Saturday, June 28, 2025

தலமரங்கள் -ஒருபார்வை

 *தலமரங்கள் -ஒருபார்வை*


நமது முன்னோர்கள் ஒவ்வொரு பொருளினுள் இருக்கும் அறிவியலை அறியாவிட்டாலும் அதன் பலன்களை அனுபவபூர்வமாக அறிந்திருந்தார்கள்.


நேரடியாக மக்களிடம் கூறாமல் அவற்றை ஆன்மீகத்தில் கலந்து அளித்ததன்மூலம்

மனதில் நம்பிக்கையை விதைத்து,பல நோய்களை குணமாக்கியதுடன்

அதனை அழியாமல்

காலம்காலமாக தொடரவைத்தார்கள்.


தல மரங்களின் அறிவியல் முக்கியத்துவம், அவற்றின் சூழலியல், தாவரவியல், சமூக, கலாச்சார மற்றும் மருத்துவ அம்சங்களில் வெளிப்படுவதாக

சமீபத்திய ஆய்வுகள்

தெரிவிக்கின்றன.


 *சூழலியல் முக்கியத்துவம்:*

 

தல மரங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவை அப்பகுதியில் உள்ள பறவைகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைகின்றன.


உதாரணமாக, அரச மரம் மற்றும் ஆல மரம் போன்ற பெரிய மரங்கள் பறவைகளுக்கு கூடு கட்டவும், நிழல் தரவும் உதவுகின்றன.


 *தாவரவியல் முக்கியத்துவம்:* 


தல மரங்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் வளரும் மரங்களாகவே உள்ளன. இவை அந்த பகுதியின் தாவரவியல் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன.

 

 *சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம்* 


தல மரங்கள் கோயில்களுடன் தொடர்புடையவை என்பதால், அவை அந்த சமூகத்தின் கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளன. 


 *நீர்நிலை பாதுகாப்பு* 


தல மரங்கள் பெரும்பாலும் கோவில் நீர்நிலைகளுக்கு அருகில்  வளர்க்கப்படுகின்றன. இது நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது.


 *மருத்துவ முக்கியத்துவம்* 


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் காடுகள்,மலைகள் என அலைந்து திரிந்தவர்கள்.


இவர்கள் தன்னலம்பாராது,

மனிதர்கள் சிறந்த ஒழுக்கநெறிகளை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக மரம்,செடி,கொடி 

என இயற்கையில் மறைந்திருக்கும் நோய்தீர்க்கும் திறனையும் அவற்றின் இதர பலன்களையும் தங்களது அனுபவத்தால் வெளிகொணர்ந்தார்கள்.


காடுகளில் சேகரித்த நோய்தீர்க்கும் மூலிகைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் நட்டுவைத்து இறைவனோடு அவற்றையும் வணங்க வைத்தார்கள்.


கோவிலில் நடைபெறும் சடங்குகளில்  அவற்றின் இலைகள்,பழங்கள்,பட்டைகள் மற்றும் வேர்கள் என இத்தாவரங்களின்

பகுதிகளை இடம்பெற வைத்தார்கள்.


பிரசாதங்களில் கலந்து அளித்தல்,தாயத்தில்

வேர்களை வைத்து கைகளில் கட்டுதல்,

போன்றவைகள் சில உதாரணங்கள்.


சில தாவரங்களின் காற்றுகூட சில நோய்களை தீர்க்கும்

என்பதை உணர்ந்ததால்,

அவற்றின் கீழ் தியானம் செய்தல்,சுற்றிவருதல் போன்ற பழக்கங்களை ஏற்படுத்தினார்கள்.


கடுமையான விஷங்கள் கூட நோய்தீர்க்கும் மருந்து என்பதை உணர்ந்த சித்தர்கள்

மரச்சிலைகள்,நவபாஷாண சிலைகளை சில இடங்களில் நிறுவி அவற்றின் மேல் அபிஷேகத்தின் பொது வழிந்தோடும்

பால் மற்றும் தேனோடு கலந்து மருந்துகளை ஆன்மீக நம்பிக்கையுடன் அளித்தார்கள்.


நவபாஷாணம் என்பது சித்தர்களால்  உருவாக்கப்பட்ட தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், மற்றும் தொட்டி பாஷாணம் ஆகிய ஒன்பது விஷங்களாகும். 


பல்வேறு உலோகங்கள்,தாவரங்களிலிருந்து பெறப்படும்  64 விஷங்கள் சித்தமருத்துவத்தில்

சிறிய அளவில் பால் மற்றும் தேனோடு அளிக்கப்படுகிறது.


அதுபோல தலமரங்களின்  பாகங்கள் மற்றும் சில நோய்தீர்க்கும் மருந்துக்கலவைகள் இணைக்கப்பட்டு, ஆலயங்களில் வணங்கும் சிலைகளின் பீடங்களின் அடிப்புறம் வைத்தார்கள்.


இவற்றின் மேல் வழிந்தோடும் அபிஷேக பொருள் கலந்த நீர் அல்லது பாலை சிறிய அளவில் அருந்துவதால் பல

நோய்களுக்கான

எதிர்ப்புச்சக்திகளை

விதைத்தார்கள்.


இவற்றின் சக்தி காலப்போக்கில் குறைந்துவிடும் என்பதால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கின் போது

அந்த மருந்துக்கலவை 

மாற்றப்படும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.


பொதுவாக மண்ணின் மரங்கள் தலமரமாக வளர்க்கப்பட்டாலும்,

மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் சில அபூர்வ மூலிகை தாவரங்களையும் சில குறிப்பிட்ட நோய்கள் அதிகம் பரவியிருந்த இடங்களில் வளர்த்தார்கள்.


பாதுகாப்பான இடம் என்பதாலும்,மதநம்பிக்கை காரணமாகவும் கோவில்களில் வளர்க்கப்படும் நோய்தீர்க்கும் பல தலமரங்கள் பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.


தமிழகத்தின் பண்டைய சைவ,வைணவ  ஆலயங்கள் மட்டுமன்றி இத்தலமரங்கள் வளர்க்கும் முறை தமிழகத்தில் சில பௌத்த,சமண ஆலயங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளன.


காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் அமைந்துள்ள பல்லவர் காலத்திய

சமண ஆலயமான திரைலோக்கியநாதர் கோவிலில்  

மலைப்பகுதியில் வளரும் அபூர்வமான பழமையான  குராமரம் தலமரமாக உள்ளது.


இம்மரத்தை சுற்றி கிபி.13ம் நூற்றாண்டில்  பல்லவ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கனால் ஒரு பாதுகாப்பு கல்மேடை கட்டப்பட்டுள்ளது.


முற்கால தமிழர்களின் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமின்றி பண்பாடு,கலை வளர்க்கும் கூடங்களாகவும்,

தானிய சேமிப்பு மற்றும்

படைவீடுகளாகவும்,இயற்கை இடர்பாடுகளின் போது காக்கும் அரண்களாகவும்,

மருத்துவ மனைகளாகவும் செயல்பட்டன என்பது வரலாறு செப்பும் உண்மைகள்.


இப்பொழுது தெரிகிறதா "கோவில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழியின் உள்அர்த்தம்.


சமூகம் காக்க,இயற்கையை

பேணுதல் இன்றியமையாதது

எனும் தத்துவத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மீகம் எனும் இனிப்புக்குள்,தலமரம் எனும் கசப்பான மருந்தை வைத்த நம் சித்தர்களையும்,மன்னர்களையும், முன்னோர்களையும்

எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

(விரும்பினால் தொடரும்)

 *அக்ரி சா.இராஜா முகமது*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...