பூர்வாவில் ஒரு
காலைப் பொழுது:
ஆங்கோர் குயில்
இணை தேடி
எழுப்பும் இன்னிசை.
காதொலிப்பான்
இசையை
இரசித்தபடி
நடைப் பயிற்சி
மேற்கொள்ளும்
இளைய, நடு வயதினர்.
தனியாய் சிலர்.
துணையுடன் பலர்.
நண்பர்களுடன் கதைத்தபடி
நடந்து செல்லும் முதியோர்.
மங்களகரமாக மஞ்சள்
வண்ணத்துடன் செல்லும்
பள்ளிப் பேருந்துகள்.
அதில் தம் பிள்ளைகளை
அனுப்பக் காத்திருக்கும்
பெற்றோர்கள்,
தாத்தா பாட்டிகள்.
கையில் சிறிய வாளியுடன்
மகிழுந்து துடைக்க
அங்கும் இங்குமாக
அலையும் வாலிபர்கள்.
கட்டிடங்களுக்கு
இடையில் இருக்கும்
உடற்பயிற்சிக் கூடத்தில்
உடம்பைப் பேணும்
சில பெருசுகள்.
இரவுப்பணி முடிந்து
வீட்டிற்குச் செல்ல
தன்னை
விடுவிப்பவருக்காக
காத்திருக்கும்
பாதுகாப்புக்
காவலர்கள்.
நேரமிருந்தால்,
அடடா
இரசிக்க நம்மிடமே
எத்தனை
விடயங்கள்!!!
- முகம்மது சுலைமான்
*************************
முதிய தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைத்துணையாய் மெதுநடை.
இளைய ஜோடிகள்
செவிப்பொறி அணிந்து இசைக்கு ஏற்பவோ,அல்லது ஆளுக்கு ஒரு அலைபேசியில் கதைத்துக்கொண்டோ
வேக வேக நடை.
வேலைக்கு நேரமாகி விட்டதென வரும்
சேவைப்
பணியாளர்களின்
பதைபதைப்பு நடை.
பாது காவலர் கூட்டத்தில் ( என்ன அறிவுறுத்தப்படுகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!) பங்கற்க
அவசரம் அவசரமாக வரும் காவலர்களின்
ஓட்டம் கலந்த நடை.
எவ்வளவு நடைகள்
பூர்வாங்கரையில்!
ஒரு நாடகமன்றோ நடக்குது!
****************
*******************
No comments:
Post a Comment