•••••••••••••••••••••••••••••••
*{13} சிலம்பொடு ஒரு பயணம்*
*மனை அறம் படுத்த காதை*
•••••••••••••••••••••••••••••••
இரண்டாம் பாதையாம் *மனை அறம் படுத்த காதை* யில் பயணம் தொடர்கிறது.
மத்தளங்கள் ஆர்ப்பரிக்க
வரி சங்கம் நின்றூத
புகார் நகரே விழா கோலம் கொண்டு
சிறப்புற நடந்த திருமணத்தில்
மங்கலகரமான வாழ்த்தொலிகள் விண்ணை முட்ட
இரு மனங்கள் ஒன்றே இணைந்தன.
இல்லற வாழ்வு இனிதே துவங்கியது.
இனிமையான இல்லறத்தை முதல் பாடல் தெளிவாக உரைக்கிறது.
புகார் நகரின் பெருமையை
*உரைசால் சிறப்பின் அரைசு விழை திருவின் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்*
அதாவது பலரும் போற்றிப் பாராட்டும் சிறப்பும், அரசர்களே ஆசைப்படும் அளவு செல்வச் செழிப்பும் உடைய நெய்தல் நில மக்கள் நிறைந்த வாழும் வளமெல்லாம் நிறைந்தது புகார் நகரம் எனத் துவங்கி,
*முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்...*
*கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட....*
என்ற வரிகளின் மூலம் அலை முழக்கமிடும் கடல் சூழ்ந்த நாடுகளில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும் கப்பலில் வந்தாலும் கால்நடையாய் கொள்வதற்கு நிறைய வளங்கள் இருந்த புகார் நகரம் என அடுக்கடுக்காய் விவரித்தபின் கோவலன் கண்ணகி இல்வாழ்க்கை பற்றி இப்படியாக கூறுகிறார்:
*கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்*
(கண்ணகியும் கோவலனும்)
*மயன்விதித்த தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்து வழி*
அதாவது,
தேவதர்ஷனே செய்திட்ட மாணிக்க கால்கள் இருந்த கட்டிலின் மேல் அமர்ந்து இருநிலை மாடத்தின் கீழ் ஒரு மாடத்தில் இனிதே இன்புற்று இருந்தன ராம்.
இவ்வாறாக *இல்லற வாழ்வு இனிதே நடந்த காலம்* எனும் பாடலில் விவரித்தபின்,
அடுத்து வரும் *ஏழெடுக்கு மாளிகை* எனும் பாடலில் எவ்வாறு இன்புற்று இருந்தனர் எனக் கூறுகிறார்:
*கழுநீர் ஆம்பல் முழு நெறிக் குவளை அரும்பொதி அவிழ்ந்த கரும்பு இமிர் தாமரை*
*வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக் கோதை மாதவி செண்பகப் பொதும்பர்..*
செங்கழுநீர் பூ, செவ்வாம்பல், நன்கு மலர்ந்த குவளைப் பூ, இதழ் விரிந்து வண்டு வந்து மொய்க்கின்ற தாமரை, வயல்வெளிகளில் மலர்ந்து உள்ள பூக்கள், மற்றும் உள்ள வேறு வகை பூக்கள், வெள்ளைத் தாழை மடல் விரிந்த தாழம்பூ, மலர்ந்து தொங்கும் செண்பகப்பூ என பூக்கள் நிறைந்த நந்தவனத்திலிருந்து வரும் வண்டுகள் ரீங்காரமிடும் இடமாம் அது. வண்டுகள் நுழையும் சாளரத்தின் வழியே தென்றல் இனிமையாய் வீசுகிறதாம்.
உள்ளம் மகிழ, உணர்வில் இன்பம் ஊற்றெடுக்க, இருவரும் - காமனும் ரதியும் போல ஏழடுக்கு மாளிகை நிலா முற்றத்தை வந்தடைந்தனராம்.
இத்தனை பூக்கள் இருக்கும் நந்தவனம் பற்றி படிக்கையிலேயே அகம் மகிழ்கிறது. அகக்கண்ணில் அக்காட்சி திரைக் காவியமாய் விரிகிறது.
இதோ மழலைக் கவி தொடர்கிறார்:
மணவாழ்வு கண்ட காவியத்தலைவியும் தலைவனும் இல்லறம் ஆரம்பித்த காட்சி.
ஐயா, தாங்கள் புகார் நகர் சிறப்பை நன்கு விளக்கி ரசித்தீர்கள்.
இந்நகர் *"தவாஅ வளம்"* - வற்றாத செல்வமும், வளமையும் உள்ள நகராம்.உணவுக்குப் பஞ்சமில்லை; " சோழ வளநாடு சோறுடைத்தன்றோ! உள்நாட்டு , வெளிநாட்டு வர்த்தகங்களால், இலக்குமி எப்போதும் தங்கி உள்ள நகரம். *"உத்தரக்குருவின் ஒப்பத்தோன்றிய "நகரம்*
"குரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய மேனிலையுலகம். போகபூமி, வடக்கில் உள்ள வளமான தேசங்களைப்போல எனக்கொள்ளலாம்."
இனி மனையறத்தைக் காண்போம்.
அறம் இருவகைப்படும். இல்லறம், துறவறம் என்பதாக.
இங்கு அடிகள் இல்லறத்தை மனையறம் என்கிறார். அன்பு, கற்பு, விருந்தோம்பல், பிறர்நலம் பேணுதல் , ஒழுக்க நெறியிலிருந்து வழுவாதிருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தொழுகும் பெண்ணே இல்லத்தின் நீங்கா முனைவர், ஆம்.. தாம்கொண்ட நெறி, கடமை, கொள்கைகளிலருந்து வழுவாது இருப்பவர். ( முனைவர்)
எனவே இல்லறம், நல்லறவழிப்பட்டு, மனையறம் ஆயிற்று.
படுத்த என்றால் இங்கு, இன்று நாம் கொள்ளும் பொருள்அல்ல; அமைத்த என்று கொள்ள வேண்டும்.
மனையறம் வளர்க்க வந்த கண்ணகி" *"கயமலர்கண்ணி"* என்றும் *"காதல் கொழுநன்"* என்று கோவலனும் வருணிக்கப் படுகின்றனர்.
குவளை மலர் போன்ற கண்களை உடையவளாம் கண்ணால் நகும் கண்ணகி!
" காதல்
கொழுநன்" - அன்பான கணவன் என்று கண்ணகியின்
பார்வையில் கோவலனைக் குறிப்பிடுகிறார்.
கோவலன் அறிமுகத்தில், *"மடவார் ..... பாராட்டிக் கண்டேத்தும் கிழமையான்"* எனப்படுகிறான்.
கண்ணகி தன் கணவன் மீது கொண்ட காதலில் உறுதியாக நிற்க, கோவலன் பின்னர், பிற மாதர் வயப்படக்கூடியவன் என்று சூசகமாக, அடிகள் உணர்த்துகிறாரா?
இன்றய பல அடுக்கு மாடிகளின் முன்னோடி, இவர்கள் கூடிய பலமாடக்கூடல். " அரமிய" த்தில் ( மாளிகையின் மேல் நிலை மாடம்) பல் வேறு மலர்களின் " மணங்களை சுமந்து வந்த *"வண்டோடு புக்க மணவாய்த் தென்றல் கோலச்சாமரக் குறுங்கண்"* வழி நுழைந்து நிலா முற்றத்தில் காதலில் கட்டுண்ட இருவரையும் அரவணைத்தது. *நதியில் விளையாடி கொடியில் தலை சீவி* வந்த தமிழ்த் தென்றல்!
என்னே ஓர் எழுத்தோவியம்!
அடிகள் கைகளில் உள்ளது எழுத்தாணியா அல்லது தூரிகையா?
எதையும் துறந்த இவர் அகப் பொருளை எவ்வளவு இலாகவமாக, கையாளுகிறார்?!
வியப்பு, ஆச்சரியங்களுக்கு நம் தமிழ் இலக்கியங்களில் குறைவே கிடையாது என்பதை நாம் இப்போது கண்ட காட்சியே சாட்சி.
காதலர் இருவர்" *செம்புலப் பெயல்நீர் போல்,* ஒன்றிணைந்த காட்சிகளைக் காண,
ஆயிரம் கண்கள் நமக்கு வேண்டும்.
*நம் பயணம் தொடரும்.*
No comments:
Post a Comment