காணவில்லை!!
பெயர் முற்றம் /முத்தம்
எலைட் அடுக்குமாடி குடியிருப்புக்களால் அபகரிக்கப்பட்டிருக்கலாம்
என்று போலீசாரால் சந்தேகப்படப்படுகிறது
ஆங்காங்கே சில கிராமங்களில் கண்டதாக செய்திகள் பரவுகின்றன
தகவல் அறிந்தால் பகிரவும்
ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
பல பாட்டிகள்
சில துளசிச் செடி தொட்டிகள்
- ஸ்ரீவித்யா
*************************
எங்க வீட்டு முத்தம் (முற்றம்):
மச்சு வீடு முன்னாடி
இருந்தாலும்
எங்களுக்குப்
பிடிச்சதென்னவோ
பின்னாடி இருந்த
ஓட்டுக் கொட்டாய் சூழ்ந்த
முத்தந்தா!
வேன காலத்திலே
சாயங்கால வேளையிலே
வேப்ப மரக் காத்தோட
நாங்க விளையாண்ட
முத்தம்!
ராத்திரி வேளையிலே
முத்தத்திலே பாய் போட்டு,
அம்மா பறிமாற
நாங்க எல்லாரும்
அமுதுண்ட காலம்,
அது ஆயிரம் பொன்
கொடுத்தாலும்
திரும்புமா!
முத்தத்திலே போட்ட
கயித்துக் கட்டிலிலே
படுத்து வானத்தப் பாத்தா
ஆயிரமாயிரம் மின்மினிகள்
நட்சத்திரம் என்ற
போர்வையிலே!
நாளுந்தா ஓடிப்போச்சு
கூட்டுப் பறவைங்கதான்
பிரிஞ்சாச்சு
ஆனாலும் பள்ளி
விடுமுறைகளில்
கூடப்பிறந்த நாங்க
குழந்தைகளோட
கூடிக் களித்த
வேளைகளை
இங்க விவரிக்கத்தா
முடியுமா!
காலந்தா மாறிப் போச்சு
வீடுந்தா கை மாறிப் போச்சு.
ஆனாலும் எங்களுக்கு
இன்னொரு தாயாக
எங்கள வளத்த
முத்தத்த மறக்கத்தான்
முடியுமா!!!
- முகம்மது சுலைமான்
*********************
முற்றம்
கூட்டுக்குடும்பத்தின்
கூடுகையிடம்
உணவு, கேளிக்கை, ஊர்வம்பு
எனப் பல பரிமாற்றங்கள் அரங்கேறுமிடம்,
" வெள்ளி நிலா முற்றத்திலே , விளக்கெரிய, விளக்கெரிய"*
வளிப்பதனிகளுக்கோ,மின் விசிறிகளுக்கோ
தேவை வைக்காத "காற்று வெளியிடை" .
இந்த முற்றங்களைச் சுற்றி உள்ள தூண்கள்
ஒவ்வொன்றும் ஆயிரம்
கதைகள் பேசும்; ஒவ்வொன்றிலும் பதிந்துள்ள விரல் தழும்புகளே சாட்சி.
இன்று முற்றங்களைக்காண வேண்டின் செட்டி நாட்டுக்கோ அல்லது
கிராமங்களைப்பின் புலனாக கொண்ட திரைப்படங்களிலோ
காணலாம்,காசு செலவு
செய்து!
முற்றம், திண்ணை, கொல்லை - இவை யாவும் வருங்காலத்தில் தமிழ்
அகராதிகளில் புரட்டிப்
பார்த்து அறிய வேண்டியவை, நம் போன்ற உயர் மாடிகளில் "
பிரிக்கப்படாத பங்கு "
வைத்திருப்போருக்கு.
ஆனால் ஒன்று
நாம் யாவரும் நம்ம இந்த " மகிழ் முற்றம்'
வாயிலாக, கருத்துக்களப் பரிமாறி
மகிழ்வோம்.
*வேட்டைக்காரன்( எம்ஜியார்) படப்பாடல் வரி.
- மோகன்
No comments:
Post a Comment