஃபேக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் வரிசையாக அமைந்துள்ளன.


மெதுவாக ஓடும் நீரில் சிறிய சுற்றுலா படகுகள் செல்கின்றன. நதிக்கரையை ஒட்டி நடந்து செல்லும் போது நகர வாழ்க்கையின் உற்சாகமும் இயற்கையின் அமைதியும் ஒரே நேரத்தில் உணர முடிகிறது.


ஸ்பானிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அழகிய பாலங்கள், இரவில் ஒளிரும் வண்ண விளக்குகள் இவை அனைத்தும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு மந்திரமயமான சூழலாக மாற்றுகின்றன.


இதனால் தான் பலர் இதை

*American Venice* என்று அழைக்கிறார்கள்.

ஆற்று நடை (River Walk) இன் மொத்த நீளம் சுமார் 15 மைல்கள் (24 கி.மீ). இதில் முக்கிய பகுதி (Downtown) மிகவும் கலகலப்பானது. உணவகங்கள், இசை, இரவு வாழ்க்கை, சுற்றுலாப் பயணிகள் எல்லாமும் அந்தப் பகுதியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.


*ஒரு சுவாரஸ்யமான பின்னணி…*


1921-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சான் அன்டோனியோ நகரத்தை அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பிறகு, இந்த நதியை மூடி சாலையாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் எழுந்தது.


அந்த நேரத்தில் ஒரு இளம் கட்டிடக் கலைஞர் *Robert H. H. Hugman வேறொரு கனவை முன்வைத்தார்.*


*நதியை மறைக்க வேண்டாம். அதை அழகாக்கி நகரத்தின் பெருமையாக மாற்றலாம் என்று*


அவரது சிந்தனை தான் இந்த ஆற்று நடை (River Walk) யின் விதை.


1930களில் தொடங்கிய அந்த முயற்சி, பலரின் உழைப்பும் காலத்தின் வளர்ச்சியும் சேர்ந்து இன்று உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு அற்புதமான இடமாக மாறியுள்ளது.


சான் அன்டோனியோ ஆற்று நடை என்பது

ஒரு நதி மட்டுமல்ல…


*ஒரு மனிதரின் தைரியமான சிந்தனையின் வெற்றி.*


*மூடி விடலாம்* என்ற எண்ணத்தை

*மலரச் செய்யலாம்* என்ற கனவு வென்ற கதை அது.


*ஒரு நகரம் தனது நதியை பாதுகாத்ததால், அது இன்று அந்த நகரத்தை உலக வரைபடத்தில் உயர்த்தி நிறுத்தியுள்ளது.*

Sunday, March 8, 2026

ஒருநாள் போதுமா?

 ஒருநாள் போதுமா?


கருவறையில் இடமளிக்கும், உருவம் தரும் 

   "கண்ணே!" எனத் "தாயாய்த்" தாலாட்டும்


அருகே "சகோதரி"யாய் வலமும் வரும் 

   "அவனுக்கு மட்டுமா?" போட்டி போடும் 


குருவி காட்டி வாயில் சோறும் ஊட்டும் 

   கொஞ்சும் "பாட்டி"யாய் கொலுசு மாட்டும் 


அரும்பு மீசை வர அகம் ஊறும் ஏதோ 

   அதை ஊதி விடத்தான் "காதலி"யோ !


சரசரக்கச் சேலையில் மணமேடை ஏறும் 

   சாட்சி அருந்ததியுடன் "மனைவி" ஆகும்


திருமகளாய் வலது கால் எடுத்து வைக்கும் 

   திருமணம் எனச் சொல்லி ஊரே மொய்க்கும் 


கரும்பே "மகளாய்" வரும், "அப்பா!" என்னும் 

   "கடவுளே ! இச் சொர்க்கம் எனக்குப் போதும்". 


ஒருநாள் மகளிர் தினம் போதாது பெண்மையே ! 

   ஒவ்வொரு நாளுமே போற்றுவோம் உன்னையே ! 💐...🙏...


__. குத்தனூர் சேஷுதாஸ் 8/2/2026


=============

சிறகொடிந்தாலும்

சிறகிழந்தாலும்

கற்களால் வீழ்ந்தாலும்

கண்ணாடித் திரையிட்டாலும்

எல்லோருக்குமான வானில்

தன் இடம் இருத்திக் கொள்ள

காலம் காலமாக போராடுபவள்...



அன்பெனும் போர்வையில் அழுத்தம் ..

ஆகாதென்று கூக்குரல் ..

இயலாது என்று முட்டுக்கட்டை ..

போதாதா என்று போர்க்குரல்..

சில பறவைகளின் வரவுக்கே

வானம் வசமானது என கூக்குரல்கள்


மனம் தளருவதில்லை  அவள்

கடக்கும் ஒவ்வொரு அடியும் 

நாளைய பெண்ணிற்கு

வானம் வசப்படும் வழி



மகளிர்...

தொட்டு விட்ட உயரம்

கடந்து வந்த தூரம்

கொண்டாட மட்டுமல்ல


தடைகளும் திரைகளும் 

சமூகம் தகர்க்க

விழிப்புணர்வு தரும் தினம்


எல்லோருக்கும் வானம் வசப்பட

இனிய மகளிர் தின வாழ்த்துகள்💐


- அமுதவல்லி


-------------------

"பெண்" என்று பட்டம் சூட்டி

பேதை, பெதும்பை,

மங்கை, மடந்தை

அரிவை என

அவளின் பருவப்

படிக்கட்டுகளில்

அவளுக்கே தெரியாமல் அவளுக்குண்டான அடிப்படை

மரியாதையும் உரிமைகளும்

படிப்படியாகப் பறிக்கப்பட்டு 

தன் சுயத்தை இழந்த பின்

வலித்தாலும் வலிமையோடு

தன்னையே மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் தெரிவைகளுக்கும்

பேரிளம் பெண்களுக்கும் 

மகளிர் தின நல்வாழ்த்துகள்!


- சாய்கழல் சங்கீதா


மகளிர் தினம்


"மகளிர் தின வாழ்த்துகள்" 

என்று அவள் அன்புடன்

 வாழ்த்து கூற

" அப்டீன்னா இன்னம்மா?" என்று

கேட்டுவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் தன் பணியை

தொடர்ந்தாள் அவளின்

வீட்டுப்பணி உதவியாளர்...  


- சாய்கழல் சங்கீதா

சிலம்பொடு ஒரு பயணம் -{11}}நகர்வளம் - கண்ணகி கோவலன் சிறப்பு - திருமணக் காட்சி

 *{11} சிலம்பொடு ஒரு பயணம் : நகர்வளம் - கண்ணகி கோவலன் சிறப்பு - திருமணக் காட்சி*


மங்கல வாழ்த்துப் பாடலுடன் 

புகாரினுள் நுழைந்தோம்.


தண்ணொளி வீசும் திங்களை

தரணி போற்றும் ஞாயிறை 

பூவுலகை வாழ வைக்கும் மாமழையை

தன்னிகரில்லா புகார் நகரை 

வாழ்த்திப் பாடிய வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து


புகார் நகரின் வளமையை

*நகர்வளம்* இனம் தலைப்பில் போற்றிப் பாடுகிறார்: 


*பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதிஎழு அறியாப் பழங்குடி கெழீ இய*


அகத்திய முனி உறையும் 

பொதிய மலை ஆயினும் 

முக்கண்ணன் எழுந்தருளி உள்ள 

இமயமே ஆயினும்,

புகார் வாழ் மக்கள் சிறப்பான அம் மலைகளில் போய் இருக்க விரும்ப மாட்டார்கள். 


ஏனெனில், 

*போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர்* அதுவாம். 

உலகில் உள்ள அனைத்து வளங்களும் இன்பங்களும் நிறைந்து இருக்கும் ஊர் பூம்புகாராம். 


பூம்புகாரின் புகழை பாடிவிட்டு, அரசனைப் பற்றி கூறுவார் என்பது வாசகரின் எதிர்பார்ப்பாக இருப்பினும், அதனை விடுத்து, 

நேராக கதையின் நாயகியையும் நாயகனையும் அறிமுகம் செய்கிறார்:


*மாகவான் நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்*


*ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;*


என கட்டியம் கூறி, 


*மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக் காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"*


(கதையின் நாயகியைப் பற்றி, 'அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். மிகவும் அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி ' - என விளம்புகிறார்)



எனும் அழகிய சொல்லாட்சியால் கதையின் நாயகி கண்ணகியை அறிமுகப் படுத்துகிறார்.


அடுத்து கோவலன் அறிமுகம்:


*வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்துவா னென்பான் இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் ட கவையான்;*


*மதிமுக மடவார்.... காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ*


(அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்;  அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்.

நில ஒத்த முகத்தைக் கொண்ட மகளிர் இவனே என் காதல் தலைவன் எனப் புகழும் கோவலன் என்பான் அவனே)


எனும் சொல்லாடலால் கதையின் நாயகன் கோவலனை அறிமுகம் செய்கிறார்.


இயற்கையைப் போற்றி மங்கள வாழ்த்துப் பாடி, 


புகார் நகரினை பூவுலக சொர்க்கமாய் சித்தரித்து, 

அரசனை பற்றி பாடாமல் நேரடியாக 

நாயகியையும் நாயகனையும் 

அறிமுகப்படுத்தும் சிறப்பே சிறப்பு. 


*மழலைக் கவி ஐயா!*


என் பார்வையில் மனம் கவர்ந்த வரிகளாக இவற்றை நான் பகிர்ந்தேன். 

உமது பார்வையை, *நகர்வளம், கண்ணகி கோவலன் சிறப்பு* பாக்களில், தாங்கள் பகிரலாமே! ஒரு நகர்வலம் வரலாமே!!


*திரு மோகன் ஐயாவின் பார்வை*


நகர்வளம், கண்ணகி, கோவலன் சிறப்பு

ஶ்ரீவீ ஐயா, 

தாங்கள்  புகார் நகர்வளம், கண்ணகி , கோவலன் பற்றி  வர்ணித்த இளங்கோ அடிகளின் அடிகளில் உம் மனதைத் தொட்டவற்றை விவரித்தீர்.


நான் என்மனதில் உதித்த கருத்துகளைப் பதிவிடுகிறேன்.


புகார் நகரம்:

குன்றுகள் இல்லா நிலம் , ஆனால் குன்றாத புகழுடைய நகரம்.

புகார் நகரம் , *"போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர்"!*

எப்படீங்க ஐயா, அப்படி ஒரு நிர்வாகம் இருந்தது?! ஆராய்ச்சிக்கு உரிய ஐயம்.இத்தனைக்கும் *"நாக நீள் நகரோடு" நாக நாடு( ஆந்திரம்?)* வரை பரந்து இருந்தது. காவிரி நீர் வளம் காக்க, துறைமுக நகராக விளங்கி வணிகம் வளர்த்த நகர்.


இத்தகு நகரில் வணிகர்கள் கொடி கட்டிப் பறந்து  தனவான்களாகவும், தான தர்மங்கள் செய்யும் கனவான்களாகவும் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

மாசாத்துவான், மாநாய்கன் இருவரும் அப்படிப்பட்ட பெரு வணிகர்தாம்.


*மாநய்கன்-* கண்ணகியின்தந்தை

*"மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்"* என்கிறார் அடிகள்.

வானத்து மேகம்( மாகாவான்) எதிர்பார்ப்பு ஏதுமின்றி நீர்க்கொடை கொடுப்பது போல, மாநாய்கன் கொடைப்பண்பு (வண்கை) கொண்டவராம்.


கண்ணகி- காவிய நாயகி. தன் கற்பின் திறத்தை நாட்டுக்கே எடுத்துக் காட்டாகச்செய்தவள்.


*"மாநாய்கன் " குலக்கொம்பர்"!*

குலத்துக்கு ஒரு கொழு கொம்பு போன்றவளாம்!


*"கொடியன்னாள்"!* உருவில் பூங்கொடி போன்றவள். ( புகாரில் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்ந்திருக்குமோ!!)

குலக் கொடியாகவும் கொடி நாட்டியவள். வயது பன்னிரெண்டு- இள வயது மங்கை.


*"மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"* - நிலைத்து நிற்கும் புகழை உடையவள். உண்மைதான். இன்றும் அவள் கற்பின் திண்மையும், புகழும் போற்றப்பேசப் படுகிறதே!

கண்ணகி, கண்களால் புன்னகைப்பவளோ?!


*மாசாத்துவான்:*

கோவலனின் தந்தை; *"இருநிதிக் கிழவன்"* - பெரும் செல்வத்துக்கு உரிமையாளன். (கிழவன் என்றால் உரிமையாளன் என்ற பொருளும் உண்டாம். பெருமையாக உள்ளது!)

இவரும் வரும்நிதி பிறர்க்கார்க்கும் பண்பு கொண்டவர்.


*"முக மடவார்.... காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்".* 

கதையின் நாயகன் கோவலன் பதினெட்டு வயது உடையான்.

மதிமுக மகளிர் காதல் கொள்ளும் பேரெழிலான்.


*முக மடவார்-* மதிமுகம் கொண்ட மகளிர். ஞாயிறு போல்  தண்மை கொண்ட கொற்றம்; ஆட்சி ஆளுமையைக் குறிக்கும். மகளிரும் நிலா போன்ற முகத்தினர்.

அடிகள் ஏன் வாழ்த்துப் பாடலில் முதலில் திங்களைப் பாடினார் எனத் தெரிகிறதா!


18-க்கும் 12-க்கும் திருமணம்.

விடலைப் பருவம் முடிக்கும் ஆடவன். பதின்ம வயதில் அடி எடுத்து வைக்கும் மங்கை. அவன் முதிர்ச்சி அடைய அடைய, இவளும் அவனோடு வளர்ந்து வாழ்க்கை முறைகளில் அவனுக்கே வழி காட்டியாக விளங்குவாள். இதுதான் அக்கால மண முறைகளின் அடித்தளமாக இருக்கலாம்.


ஆரம்பமே ரம்பமாக இன்றி, ஆவலை உந்துவிக்கிறது.


கல்யாண  நிகழ்வு விருந்துகள் அடுத்து நம்மை எதிர்   நோக்குகின்றனவே!

அடுத்த சனி அன்று சந்திப்போம். 


ஆம்.. வாசகர்களே! 

கோவலன் கண்ணகியை திருமணத்திற்கு அழைப்பிதழ் வந்துள்ளது. நேரில் சென்று வாழ்த்தி விட்டு அடிகளின் நற்றமிழ் எனும் விருந்துண்டு வருவோம். 

புகார் செல்ல தயாராகுங்கள்! 


*உங்களின் ஸ்ரீவியும் மோகனும்*

Thursday, March 5, 2026

கரு(றி)வேப்பிலை





நான் உங்களுக்கு வேண்டுமா?வேண்டாமா?

என்ன சுயநலம்!!!

உங்களுக்கு தாளிப்பு வேண்டும்

என என்னை எண்ணெயில்

தத்தளிக்க வைப்பீர்கள்...

உணவுக்குள் வந்த பின்னே

ஓரமாய் ஒதுக்கி வைப்பீர்கள்...

உயிர் தப்பினேன் என்று 

உவகை கொள்ளவா?

குடலுக்கு போகாமல் குப்பைக்கு போவதற்கு குமைந்து போகவா?

உருவி உருவி போட்டது எதற்கு?

உம் உடலுக்குள் சத்துகளை சேர்க்க

உரிமை இல்லையா எனக்கு?

கோபமாய் கேட்பது நானில்லை.... கரு(றி)வேப்பிலை!!!

உதாசீனம் தாங்காமல்

அது சண்டைக்கு வந்தால்

நான் பொறுப்பில்லை...


- சாய்கழல் சங்கீதா

========================

😭உங்கள் *உப்புமா* கவிதையில் நான் மட்டும் எஞ்சுவதேன்❓


கரிசனை இல்லாமல்- என்னை


கைகளால் உருவி போடாமல் 


கத்தரிகோலால் துணுக்குகளாய்


கத்தரித்து போட்டால் 

கரைந்து போவேனே


நானும் உங்களுடலில்❗


இப்படிக்கு,

*அக்கறையுடன் கறிவேப்பிலை*


- ,திருஞானசம்பந்தம்


==============================

தங்கள் உப்புமா போல இருக்காது, எனக்கு தெரிந்த உப்புமா 😄


கண்களுக்கு நான் நல்லவனாம் 

கருங்கூந்தலுக்கு நிறம் 

சேர்ப்பவனாம் 


இரும்புச்சத்தில் சிறந்தவனாம் 

இன்னல்கள் பல தீர்ப்பவனாம் 


வேப்பிலையை என் பெயரில் கொண்டவனாம் 

வேண்டி உண்பவர்களுக்கு அருமருந்தாம் 


இத்தனை இருந்தும் இலவசமாய் கிடைக்கும் என்னை

இன்னமும் உண்ணாமல் ஒதுக்குவதேனோ??!!


இப்படிக்கு

கருவேப்பிலை


- பத்மாவதி,


================



=========================

Wednesday, March 4, 2026

சமூக வலைதளங்களில் தட்டெழுதுதல்


 *சமூக வலைதளங்களில் தட்டெழுதுதல்* 


விரல்களின் ஆரோக்கியத்தை

மேம்படுத்தும் பயிற்சி


கண்களின் ஆரோக்கியத்தை 

புறந்தள்ளும் முயற்சி


எழுத நிச்சயம் வேண்டும்  

அடிப்படை சொல்லாட்சி


எழுதியே காட்டலாம்

விதவிதமான காட்சி

 

ஏற்க மறுக்கும் உண்மைகளை

எடுத்துரைக்கும் புரட்சி


உண்மைகள் ஒளிக்கப்பட்டால்

அறத்திற்கு நேர்ந்த வீழ்ச்சி


பொய்மையை பரப்பி யாரையும் செய்யக்கூடாது இகழ்ச்சி


கண்காணிக்க ஒரே சாட்சி

நம் மனசாட்சி


இருக்கவேண்டியது தலைப்பைப் 

பற்றிய ஆராய்ச்சி


இருக்கக்கூடாதது கருத்துகளில்

வறட்சி


சமூகத்தில் அறம் சிறக்க

தட்டெழுதுவதே மாட்சி


மூளை கொண்டு தூவிய விதைகள் முளைத்தெழுந்தால் மகிழ்ச்சி..


- சாய்கழல் சங்கீதா

Monday, March 2, 2026

வேண்டும் 40

 ** வேண்டும் 40**


 உயர்ந்த எண்ணங்கள் வேண்டும்,  

 உழைக்கும் மனது வேண்டும்,

 உண்மை பேசுபவர் உயர வேண்டும்,

 உறவை பேணுதல் வேண்டும்.


 அறிவு மேம்படல் வேண்டும்,

 அராஜகம் அழிய வேண்டும்,

 அன்பு ஆளுமை பெற வேண்டும்,

 அன்னை தந்தையை பேணுதல் வேண்டும்.


 களவு ஒழிய வேண்டும்,

 கடன் இல்லா வாழ்வு வேண்டும்,

 கற்றோர்கள் சிறக்க வேண்டும்,

 கடமை தவறாமை

 வேண்டும்.


   கையூட்டு ஒழிய வேண்டும்,

 கைத்தொழில் சிறக்க வேண்டும்,

 கைம்பெண்கள் வாழ்வு சிறக்க வேண்டும்,

 கைபேசியுடன் பேசும் நேரம் குறைய வேண்டும்.


 நாட்டுப்பற்று உயர வேண்டும்,

 நயவஞ்சகர்கள் உறவு களைய வேண்டும்,

 நல்லதே செய்ய வேண்டும்,

 நல்ல மனிதர்கள்  நட்பு வேண்டும்.


 பசிப்பிணி போக்குதல் வேண்டும்,

 படிப்பிற்கு ஏற்ற பண்பு வேண்டும்,

 பாமரன் பணம் படைத்தோன் ஆக வேண்டும்,                        

  பார் எங்கும் தமிழ் முழக்கம் கேட்க வேண்டும்.


 பெண்மை போற்றுதல் வேண்டும்,

 பேராசை தவிர்த்திடல் வேண்டும்,

 பெரியோரை மதித்திடல் வேண்டும்,

 பெற்றோரை காத்திடல் வேண்டும்.


 சினம் கொள்ளாதிருத்தல் வேண்டும்,

 சிறார் தொழில் தவிர்த்திடல் வேண்டும்,

 சிந்தையில் எப்பவும் தெளிவு வேண்டும்,

 சிறை செல்லாதிருத்தல் வேண்டும்.


 தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்,

 தீர செயல்கள்  பெருகிட வேண்டும்,

 தீண்டாமை ஒழிந்திட வேண்டும்,   

 தீர்க்கதரிசனம் பெற்றிட வேண்டும்.


 நாடு நலம் பெற வேண்டும்,

 நாவடக்கம் பெற்றிடல் வேண்டும்,

 நாணயமாய் நடந்திடல் வேண்டும்,

 நம்பிக்கையுடன் வாழ்ந்திடல் வேண்டும்.

 சிசு.

*ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா*

*ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா*


இரண்டு நாள் வார விடுமுறை முடிந்து

இன்று திங்கள்.


போர் மூண்டுள்ளதால்

சிறப்பு விடுமுறை கிடைக்குமா?!


பக்கத்து வீட்டு

அமெரிக்க கோமாளிகளுக்கும்


எதிர் வீட்டு

ஈரானிய கோமானிகளுக்கும்தானே சண்டை —


“நமக்கு சம்பந்தமில்லை” என்று

சன்னலை மூடி

வேடிக்கை பார்க்கும்,


அஸ்திவாரத்தைத் தின்னும்

கரையானை அறியாத

அடுக்குமாடிகளாய் நாம்.


இது

பக்கத்து – எதிர் வீட்டுச் சண்டையும் அல்ல…

முத்தரப்பு மட்டைபந்தாட்டமுமில்லை…


எல்லைக் கோடுகளை கடப்பது

விளையாட்டுப் பந்துகள் அல்ல —

எண்ணெய் தாகம் கொண்ட

எறி(ரி)பந்துகள்!


அணுகுண்டுகளுக்கு முந்தைய

அக்னிப் பந்தங்கள் அவை.


அரேபிய பாலைவனங்களில்

ஓடுகிற எண்ணெய்…


அனைத்து நாடுகளின்

தொழிலாளர்களின் வியர்வை…


ஏகாதிபத்திய வேரை

எதேச்சதிகார நீரே

அழிக்கும்.


யார் மரித்தாலும்

போர் மட்டும்

தைரியமாக வளர்கிறது!


துண்டான அம்மாவின் மாரை பிடித்து

அழும் குழந்தையின் அழுகையை

யார் நிறுத்துவார்?


துளைத்த அப்பாவின் கை பிடித்த

மகனின்

கைவிடப்பட்ட கனவை

யார் நனவாக்குவார்?


கைகளில் அடிபட்டால்

கண்கள் அழுவதில்லையா?


கண்களில் விழுந்த தூசியை

கைகள்

அகற்றுவதில்லையா?


வெறும் பார்வையாளராக

பக்கங்களைப் புரட்டாமல்,


வாடிய பயிரைக் கண்டு

வாடும் மெல்லிய மனங்கள்,


மீண்டும் மனிதனாக

மாற வேண்டிய நேரம்

இப்போதே!


ஒரு சொட்டு கண்ணீரால்

முனகுகிற அரபுகளின்

உயிர்ச் சத்தத்திற்கு

மோட்சதீபம்

ஏற்றுவோம்! 

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...