கவியரசருக்கு இன்று
பிறந்தநாள்.
சங்கத்தமிழை
திரை இசையால்
சாமானியனுக்குக்
கொணர்ந்தவன்.
கோப்பை மதுவை
ருசித்தவன்.
"தாய்க் கிளி"களை
இரசித்தவன்.
இயேசு காவியத்தைப்
படைத்தவன்.
அர்த்தமுள்ள இந்து
மதத்தை தந்தவன்.
அல்லாவின் பெயரைக்
கொண்டாடச் செய்தவன்.
"காய்"களை வைத்துக்
கவி நடனம் புரிந்தவன்.
"போனால் போகட்டும்
போடா" எனத்
தத்துவ முத்துக்களை
உதிர்த்தவன்.
காவியத்தாயின்
இளைய மகன்.
எழுதிய பாடல்களில்
இறப்பின்றி வாழ்பவன்.
நீ நிரந்தரமானவன்
அழிவதில்லை.
எந்த நிலையிலும்
உனக்கு மரணமில்லை.
- முகம்மது சுலைமான்,,
***********************************
கவியரசே ! பிறந்தநாள் வாழ்த்துகள்
முத்தையா ! நீ பிறக்கையில் மூட்டையில் ஒரு நெல்லிக்காய்
முழு நிலா உனை கரும்போர்வையில் மறைத்தாய்
பத்து விரல் படும் பந்தாய் எங்கும் அலைந்தாய்
பசுந்தமிழில் தோய்ந்து பல காலம் தொலைந்தாய்
தித்திக்கும் தமிழ் உனைக் கைவிடவில்லை
திரைப்படமது ஈர்த்ததும் அதிசயம் இல்லை
பத்து மணி வரை (காலை) நித்திரையில் இருப்பாய்
பத்து திரைப் பாடல்கள் நித்தமும் தருவாய்
அத்தை மகனே ! " போய்ய் " வர வா? கேட்பாய்
ஆயிரம் நிலவையும் அணைக்காமல் விட மாட்டாய்
சத்தமின்றி ஆன்மீகம் தலையெடுக்க உன்னில்
சட்டையாய் மாயையும் உரிந்ததாம் தன்னால்
புத்தம் புது அத்தியாயம் இப்போது தொடக்கம்
புல்லாங்குழல் ஒலியில் புகழ் ஏணி அடங்கும்
ஒத்தையாக பல்லாண்டுகள் உன் ஆட்சி திரையில்
ஓயாதாம் உன் பாடல் இசையலை செவியில்.
கவியரசே ! பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐
__. குத்தனூர் சேஷுதாஸ்
**************************************
கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம்
---
அவர் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டி வழியாக சில வருடங்களுக்கு முன்பு
செல்ல நேர்ந்த போது
வண்டியிலிருந்து கீழே இறங்கி காலணிகளைக் கழற்றி விட்டு அவர் பிறந்த அந்த மண்ணைத்தொட்டுக்
கண்களில்ஒற்றினேன்.
அவர்கொடுத்த பிச்சைதானோ என்னவோ, இன்று தமிழ் ஆர்வம் மிகுந்து தமிழில்
சில வரிகளாவது பதிவிட முடிகிறது.
அன்னாரின் கவிதைச்சிறப்புகள் பற்றி பல பதிவுகள இங்கு நாம் கண்டோம்.
அவர்பாடல்களில் எது சிறந்தது?
திருப்பதி லட்டில் எந்த பக்கம் சுவை மிக்கது?
காலத்தால் அழியாத பாடல்களின் படைப்பாளி
காலன் உடலை மட்டும்
கவர்ந்தான.- அந்தகன்அன்றோ!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்என்பது போல,அவருடைய திரைப்பாடல்கள்
அல்லாது அவர்
எழுதிய " மாங்கனி"
என்ற காவியத்தில் ஒரு வரியைப் பாராட்டி இங்கு பதிவிடத் தோன்றுகிறது.
அடலேறு என்ற காவிய நாயகன் மாங்கனி எனும் காதலியைத் தேடிச்செல்கிறான்
"போனவளின் பின்னாலே மெல்லப் போனான்!
புதுமனதின் முதல் கூச்சம் இழுக்கக் கண்டு
சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப்பார்த்தான்
தென்றலது போனதற்குச் சுவடு ஏது?" எனகிறார்.
காதலியின் அடிச்சுவடு தென்றல்போலாம்!
பாரதி, பாரதிதாசன் எனும்
இருபெரும் தமிழ் ஆளுமைகளை ஒரே பாட்டில் இணைத்துப் பாடுவது என்பது சாதாரண ஒன்றல்ல. இதனை மிகச் சிறப்பாக செயதுள்ளார் கவியரசு கண்ணதாசன்.
அதில் சில வரிகள:
“களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியை
களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி
களைநீக்கித் தந்த களநியிற் பலவாய்
கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்
இருள் சூழ்ந்திருந்த இவ்வைய முழுதும்
எழுகதிரான இளைஞன் பாரதி
எழுந்த கதிர்முன் மானிட சாதிக்கு
இரத்தம் ஊட்டினார் பாரதிதாசன்"
வாழும் தமிழின் காவலர் இவர்கள்.
"இறப்பின்ப பின்னது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான் !
அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
என்பது கவிஞரின் இறப்பு பற்றிய அனுபவம்.
அவர்அனுபவிக்க சென்று விட்டார். நம் நமது "எட்டடுக்கு மாளிகையில்" அவர்கவிதைகளை ஏத்தி இரசிப்போம்.
இன்று திரு எம் . எஸ் விஸ்வநாதன் அவர்களின் பிறந்த தினமும்கூட.
இந்த கவியரசு- மெல்லிசை மன்னர் கூட்டணி கருத்துக்கும் காதுக்கும் இனிமையைத் தந்த
வலுவான கூட்டணி!
" ஏழு சுவரங்களில் எத்தனை பாடல்" கள் இவர்தம் படைப்புகள்!
தலை தாழ்த்தி , இரு கரம்
கூப்பி,வணங்குவோம்🙏🙏
- இ.ச.மோகன்
No comments:
Post a Comment