Saturday, June 7, 2025

முற்றம் (II)




********************

அக்கம் பக்கம் 

அழகாக சிறிதாக 

தீப்பெட்டிபோல் வீடுகள் 


அதிகாலை...

சாணம் மெழுகி

கோலம் நிறைத்து

புன்னகை பூக்கும் முற்றங்கள்


நண்பகல் ...

உணவுப் பொருட்கள் 

வெயிலில் காய 

ஊர்க் கதைகள் 

நிழலில் கிசுகிசுக்கப்படும்


மாலை வேளை...

பிள்ளைகள் விளையாட்டும்

கூடினோர் சிரிப்பும்

சில வேளைகளில் 

கூட்டாஞ்சோறும்

முற்றத்தில் மணக்கும் 


இரவின் மடியில்...

சாய்வு நாற்காலி 

கயிற்று கட்டில்

கோரைப் பாய்...

எதுவுமில்லை எனில்

முற்றமே படுக்கையாக

வானமே கூரையாகும்


மழை நாட்களில் 

காகித கப்பல்கள் 

மிதந்து செல்லும் 


பண்டிகை நாட்களில் 

பலகாரங்கள் வேகும் 


வீட்டின் விழாக்கள் 

என்றும்

முற்றத்திற்கு பெருமையே


காலத்தின் மாற்றத்தில்

சுருங்கிப் போயின

முற்றங்கள்


வழியாக இருப்பதால் 

பிழைத்திருக்கும் 

வீட்டு வாயில் மட்டும்

மௌனமாக காத்திருக்கும் 

தொலைந்து போன

முற்றங்களுக்கும் 

திண்ணைகளுக்கும்..


- அமுதவல்லி

**********************

முற்றம் என ஒன்று ...


முற்றம் இருக்கும் அன்று இல்லந்தோறும் 

   மூச்சுப் பிரச்சினை என இல்லை எவர்க்கும்


புற்றரவாய் புடலை காய்த்துத் தொங்கும் 

   புல்லாங்குழல் ஒலிக்கும் துளசி மாடம் 


சுற்றங்கள் படை எடுத்து வரும் நேரம் 

   சோறும் சிரிப்பும் சேர்ந்தே பொங்கும்


வற்றலிட்டு பெருசும் பெரிதும் மகிழும் 

   வான் நிலா நமதே எண்ணத் தோன்றும்


பொற்றாமரைக் குளமாய் வானம் தெரியும் 

   போதுமே பழைய ஒரு கயிற்றுக் கட்டிலும் 


வெற்றிலைக் கொடி ஒன்று உரலில் அரைக்கும் 

   வேண்டாம் அதற்கு என்றும் ஜிம்மும், வேறும் 


சிறாரின் மகிழ்ச்சியோ மழை வரக் கூடும் 

   சிறு காகிதக் கப்பல் பல செய்யப்படும் 


குற்றாலச் சிற்றருவி பல கொட்டும் இங்கே 

   குழி கன்னம் இனி பாடும் *செந்தமிழ்ப் பாட்டே


*சின்னச் சின்ன தூறல் என்ன


__. குத்தனூர் சேஷுதாஸ்

****************



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...