Tuesday, June 10, 2025

அலைகள்

 *அலைகள்*

-----------------------

பார்த்ததைச் சொல்லத்தான்

திரும்பச் செல்கின்றனவோ! ☺️

- தியாகராஜன்


*****************


கரையில் கண்டது பிடிக்காது 

உடைந்து போனதோ?

உடைந்தாலும்  பதறாது

மீண்டு வந்ததோ?

- அமுதவல்லி

***********************

சுனாமியாய் பேரலையாக வந்து 

எங்களை அழிக்காமல் 

சிற்றலையாக வந்து

 எங்கள் சின்னஞ்சிறு பாதம் நனைத்துச் செல் 

எங்கள் கடல் அன்னையே!!.

 கடற்கரையில் விளையாடும் சிறார்களின் வேண்டுகோள்!.


- நாகராஜ்

***********************

ஓயாமல் அழைக்கிறேன் 


தலையில் கைவைத்து கரையில் நிற்கும் மனிதா !

   தானாய் வறுமையது தொலையுமென கனவா?


கலைக் கல்லூரி நாளில் காதலியோடு வருவாய் 

   கல்லெறிந்து பேருந்து மேல் களித்துத் திரிவாய்


அலைக் கரம் அசைத்து *ஆழி நான் அழைக்கிறேன் 

   அலைகளை அடுத்தடுத்து அதனால் அனுப்புகிறேன் 


வலையதை விரித்து வாரிக் கொண்டு போகலாம் 

   வாரிக் கொடுப்பதால் வாரியும் என் பெயராம் 


உலையில் சோறாம், உலர்ந்த மீன் குழம்பாம்

   உயிர் வாழ்வார் உலகில் கோடி கோடியாம் 


சிலையாய் அவர் மனைவி காத்திருப்பாள் கரையில் 

   சிறு குழந்தை உடன் நிற்க, மற்றது இடையில் 


விலையிலா *தரளமும், பவளமும் உண்டாம் 

   விதைக்க வேண்டியவை வியர்வைத் துளிகளாம்


இலை இனி கவலை என்று உறுதியாய் நம்பு

   இப்போதே வலையோடு என்னில் (கடலில்) இறங்கு.


*ஆழி - கடல்,  *தரளம் - முத்து


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/6/2025



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...