Monday, June 30, 2025

மண்ணில் தாய் போல் இவரும் கடவுளராம்

 கடவுள் இங்கே பல


மருத்துவர் குலத்திற்கு இன்று வாழ்த்துகளாம் 

   மண்ணில் தாய் போல் இவரும் கடவுளராம்


வருத்தும் நோய்களுக்கு வரமாம்  "வைத்தியநாதன்" (பொது மருத்துவம்)

   வலிக்கும் பற்களா ? வாருங்கள்  "பல்லவன்" (பல் மருத்துவம்)


கருவிலிருந்து "குழந்தைசாமி" கண்காணிப்பார் (குழந்தை நலம்)

   கறாராய் ஆணா? பெண்ணா? அதைக் *கூறார் 


திருமணமானோர் அணுக "கல்யாண சுந்தரம்" (பாலியல்)

   திடீரென இதயம் நின்றால்  இருதயராஜும் (இதயம்)


குருதியில் சர்க்கரையது கூடினால்   "சக்கரபாணி" (நீரிழிவு)

   கூந்தல் அது நாலடியாய் குறைந்தால் "நீலவேணி" (சிகை)


இரகசியம் மனைவி சொல்ல கேட்காமல் போச்சா

   இருக்கவே இருக்கிறார் நம் "காதர் பாட்சா" (காது, மூக்கு, தொண்டை)


அறுக்க உடலை ஆயிரங்கள் வாங்கும் "ரம்பா" (அறுவை சிகிச்சை)

   அசடு மனசுக்கு ஆறுதல் சொல "மனோபாலா" (மன நலம்)


இருமுறை மாங்கனி தரும் "செல்வன்" உண்டாம் 

   இப்படியும் ஒரு மருத்துவர் நம்ப முடியாதாம் .



வாழ்த்துகள் 💐💐💐


*கூறார்--கூற மாட்டார்


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/7/2025

Saturday, June 28, 2025

தலமரங்கள் -ஒருபார்வை

 *தலமரங்கள் -ஒருபார்வை*


நமது முன்னோர்கள் ஒவ்வொரு பொருளினுள் இருக்கும் அறிவியலை அறியாவிட்டாலும் அதன் பலன்களை அனுபவபூர்வமாக அறிந்திருந்தார்கள்.


நேரடியாக மக்களிடம் கூறாமல் அவற்றை ஆன்மீகத்தில் கலந்து அளித்ததன்மூலம்

மனதில் நம்பிக்கையை விதைத்து,பல நோய்களை குணமாக்கியதுடன்

அதனை அழியாமல்

காலம்காலமாக தொடரவைத்தார்கள்.


தல மரங்களின் அறிவியல் முக்கியத்துவம், அவற்றின் சூழலியல், தாவரவியல், சமூக, கலாச்சார மற்றும் மருத்துவ அம்சங்களில் வெளிப்படுவதாக

சமீபத்திய ஆய்வுகள்

தெரிவிக்கின்றன.


 *சூழலியல் முக்கியத்துவம்:*

 

தல மரங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவை அப்பகுதியில் உள்ள பறவைகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைகின்றன.


உதாரணமாக, அரச மரம் மற்றும் ஆல மரம் போன்ற பெரிய மரங்கள் பறவைகளுக்கு கூடு கட்டவும், நிழல் தரவும் உதவுகின்றன.


 *தாவரவியல் முக்கியத்துவம்:* 


தல மரங்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் வளரும் மரங்களாகவே உள்ளன. இவை அந்த பகுதியின் தாவரவியல் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன.

 

 *சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம்* 


தல மரங்கள் கோயில்களுடன் தொடர்புடையவை என்பதால், அவை அந்த சமூகத்தின் கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளன. 


 *நீர்நிலை பாதுகாப்பு* 


தல மரங்கள் பெரும்பாலும் கோவில் நீர்நிலைகளுக்கு அருகில்  வளர்க்கப்படுகின்றன. இது நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது.


 *மருத்துவ முக்கியத்துவம்* 


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் காடுகள்,மலைகள் என அலைந்து திரிந்தவர்கள்.


இவர்கள் தன்னலம்பாராது,

மனிதர்கள் சிறந்த ஒழுக்கநெறிகளை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக மரம்,செடி,கொடி 

என இயற்கையில் மறைந்திருக்கும் நோய்தீர்க்கும் திறனையும் அவற்றின் இதர பலன்களையும் தங்களது அனுபவத்தால் வெளிகொணர்ந்தார்கள்.


காடுகளில் சேகரித்த நோய்தீர்க்கும் மூலிகைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் நட்டுவைத்து இறைவனோடு அவற்றையும் வணங்க வைத்தார்கள்.


கோவிலில் நடைபெறும் சடங்குகளில்  அவற்றின் இலைகள்,பழங்கள்,பட்டைகள் மற்றும் வேர்கள் என இத்தாவரங்களின்

பகுதிகளை இடம்பெற வைத்தார்கள்.


பிரசாதங்களில் கலந்து அளித்தல்,தாயத்தில்

வேர்களை வைத்து கைகளில் கட்டுதல்,

போன்றவைகள் சில உதாரணங்கள்.


சில தாவரங்களின் காற்றுகூட சில நோய்களை தீர்க்கும்

என்பதை உணர்ந்ததால்,

அவற்றின் கீழ் தியானம் செய்தல்,சுற்றிவருதல் போன்ற பழக்கங்களை ஏற்படுத்தினார்கள்.


கடுமையான விஷங்கள் கூட நோய்தீர்க்கும் மருந்து என்பதை உணர்ந்த சித்தர்கள்

மரச்சிலைகள்,நவபாஷாண சிலைகளை சில இடங்களில் நிறுவி அவற்றின் மேல் அபிஷேகத்தின் பொது வழிந்தோடும்

பால் மற்றும் தேனோடு கலந்து மருந்துகளை ஆன்மீக நம்பிக்கையுடன் அளித்தார்கள்.


நவபாஷாணம் என்பது சித்தர்களால்  உருவாக்கப்பட்ட தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், மற்றும் தொட்டி பாஷாணம் ஆகிய ஒன்பது விஷங்களாகும். 


பல்வேறு உலோகங்கள்,தாவரங்களிலிருந்து பெறப்படும்  64 விஷங்கள் சித்தமருத்துவத்தில்

சிறிய அளவில் பால் மற்றும் தேனோடு அளிக்கப்படுகிறது.


அதுபோல தலமரங்களின்  பாகங்கள் மற்றும் சில நோய்தீர்க்கும் மருந்துக்கலவைகள் இணைக்கப்பட்டு, ஆலயங்களில் வணங்கும் சிலைகளின் பீடங்களின் அடிப்புறம் வைத்தார்கள்.


இவற்றின் மேல் வழிந்தோடும் அபிஷேக பொருள் கலந்த நீர் அல்லது பாலை சிறிய அளவில் அருந்துவதால் பல

நோய்களுக்கான

எதிர்ப்புச்சக்திகளை

விதைத்தார்கள்.


இவற்றின் சக்தி காலப்போக்கில் குறைந்துவிடும் என்பதால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கின் போது

அந்த மருந்துக்கலவை 

மாற்றப்படும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.


பொதுவாக மண்ணின் மரங்கள் தலமரமாக வளர்க்கப்பட்டாலும்,

மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் சில அபூர்வ மூலிகை தாவரங்களையும் சில குறிப்பிட்ட நோய்கள் அதிகம் பரவியிருந்த இடங்களில் வளர்த்தார்கள்.


பாதுகாப்பான இடம் என்பதாலும்,மதநம்பிக்கை காரணமாகவும் கோவில்களில் வளர்க்கப்படும் நோய்தீர்க்கும் பல தலமரங்கள் பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.


தமிழகத்தின் பண்டைய சைவ,வைணவ  ஆலயங்கள் மட்டுமன்றி இத்தலமரங்கள் வளர்க்கும் முறை தமிழகத்தில் சில பௌத்த,சமண ஆலயங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளன.


காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் அமைந்துள்ள பல்லவர் காலத்திய

சமண ஆலயமான திரைலோக்கியநாதர் கோவிலில்  

மலைப்பகுதியில் வளரும் அபூர்வமான பழமையான  குராமரம் தலமரமாக உள்ளது.


இம்மரத்தை சுற்றி கிபி.13ம் நூற்றாண்டில்  பல்லவ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கனால் ஒரு பாதுகாப்பு கல்மேடை கட்டப்பட்டுள்ளது.


முற்கால தமிழர்களின் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமின்றி பண்பாடு,கலை வளர்க்கும் கூடங்களாகவும்,

தானிய சேமிப்பு மற்றும்

படைவீடுகளாகவும்,இயற்கை இடர்பாடுகளின் போது காக்கும் அரண்களாகவும்,

மருத்துவ மனைகளாகவும் செயல்பட்டன என்பது வரலாறு செப்பும் உண்மைகள்.


இப்பொழுது தெரிகிறதா "கோவில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழியின் உள்அர்த்தம்.


சமூகம் காக்க,இயற்கையை

பேணுதல் இன்றியமையாதது

எனும் தத்துவத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மீகம் எனும் இனிப்புக்குள்,தலமரம் எனும் கசப்பான மருந்தை வைத்த நம் சித்தர்களையும்,மன்னர்களையும், முன்னோர்களையும்

எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

(விரும்பினால் தொடரும்)

 *அக்ரி சா.இராஜா முகமது*

கரையும் உபதேசம்

 கரையும் உபதேசம் 


"தொந்தி இல்லை, துரும்பாய் இளைப்பில்லை

   துறுதுறுவென நீங்கள் எப்படி ஒரே அளவில்?"


வந்தமர்ந்த காக்கையின் வாயைக் கிளரினேன் 

   வரிசையாக உபதேசம் வழங்கப் பெற்றேன் 


" சந்திரன் விடை பெறும் வேளையில் விழிப்போம்

   சாமி வரும் பிரம்ம முஹூர்த்தத்தில் களிப்போம் 


சொந்தங்கள் அவை சூழ இரை தேடிப் போவோம்

   சொர்க்கமாம் சேர்ந்துண்ணல் நாளும் துய்ப்போம்


பந்தியில் உண்ணும் போது பொத்தான் தளராது 

   பசி அடங்கிய உடன் உண்பதும் தொடராது 


சந்ததிக்கும் தருவோம் தக்க அந்தப் பயிற்சி

   தாய் என்றும் வாயில் ஊட்ட மாட்டாள் பூச்சி 


அந்தி வந்த பின் திரும்புவோம் கூடும்

   அப்புறம் சுற்ற மாட்டோம் ரதியோடும்


இந்திர விருந்தெனினும் இரவில் மறுப்போம்

   எட்டு மணி அடிக்க எல்லாரும் படுப்போம்."


__. குத்தனூர் சேஷுதாஸ் 28/6/2025

Wednesday, June 25, 2025

இன்றைய இருக்கை

 உழைத்துக் களைத்து 

வீடு திரும்பையில் 

அப்பாடா என்று சாய்கையில்

கை கொடுக்கும் "தாய் மடி".

சில நேரங்களில் 

வேண்டும் பொருட்களைத் 

தேடும் போது மேலே மட்டும் 

மறைக்காமல் கீழேயும் 

ஒளித்து வைக்கும்

"திருடன்".


முகம்மது சுலைமான்

*****************

இன்றைய இருக்கை


இருகரம் கூப்பி "வருக வருக" என்பார் 

   இருக்கை காட்டி கைவிசிறியும் தருவார் 


அருந்த நீரோ, மோரோ கிடைக்கும் 

   "அண்ணி, பிள்ளைகள் எங்கே?" கேட்கும் 


"கரும்பும், நெல்லும் கொழித்தனவோ?" வினாவும் 

   "கல்யாணம் மகளுக்கு கண்டிப்பாய் வரணும்"


பருக இப்போது சூடான காஃபி வரும் 

   பாலிலே செய்தது இராது நீரும் 


" பெரிய ஏரியின் நீர் மட்டம் எவ்வளவு? "

   "பெருமாள் கோயில் குடமுழுக்கு என்று?"

   

"விருந்துண்டுதான் போகணும்" எனப் பிடிவாதம் 

   வீட்டில் செய்தவையே விரித்த இலையிலும்


"திருவிழா வரும் போது எல்லோரும் வரணும்" 

   திரும்பத் திரும்ப இது கேட்கும்   வீடுதோறும் 


உறவுகள் அமர்ந்த இடம் பொருள்களாம் இன்று 

   ஒரு நாள் முன் வந்து flip வண்டியில் (Flipkart) திரும்புது .


__. குத்தனூர் சேஷுதாஸ்

இப்படியும் ஏமாற்றுவார்


ஏமாறும் பலரும் இங்கே இருக்கும் வரை 

   ஏமாற்றுப்பேர்வழிக்கு இல்லையே குறை


பூமாலை போலே சூட்டுவார் புகழாரம் 

   புதைந்து நெஞ்சினில் ஏதோ இருக்கும் 


சாமான்கள் தருவேன் மலிவாக என்பார் 

   சத்தமின்றி இரவில் கரைந்து போவார்


மாமா, மச்சான் உறவென நெருங்குவார் 

   மனதினில் ஏதோ காயும் நகர்த்துவார்


"கோமேதகம் உண்டு வேண்டுமா?" கேட்பார் 

   கூழாங்கல் கொடுத்து குருவியாய்ப் பறப்பார்


காமசுந்தரியுடன் நடிக்க வைப்பேன் என்பார் 

   கைப் பையில் கிடைத்ததைச் சுருட்டி ஓடுவார் 

   

"ஆமாம், ஆமாம்" என்றே பின்னே தொடருவார்

   அவரும் ஏமாற்றவே அவ்வாறு செய்கிறார் 


நாமாக விழிப்புடன் இருப்பதே நன்றாம் 

   நம்பிக்கை, நாணயம் நடைமுறையில் அன்றாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ்

இருக்கையே

 



அன்பே! இருக்கையே!


நீ இருக்கையில்

எனக்கு வேண்டாம்

வேறொரு இருக்கை!


நேசமுடன்..

- சாய்கழல் சங்கீதா


*********************


இந்த இருக்கையில் அமரத்தானே செருக்கையையும், தற்காலிகமாக ,

விட்டு  விட்டுகூழைக் கும்பிடுகள்!

இருக்கை. - தொலைக்காட்சி கட்டுப்படுத்திகளின் மறைவிடம்!

ஓய்வு பெற்ற  முதியவர்களின் உறைவிடம்.


இருக்கை

-----

பெரும்பாலும், நான்கு கால்கள், இரண்டை கைகள், ஒரு முதுகு கொண்டது.மூளை கிடையாது, ஆனால் மனித மூளையை ஆட்டிப் படைக்கும், பதவியைப் பொறுத்து!


ஆன்மீகத்தலைவர் அமர்வது- பீடம்


அரசை ஆள்பவர்- அமைச்சர்


வரிசை இருக்கைகளில், நீதிபதிகளோ, மாணவர்களோ அமர்ந்தால்- பெஞ்சு( அமர்வு)


இது ஆகுபெயராக,

ஆங்கிலத்தில்,

நிர்வாகக்குழுவின்

தலைவர், பல்கலைக்கழகத்

துறைத்தலைவர் என்றெல்லாம் குறிக்கும்.


இது சாதுவாக இழுத்த இழுப்புக்கு வருவதால்

சாதாரணமாக எடை போடக்கூடாது; அமர்ந்தால் ஆளையே மாற்றிவிடும்!


ஒரு நாற்காலியை வைத்து என்ன அற்புதமான கதை புனைந்தார் திரு கோமல் ஸ்வாமிநாதன்

அவர்கள், நவாப் நாற்காலி என்ற பெயரில்!


பெயர்தான்இருக்கை. ஆனால்  அமர்ந்தவரை,சும்மா இருக்க விடாது!


- இ.ச.மோகன்


*****************

"இரு கை" நீட்டி லஞ்சம் வாங்கவே இருக்கைக்கு அனைவருக்கும் ஆசை....


😊சாயி😊


*****************





Monday, June 23, 2025

கவியரசருக்கு இன்று பிறந்தநாள்.

  கவியரசருக்கு இன்று 

பிறந்தநாள்.


சங்கத்தமிழை 

திரை இசையால்

சாமானியனுக்குக்

கொணர்ந்தவன்.


கோப்பை மதுவை 

ருசித்தவன்.

"தாய்க் கிளி"களை 

இரசித்தவன்.


இயேசு காவியத்தைப் 

படைத்தவன்.

அர்த்தமுள்ள இந்து 

மதத்தை தந்தவன்.

அல்லாவின் பெயரைக்

கொண்டாடச் செய்தவன்.


"காய்"களை வைத்துக்

கவி நடனம் புரிந்தவன்.


"போனால் போகட்டும்

போடா" எனத்

தத்துவ முத்துக்களை 

உதிர்த்தவன்.


காவியத்தாயின் 

இளைய மகன்.


எழுதிய பாடல்களில் 

இறப்பின்றி வாழ்பவன்.


நீ நிரந்தரமானவன்

அழிவதில்லை.

எந்த நிலையிலும்

உனக்கு மரணமில்லை.


- முகம்மது சுலைமான்,,

***********************************

கவியரசே ! பிறந்தநாள் வாழ்த்துகள் 


முத்தையா ! நீ பிறக்கையில் மூட்டையில் ஒரு நெல்லிக்காய் 

   முழு நிலா உனை கரும்போர்வையில் மறைத்தாய்

   

பத்து விரல் படும் பந்தாய் எங்கும் அலைந்தாய் 

   பசுந்தமிழில் தோய்ந்து பல காலம் தொலைந்தாய்


தித்திக்கும் தமிழ் உனைக் கைவிடவில்லை 

   திரைப்படமது ஈர்த்ததும் அதிசயம் இல்லை 


பத்து மணி வரை (காலை) நித்திரையில் இருப்பாய் 

   பத்து திரைப் பாடல்கள் நித்தமும் தருவாய் 


அத்தை மகனே ! " போய்ய் " வர வா? கேட்பாய்

   ஆயிரம் நிலவையும் அணைக்காமல் விட மாட்டாய்


சத்தமின்றி ஆன்மீகம் தலையெடுக்க உன்னில் 

   சட்டையாய் மாயையும் உரிந்ததாம் தன்னால் 

   

புத்தம் புது அத்தியாயம் இப்போது தொடக்கம்

   புல்லாங்குழல் ஒலியில் புகழ் ஏணி அடங்கும் 


ஒத்தையாக பல்லாண்டுகள் உன் ஆட்சி திரையில் 

   ஓயாதாம் உன் பாடல் இசையலை செவியில்.


கவியரசே ! பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐

__. குத்தனூர் சேஷுதாஸ்


**************************************

கவியரசர் கண்ணதாசன்  பிறந்த தினம் 

---

அவர் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டி வழியாக சில வருடங்களுக்கு முன்பு

செல்ல நேர்ந்த போது

வண்டியிலிருந்து கீழே இறங்கி காலணிகளைக் கழற்றி விட்டு அவர் பிறந்த அந்த மண்ணைத்தொட்டுக்

கண்களில்ஒற்றினேன்.

அவர்கொடுத்த பிச்சைதானோ என்னவோ, இன்று தமிழ் ஆர்வம் மிகுந்து தமிழில்

சில வரிகளாவது பதிவிட முடிகிறது.


அன்னாரின் கவிதைச்சிறப்புகள் பற்றி பல பதிவுகள இங்கு நாம் கண்டோம்.

அவர்பாடல்களில் எது சிறந்தது?

திருப்பதி லட்டில் எந்த பக்கம் சுவை மிக்கது?


காலத்தால் அழியாத பாடல்களின் படைப்பாளி

காலன் உடலை மட்டும்

கவர்ந்தான.- அந்தகன்அன்றோ!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்என்பது போல,அவருடைய திரைப்பாடல்கள்

அல்லாது அவர்

எழுதிய " மாங்கனி"

என்ற காவியத்தில் ஒரு வரியைப் பாராட்டி இங்கு பதிவிடத் தோன்றுகிறது.


அடலேறு என்ற காவிய நாயகன் மாங்கனி எனும் காதலியைத் தேடிச்செல்கிறான்

"போனவளின் பின்னாலே மெல்லப் போனான்!

புதுமனதின் முதல் கூச்சம் இழுக்கக் கண்டு

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப்பார்த்தான்

தென்றலது போனதற்குச்  சுவடு ஏது?" எனகிறார்.

காதலியின் அடிச்சுவடு தென்றல்போலாம்!


பாரதி, பாரதிதாசன் எனும்

இருபெரும் தமிழ் ஆளுமைகளை ஒரே பாட்டில் இணைத்துப் பாடுவது என்பது சாதாரண ஒன்றல்ல. இதனை மிகச் சிறப்பாக செயதுள்ளார் கவியரசு கண்ணதாசன்.

அதில் சில வரிகள:

“களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியை

களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி

களைநீக்கித் தந்த களநியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்

இருள் சூழ்ந்திருந்த இவ்வைய முழுதும்

எழுகதிரான இளைஞன் பாரதி

எழுந்த கதிர்முன் மானிட சாதிக்கு

இரத்தம் ஊட்டினார் பாரதிதாசன்"


வாழும் தமிழின் காவலர் இவர்கள்.


   "இறப்பின்ப பின்னது யாதெனக் கேட்டேன்

இறந்து பாரென  இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்

ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 

அனுபவம் என்பதே நான்தான் என்றான்"

என்பது கவிஞரின் இறப்பு பற்றிய அனுபவம்.


அவர்அனுபவிக்க சென்று விட்டார். நம் நமது "எட்டடுக்கு மாளிகையில்" அவர்கவிதைகளை ஏத்தி இரசிப்போம்.



இன்று திரு எம் . எஸ் விஸ்வநாதன் அவர்களின் பிறந்த தினமும்கூட.


இந்த கவியரசு- மெல்லிசை மன்னர் கூட்டணி கருத்துக்கும் காதுக்கும் இனிமையைத் தந்த 

வலுவான கூட்டணி!


" ஏழு சுவரங்களில் எத்தனை பாடல்" கள் இவர்தம் படைப்புகள்!


தலை தாழ்த்தி , இரு கரம்

கூப்பி,வணங்குவோம்🙏🙏

- இ.ச.மோகன்

Sunday, June 15, 2025

தந்தையர் தின நல் வாழ்த்துகள்!

 தந்தை கூறும் அறிவுரைகள் எட்டிக் காயாய்க் கசந்திடுமே!


விந்தை மனிதர் மனங்களிலே வில்லனாய் 

அவரும் தெரிவாரே! 


சிந்தை முழுதும் 

வெறுப்புணர்வு கொழுந்து விட்டு எரிந்திடுமே!


தந்தையாய் அவரும் மாறுங் கால் தந்தையின் அருமை புரிந்திடுமே!!


மறைந்த பிறகு 

ஊர் மெச்ச காரியங்கள் செய்வோரே!


இருக்கும் போதே

மதித்திடுங்கள். 

அன்பாய் நீங்கள் நடந்திடுங்கள்!


தந்தையர் தின 

நல் வாழ்த்துகள்!


- ஸ்ரீவி


***************************

இன்று தந்தையர் தினம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

என்ற பாரதி இருவரையும் சம நோக்கில் கண்டார்.


இந்த இரட்டைக்குதிரைகள் பூட்டிய சாரட்டில் பயணித்துதானே வாழக்கைப்பாதையைத் துவங்குகிறோம்.


தாய் கருவில் சுமக்கிறாள்

தந்தை தோள்களில்.


தந்தை காட்டும் கண்டிப்பு, தாம் பட்ட இன்னல்களை மகவு தவிர்க்க வேண்டுமே என்ற கரிசனம்.


மகனுக்குத்தந்தை ஒரு புதிர்

அவன் தந்தை ஆனவுடன்

புதிர்விளங்கும்.


இன்று தந்தை தாய் இருவரையும் போற்றுவோம்.


-மோகன்


***********************



Friday, June 13, 2025

எண்ணியும் பாராத ஏஐ 171

 எண்ணியும் பாராத ஏஐ 171


பாகாய் இனிக்கும் பூலோக வாழ்வு இது

   பலருக்கும் ஏனோ பின் வேம்பாகிறது!


ஆகாய விமானமது (ஏஐ 171), போயிங்கென்று

   அகமதாபாத் விட்டுப் புறப்படுகிறது (12/6/2025)


போகுமிடம் லண்டனென ஒலிக்கிறது 

   பொறுக்காத விதிக்கோ வலிக்கிறது 


வேகமாய் விண்ணோக்கிப் பாய்கிறது 

   விடாமல் விதி அது நாய் ஆகிறது


போகாதே என்று யாரும் தடுக்கவில்லை 

   " போய் வா " அசையும் கையும் ஓயவில்லை 


சோகமாய்ப் பயணமது உடனே முடிகிறது 

   சொடுக்கும் நேரம் தான் வெடிக்கிறது 


நோகாச் சாவே யாவரின் விரும்பம்

   நொடியில் மொத்தமாய் இது அநியாயம் 


சாகா வரத்துடன் யாரும் பிறக்கவில்லை 

   க்ஷணத்தில் சாம்பலாக சம்மதமில்லை.


              " ஆழ்ந்த இரங்கல்"


__. குத்தனூர் சேஷுதாஸ் 13/6/2025

Thursday, June 12, 2025

இழப்பின் வலி...

இழப்பின் வலி...


மறக்கத் தான் நினைக்கிறேன்

மறக்க வேண்டும் 

என்பதையே

மறந்து விடுகிறேன்..


சிரிக்கத் தான் நினைக்கிறேன்

சிரிப்பின் சத்தத்தை

சிதைத்து விடுகிறேன்..


அழத் தான் நினைக்கிறேன் 

கண்ணீர்க் கிணறுகளைக்

காய விடுகிறேன்


உறங்கத் தான் நினைக்கிறேன் 

உறக்கத்துள் சிக்காமல் உயிர்த்து விடுகிறேன்


பறக்கத் தான் நினைக்கிறேன்

சிறகுகளை கூட்டுக்குள் 

பதுக்கி வைக்கிறேன்


நிறுத்தத் தான் நினைக்கிறேன்

நிறுத்தங்களின் முகவரி

தொலைத்து 

நினைவுகளில் நித்தம்

நிலைத்து விடுகிறேன்.




- சாய்கழல் சங்கீதா


*****************


இழப்பும் வலியும்


ஒருக்காலும்வலிமையானதல்ல


வியர்த்தால் பலம் பெறும்

எதிர்த்தால் புலம் பெயரும்


கண்கள் காண்பது முன்புறமே

முன்னானவைகளையே நோக்குவோம்


வலியில் புன்முறுவல்தான்

வலியை வறுத்தெடுக்கும்

சிதைத்து விடும் சிறப்பாகும்


கண்ணீர் ஒரு வரப்பிரசாதம்

துளிகளாகலாம் 

கடலாக மட்டும்விட்டு விட வேண்டாம் 


நாளை வாழ்வை இறைவனுக்களித்தது 

நன்கு கண்ணுறங்கி

நலம்பெற வாழ்த்துக்கள்


நிறுத்தங்களின் முகவரி 

நம்மிடம் வேண்டாம், 

நிறுத்தவோ, 

பதுக்கவோ வேண்டாம் 

நாதனிடம் விடுவோம் 

அதன் முடிவை!


பரமஞானி

Tuesday, June 10, 2025

அலைகள்

 *அலைகள்*

-----------------------

பார்த்ததைச் சொல்லத்தான்

திரும்பச் செல்கின்றனவோ! ☺️

- தியாகராஜன்


*****************


கரையில் கண்டது பிடிக்காது 

உடைந்து போனதோ?

உடைந்தாலும்  பதறாது

மீண்டு வந்ததோ?

- அமுதவல்லி

***********************

சுனாமியாய் பேரலையாக வந்து 

எங்களை அழிக்காமல் 

சிற்றலையாக வந்து

 எங்கள் சின்னஞ்சிறு பாதம் நனைத்துச் செல் 

எங்கள் கடல் அன்னையே!!.

 கடற்கரையில் விளையாடும் சிறார்களின் வேண்டுகோள்!.


- நாகராஜ்

***********************

ஓயாமல் அழைக்கிறேன் 


தலையில் கைவைத்து கரையில் நிற்கும் மனிதா !

   தானாய் வறுமையது தொலையுமென கனவா?


கலைக் கல்லூரி நாளில் காதலியோடு வருவாய் 

   கல்லெறிந்து பேருந்து மேல் களித்துத் திரிவாய்


அலைக் கரம் அசைத்து *ஆழி நான் அழைக்கிறேன் 

   அலைகளை அடுத்தடுத்து அதனால் அனுப்புகிறேன் 


வலையதை விரித்து வாரிக் கொண்டு போகலாம் 

   வாரிக் கொடுப்பதால் வாரியும் என் பெயராம் 


உலையில் சோறாம், உலர்ந்த மீன் குழம்பாம்

   உயிர் வாழ்வார் உலகில் கோடி கோடியாம் 


சிலையாய் அவர் மனைவி காத்திருப்பாள் கரையில் 

   சிறு குழந்தை உடன் நிற்க, மற்றது இடையில் 


விலையிலா *தரளமும், பவளமும் உண்டாம் 

   விதைக்க வேண்டியவை வியர்வைத் துளிகளாம்


இலை இனி கவலை என்று உறுதியாய் நம்பு

   இப்போதே வலையோடு என்னில் (கடலில்) இறங்கு.


*ஆழி - கடல்,  *தரளம் - முத்து


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/6/2025



Monday, June 9, 2025

மூன்று பெண்களுக்கும் ஒரே பானையா?

 



மூன்று பெண்களுக்கும் ஒரே பானையா?

சங்கடமய்யா!

ஆடி ஆடிப் போட்டுடைத்தால்

பானையோடு நீரும் வீண்.-என்பவர் 

விவரமறியா விடலகள்.


மூன்று முடிச்சு போட்டவர்களுக்குத் தெரியும், இவர்கள்

குடும்பச் சுமையை தம்மோடு தலைமை தாங்கியும், தோள் கொடுத்தும்இடுப்பொடிய உழைத்தும் தாங்கும் பாக்கியசாலி பானை தாங்கிகள் என்று.


சுமைதாங்கிகள் வெறும் சுமைகளைத்

தாங்கும்.

இவர்களோ  சும்மாடு கூட. இல்லாது 

சுமந்து சுமந்து வளமும் சேர்ப்பர்.


பானையை சரியாக கையாளவிட்டால் உருளும் அல்லது உடையும். 

தலை, தோள், இடுப்பு எனப் பலவாறும் ,பானை பிடிக்கும் இவர்களைக் கைப் பிடித்தவர்தாம்

பாக்கியசாலிகளோ!


- மோகன்

**********************

தலையில் இருந்து எடுத்தால்

தோளில் நிற்கிறது

தோளை விட்டு அகற்றினால்

இடுப்பில் அமர்கிறது


சுமையில்லா வாழ்க்கை 

எவருக்கும் அமைவதில்லை 

இருப்பதும் இல்லாததும் 

காணும் இடம் பொறுத்து


தலை சுமந்தாலும்

தோள் தாங்கினாலும்

இடுப்பு பற்றினாலும்

சுமை சுமை தான்


வாழ்க்கை சித்திரத்தின் 

மாயை விளக்கி

பானை வழி ஞானம் ஊட்டும்

வண்ணச் சித்திரம்


- அமுதவல்லி

************************

மண்பானை ஆண்கள் 


கலயமாம் மண்பானை ஆண்கள் பாவம் 

   காரிகைகள் மூவர் கைகளில் உள்ளோம் 


"தலை"யில் அவனை வைத்துத் "தாயாய்" கூத்தாடும்

   "தன் பிள்ளை போலில்லை தரணியில்" என்னும் 


வலையில் சிக்க வைத்து "காதலி"யாய் வாட்டும் 

   வாய்ப்பு வர "தோளில்" வைத்துக் கையும் போடும் 


தொலைந்து போகட்டுமெனக் கழுத்தை நீட்டும் 

   துடி "இடையில்" வைக்க " மனைவி "யாய் முயலும்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 10/6/2025


சுமை ஒன்று???

 இன்று ஒரு சித்திரம்

 படைப்பாளிகளின் பசி தீர்க்க!👇🏽




சுமை ஒன்று

 சுமக்கும் பெண்கள் மூன்று

 பானையை  பிடித்ததால்

 பாக்கியசாலிகள் என்று

 பாராட்டுப் போகிறீர்களா

 பானை வடிவில் 

 யானை கனத்தை

 தன் தோளிலும்  இடுப்பிலும்

 தலையிலும்  தன்பாணியில்

 சுமக்கும்  இந்த சுமை தாங்கிகள்  சொல்ல விரும்புவது என்னவோ?


- ஸ்ரீவித்யா

**********************

*சித்திரத்தில் விசித்திரம்!*


ஒரே பானையில் மூன்று பானைகளை சித்தரித்த விசித்திரம்!


மூன்று பெண்களும் சுமக்கின்ற பானையாக உருவகப் படுத்திய அதிசயம்! 


சுமை தாங்கிகள் பெண்களே என கலை நயத்தோடு சொன்ன அற்புதம்!


கணினி யுகம் வந்து உலகமே அடியோடு மாறிப்போன 

நவீன நவயுகம்! 


கலியுகம் தான் இது என 

பானை சுமந்து 

பலமைல் நடந்து தண்ணீர் கொணரும் கிராமப் பெண்களின் அவலம். 


அனைத்தும் கூறும் இது விசித்திர சித்திரம்!!

-ஸ்ரீவி


***************

தோளில் சுமப்பவளுக்குத் 

தோள் கொடுக்க யாருமில்லை!


இடுப்பில் சுமப்பவளுக்கோ 

இடுக்கண் இல்லா

நாளில்லை!


தலை மேல் தூக்கி 

வைத்து சுமந்தாலும் 

"தலைக்கனம்" என்ற 

பேச்சுக்கு குறைவில்லை!


இவர்களின் பானைகளில் 

தண்ணீர் மட்டும்

நிறையவில்லை..

கண்ணீரும் சேர்ந்ததால் 

சுமைக்கு என்றும்  குறைவில்லை!

நவீன மங்கையானாலும் 

எதுவும் மாறுவதில்லை

சுமக்கும் பானைகளைத் தவிர...

எதுவுமே மாறுவதில்லை!


- சாய்கழல் சங்கீதா


***********

அற்புதமான படம்...

படத்தில் அழகிய குடம்..

கவிழ்த்து வாசித்தால் கடம்

இல்லறத்தைத் துறந்தால் மடம்.. 

இது கவிதை என்று

நான் சொன்னால் 

உங்களுக்கு படிக்க 

வேண்டும் மனதில் திடம்!😀


மூன்று பெண்களுக்கும் ஒரே குடம்..

குழாயடியில் குடத்திற்கும்

சண்டை வரும் !


- சாய்கழல் சங்கீதா

************

புக்ககத்தாரை

தலையிலும்,

பிறந்த வீட்டாரை

தோளிலும்,

உன்குடும்பத்தாரை

இடுப்பிலும்

சுமந்தாலும்,

உன்னை சுமக்கவே 

படைக்கப் பட்டவளாக 

உருவகப் படுத்திய 

இந்த உலகம்

உனது

விருப்பங்களுக்கும்

உணர்வுகளுக்கும்

சிறிது செவி 

கொடுத்தால்

பெண்ணே உனக்கு 

அதுவே பெரிய

கைமாறு அல்லவா!!!

- முகம்மது சுலைமான்


********************







Saturday, June 7, 2025

முற்றம் (II)




********************

அக்கம் பக்கம் 

அழகாக சிறிதாக 

தீப்பெட்டிபோல் வீடுகள் 


அதிகாலை...

சாணம் மெழுகி

கோலம் நிறைத்து

புன்னகை பூக்கும் முற்றங்கள்


நண்பகல் ...

உணவுப் பொருட்கள் 

வெயிலில் காய 

ஊர்க் கதைகள் 

நிழலில் கிசுகிசுக்கப்படும்


மாலை வேளை...

பிள்ளைகள் விளையாட்டும்

கூடினோர் சிரிப்பும்

சில வேளைகளில் 

கூட்டாஞ்சோறும்

முற்றத்தில் மணக்கும் 


இரவின் மடியில்...

சாய்வு நாற்காலி 

கயிற்று கட்டில்

கோரைப் பாய்...

எதுவுமில்லை எனில்

முற்றமே படுக்கையாக

வானமே கூரையாகும்


மழை நாட்களில் 

காகித கப்பல்கள் 

மிதந்து செல்லும் 


பண்டிகை நாட்களில் 

பலகாரங்கள் வேகும் 


வீட்டின் விழாக்கள் 

என்றும்

முற்றத்திற்கு பெருமையே


காலத்தின் மாற்றத்தில்

சுருங்கிப் போயின

முற்றங்கள்


வழியாக இருப்பதால் 

பிழைத்திருக்கும் 

வீட்டு வாயில் மட்டும்

மௌனமாக காத்திருக்கும் 

தொலைந்து போன

முற்றங்களுக்கும் 

திண்ணைகளுக்கும்..


- அமுதவல்லி

**********************

முற்றம் என ஒன்று ...


முற்றம் இருக்கும் அன்று இல்லந்தோறும் 

   மூச்சுப் பிரச்சினை என இல்லை எவர்க்கும்


புற்றரவாய் புடலை காய்த்துத் தொங்கும் 

   புல்லாங்குழல் ஒலிக்கும் துளசி மாடம் 


சுற்றங்கள் படை எடுத்து வரும் நேரம் 

   சோறும் சிரிப்பும் சேர்ந்தே பொங்கும்


வற்றலிட்டு பெருசும் பெரிதும் மகிழும் 

   வான் நிலா நமதே எண்ணத் தோன்றும்


பொற்றாமரைக் குளமாய் வானம் தெரியும் 

   போதுமே பழைய ஒரு கயிற்றுக் கட்டிலும் 


வெற்றிலைக் கொடி ஒன்று உரலில் அரைக்கும் 

   வேண்டாம் அதற்கு என்றும் ஜிம்மும், வேறும் 


சிறாரின் மகிழ்ச்சியோ மழை வரக் கூடும் 

   சிறு காகிதக் கப்பல் பல செய்யப்படும் 


குற்றாலச் சிற்றருவி பல கொட்டும் இங்கே 

   குழி கன்னம் இனி பாடும் *செந்தமிழ்ப் பாட்டே


*சின்னச் சின்ன தூறல் என்ன


__. குத்தனூர் சேஷுதாஸ்

****************



முற்றம் (I)


காணவில்லை!!

 பெயர்  முற்றம் /முத்தம் 

எலைட்  அடுக்குமாடி குடியிருப்புக்களால் அபகரிக்கப்பட்டிருக்கலாம்

 என்று  போலீசாரால் சந்தேகப்படப்படுகிறது

 ஆங்காங்கே சில கிராமங்களில்  கண்டதாக செய்திகள் பரவுகின்றன

 தகவல் அறிந்தால்  பகிரவும்

 ஏக்கத்துடன்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்

 பல பாட்டிகள்

 சில துளசிச் செடி  தொட்டிகள்

- ஸ்ரீவித்யா


*************************

எங்க வீட்டு முத்தம் (முற்றம்):


மச்சு வீடு முன்னாடி 

இருந்தாலும்

எங்களுக்குப் 

பிடிச்சதென்னவோ

பின்னாடி இருந்த 

ஓட்டுக் கொட்டாய் சூழ்ந்த

முத்தந்தா!


வேன காலத்திலே

சாயங்கால வேளையிலே

வேப்ப மரக் காத்தோட 

நாங்க விளையாண்ட 

முத்தம்!


ராத்திரி வேளையிலே 

முத்தத்திலே பாய் போட்டு,

அம்மா பறிமாற 

நாங்க எல்லாரும்

அமுதுண்ட காலம்,

 

அது ஆயிரம் பொன் 

கொடுத்தாலும்

திரும்புமா!


முத்தத்திலே போட்ட

கயித்துக் கட்டிலிலே 

படுத்து வானத்தப் பாத்தா

ஆயிரமாயிரம் மின்மினிகள் 

நட்சத்திரம் என்ற 

போர்வையிலே!


நாளுந்தா ஓடிப்போச்சு 

கூட்டுப் பறவைங்கதான் 

பிரிஞ்சாச்சு 


ஆனாலும் பள்ளி 

விடுமுறைகளில் 

கூடப்பிறந்த நாங்க 

குழந்தைகளோட

கூடிக் களித்த 

வேளைகளை 

இங்க விவரிக்கத்தா 

முடியுமா!


காலந்தா மாறிப் போச்சு 

வீடுந்தா கை மாறிப் போச்சு.

ஆனாலும் எங்களுக்கு 

இன்னொரு தாயாக 

எங்கள வளத்த

முத்தத்த மறக்கத்தான் 

முடியுமா!!!


- முகம்மது சுலைமான்


*********************

முற்றம்

கூட்டுக்குடும்பத்தின்

கூடுகையிடம்

உணவு, கேளிக்கை, ஊர்வம்பு

எனப் பல பரிமாற்றங்கள் அரங்கேறுமிடம், 

" வெள்ளி நிலா முற்றத்திலே , விளக்கெரிய, விளக்கெரிய"*


வளிப்பதனிகளுக்கோ,மின் விசிறிகளுக்கோ

தேவை வைக்காத "காற்று வெளியிடை" .


இந்த முற்றங்களைச் சுற்றி உள்ள தூண்கள்

ஒவ்வொன்றும் ஆயிரம்

கதைகள் பேசும்; ஒவ்வொன்றிலும் பதிந்துள்ள விரல் தழும்புகளே சாட்சி.


  இன்று முற்றங்களைக்காண வேண்டின் செட்டி நாட்டுக்கோ அல்லது 

கிராமங்களைப்பின் புலனாக கொண்ட திரைப்படங்களிலோ

காணலாம்,காசு செலவு

செய்து!


முற்றம், திண்ணை, கொல்லை - இவை யாவும் வருங்காலத்தில் தமிழ்

அகராதிகளில் புரட்டிப்

பார்த்து அறிய வேண்டியவை, நம் போன்ற  உயர் மாடிகளில் "

பிரிக்கப்படாத பங்கு " 

வைத்திருப்போருக்கு.


      ஆனால் ஒன்று

நாம் யாவரும் நம்ம இந்த " மகிழ் முற்றம்'

வாயிலாக, கருத்துக்களப் பரிமாறி

மகிழ்வோம்.


*வேட்டைக்காரன்( எம்ஜியார்) படப்பாடல் வரி.

- மோகன்


Friday, June 6, 2025

பத்து ரூவா டாக்டர் மறைந்தார்

 பத்து ரூவா டாக்டர் மறைந்தார் 


ஒத்தைத் தலைவலி என சென்றால் வைத்தியர் 

   ஊருபட்ட பரிசோதனை செய்யச் சொல்கிறார் 


கத்தியைக் காட்டி மிரட்டாத குறைதான் 

   காலனே தேவலை என்னும் நிலைதான் 


சொத்தை எழுதி வாங்கும் காலமும் வரும் 

   சொல்வது அதிகமென எண்ணத் தோணும் 


பத்து ரூவா வாங்கிய Dr. இரத்தினம் பிள்ளை 

   பாவம் இனி என்ன செயும் பட்டுக்கோட்டை .

   

__. குத்தனூர் சேஷுதாஸ் 7/6/2025

பூர்வாவில் ஒரு காலைப் பொழுது

 பூர்வாவில் ஒரு 

காலைப் பொழுது:


ஆங்கோர் குயில் 

இணை தேடி

எழுப்பும் இன்னிசை.


காதொலிப்பான் 

இசையை

இரசித்தபடி 

நடைப் பயிற்சி 

மேற்கொள்ளும் 

இளைய, நடு வயதினர்.


தனியாய் சிலர். 

துணையுடன் பலர்.


நண்பர்களுடன் கதைத்தபடி

நடந்து செல்லும் முதியோர்.



மங்களகரமாக மஞ்சள்

வண்ணத்துடன் செல்லும்

பள்ளிப் பேருந்துகள்.


அதில் தம் பிள்ளைகளை 

அனுப்பக் காத்திருக்கும்

பெற்றோர்கள், 

தாத்தா பாட்டிகள்.


கையில் சிறிய வாளியுடன் 

மகிழுந்து துடைக்க 

அங்கும் இங்குமாக 

அலையும் வாலிபர்கள்.


கட்டிடங்களுக்கு 

இடையில் இருக்கும்

உடற்பயிற்சிக் கூடத்தில் 

உடம்பைப் பேணும் 

சில பெருசுகள்.


இரவுப்பணி முடிந்து

வீட்டிற்குச் செல்ல

தன்னை 

விடுவிப்பவருக்காக 

காத்திருக்கும் 

பாதுகாப்புக்

காவலர்கள்.


நேரமிருந்தால், 


அடடா 

இரசிக்க நம்மிடமே 

எத்தனை 

விடயங்கள்!!!


- முகம்மது சுலைமான்


*************************


முதிய தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைத்துணையாய் மெதுநடை.


இளைய ஜோடிகள்

செவிப்பொறி அணிந்து இசைக்கு ஏற்பவோ,அல்லது ஆளுக்கு ஒரு அலைபேசியில் கதைத்துக்கொண்டோ 

வேக வேக நடை.


வேலைக்கு நேரமாகி விட்டதென  வரும்

சேவைப்

பணியாளர்களின்

பதைபதைப்பு நடை.


பாது காவலர் கூட்டத்தில் ( என்ன அறிவுறுத்தப்படுகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!) பங்கற்க

அவசரம் அவசரமாக வரும் காவலர்களின்

ஓட்டம் கலந்த நடை.


எவ்வளவு நடைகள்

பூர்வாங்கரையில்!


ஒரு நாடகமன்றோ நடக்குது!

****************


*******************



Thursday, June 5, 2025

சுற்றுச்சூழல் பாதுகாப்போம்

 சுற்றுச்சூழல் பாதுகாப்போம்


◆●◆●◆●◆●◆●◆●

மரம் வெட்டும் மர

மண்டைகளுக்கு 

சமர்ப்பணம்

◆●◆●◆●◆●◆●◆●


ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து


நிலமெங்கும் குளிர் நிழல் பரப்பி


மானுடம் பயன்பெற காய்கனி தந்து


தாயைப் போல் வாழும் மரத்தினை


கூர்வாளால் வெட்டித் தள்ளிட


முனைப்போடு வருகிறான் மனிதன்


 அதுவெறும் மரமல்ல என

அறிவானோ 


ஆக்ஸிஜன் உருவாக்கும் ஆலையென்று.


மரம் வெட்டும் மர மண்டைக்கு


செக்கு எது சிவலிங்கம் எதுவெனத்


தெரியாததால் அழிவு 

பூவுலகுக்கே!


மரங்களைப் பாதுகாப்போம்! சுற்றுச்சூழலை பேணுவோம்! 



உங்கள்_தோழன்_ஸ்ரீவி


*******

உலக சுற்றுச்சூழல் நாளில்...


சுழலும் புவி இதில் சூட்சுமங்கள் பலவாம் 

   சுற்றுச்சூழல் நாளில் (5, ஜூன்) சொல்வேன் சிலவாம்


அழலென, புனலென,... பூதங்கள் ஐந்து 

   அளவான அவை, இங்கழகான வாழ்வு 


கழன்ற மரை மண்டையன் மனிதன் மறந்தான்

   காசு, காசு என்று சமநிலைச் சிதைக்கிறான்


குழம்பிய பூதங்கள் கை விரிக்கும் போது 

   குள்ளநரி சொல்வான் "இயற்கை சீறுது"


__. குத்தனூர் சேஷுதாஸ் 5/6/2025


****************


[06/06, 6:44 am] Sangeetha: மரங்கள் புத்திசாலிகள்...


மரம் சுவாசிக்க 

மனிதன் உதவுகிறான்

மனிதன் சுவாசிக்க 

மரம் உதவுகிறது

கணக்கு சரியாகிவிட்டது..

ஆனால்..

தன் உயிர்க் காற்றின் 

உற்பத்தி மையங்களை 

மனிதன் பாதுகாக்காமல் முட்டாளாகிறான்...

பற்பல விதங்களில் மனிதனுக்கு உதவி

தன் உயிர்காற்றின் மையங்களைப் பாதுகாக்கும் மரங்கள்

புத்திசாலிகளே!


மரங்கள் மட்டும் தான் பிராண வாயுவை வெளியிடுகின்றனவா? அல்ல..

இவற்றை விட அதிகமாக கடல் வாழ் மிதவை வாழிகள்/ அலை வாழிகள்  ( phyto planktons) எனப்படும் கடல் வாழ் நுண்ணுயிர்கள், பாசி , கடல் வாழ் செடி கொடிகள் போன்றவை வெளியிடுகின்றன. 

கடலைப் பாதுகாப்பதும் மிக முக்கியம். நாம் அன்றாடம் நீர்நிலைகளை மாசுப் படுத்துவதோடு அல்லாமல்   கப்பலில் கொண்டு செல்லப்படும் எண்ணெய், இரசாயனங்கள்  ஆகியவை கடலில் சிந்தி விடுவது (சமீபத்தில் கேரளாவில் இது நடந்தது) இந்த உயிர்வாழிகளுக்குக் கேடு..

இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் அல்லாமல் இவற்றைப் பாதுகாக்க நம் அன்றாட வாழ்வில் என்ன மாற்றங்கள் செய்கிறோம் என்பது கேள்விக்குறி!

-= சங்கீதா

*************


Wednesday, June 4, 2025

நட்பின் இலக்கணம்

 நீ நீயாக இருக்குமிடம்.....

நண்பனிடம்....


😊 சாயி 😊


*************

கூடி மகிழ்வதாம்..

விருப்புகள் வெவ்வேறாயினும் 

வெறுப்பறியாததாம்...

கண்ணீர் கண்டு கசிந்துருகி

கண்ணீர் கன்னங்களைத் தாண்டும் முன்

காய்ந்துப் போக செய்வதாம்...

தவறும் பாதைகளில்

தாங்கிப் பிடித்து 

நேர்வழி புகட்டி  

தன்னம்பிக்கையோடு

தலை நிமிரச் செய்வதாம் ...

கண்மூடித்தனமாய் நம்புவதாம்...

நல்ல நட்பு..

இது அரிது..

கிடைத்தால் மிகப் பெரிது...

இதனினும் பெரிது 

கிடைத்தால் வாங்கிக் கொள்வதோடு அல்லாமல் 

கொடுத்தல்...

மிக மிக பெரிது

யாதெனின் 

கிடைக்காவிட்டாலும் 

கொடுப்பது...


நண்பேன்டா/ நண்பிடி


- சாய்கழல் சங்கீதா

*************

புதிய நட்பின் இலக்கணம் 


வெள்ளிக்கிழமை மாலை வேறெங்கோ கூடும் 

   விடிய விடிய உண்டாம் விருந்து, கொண்டாட்டம் 


பள்ளி, அலுவலகம் இல்லை இரு நாளும் 

   பாசமான குடும்பமது மறந்தே போகும் 


உள்ளே பல வண்ணங்கள் மேலும் பாயும் 

   உயரம் தொட முடியாத மனமோ வையும் 


தள்ளாடும் உடல் சாயும், திங்களும் பிறக்கும் 

   தருமிது உயிருமென (இத்) தலைமுறை சொல்லும்.


__. குத்தனூர் சேஷுதாஸ்  4/6/2025


******************

நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக, கூறுபவன் நண்பன்.


- மோகன்

*************

நட்பு என்பது...

வேற்றுமைகள் இருந்தாலும்

மனம் ஒன்றிப் போகும்


வார்த்தைகள் தேவையில்லை 

மௌனங்களும் பேசும்


மாற்றங்கள் தேவையில்லை 

அப்படியே ஏற்கும்


கோடையோ வசந்தமோ

தென்றலாய் வீசும்


வெற்றியோ தோல்வியோ

தாங்கி நிற்கும் 


வழிதவறி சென்றால்

கண்டித்து நெறிப்படுத்தும்


எவரிடமும் பூக்கும் 

எவ்வயதிலும் பூக்கும் 


இலக்கணத்துள் அடங்கும் 

அடங்காதெனில்

புது இலக்கணம் உருவாக்கும்


- அமுதவல்லி


கவலைகளும், காயங்களும்


உங்களை உலுக்கிக் கொண்டிருக்கும் கவலைகளும், காயங்களும் நீங்களாகவே சிந்திப்பதை நிறுத்தும் வரை நிம்மதி தராது.


கவலையும் குப்பையும் ஒன்று தான். நம்மை கேட்காமலேயே வந்து சேர்ந்துவிடும். ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது.


எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட, எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் உங்களை சீர்படுத்தி முன்னுக்கு எடுத்துச் செல்லும்.


ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், நாளை கொண்டு வரும் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியாது.


கவிதாஸ்- A6

Tuesday, June 3, 2025

ஈட்டிக்காரன்...

 ஈட்டிக்காரன்..



ஈதலா ?

ஈட்டியா?

அடகு வைக்க ஏதுமில்லாமல்

வானத்திடம் கெஞ்சி மழையைக் கடனாகக் கேட்டோம்

மேக அலமாரிகளிலிருந்து 

மழைப்பணத்தைக்  கொடுத்துவிட்டு 

அனல் தடி கொண்டு

கந்து வட்டியுடன் அசலையும் 

மிரட்டி வாங்கிவிட்டான் 

ஈட்டிக்காரன்..

வெயில் தாங்க முடியல...🔥


- சாய்கழல் சங்கீதா

*************

*தேவை ஈட்டிக்காரன்…..*


🌞 “நிழலின் அருமை வெயிலில் தான் புரியும்!”

💔 “வெறுப்பின் வலியில் தான் அன்பின் நெஞ்சம் படைக்கிறது!”

🌑 “இருட்டு இருந்தால்தான் ஒளியின் பெருமை தெரியும்.”

😷 “உறைபனியில் தான் உடலின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தெரிகிறது.”

🎶 “மௌனம் தான் இசையின் அழகையும் அர்த்தத்தையும் சொல்வதற்கான இடத்தை தருகிறது.”

*🪙 “ஈட்டிக்காரன் இருந்தால்தான், ஈதலின் தூய்மை புரியும்!”*

📜

வாழ்க்கையில் நிறை எதுவும் தனித்து அடையாளம் காட்டாது.

அதன் எதிர்மையான ஒன்று தோன்றினால்தான்

அது எவ்வளவு விலைமதிப்புடையதென்று நமக்கு உணர முடிகிறது.

-  

- தியாகராஜன்

******************

கடன் கேட்டார்

அள்ளிக் கொட்டினேன்

சேமித்தால் குடிநீர் 

வீணடித்தால் கண்ணீர்

மரங்கள் வெட்டி

வாகனங்கள் ஓட்டி

அனலைக் கூட்டி

அடிக்கிறாய் லூட்டி

பழிச் சொல் எனக்கு ஈட்டி 👊

- அமுதவல்லி



நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம்

 நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம்.

  - ஷெல்லி.


எழுதுவதென்னவோ பொதுவான கருத்தென்றாலும், படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனித்த ஞாபகங்களை கிளறிவிட்டுப் போகிறது.


படித்தவர்களிடம் பக்குவம் பேசுவதையும், பசித்தவர்களிடம் தத்துவம் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


சொற்களில் பிழை இருந்தால் வார்த்தைகள் முற்றுப்பெறாது. செயல்களில் பிழை இருந்தால் வாழ்க்கை முழுமையாகாது.


பணிவான சொற்களே வாழ்க்கைப் பாதையை எளிமையாக்குகின்றன.


- கவிதாஸ் A6💐❤️🙏

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...