Sunday, March 8, 2026

சிலம்பொடு ஒரு பயணம் -{11}}நகர்வளம் - கண்ணகி கோவலன் சிறப்பு - திருமணக் காட்சி

 *{11} சிலம்பொடு ஒரு பயணம் : நகர்வளம் - கண்ணகி கோவலன் சிறப்பு - திருமணக் காட்சி*


மங்கல வாழ்த்துப் பாடலுடன் 

புகாரினுள் நுழைந்தோம்.


தண்ணொளி வீசும் திங்களை

தரணி போற்றும் ஞாயிறை 

பூவுலகை வாழ வைக்கும் மாமழையை

தன்னிகரில்லா புகார் நகரை 

வாழ்த்திப் பாடிய வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து


புகார் நகரின் வளமையை

*நகர்வளம்* இனம் தலைப்பில் போற்றிப் பாடுகிறார்: 


*பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதிஎழு அறியாப் பழங்குடி கெழீ இய*


அகத்திய முனி உறையும் 

பொதிய மலை ஆயினும் 

முக்கண்ணன் எழுந்தருளி உள்ள 

இமயமே ஆயினும்,

புகார் வாழ் மக்கள் சிறப்பான அம் மலைகளில் போய் இருக்க விரும்ப மாட்டார்கள். 


ஏனெனில், 

*போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர்* அதுவாம். 

உலகில் உள்ள அனைத்து வளங்களும் இன்பங்களும் நிறைந்து இருக்கும் ஊர் பூம்புகாராம். 


பூம்புகாரின் புகழை பாடிவிட்டு, அரசனைப் பற்றி கூறுவார் என்பது வாசகரின் எதிர்பார்ப்பாக இருப்பினும், அதனை விடுத்து, 

நேராக கதையின் நாயகியையும் நாயகனையும் அறிமுகம் செய்கிறார்:


*மாகவான் நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்*


*ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;*


என கட்டியம் கூறி, 


*மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக் காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"*


(கதையின் நாயகியைப் பற்றி, 'அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். மிகவும் அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி ' - என விளம்புகிறார்)



எனும் அழகிய சொல்லாட்சியால் கதையின் நாயகி கண்ணகியை அறிமுகப் படுத்துகிறார்.


அடுத்து கோவலன் அறிமுகம்:


*வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்துவா னென்பான் இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் ட கவையான்;*


*மதிமுக மடவார்.... காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ*


(அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்;  அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்.

நில ஒத்த முகத்தைக் கொண்ட மகளிர் இவனே என் காதல் தலைவன் எனப் புகழும் கோவலன் என்பான் அவனே)


எனும் சொல்லாடலால் கதையின் நாயகன் கோவலனை அறிமுகம் செய்கிறார்.


இயற்கையைப் போற்றி மங்கள வாழ்த்துப் பாடி, 


புகார் நகரினை பூவுலக சொர்க்கமாய் சித்தரித்து, 

அரசனை பற்றி பாடாமல் நேரடியாக 

நாயகியையும் நாயகனையும் 

அறிமுகப்படுத்தும் சிறப்பே சிறப்பு. 


*மழலைக் கவி ஐயா!*


என் பார்வையில் மனம் கவர்ந்த வரிகளாக இவற்றை நான் பகிர்ந்தேன். 

உமது பார்வையை, *நகர்வளம், கண்ணகி கோவலன் சிறப்பு* பாக்களில், தாங்கள் பகிரலாமே! ஒரு நகர்வலம் வரலாமே!!


*திரு மோகன் ஐயாவின் பார்வை*


நகர்வளம், கண்ணகி, கோவலன் சிறப்பு

ஶ்ரீவீ ஐயா, 

தாங்கள்  புகார் நகர்வளம், கண்ணகி , கோவலன் பற்றி  வர்ணித்த இளங்கோ அடிகளின் அடிகளில் உம் மனதைத் தொட்டவற்றை விவரித்தீர்.


நான் என்மனதில் உதித்த கருத்துகளைப் பதிவிடுகிறேன்.


புகார் நகரம்:

குன்றுகள் இல்லா நிலம் , ஆனால் குன்றாத புகழுடைய நகரம்.

புகார் நகரம் , *"போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர்"!*

எப்படீங்க ஐயா, அப்படி ஒரு நிர்வாகம் இருந்தது?! ஆராய்ச்சிக்கு உரிய ஐயம்.இத்தனைக்கும் *"நாக நீள் நகரோடு" நாக நாடு( ஆந்திரம்?)* வரை பரந்து இருந்தது. காவிரி நீர் வளம் காக்க, துறைமுக நகராக விளங்கி வணிகம் வளர்த்த நகர்.


இத்தகு நகரில் வணிகர்கள் கொடி கட்டிப் பறந்து  தனவான்களாகவும், தான தர்மங்கள் செய்யும் கனவான்களாகவும் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

மாசாத்துவான், மாநாய்கன் இருவரும் அப்படிப்பட்ட பெரு வணிகர்தாம்.


*மாநய்கன்-* கண்ணகியின்தந்தை

*"மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்"* என்கிறார் அடிகள்.

வானத்து மேகம்( மாகாவான்) எதிர்பார்ப்பு ஏதுமின்றி நீர்க்கொடை கொடுப்பது போல, மாநாய்கன் கொடைப்பண்பு (வண்கை) கொண்டவராம்.


கண்ணகி- காவிய நாயகி. தன் கற்பின் திறத்தை நாட்டுக்கே எடுத்துக் காட்டாகச்செய்தவள்.


*"மாநாய்கன் " குலக்கொம்பர்"!*

குலத்துக்கு ஒரு கொழு கொம்பு போன்றவளாம்!


*"கொடியன்னாள்"!* உருவில் பூங்கொடி போன்றவள். ( புகாரில் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்ந்திருக்குமோ!!)

குலக் கொடியாகவும் கொடி நாட்டியவள். வயது பன்னிரெண்டு- இள வயது மங்கை.


*"மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"* - நிலைத்து நிற்கும் புகழை உடையவள். உண்மைதான். இன்றும் அவள் கற்பின் திண்மையும், புகழும் போற்றப்பேசப் படுகிறதே!

கண்ணகி, கண்களால் புன்னகைப்பவளோ?!


*மாசாத்துவான்:*

கோவலனின் தந்தை; *"இருநிதிக் கிழவன்"* - பெரும் செல்வத்துக்கு உரிமையாளன். (கிழவன் என்றால் உரிமையாளன் என்ற பொருளும் உண்டாம். பெருமையாக உள்ளது!)

இவரும் வரும்நிதி பிறர்க்கார்க்கும் பண்பு கொண்டவர்.


*"முக மடவார்.... காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்".* 

கதையின் நாயகன் கோவலன் பதினெட்டு வயது உடையான்.

மதிமுக மகளிர் காதல் கொள்ளும் பேரெழிலான்.


*முக மடவார்-* மதிமுகம் கொண்ட மகளிர். ஞாயிறு போல்  தண்மை கொண்ட கொற்றம்; ஆட்சி ஆளுமையைக் குறிக்கும். மகளிரும் நிலா போன்ற முகத்தினர்.

அடிகள் ஏன் வாழ்த்துப் பாடலில் முதலில் திங்களைப் பாடினார் எனத் தெரிகிறதா!


18-க்கும் 12-க்கும் திருமணம்.

விடலைப் பருவம் முடிக்கும் ஆடவன். பதின்ம வயதில் அடி எடுத்து வைக்கும் மங்கை. அவன் முதிர்ச்சி அடைய அடைய, இவளும் அவனோடு வளர்ந்து வாழ்க்கை முறைகளில் அவனுக்கே வழி காட்டியாக விளங்குவாள். இதுதான் அக்கால மண முறைகளின் அடித்தளமாக இருக்கலாம்.


ஆரம்பமே ரம்பமாக இன்றி, ஆவலை உந்துவிக்கிறது.


கல்யாண  நிகழ்வு விருந்துகள் அடுத்து நம்மை எதிர்   நோக்குகின்றனவே!

அடுத்த சனி அன்று சந்திப்போம். 


ஆம்.. வாசகர்களே! 

கோவலன் கண்ணகியை திருமணத்திற்கு அழைப்பிதழ் வந்துள்ளது. நேரில் சென்று வாழ்த்தி விட்டு அடிகளின் நற்றமிழ் எனும் விருந்துண்டு வருவோம். 

புகார் செல்ல தயாராகுங்கள்! 


*உங்களின் ஸ்ரீவியும் மோகனும்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...