நீ நீயாக இருக்குமிடம்.....
நண்பனிடம்....
😊 சாயி 😊
*************
கூடி மகிழ்வதாம்..
விருப்புகள் வெவ்வேறாயினும்
வெறுப்பறியாததாம்...
கண்ணீர் கண்டு கசிந்துருகி
கண்ணீர் கன்னங்களைத் தாண்டும் முன்
காய்ந்துப் போக செய்வதாம்...
தவறும் பாதைகளில்
தாங்கிப் பிடித்து
நேர்வழி புகட்டி
தன்னம்பிக்கையோடு
தலை நிமிரச் செய்வதாம் ...
கண்மூடித்தனமாய் நம்புவதாம்...
நல்ல நட்பு..
இது அரிது..
கிடைத்தால் மிகப் பெரிது...
இதனினும் பெரிது
கிடைத்தால் வாங்கிக் கொள்வதோடு அல்லாமல்
கொடுத்தல்...
மிக மிக பெரிது
யாதெனின்
கிடைக்காவிட்டாலும்
கொடுப்பது...
நண்பேன்டா/ நண்பிடி
- சாய்கழல் சங்கீதா
*************
புதிய நட்பின் இலக்கணம்
வெள்ளிக்கிழமை மாலை வேறெங்கோ கூடும்
விடிய விடிய உண்டாம் விருந்து, கொண்டாட்டம்
பள்ளி, அலுவலகம் இல்லை இரு நாளும்
பாசமான குடும்பமது மறந்தே போகும்
உள்ளே பல வண்ணங்கள் மேலும் பாயும்
உயரம் தொட முடியாத மனமோ வையும்
தள்ளாடும் உடல் சாயும், திங்களும் பிறக்கும்
தருமிது உயிருமென (இத்) தலைமுறை சொல்லும்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 4/6/2025
******************
நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக, கூறுபவன் நண்பன்.
- மோகன்
*************
நட்பு என்பது...
வேற்றுமைகள் இருந்தாலும்
மனம் ஒன்றிப் போகும்
வார்த்தைகள் தேவையில்லை
மௌனங்களும் பேசும்
மாற்றங்கள் தேவையில்லை
அப்படியே ஏற்கும்
கோடையோ வசந்தமோ
தென்றலாய் வீசும்
வெற்றியோ தோல்வியோ
தாங்கி நிற்கும்
வழிதவறி சென்றால்
கண்டித்து நெறிப்படுத்தும்
எவரிடமும் பூக்கும்
எவ்வயதிலும் பூக்கும்
இலக்கணத்துள் அடங்கும்
அடங்காதெனில்
புது இலக்கணம் உருவாக்கும்
- அமுதவல்லி
No comments:
Post a Comment