அந்த கால காபி ஹோட்டல்:/கிளப்
(A)காலை
1.1960 களில் அதிகம் உடுப்பி ஹோட்டல் என்ற பெயர் இருக்காது. 2. ஒரு பெயர் கூடவே காப்பி ஹோட்டல் என்றும் காபி கபே என்றும் இருக்கும்.
3.சிமெண்ட் தரை; சுத்தம் என்று சொல்ல முடியாது.
4.நுழைவில் ஒரு கல்லாப்பெட்டி டேபிள் அதன் மேல் பில் குத்தி வைக்கும் ஒரு குத்தூசி, ஒரு ஹார்லிக்ஸ் மற்றும் ரகோடின் பாட்டில் / டப்பி இருக்கும்.
5.பின்னால் சில சாமி படம். அதில் அழுது வடியும் ஸிரோ வாட்ஸ் பல்பு.
6.கதம்பம் பூ இருக்கும்.
7.படம் இருத்தி வைத்த கட்டையில் ஊதுவத்தி சொருகி இருக்கும்.
8.சாப்பிட வருபவர்கள் உக்கார பெரும்பாலும் மர டேபிள், அதன் மேல் ஒரு வெள்ளை கல், உக்கார மர சேர், அவைகள் எல்லாம் விரைவில் உயிர் விட்டு விடுவேன் என்று சொல்லாமல் சொல்லும் நிலையில் இருக்கும் .
9.ஒரு கண்ணாடி வைத்த ஷோ கேஸ்.
10.அதன் ஓரம் கொஞ்சம் வழி...அது வழியாக சமையல் அறைக்கு போக வேண்டும் .
11.ஒரு மூலையில் கை கழுவும் இடம்.
12.வெகுவாய் அதை சுற்றி சுத்தம் இருக்காது.
13.ஷோ கேஸ் கீழே ஒரு பெரிய மர பென்ச் இருக்கும்.
14.அதில் மந்தார இலை இருக்கும்.
15.அல்லது ஷோ கேஸ் உள்ளே ஒரு மூலையில் இருக்கும்.
16.அப்போதிருந்த மந்தாரை இலை பற்றி ஒரு காவியம் எழுத வேண்டும்; அற்புத வாசனை இருக்கும்.
17.அதில் கட்டித் தரும் பகோடா பொட்டலம், (பட்டிணம் பகோடா) வாசம் வேறு லெவல்.
18.பார்சல் மசால் தோசை, இந்த மந்தாரை இலையில் சுருட்டப்பட்டு, கூடவே கெட்டி தேங்காய் சட்னி. ம்ம்ம்! இன்றும் நினைவில்.
19.எப்போதாவது வாங்கி வந்தால், வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு போட்டு ஆளுக்கு ஒரு துண்டு.
20.இப்படி கிடைத்ததே ஒரு அற்புதம்.
21.காலை நேரம் ஷோ கேசில் மெது வடை, இட்லி ஒரு அலுமினிய டிரேயில் இருக்கும்.
22.அப்போதெல்லாம் ஒரு தேங்காய் சட்னி மட்டுமே; கூடவே ஒரு சாம்பார் உண்டு.
23.சின்ன வெங்காயம் சாம்பார், அதன் வாசம், சுவை ஒரு அற்புதம்.
24.உள்ளே சமையல் அறையில் பெரும்பாலும் ஒரு கனவு காட்சி போல புகை மண்டலம் இருந்து கொண்டே இருக்கும்.
25.அப்போதெல்லாம் கட்டை அடுப்புதான்.
26.அவ்வப்போது, சொய் என்று தோசைக்கல் சத்தம் இருக்கும்.
27.சமையலறை மூலையில் ஒரு மேடை அங்கே ஒரு திரி ஸ்டவ்.
28.அதில் பால் காய்ந்து கொண்டிருக்கும்.
29.ஒரு அலுமினிய ட்ரே, அதில் பித்தளை டவரா செட் சிலது இருக்கும்.
30.ஒரு எவர்சில்வர் கிண்ணம்;அது தேய்த்து பல யுகம் ஆகி இருக்கும்.
31.அதில் தான் சக்கரை இருக்கும்;அதில் இருக்கும் ஸ்பூனில் பாதி சக்கரை ஈஷிக்கொண்டு இருக்கும்.
32.கீழே தரையில் பித்தளை பில்டர்; அதில்தான் காபி டிகாக்க்ஷன் இருக்கும்.
33.அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள்.
34.எப்போதாவது ஹார்லிக்ஸ், ஓவல் , என்று ஆர்டர் வந்தால், டபரா செட் கெல்லா பெட்டி பக்கம் போய், முதலாளி ஏதோ தர்மம் போடுவது போல அதில் ஸ்பூனால் எடுத்து போடுவார்.
35.மறுபடி சமையலறை வந்து, அதற்கு பால் அபிஷேகம் ஆகி, சக்கரை சேர்ந்து ஒரு ஆத்து, கூடவே டவராவில் கொஞ்சம் பால் ஊற்றி பின் டேபிளுக்கு வரும்.
36.பதினோரு மணிக்கு மேல் கொஞ்சம் மந்தம்தான்.
(B)மதியம் சாப்பாடு உண்டு.
1.பெரும்பாலும் அளவு சாப்பாடு தான்.
2.இலை போட்டு,கூட்டு பொரியல் எல்லாம் இரண்டாம் தரமும் உண்டு.
3..சாதம் மட்டும் ஒரு பட்டை. கூடவே ஒரு அப்பளம். பித்தளை டம்பளரில் குடிக்க தண்ணீர்.
4.பில் என்றால், உள்ளங்கை அளவில் ஒரு சிறு புத்தகம், வேட்டியை (அழுக்கு) மடித்து கட்டி, மேல் பட்டன் போடாது, காதில் சொருகிய பென்சில். என்ன எத்தனை பேர் சாப்பிட்டாலும், அற்புதமாய் கூட்டி பென்சிலில் கிறுக்கி கொடுத்திடுவார்.
5.டாக்டர் சீட்டை படிக்கும் பார்மசி ஊழியர் போல, கல்லாவில் இருப்பவர் , சுலபமாய் இதை புரிந்து கொள்வார்.
(C).மாலை
1.மெதுபக்கோடா, மைசூர் போண்டா, தோசை ,கிச்சடி என்று ஒரு களை கட்டும்.
2.இந்த மெது பகோடா கூடவே கெட்டி தேங்காய் சட்னி.
3.அதுவும் போண்டா சூடாக இருக்க, ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு.
(D)இரவு சாப்பாடும் உண்டு.
1.இந்த வெஜிடேரியன் ஹோட்டல்களில் ஸ்வீட் கிடைக்கும்.
2.மைசூர் பாக் , பாதுஷா, அம்மி குழவி போல, குலாப் ஜாமூன் ...இவைகள் சில நாள் அந்த ஷோ கேசில் கொலு விருக்கும்.
3.காலை வேலை சேமியா பாயசம் கிடைக்கும்.
4.எது எப்படி இவர்கள் மெனு லிஸ்டில் வந்தது என்று தெரியவில்லை; ஆனால் கிடைக்கும்.
5.அவை எல்லாம் அன்று எங்களுக்கு ஒரு எட்டாத கனவு போல
6.கொஞ்சம் இன்னும் சற்று பெரிய ஹோட்டல்களில் பாஸந்தி கிடைக்கும்.
7.நான் இதை எழுத வந்ததின் முக்கிய காரணம் மந்தார இலை.
8.எங்கே பேய்க்கரும்பு இனிக்கும் என்று பட்டினத்தார் தேடினாரோ, நானும் அது போல, அந்த வாசம் உள்ள மந்தார இலையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
9.இன்னொன்று, அந்த கண்ணாடி ஷோ கேஸ்; அதன் உள்ளே ஒரு தகர டப்பா அதில் இருந்து வரும் நூல், ஒரு திரௌபதி சேலை போல வந்து கொண்டே இருக்கும்.
10.என்ன சாபிடறீங்க ? என்று கைவிரல் எல்லாம் அந்த பித்தளை டம்ளரில் நனைத்து,
11."நங் " என்று வைத்துவிட்டு, "ஒரு மாசால் தோசை " என்று குரல் கொடுக்க, உடனே ஒரு வாழை இலை உங்கள் டேபிளுக்கு வந்து விடும்.
11.இவை எல்லாம் இன்று இல்லை; அவைகள் எல்லாம், நம் வீட்டில் இருந்த வயதான பெரியவர்கள் இல்லாது போனது போல, காணாது போய்விட்டது.
12.அவர்கள் இல்லை என்றாலும், அவர்கள் பற்றிய நினைவு இன்னும் உள்ளே இருக்கிறது;இந்த, அந்த நாட்கள் ஹோட்டல்கள் போல.
13.ஒரு மறக்க முடியாத சுவை அன்று அந்த உணவில் இருந்தது; அந்த மந்தார இலை வாசனை போல
14.ஒரு தக்காளிக்காய் பொரிச்ச கூட்டு; தண்ணியாகதான் இருக்கும்.
15.ஆனால் அந்த சுவை இன்னும் தொண்டையில் இருந்து கொண்டு இருக்கிறது.
16.பொடி போட்ட கத்தரிக்காய் பொரியல், சாம்பார், ரசம் எல்லாமே ஒரு அற்புதம்.
17.பின்னால் கால போக்கில் சமையலே படிப்பாக கொண்டு வேலையும் அதன் தொடர்பாய் ஆகிட, இப்போதும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் முப்பது வருடமாய் பல நூறு கல்யாணம் செய்து கொடுத்த அற்புத அனுபவம் அமைந்தது போல, வாழ்வில் , அந்த பழைய கால ஹோட்டல்களின் நினைவுகள் என்றுமே ஒரு அற்புதம்.
ஆனால், பழங்காலத்தில் சத்தியமாக பழைய எண்ணெய் வாசனை கிடையாது, பழைய எண்ணெய் அடுத்த நாள் சாலையோரக் கடைக்காரர்களுக்கு விற்பனை கிடையாது. கட்டுப்பாடாக கண்டிப்பாக சுத்த புது எண்ணெய் வாசனையுடன் வந்த தரமான பலகாரங்கள் ...ஆஹா. ... இனி அந்த ஹோட்டல் முதலாளி களைப்போல ஒரு மஹானுபாவர்களை பரோபகாராகளையும் காண முடியாது. அவர்கள் ஏதோ யாரோ சம்மந்திகள் வரூவதுபோல ' வாங்கோ வாங்கோ சாப்பிடுங்கோ என்று நமக்கு வரவேற்பு மரியாதையுடன் பணிவுடனும் பரிவுடனும் இருக்கும்
அதேபோல் திருவல்லிக்கேணியில் சைடோஜி மெஸ்,ஐயர் ஓட்டல், உடுப்பி ஓட்டல்களும் ப்ரசித்தமாக இருந்தன .
அதுமட்டுமல்ல ...மாம்பலம் ரங்கநாதன் தெரு 'பட்ஸ் ஓட்டல் ,பாண்டி பஜார் கீதா கேப், வசந்த பவன் ஓட்டல் இவைகள் ஒரிஜினலாக முதல் முறை துவக்கப்படபோது எந்த முதலாளியிடம் இருந்ததோ ....அவைகளின் தரம் சுவையை எங்களைப்போல 70 வயதை கடந்த வர்களுக்கு தான் தெரியும்.
அந்த பழங்கால ஓட்டல்களில் தரம் அலாதியானது .
இன்று நாங்கள் ஏதோ நேரத்திற்கு உணவு செய்து கொடுக்க ஆட்கள் இருந்தால் போதும்...சுவை சுமாராக தான் இருக்கும்.
ஒன்று மட்டும் நிச்சயம்....நாங்க அனுபவித்த சுவையை ...பாவம்....இந்த கால இளைஞர்களுக்கு சாப்பிட கொடுப்பனையில்லை. கிடைத்ததை சாப்பிட்டு நேரத்துடன் போட்டி...ஓட்டம்...அவசரம்....ஆனால் தரமான உணவு கிடைக்க Kitchen master காணோம்.
- சாய் ராம்
================================
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ட்ரிப்ளிகேன் (Triplicane) ரத்னா கஃபே, 1948 முதல் அதன் தனித்துவமான சாம்பார் இட்லிக்கு புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய உணவகம். வெல்லம் கலந்த, அடர்த்தியான மற்றும் சூடான சாம்பார் இட்லி மீது ஊற்றப்பட்டு பரிமாறப்படும் விதம், இவர்களின் அடையாளமாகும். 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதே சுவையைத் தக்கவைத்துள்ள இந்த உணவகம், காலை உணவு, வடை மற்றும் பில்டர் காபிக்கு மிகவும் சிறந்தது.
எனது பள்ளிப் பருவம் முதல் கல்லூரி காலம் வரை பல முறை இங்கு சுவைத்திருக்கிறேன். இங்கு இட்லிக்கு சாம்பார் சாப்பிடுகிறவர்களை விட சாம்பருக்கு இட்லியை சாப்பிடுகிறவர்களே அதிகம் நானும் உட்பட 😂😂😂
- ஷங்கர்
=============================
எப்போதும் நமது இளமைக்கால நினைவுகளை தூண்டும் விதத்தில் பதிவுகளை பார்த்தவுடன் மனம் துள்ள ஆரம்பிக்கும்.
வார்த்தைகள் தானே வந்து விழ ஆரம்பிக்கும்.
மதுரையில் வடக்கு மாசி வீதியில் நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி மூன்று காபி கிளப்கள்/கஃபேகள்.
ஹரிஹர விலாஸ், குருவாயூரப்பன் காபி கிளப், எஸ்.எஸ். கஃபே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஐட்டத்துக்கு ஸ்பெஷல். இதைத் தவிர வடக்கு வடம்போக்கு தேர்வில் லட்சுமி கஃபே அதைத் தாண்டி சரஸ்வதி கஃபே. இவையே எனது இளமைக் கால உணவகங்கள். வீட்டில் கடைக்குட்டி என்பதால் செல்லம் சிறிது அதிகம். ஹரிஹர கஃபேயில் இருந்த ஒரு சரக்கு மாஸ்டர் ஆமைவடை மிக அருமையாகப் போடுவார். அவர் பேரே 'ஆமை வடை மாமா'.
முருகல் தோசை எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னது லட்சுமி கஃபே. பொன் முறுவலான அந்த முருகல் தோசை அதன் பிறகு இதுவரை நான் எங்கும் பார்க்கவில்லை.. ருசித்ததில்லை. இங்கே முருகல் தோசை என்றால் கருகல் தோசையாக கொடுப்பதுதான் நடக்கிறது.
எஸ் எஸ் கஃபே ரோஸ் மில்க் மிகவும் பிரசித்தம். குருவாயூரப்பன் காபி கிளப் ஸ்பெஷல் அடை- அவியல். நினைத்தாலே இப்போதும் நாவில் எச்சில் ஊறுகிறது..
சரஸ்வதி கஃபே யில் போட் லோ என்று ஒரு குளிர்பானம். விளையாடி விட்டு அந்த போட் லோ குடித்தால் சொர்க்கமே நம் முன் வந்து கைகட்டி நிற்கும்.
மேலக் கோபுர வாசலில் இருக்கும் டெல்லிவாலா சப்பாத்தி/சாகு- விற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
இது எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் வீட்டருகே இருந்த *செண்டாச்சி* எனும் பாட்டி இரவு நேரங்களில் போடும் இட்லி - கெட்டி சட்டினிக்கு அந்தத் தெருவே அடிமையாக இருந்தது. அந்த பாட்டியின் நினைவாகத்தான் நான் எழுதிய கதை ஒன்றில் *செம்பாச்சி* என்ற ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்தேன்.
இதையெல்லாம் எழுதுகையில், நமது நாவில் சுவை அரும்புகள் ஏங்கத் துவங்குகின்றன.
- ஸ்ரீவி
==============================
பழங்கால உடுப்பி ஓட்டலகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். சாய்ராம் ஐயாவை இவ்வளவு நீண்ட பதிவு போட வைத்து விட்டனவே!👍ஐயா, எங்கள் உலகத்துக்கு( நீண்ட பதிவாளர்) உங்களை வரவேற்கிறோம்🙏🙏
என்பதிவும் சற்று நீண்டது. பல ஆங்கில சொற்களுக்கு மன்னிக்கவும்.
சரவண பவன் இராஜ கோபால் அவர்கள் வருவதற்கு முன், சென்னையில் உடுப்பி ஓட்டல்களே அதிகம். டிபன் பத்ததியை வணிக முறையில் அறிமுகப்படுத்தியவர்களே உடுப்பி மக்கள்தாம் என்பர்.
இரண்டு இட்லி 10 பைசா அதற்கு 3 அல்லது 4 அலுமினிய மக்கில் சாம்பார் கேட்டால் ஊற்றுவார்கள். கெட்டி தேங்காய் சட்னி வேறு.சுலபத்தில் கெட்டுப்போகாது.
ஐயா விவரித்தபடிதான் ஓட்டல் செட்டிங் இருக்கும்.
எக்மோர் கெங்கு ரெட்டி தெருவில் பத்மாவதி, எக்மோர் ஐரோட்டில்பங்கஜா, உடுப்பி( இன்றைய மத்ஸ்யா), ப்பூந்த மல்லி ஐரோட்டில், தாசப்பிரகாஷ், புரசவாக்கத்தில் கௌரிசங்கர், கார்டன், எக்மோர் ஸ்டேஷன்எதிரில் குருபிரசாத்,
பெரிய மேட்டில் மர்ச்சண்ட்ஸ் கபே, பிராட்வேயில் மாடர்ன் கபே என்று உடுப்பி ஓட்டல்களின் சூழலில் வாழ்ந்தவன்
நான்.
இன்றும் கார்டன், மாடர்ன் கபே போன்றவை உள்ளன.
சர்வர் பற்றி இரண்டு குறிப்புகள்:
- டபராவுக்கும் டம்ளருக்குமாக காபியை ஆற்றும் இலாவகம்( சர்வர்சுந்தரம் நாகேஷ்!)
-நண்பர்கள் சர்வர் சரியாக பில் போடுகிறாரா என்று சோதனை செய்ய கூட்டமாக சென்று கண்டபடி( வழக்கமான வரிசை ப்படி இல்லாமல் ) - சிலர் முதலில் காப்பி, பின்பு இட்லி, சிலர் முதலில் தோசை, பின்பு ஐஸ்க்ரீம்,இப்படி மாற்றி மாற்றிக்கேட்டு அவரை ஏமாற்றப்பார்த்தனர். அவர்எத்தனுக்கு எத்தன். உள்ளே சென்று
ஒரு பேப்பரில் கிரமமாகஎல்லா அயிட்டங்களையும் எழுதி சரியான பல்லைக்கொடுத்தார்!
இந்த சர்வர்கள் மாலை போண்டா, பஜ்ஜி போன்றவை சூடாக இல்லை எனில் சொல்லிவிடுவார்கள்.
ஐஸ் க்ரீம் 60 களில் அவ்வளவாக இந்த ஓட்டல்களில் கிடைக்காது. ரோஸ் மில்க் கிடைக்கும்.
அக்காலத்தில் உணவை விற்றாலும், சுற்றுச்சூழல் அவ்வளவு சுத்தமாக இருக்காது என்றாலும்
அவர்களின் கரிசனம் உணவைச்சுவை ஆக்கியதோ!
மந்தார இலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
சூடாக காராசேவை மந்தார இலப்பொட்டணத்திலிருந்து எடுத்து உண்பதே தனி சுவை!
மேடவாக்கம் நாட்டு மருந்து கடையில் கூட இந்த இலைக்கட்டைப் பார்த்த ஞாபகம்.
- ,இ.ச.மோகன்
===================
எல்லோரும் அவரவர் நாவின் ருசியைச் சொன்னவுடன் நான் மட்டும் விலக்கா?
எங்களூர் (மணப்பாறை) புகைவண்டி நிலையத்தில் மணி ஐயர் நடத்தி வந்த வி.எல்.ஆர் .(வெஜிடேரியன் லைட் ரெஃப்ரஷ்மென்ட்) ஸ்டால் மிக பிரசித்தம்.
அங்கு கிடைக்கும் உணவுப் பதார்த்தங்களின் ருசி இன்று நினைத்தாலும் நா ஊறும்.
இரண்டு முன்று விரைவு வண்டிகளும், நான்கைந்து பாஸஞ்சர் வண்டிகளுமே நின்று செல்லும். அந்த வண்டிகளில் பயணம் செய்வோர் அருகில் உள்ள
பெரிய ஊர்களான திருச்சியிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சிற்றுண்டி சாப்பிடாமல் மணி அய்யர் கடையைத் தெரிவு செய்து மணப்பாறையில் வந்து சாப்பிடுவார்கள். அதற்காகவே புகை வண்டிகளும் சிறிது நேரம் தாமதித்தே கிளம்பும்.
வண்டிகள் வரும்போது டிரைவருக்கும் கார்டுக்கும் தனித்தனி உணவுப் பொட்டலங்கள் மணி ஐயரால் அனுப்பி வைக்கப் படும்.
அங்கு கிடைக்கும் இட்டிலி, மெதுவடை, மசால்வடை, பூரி கிழங்கு,
நெய் ஒழுகும் ரவா கேசரி, பட்டணம் பக்கோடா, வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி.
அடடா ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.
கள்ளிச்சொட்டாட்டம் ஃபில்டர் காபி,
திக்கான பாலில் போட்ட டீ.
பட்டணம் பக்கோடா (இதை மெது பக்கோடா என்றும் சொல்வார்கள்)
வெளிப்புறம் மொறு மொறுவென்றும் உள்ளே மெத்தென்று நாக்கில் கரையும் பக்குவத்தில் இருக்கும்.
ஒரு பூரியைக் கீழே வைத்து அதன் மேல் கிழங்கை வைத்து மேலே இன்னொரு பூரியால் மூடி வாழை இலையில் வைத்துக் கொடுக்கும் போது ஆஹா அதற்கு இந்த உலகையே எழுதி வைக்கலாம்.
பூரிகிழங்கில் வெங்காயத்தை அதிகம் போட்டு உருளைக்கிழங்கை குறைவாகப் போட்டு இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாய் அரிந்து போட்டு
கூடவே பட்டாணியும் போட்டு, அடடா இப்போதும் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
மணப்பாறை முறுக்கு பிரசித்தி பெற
மணி ஐயரும் ஒரு காரணம்.
அரிசியால் செய்த மொறுமொறுப்பான முறுக்கும் சிறப்பு.
நான் திருச்சியில் கல்லுரியில் படிக்கும் போது கல்லூரித் தோழர்களுக்கு அடிக்கடி வாங்கிச் செல்வேன்.
மணி ஐயரின் கடைப் பதார்த்தங்களுக்கு இரயில் பயணிகள் மட்டுமல்ல மணவை நகரம் மக்கள் அனைவருமே அடிமைகள்.
கொசுறு:
மணப்பாறை அரசுப் பள்ளியில், தேசிய மாணவர் படை ( என்.சி.சி)
பரேட் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும்.
பரேட் முடிந்தவுடன் சிற்றுண்டியாக
மணி ஐயர் கடை பூரி கிழங்கு வழங்கப்படும். இதற்காகவே தேசிய மாணவர் படையில் சேர கூட்டம்
அலைமோதும்.
- முகம்மது சுலைமான்
==========================
அதே போல் நானும் தஞ்சையில் KHS பள்ளியில் படித்த போது NCC பயிற்சி நடக்கும் நாளில் சரவண பவன் ஓட்டலில் இருந்து வரும் பூரி மசாலா மற்றும் ரவா உப்புமா இப்போதும் நினைவில் நிற்கிறது. நினைத்தாலே இனிக்கிறது.
- சந்திரசேகரன்
=======================
மும்பை நாட்களில் மாதுங்கா உணவு மிக அரியது....சாம்பார் மீதம் வைத்தாலும் அபராதம் குடுக்கணும்...சுத்தமாக ஹிந்தி தெரியாமல், நவி மும்பையில் இருந்து மாதுங்கா வரை போய் வருவது இன்று நினைத்தாலும் சிறப்பு...
-திருவள்ளுவன்
==============
No comments:
Post a Comment