Wednesday, April 30, 2025

மே தினம் இன்று:

 மே தினம் இன்று:


தொழிலாளிகளைக் கொண்டாடும் தினம்.


ஆங்கிலத்தில் "மே டே"

என்றால் தொழிலாளிகளைக் கொண்டாடும் தினமாகவும்" துன்ப சமிக்ஞை" யைக் குறிக்கவும் கொள்ளலாம்.


என்ன ஒற்றுமை!


இவர்களைக் கொண்டாடும் நேரத்தில் ,இவர்படும் துன்பம் பல சமிக்கைகளை செய்தாலும் சமூகம்

கண்டு கொள்கிறதா?


" அந்த நாலு பேருக்கு நன்றி" என்றார் கவிஞர்.


ஆனால் நமக்காக உழைப்பவர் நான்கா, நாலாயிரமா?!


எங்கோ ஆந்திரமோ , குஜராத்தோ, வெயில், மழை பாராது உழைத்தவர் கொடுத்த தானியங்கள்,

வீட்டு வாசலிலே பண்டங்களைக் கொண்டு சேர்க்கும் விநியோகப் பணியாளர்கள்,

போகுமிடம் பத்திரமாக சேர்க்கும் ஓட்டுனர் பார்த்த சாரதிகள் எனப்

பலப்பல பணியாளர்களை, 

நம் வாழ்க்கைத் தூண்களைத் தாங்கிப்பிடிப்பவரை,


முகமும், முகவரியும் 

தெரியாதவரை

இன்று நெஞ்சில்நிறுத்தி

இரு கண் மூடி வாழ்த்துவோம், நன்றியுடன்.


--மோகன்

மேதினி போற்றும் மேதினம் வாழிய!

 ●०●०●०●०●०●०●०●०

மேதினி போற்றும்

மேதினம் வாழிய!

●०●०●०●०●०●०●०●०


காட்டில் மேட்டில் கற்குகையில்

விலங்குகள் போல

வாழ்ந்த மனிதன்

பரிணாம வளர்ச்சியுற்றான்

நாகரீக மலர்ச்சியுற்றான்.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்

அறிவைத் தீட்டி

அறிவியல் வளர்த்து

ஆராய்ச்சிகள் பலவும் செய்து

படிப்படியாக உயர்ந்தான் மனிதன்.


கற்களை உரசி தீப்பொறி கண்டான்

பயணம் செய்ய

சக்கரம் செய்தான்

மனிதகுல வளர்ச்சியிலே

முக்கிய இரண்டு நிகழ்வுகள் இவையே.


அடுத்தநிலைக்கு முன்னேற

மண்ணில் விழுந்த விதைகள் இங்கே

செடியாய் கொடியாய் 

மரமாய் கனியாய்

வளருதல் கண்டான்.

அதுவே உழவின் துவக்கமாய் ஆக்கினான்.


உழவு கண்டதும் நீர்நிலை ஓரம்

சமூகம் அமைத்து தங்கலானான்.

நாடோடிபோல இடம்பெயர்ந்து வாழ்ந்த மனிதன்

உழவு வந்ததும் ஓரிடம் தங்கினான்

சமூகம் அமைத்தான்.

இங்கேதானே மனிதகுல நாகரீகம்

உருவாகத் துவங்கியதெனலாம்.


எகிப்திலுள்ள நைல்நதியும்

பாரதத்தின் சிந்து நதியும் 

நாகரீகச் சின்னங்களாகின.


தாய்வழிச் சமூகம் மெல்ல மறைந்து

பொருளுடமைச் சமூகம் உருவானது.

ஆண்டான்-அடிமை 

சமூகமும் கூட

அதறது அடிதொட்டு வந்திட்டது.


உருவில் பெரியவன் உடலில் வலியவன் தலைவனாக உருவெடுக்க

உழைப்போர் எல்லாம்

அவனுக்காய் உழைக்கும்

அடிமைகளானார் பாரினிலே.


உபரி எனும் சொல் 

ஆக்கிரமிக்க

பேராசை மனிதனை ஆட்டுவிக்க

அறிவியல் வளர்ச்சியோ வலுத்தவன் கையில்

செல்வங்களெல்லாம் அவனது பையில்


ஆலைகள் வந்தன,

வேலைகள் வந்தன

உலகமும் கூட சுருங்கத் துவங்கியது.

ஆண்டான்-அடிமை

உறவு என்பது 

சற்றே மாறி

முதலாளி-தொழிலாளி

எனும் புதிய சமூக உறவும்

உருவானது.


இலாபம் ஒன்றே குறிக்கோளாக

அபரிமித இலாபமும்

உபரியின் பலனும்

ஓரிடம் சேர

உழைக்கும் கரங்கள்

ஓடாய்த் தேய

முரண்பாடுகளோ தீவிரமானது.


கீழ்திசை தனிலே

கதிரோன் எழுமுன் ஆலை சென்றோர்

மேல்திசையினிலே

பொன்னொளி வீழ்ந்து

மறையும் வரையில்

உழைப்பு, உழைப்பு, 

உழைப்பு மட்டுமே.

மின்விளக்கு வந்த பின்னர்

உழைக்கும் நேரம் மேலும் கூடியது.


எந்திரத்துடன் எந்திரமாக ஓய்வு ஒழிச்சல் ஏதுமின்றி

உழைத்த மனிதன் களைத்துப் போனான்.

குடும்பம் குட்டி

மனைவி மக்கள்

எனும் வாழ்வை தொலைத்து வாழ்ந்தான்.


உழைப்போர் குருதியைக் குடித்த கூட்டம்

உண்டு கொழுக்க

உழைக்கும் மக்கள்

உயிரின் வாதையில்

துடித்து நிற்க


வெடித்தெழுந்தன உரிமைக் குரல்கள்

அடக்கி வைத்த சீற்றமது

எரிமலையாக

வெடித்துச் சீறியது


நாளொன்றுக்கு 

பன்னிரெண்டு மணிநேரம்

பல சமயங்களில் அதற்கு மேலும்

என உழைத்துக் களைத்த

தொழிலாளர் கூட்டம்

1886-ம் ஆண்டினிலே

அமெரிக்க நாட்டின்

செல்வங் கொழிக்கும்

சிக்காகோ நகரினிலே

மே மாதம் மூன்றாம் நாள்

போர்க்கொடி உயர்த்தினர் 

நியாயம் கேட்டனர்.

பரிசாய்க் கிடைத்தது

குண்டாந்தடியும் 

குண்டுகளும் மட்டுந்தானே.


நால்வர் இறந்தனர்

உயிரைத் துறந்தனர்

கோபமுற்ற தொழிலாளிகள்

நான்காம் தேதி

ஹே மார்க்கெட் எனுமிடத்தில்

பேரணி போயினர்

கண்டனம் எழுப்பினர்


அமைதியான ஊர்வலத்தில்

முதலாளிகளின் ஏவல் நாய்களும்

அரசாங்கத்தின் காவல் பேய்களும்

ருத்ர தாண்டவம் ஆடி முடித்தனர்.

மேலும் பலர் கொல்லப் பட்டனர்.


இப்போராட்டந்தனில்

உயிரை ஈந்த 

உழைப்பாளிகளின் இரத்தந் தோய்ந்த

ஆடைகளே அன்று கொடிகளாகின

அதுவே செங்கொடி பிறக்கக் காரணமாயின.


திருப்தியடையா முதலாளிகளோ

தலைமை தாங்கிய ஏழு பேரை

அரசு எந்திர துணைகொண்டு

தூக்கில் ஏற்றி அகமகிழ்ந்தனரே.


இந்தக் கொடுமை நடந்த பின்னர்

உலகமெங்கிலும் கலகம் தோன்ற

நியாயம் பிறந்தது

எட்டுமணி நேர பணிநேரம் 

எனும் உயரிய தத்துவம்

நடைமுறையானது

அதுவே பன்னாடுகளின்

சட்டமுமானது.


இந்தச் சட்டமும் தற்போது

நீர்த்துப் போவதைப் 

பார்க்கின்றோம்

நியாயமற்ற நிலைகண்டு

மனமும் நொந்து போகின்றோம்.


மேதினத் தியாகிகள்

செய்த தியாகங்கள்

வீண்போகாதிருக்க

நல்லது செய்வோம்

உழைக்கும் கரங்களை

போற்றி மகிழ்வோம்.


*ஸ்ரீவி*

Sunday, April 27, 2025

வெயில்🔥



அடித்தது யாரோ?

ஞாயிறோ ?

கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறதே

இந்த வியர்வை சுரப்பிகள்!!!


- சாய்கழல் சங்கீதா

Thursday, April 24, 2025

பகல்காம் பதறுகிறது

பகல்காம் பதறுகிறது

பூவுலகப் பூந்தோட்டம்

கண்ணீர் விட்டு

கொடுமையாய்க் கதறுகிறது


மனிதம் தொலைத்த

காட்டுமிராண்டிகளின்

கொலை வெறியாட்டம்

நாட்டை உலுக்குகிறது.


தீவிர வாத செயல்களை

தீயிலிட்டு பொசுக்கிட

ஒட்டு மொத்த நாடும்

கரங்கள் இணைக்கட்டும்!


மதம்,மொழி, இனம், சாதி என

எவ்விதத்திலும் 

தீவிரவாதம் தலைதூக்கா அளவிற்கு

மனிதமும் நேயமும் 

தழைத்தோங்கட்டும்.


உயிர்குடிக்கும் நீசச் செயல்கள்

மண்ணோடு மண்ணாகிப் போகட்டும்.


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


*********************

எம்மதமும் சம்மதம்.... என்றில்லாமல்,


என் மதம்,உன் மதம் என்று,


மதவெறி பிடித்தலைந் தால்.....


மனித இனமே....

நீ பூண்டோடு அழிந்து போவாய்....

இப்படிக்கு,

மதத்தை கண்டுபிடித்த மானங்கெட்ட மானிட வர்க்கத்தினன்😡


-சாய் 

********************

தீவிரவாதம்..

தீர்வு - தீவிர 'வாதம்' அல்ல..

தீவிர வதமே தீர்வு ...மதவாதம் , இனவாதம் இவற்றின் வதம்..


இது உலகின் பக்கவாதம்..

குருதியோட்டம் தடைப்பட்டால் பக்கவாதம்..

குருதிப் பெருக்கெடுத்து,

மனிதநேயம் விடைபெற்றால் தீவிரவாதம்..


-இலாவண்யா


******************


 

Tuesday, April 22, 2025

சிவப்பது என்று தான் நிற்கும்?

 என்று தணியும் தீவிரத்தின் தாகம்?

சிவப்புத் தங்கமாம் குங்குமப்பூ  விளையும் காஷ்மீர்.. இரத்தத்தால்

சிவப்பது என்று தான் நிற்கும்?

பல்லுயிர் ஓம்பும்

சன்மார்க்கம் இம்மண்ணில்

என்று தான் மலரும்?

தாய் தந்தைக்கு மகன்

மனைவிக்கு கணவன்

கட்டிய புதுமணப்பெண்

பெற்றோரை இழந்து நிற்கும் இளம் மொட்டுகள்..

இப்படி உயிர்களைக் கொன்று குவித்து குடும்பத்தின் தூண்களை உடைத்தெறியும்

கல் மனங்களின் உருவாக்கத்தை நிறுத்த இயலாதா இறைவா?

மண்ணுக்கும் பொன்னுக்கும் அடித்துக் கொள்ளும் மடமை ஒழியும் நாள் உண்டோ இறைவா?

அமைதிக்கு அனுமதி தாருங்கள் எம்மண்ணில்!


- சாய்கழல் சங்கீதா


****************

வெள்ளைக் காஷ்மீரம்


பிரிந்து போன பின்னும் பிரச்சினை செய்கிறான்

   பிச்சை எடுத்தும் தொல்லை கொடுக்கிறான்


அரிய மனித உயிர்களைக் குடிக்கிறான் 

   அப்பாவிகளைக் கொன்று குவிக்கிறான்


துரிதமாய் அரசு செயலில் இறங்க வேண்டும் 

   தோட்டாக்களுக்கு பீரங்கி பதில் வேண்டும் 


வெறி பிடித்த தீவிரவாதம் வீழ வேண்டும்

   வெள்ளைக் காஷ்மீரம் மீள வேண்டும்.


__. குத்தனூர் சேஷுதாஸ்


*********************

மனிதனே விதைக்கிறான் 

மண்ணின் மீது மதவாதம்

மனித நேயத்தின் எதிர்ப்பதமே மதமன்றோ!


ஓ மனிதா , ஒன்றை நீ இன்றுணர்வாய்

தன்னினத்தை தானே அழிக்கும் 

ஒரே இனம் உன் இனமே 


யாதும் ஊரென்பாய் 

ஒருதலையாய் உயிர்கொல்வாய்


யாவரும் கேளீரைன்பாய்

கேட்பாரின்றி உயிர்பறிப்பாய்


உல்லாசப்பயணியா? ஊர்க்குருவியா?

உன்விருப்பம் போல சுட்டுத்தள்ள?


நாள் ஒன்று விரைந்து வரும்

நியாயத்தீர்ப்பு உன் மேல் வரும்

நீதி தேவன் நிச்சயமாய் நீதி செய்வார்


--தனா


*******************************


உலகப் பூமி தினத்தில்...

 உலகப் பூமி தினத்தில்...


சாமி நமக்கு ஈந்த கொடைகள் பலவாம் 

   சத்தியமாய் நாம் வாழும் உலகு முதலாம்


பூமி உயிர்க்கெல்லாம் பொதுவான தாயாம்

   புழு முதல் நாமெல்லாம் அவளின் சேயாம்

   

சேமித்தவள் வைத்திருக்கும் செல்வம் ஏராளம் 

   சிறுகச் சிறுக நாம் செலவழித்தால் தாராளம் 


மாமி மகளாய் இதைப் பார்த்துக் கொள்ள வேண்டும் 

   மரங்கள் நட வேண்டும், மாசு குறைக்க வேண்டும்.


__. குத்தனூர் சேஷுதாஸ்


********************


Monday, April 21, 2025

பாரதிதாசன்

 பா-ரதியின் தாசன்

தமிழன்னையின் நேசன்

தமிழர் உள்ளம் உறைநேசன்

புகழ் ஓங்கட்டும்


சித்திரச் சோலைகளை 

கண்டு மகிழ்வோர் மத்தியில்

அதைத் திருத்த ரத்தம் சொரிந்த 

கைகளை நினைத்துப் 

போற்றியவன்...


ஆர்த்திடும் எந்திர

கூட்டங்களின்

ஆதிஅந்தம் சொல்கையில்

ஊர்த் தொழிலாளர் 

உழைத்த உழைப்பை

தன் கவிதையில் ஏற்றியவன்..


ஆள்வோரின் மனங்குளிர

ஆங்கில மோகத்தை

ஊட்டி வளர்த்த அடிமை உள்ளங்களைத் தூற்றியவன்.


வாழிய அவன் புகழ்!

--ஸ்ரீவி


************************

பாவேந்தர் நினைவில்...


அமுதென்று தமிழுக்குப் பொருள் கூறினீர்

   அதற்கும் மேலும் பலப்பல அடுக்கினீர்


குமுதமாய் மலர்ந்தீர் குளிர் நிலா பாரதி என்றீர்

   குருவாய் அவரை ஏற்று பாரதிதாசன் ஆனீர்


தமிழ்ச் சோலையில் நீர் வளர்த்த கவிதைகள் 

   தமிழ்க் கவிஞர்கள் அனைவரின் விதைகள் 

   

அமைதியானீர் இந்நாள் அகவை எழுபத்து இரண்டில்

   ஆனாலும் இன்றும் ஆள்கிறீர் எம் நெஞ்சில்.


__. குத்தனூர் சேஷுதாஸ்

************************


படம் பார்த்து பா எழுது!

 


படம் பார்த்து

பா எழுது!

°°°°°°°°°°°°°°°°°°

ஒரு கையில் கைபேசி எடு!

ஒருகையில் பாட்டி வாயை மூடு!

இன்றைய குழந்தைகள்


--- ஸ்ரீவி

******************************

குறும் பிசாசு 


ஆட்டிப் படைக்கிறது கைப்பேசி நம்மை இன்று 

   அழகுப் பெயர் சூட்டினார் குறும் பிசாசு என்று 


கூட்டுக் குடும்பம் சிதைந்து வெகுநாளானது

   குழந்தை வாயடைக்க குறும் பிசாசு நுழைந்தது 


பாட்டி சொலும் கதைகள் கற்பனையைத் தூண்டியது

   பாவம்! குழந்தை இன்று ரீல்ஸ் வேண்டுகிறது


போட்டுடைத்தால் புதிய ஒன்று விரைந்து வருது

   புராணக் கதைகள் சொல பாட்டி மனம் ஏங்குது.


__. குத்தனூர் சேஷுதாஸ்

******************

பாசமிகு பாட்டியிடம்...

வளர்ந்த கதை வாழ்ந்த கதை

படித்த கதை கேட்ட கதை என

கேட்டு வியக்க...

 எண்ணிலடங்கா‌

 கதைகளுண்டு


ஓடியாடி களைத்த பிள்ளை

படித்து முடித்து ஓய்ந்த கிள்ளை

இளைப்பாறி கண்ணயர...

சொல்லில் அடங்கா 

பாடல்களுண்டு


பாட்டியின் கைகளுக்குள் உலகம்

அனுபவங்களால் நிறைந்தது 

மனதின் உணர்வறிந்து

மாயை மருளகற்றி

 அன்பால் மயக்கும்

அறிவுக்கண் திறக்கும்


உலகை அடக்கிய அலைபேசி

இருமுனை கத்தி அது

நனவின் வாய்மூடி

கனவில் திளைக்க செய்து

ஆசையால் ஈர்க்கும் 

அறிவை மயக்கும் 


பாட்டிக்கு இடமிருந்தால்

மனமும் மகிழ்ந்திடும்

அறிவும் தெளிவாகும்

அப்பொழுது...

அலைபேசியும் தணிக்கும்

பிள்ளையின் அறிவுப்பசி


- அமுதவல்லி


************************

பாட்டி இருந்தால் அவள்சொல்லைத்தட்ட முடியுமா!


அந்தப் பொக்கை வாய்க்குள் எத்தனை கதைகள்! 


உடலின்ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதை

பேசுமே!


பாடல் பட்டியலே( playlist)

தேவையில்லை; பாட்டியின் பாட்டு இயலே

போதும்!


நிலவையும், நிலாச்சோறையும்

பாட்டியின்றி ரசிக்க

முடியவில்லை.


எத்தனை காணொளிகள் ,பாட்டுகள் இருந்தாலும்

அலை பேசியால் பாட்டிகளை" அடிச்சிக்க முடியாது"!


- மோகன்

*******************


Saturday, April 19, 2025

விளைநிலங்கள்

 விளைநிலங்கள், விலைநிலங்கள்  ஆனது

விளைச்சல் குன்றியது

விலைவாசி விண்ணைத் தொட்டது

விலையின்றி கிடைத்த தண்ணீருக்கு

விலை கொடுக்கும் நிலை வந்தது

விளைநிலங்களைச் சுற்றி நகரம் தோன்றியது

விளைநிலங்களே நகரங்களானது

வற்றிப் போனதால் வாய்விட்டு கதறுகிறோம்

விலைக்கில்லாமல் எங்களை வாழவிடுங்கள்

வாழையடி வாழையாய் உங்களையும் வாழ்விப்போம்!!!

இப்படிக்கு

விளைநிலங்கள்

மொத்தமாய் பிரிந்ததேனோ?

 மொத்தமாய் பிரிந்ததேனோ?


வித்திட்டு என்னை முளைக்க வைத்தவன் 

   வியர்வை சிந்தி நாளும் வளர்த்து விட்டவன்


புத்தியது வளர பள்ளி கொண்டு விட்டவன் 

   பூச்சியும் கடிக்காமல் பார்த்துக் கொண்டவன் 


கத்தியும் தூக்கத் தயங்காதவன்

   காதல் கத்தரிக்காயை விரும்பாதவன்


மொத்தமாய் அந்த அப்பா பிரிந்து பறந்ததேனோ?

   மீண்டும் இக் குடும்பத்தில் பிறக்கத்தானோ!


__. குத்தனூர் சேஷுதாஸ்


*******************************************




Friday, April 18, 2025

இது என்ன வாழ்க்கை

 தன்னலமில்லா பெற்றவள் என்னைப் பற்றிக் கொண்டிருந்த விரல்களை விடுவித்துக் கொண்டு

முதல் முறையாக அவள் மட்டும் இறைவனை நேரில் காண சென்ற போது...


பாதி உயிர் கொண்டும் என் உடல் நடமாட முடிந்தது!

பகல் இரவு பேதமில்லை..

எல்லாம் இருட்டு!


"இது என்ன வாழ்க்கை?

"இவ்வளவு தான் வாழ்க்கையா?"

" ஒரு வேளை இப்படி செய்திருந்தால்"

இப்படி பல இப்படிகள்

எண்ண அலைகளாய் 

எழும்பி எழும்பி

கரை காண முடியாமல்

குற்ற உணர்வில்

அமிழ்ந்து போக..

மற்றவர்கள் உடனிருந்தும்

யாரும் அற்றவளாய்..


அழுது தீர்க்கலாம் என 

முடிவெடுத்தும்

இன்று பெருகி வரும் கண்ணீரில் கால் அளவும் கூட அன்று ஏனோ 

ஊற்றெடுக்கவில்லை!


என்னை உலகிற்குக் கொண்டு வந்தவளே இல்லை..

நான் மட்டும் ஏன் இருக்க 

வேண்டும் ? 

எப்படியும் ஒரு நாள் மடிவேனே!

அறிவிக்கப்படா தேதி

வெகு தொலைவில்

இருக்குமோ?

நாள்களில் நொடிகள்

ஊர்ந்து நகர்ந்தன..


ஏன் வாழ வேண்டும்?

தொடர்ந்து வாழ முடியுமா?

விடையறியா வெறுமை!


நாள்கள் வருடங்களை

எட்ட எட்ட

விடைகள் விரிவடைந்து கொண்டே போயின..


"அம்மா இன்னிக்காவது எனக்குப் பிடிச்சதா செஞ்சி தரீயா?"

என் மூலம் உலகிற்கு வந்தவன் கேட்ட போது

"கடமைக்கு ஏதோ சமைத்துக் 

கொண்டிருக்கிறேனே!" புரிந்தது


"அப்பாவ நல்லா பார்த்துக்கோமா"  உறவினர்கள் சொன்னபோது உள்ளத்தில் ஊடுருவாமல் ஏதோ

தலையை ஆட்டி வைத்தது 

என் உள்ளத்தில் தானே உதித்து உண்மை நிலை உணர்த்தியது


வாழ்க்கைத் துணையாய்

இருப்பேன் என

என் துணைவர் நம்பிக் கொண்டிருப்பது 

மூளையின் ஓரத்தில்

சம்மட்டியால் அடித்தது



"ஃபீனிக்ஸ்" பறவைன்னு ஒரு பறவை 

இருந்துச்சான்டி..

எரிஞ்சி சாம்பலாகி

சாம்பல்ல இருந்து 

உயிரோட வருமாம்....

அம்மா அவ்வப்போது 

சொன்னது 

அகக் காதுகளில்

புதிதாய் ஒலித்தது..

" நீ ஃபீனிக்ஸ் பறவை போல

உயிர்த்தெழுந்து வருவாயா?"

அம்மாவைக் கேட்டேன்.


என் தமிழில் பேசினாள்..

"அக்கரையில் உனக்காக காத்திருக்கிறேன்..

அங்கிருந்தே உன்னை 

பார்த்து வருகிறேன்.

காற்றின் வருடலாய்

உன்னைத் தழுவிக்

கொள்கிறேன்.

இலைகளை அசைத்து

ஓசையில் பேசுகிறேன்.

உன் எண்ணங்களில்

எழும்பி ..

உன் உள்ளத்தில் உறங்கி..

உனக்குள் நான்..


எனக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை

வாசித்துவிட்டேன்.

உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தின் அத்தியாயங்கள்

நீ வாசிக்க வேண்டி காத்திருக்கின்றன.

நீயோ வாழ்ந்து கொண்டே மடிந்து கொண்டிருக்கிறாய்!

என் இராசாத்தி நீ.. 

உலக வாழ்வில் உன்னைத் தோற்க விடுவேனா?

பிறருக்காக கடமைகள் ஆற்ற வந்தவள் நீ..

எனக்காக வெற்றிகள் குவிக்க வந்தவள் நீ..

உனக்காகவும் கொஞ்சம் 

வாழ்ந்துகொள்!

ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு உயிர்த்தெழு!

உன் இருண்ட பாதைகளில்

வெளிச்சமாய் நான்!"

என்றாள்..


இதோ உங்கள் முன் உயிரோடு நான்!


- சாய்கழல் சங்கீதா

வாழ்க்கை கோலம்

 காலம் வரைவது

வாழ்க்கை கோலம்


புள்ளி வைத்தது எவரோ

சுழித்து விட்டது யாரோ

வண்ணம் கொடுத்தது எவரோ

மண்ணில் மறைத்தது யாரோ


கோலமோ அலங்கோலமோ

அழிந்தாக வேண்டும் என்றாலும் 

அதுவரை

வாழ்ந்துதான் தீரவேண்டும் 


-அமுதவல்லி

பெண்கல்வி

 ( சற்று பெரிய பதிவு- எனக்குப்பட்டது- மன்னிக்கவும்)


பெண்கல்வி

---


புள்ளிகளை இணைத்தால் கோலங்கள் மட்டுமல்ல,

பெண் கல்வி பற்றிய ஆதங்கங்களும் தென்படுகின்றன.


  ஒரு ஆலமரத்தின்

சிறிய வித்து பல விழுதுகளைக் கொண்ட பெரும் மரத்தை உருவாக்குதல் போல,

பெண் ஒரு சமூகத்தையே அன்றோ உருவாக்குகிறாள்!

ஆனால் அந்த உயர் தகுதிக்கு ஒப்பான கல்வி கற்க வாய்ப்புகள் இன்று பெருகி வரினும் இன்னும் பயணிக்க வேண்டிய தூரமோ, தொட வேண்டிய உச்சங்களோ ஏராளம்.


ஏன்? எனக்கு உதித்த காரணிகள்:


சமூக கோட்பாடுகள்/ வேறுபாடுகள்-

பெண்ணின் விருப்பம் புரியாமல், பள்ளிப் படிப்பு முடிந்தவுடன்( பெரும்பாலும்)

"ஒத்தன் கைலே பிடிச்சி குடுத்துடணம்" 

எனும் பெற்றோரின்" பொறுப்புத்துறப்பு" உணர்ச்சிகள்/ உறவினரின் உந்துதல்கள்.


சூழ்நிலை வேறுபாடுகள்:

கிராமம், சிறு நகரங்கள், மற்றும் பெரு நகரங்களில் உள்ள கல்வி பயில ஏதுவான

குடும்ப சூழ்

நிலைகள்/ கட்டமைப்புகள் என்று ஆய்ந்தால், பெரு  மற்றும் சற்றே சிறுநகரங்களில் பெண் உயர்கல்வி 

கற்க வாய்ப்பு அதிகம்.

ஆனால் கிராமங்கள்அவற்றைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெண்கல்வி என்பது

இன்னும் மொட்டாக உள்ளதே தவிர இன்னும் மலராக முகிழ்க்கவில்லை.

தந்தைக்கு உதவியாக வயலிலோ, தாய்க்கு  துணையாக தாதி எனப்பல சுமைகள்.


முதுகில் சுமக்கும் புத்தகப் பையோடு.

தினம் நெடுஞ்சாலைகள் பல கடக்க  நேரிடும்

கல்விச்சாலைகளை அடைய.


மகள் மணத்துக்கு இலட்சங்களை , செலவழிக்கத் தயாராக உள்ள பெற்றோர் அவள் இலட்சியங்களைத்தொடவிடாமல் அலட்சியம் செய்வது.


மேற்கண்டவை நான் அலுவல் நிமித்தம் பல இடங்களுக்கு சென்ற போது பெற்ற அனுபவங்கள் ; நகரத்தான் என்ற முறையில அல்ல. 


இன்றும் சென்று இன்றைய நிலை காண நினைக்கிறேன். ஆனால் நகரத்தான் முடியவில்லை!


இன்று தொழில் நுட்பத்

தொடர்புடைய பல தொழில்களில், பெறு நிறுவனங்களில்,பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்தாலும்,   பெண்கள் "பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்"   இருந்தாலும்,பெண்களுக்கான " கண்ணாடி உச்சவரம்பு" , ஊதிய வேறுபாடுகள் இன்னும்

தங்கள் நச்சுப்பற்களை நீட்டிக்கொண்டுதான் உள்ளன என்பது வேதனை தரும் உண்மை.


புள்ளி விவரங்கள்( மறுபடியும் புள்ளியா!) நாட்டில் பெண்கள் கல்வி அறிவு பெற்றவர் 75% என்றாலும், அது ஒட்டு மொத்த சதவிகிதமாக உள்ளதால் , கிராம / சிறு நகரங்களில் உள்ள நிலமை சரியாகப் புரிபடவில்லை.


WPL பற்றி ஸீவீ ஐயா குறிப்பிட்டார் . நம் CSK உரிமையாளர் பெண் WPL உருவாக்க மறுத்ததாக கேள்வி; நம் தமிழகத்தில்!


ஆணுக்குப்பெண் சமம் என்று கும்மியடிக்க 

இன்னும் கைகள் காத்திருக்க நேரிடுமோ?!


நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்

எனில் அதன் துணை வேந்தர் குடும்பத்தலைவி அன்றோ! அவள் நற்கல்வி பெற நற் சூழ்நிலைகளும், சமநோக்கு சமுதாயமும் இருப்பின் பல்கலைகள் ஏற்றம்பெறும் என்பது திண்ணம்.

மூச்சுப்பயிற்சி

 அல்வா கடைக்காரர்

முன் வண்ண வண்ண இனிப்புகள்- விற்க, ஆனால் உண்ண அல்ல.

 சர்க்கரை வியாதி.


பெரும் மூச்சு!

ஏக்கத்தில் அல்ல; 

மூச்சுப்பயிற்சி!

Wednesday, April 16, 2025

திடீர் மழை!

 திடீர் மழை!


ஆதவன் சாட்சியாக நிலமகள் கடனாகக் கொடுத்த

துமிகளை( நீர்த்துளி)

வானமகள் 

திருப்பிச் செலுத்திக் 

கொண்டிருக்க...

சாட்சிக்காரன் எங்கே போனானோ?!


சாய்கழல் சங்கீதா

Tuesday, April 15, 2025

வாழ்வியல் நிலை

 வாழ்வியல் நிலை 


நகைச்சுவையாய் 

பகிரப்பட்ட நம் 

பிழைக் குறும்பு 

நம் பின்னால் 

பிம்பமாய் மாற்றப்பட்டிருக்கும். 


அன்பின் பொருட்டு

இர(ற)ங்கி போன

நாட்களால் 

எழும்ப முடியாமலே 

போயிருக்கும்.



புரியவைக்க முடியாமல் போன

நம் பயணப்பாதைகள் 

நமக்கான  சுயத்தின்

வீரியத்தை குறைத்திருக்கும்.



அனைவருக்கும் இலகுவான ஒன்று நமக்கு இல்லாமலே போயிருக்கும்.


ஆனாலும் என்ன?

நடந்து கொண்டே இருப்போம்.

எல்லோருக்குமான 

பாதைகள்

என்றாவது ஒருநாள்

புரிதலின் புள்ளியில் சந்திக்கும்

என்ற நம்பிக்கையோடு...


ராஜேஸ்வரி.ந

16/4/2025

ஒரு காப்பி பிரியரின் காப்பியாயணக் காப்பியம்

 ஒரு காப்பி பிரியரின் காப்பியாயணக்

காப்பியம்

-----

முதலில் செவி வழிச்செய்தி:


வெள்ளைக்காரன் அறிமுகம்

செய்த அமுத(?) பானம்.


முதலில் எல்லோருக்கும் அருமையான காபி , இலவசமாக,வேலையில்லா இளைஞரைக்கொண்டு, ஒரு மாதம். பிறகு

கடை மூடப்படும். சுவை கண்ட

நாக்குகள் தவிக்கும்.

" கிட்டா "தொற "( துரை) கடைய மூடிட்டாண்டா !" போன்ற அதிர்ச்சிப்புலம்பல்கள்! இரண்டு

மாதம் கழித்து, திரும்பவும்

கடை திறக்கும், ஆனால் பானம் வாங்க காசு கொடுக்க வேண்டும்!

ருசி கண்ட நாக்குக்கும் பணப்பைக்கும் நடக்கும் போரில்

நாவே வெல்லும்.இப்படித்தான் காபி நம்மை ஆட்கொண்டது.


" டிகிரி காபி:

இது degree காபி; decree காபி அன்று.


பாலின் சூடு , தரமான காபி போட, 12degree இருக்க வேண்டுமாம். இதற்கான வெப்ப மானிகள் இருந்ததாக அறியப்படுகிறது.


நுரை:

மிக முக்கியமான அம்சம் , நெற்றித்திலகம் போல.


சூட்டைப் பாதுகாக்க

பாலாடை( creamy) மற்றும் வடிவமைப்பை( texture) தர

லாத்தே( latte) போன்ற பானங்களில் நுரையின் மேல் அழகிய வடிவங்களை எழுதுவார்கள.

இந்தக்கலையைக்கற்க

" Barista" வகுப்புகள் உண்டு.

சான்றிதழும் தரப்படும்.

நம்ம ஊரில் இது இல்லாமலே

காபி மாஸ்டர் பட்டம் பெற்றவர் ஏராளம்.


இப்போதெல்லாம் சரக்கரை வேண்டுமா என்று கேட்டு வீட்டிலோ வெளியிலோ காபி தயாரிக்கப்படுகிறது. உடம்புகள்

சர்க்கரை மூட்டைகளான பின் என் செய்ய, பராபரமே!


பித்தளை டபராவுக்கும், டம்ளருக்கும் அரை, முக்கால் முழத்துக்கு , சிந்தாமல், சிதறாமல் ஆற்றி பாங்காக நமது

மேசையில் வைத்த பரிமாறும்

சேவையாளர் எங்கே மறைந்தனரோ?!


ஆற்றாமல் , சூடாக ஒரு கோப்பை காபி குடித்து மன ஆற்றாமையை

ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான் போல!

பொதுக் குழு விவரணம்

 --------------------

பொதுக் குழு விவரணம்

--------------------



14-4-2025, திங்கள் மாலை ஆறு மணிக்கு பன்பயன்பாட்டு பெருவரங்கில் நம் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் பொதுக் குழு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 


நிர்வாகக் குழு உறுப்பானர்கள் விஜயலக்ஷ்மி பாலாஜி மற்றும் துர்கா சாய்ராம் இருவரோடு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திசைத்த தமிழ்ப் பண்ணோடு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.


இ.ச. மோகன் ஐயா,

செங்கதிர்ச் செல்வன் ஐயா, 

திருமதி. விஜயலக்ஷ்மி பாலாஜி, சாரங்கராஜன் ஐயா, திருமதி. மைதிலி மதி ஆகியோர் 

குத்து விளக்கேற்றினர்.


நிர்வாகச் செயலர் சி. ஹரீஷ் வரவேற்புரை நல்கினார்.


தன் தலைமையுரையில் *குறுநகைத் தமிழ்* புலனக் குழுவாய் துவக்கப் பட்டு 14-4-23 அன்று அறிமுகக் கூட்டத்துடன் துவங்கி  மகாகவி பாரதி தமிழ்ச் சங்கமாய் மலர்ந்து ஈராண்டுகளாய் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நம் சங்க செயல்பாடுகளை தலைவர் ஸ்ரீவி விளக்கினார். வெற்றிக்கு அடிகோலிய நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டினார்.


பின், நிதி நிலை அறிக்கையை நிதிச் செயலர் சாய்ராம் வாசித்தளித்தார். நிதி நிலைமை சீராக இருப்பதற்கு உதவுகின்ற உறுப்பினர்களின் பங்களிப்பிற்கு நன்றி கூறினார். நடப்பு நிதியாண்டிற்கு இதுவரை 83 பேர் சந்தா அளித்ததைக் குறிப்பிட்டு, மீதமுள்ளோரும் உடனே சந்தா செலுத்திட கோரிக்கை விடுத்தார்.


அவரைத் தொடர்ந்து தியாகராஜன் (உதவித் தலைவர், மலர்விழி (செயலர்) அனிதா பாரதி (உதவிச் செயலர்) மற்றும் ஹரீஷ் (நிர்வாகச் செயலர்) ஆகியோர் தமிழ்ச் சங்கத்தோடு பயணித்தது குறித்து பேசினர்.


பிறகு, உறுப்பினர் நேரம் துவங்கியது. 


காமாட்சி நாகராஜன், மைதிலி மதி, ஸ்ரீநிவாசன், ராஜேஸ்வரி, 

வித்யா சிவக்குமார், சாரங்கராஜன், 

தேவி அருண் 


ஆகியோர் நிறைகுறைகளைப் பற்றியும், ஆலோசனைகள் வழங்கியும் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்தனர். 


அவர்களது கருத்துகளைத் தொகுத்து சாய்ராம் அவர்களும் ஸ்ரீவி அவர்களும் விளக்கம் அளித்தனர்.


விவாதங்களின் அடிப்படையில்,


★ மகளிரின் பங்களிப்பை அதிகமாக்கும் நோக்குடன் ஒரு உதவிச் செயலர் பதவிக்குப் பதிலாக இரு பதவிகளை உருவாக்கி மகளிருக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் நமது அமைப்பு விதிகளில் தகுந்த மாற்றம் செய்வது என்றும் தீர்மானம் முன் மொழியப் பட்டு ஒரு மனதாக பொதுக் குழுவால் ஏற்கப் பட்டது. மொத்த நிர்வாகப் பதவிகள் 7 ஆகின்றன. 


★ உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சங்கத்தின் விரிவாக்கத்தினைக் கணக்கில் கொண்டும் பூர்வாக்கு வெளியில் உள்ளோரையும் உறுப்பினராக்க முயற்சிக்கலாம். இதனை நிர்வாகக் குழு ஆலோசித்து வரைமுறைகளைத் திட்டமிடலாம் என்ற கருத்து ஏற்கப் பட்டது.


★ நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்ட பின் அவை அதனை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது. 


மேலும் நம் சங்கத்தின் இருப்பில் இருக்கும் நூல்களின் விவரங்கள் படிக்கப் பட்டன அவையோரின் கவனத்துக்காக. 


பிறகு நிர்வாகிகள் தேர்தல் துவங்கியது. நிர்வாகிகள் மேடையிலிருந்து கீழிறங்க, தேர்தல் குழு உறுப்பினர்கள்

இ.ச. மோகன், செங்கதிர்ச் செல்வன், விஜயலக்ஷ்மி பாலாஜி ஆகியோர் மேடையேறினர்.


தேர்தல் நடவடிக்களைப் பதிவு செய்ய மலர்விழி உதவினார்கள்.


முதலில் தேர்தல் குழுவின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையின் சாராம்சத்தை விளக்கினார்கள். அவையாவன:


தேர்தல் நடத்தப்படும் 

நிர்வாகப் பதவிகள்:


நமது அமைப்பு விதிகளின் படி  ஏழு பதவிகள் அவையாவன:

1) தலைவர்

2) உதவித் தலைவர்

3) செயலர்

4) உதவிச் செயலர் - இரு பதவிகள்

5) நிர்வாகச் செயலர்

6) நிதிச் செயலர்


பதவிக் காலம் : ஈராண்டுகள்


பதவிகளுக்கான தேர்தல் ஒவ்வொரு பதவிக்காக ஒன்றன் பின் ஒன்றாக  நடத்தப் படும். தேர்தலில் ஒரு பதவிக்கு தன் பெயரை தானே முன் மொழிந்து கொள்ளலாம்.

பிறிதொருவரின் பெயரையும் முன் மொழியலாம். 


முன் மொழிதலுக்கான ஒரு வழிமொழிதல் (பிறிதொறு உறுப்பினரால்)அவசியம். 


புதிதாக போட்டியிட விழைவோர் குறைந்த பட்சம்  கடந்த ஆறு மாதங்களாவது உறுப்பினராக இருந்திடல் வேண்டும்.

தங்களைப்பற்றியும் , சங்கத்தில் இதுவரை தாங்கள் அளித்த பங்களிப்புகள்- இயல், இசை, நாடகம், கவிதை , தினப்பதிவுகள்பற்றியவை, சங்கம்மேலும் வளர

வைத்திருக்கும் திட்டங்கள் என்று 3-5 நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப் படும்.


ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால், விலகிக் கொள்ளுதல் இல்லாதிருந்தால் தேர்தல் குழு தேர்தல் நடத்தும்.


உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும். (குடும்பத்திற்கு ஓர் ஓட்டு)


கையுயர்த்துதல் மூலமாக தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கப்படும்


நிர்வாகக் குழு உறுப்பினர்களை புதிய நிர்வாகிகள் நியமிப்பார்கள். 


நிர்வாக குழு உறுப்பினர் எண்ணிக்கையையும் நிர்வாகக் குழு தீர்மானிக்கும்.


3 கூட்டங்களுக்குத் தொடர்ந்து வராதோர் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப் படுவார்கள்.


நடப்பு நிதியாண்டிற்கான (2025-26) ஆண்டுச் சந்தா ௹.1200/- செலுத்தியிருக்க வேண்டும். இணையதள வங்கிச் சேவை இன்னும் கிடைக்கப் பெறாததால், தேர்தல் குழு கேட்கையில் சந்தா அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட் காண்பித்தல் வேண்டும்.


தேர்தல் குழு ,

இத்தேர்தல் பற்றி எடுக்கும் எல்லா முடிவுகளும் இறுதியானவை.


போட்டியிட விழைவோர் நேரிடையாக அல்லது கைபேசி மூலமாக தேர்தல் குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்கலாம். அல்லது பொதுக் குழுவில் வந்து தெரிவிக்கலாம். 


தங்களிடம் நேரிடையாக இதுவரை எவரும் விழைவு தெரிவிக்கவில்லை என்பதால் தற்போது தெரிவிக்கலாம் என்ற அறிவிப்போடு ஒவ்வொரு பதவிக்காக தேர்தலை நடத்தினர்.


பல முன்மொழிதல்கள், விலகுதல்கள் நடந்த பின்னர் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 


ஆரோக்கியமான முறையில் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்த மகளிரின் ஆர்வம் குறிப்பிடத் தக்கது. இவை சங்கத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்பதற்கான நல்ல அறிகுறிகள்.


தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகாகள் விவரம்:



தலைவர் : ஜெ. ஸ்ரீவெங்கடேஷ்


உதவித் தலைவர்: கோ. தியாகராஜன்


செயலர் : மலர்விழி லக்ஷ்மன்,


உதவிச் செயலர்கள்: ஈமான் சுல்தானா, 

ந. ராஜேஸ்வரி


நிர்வாகச் செயலர்: சிவகாமி சீதாராமன்


நிதிச் செயலர் : சு. சாய்ராம்.


புதிய நிர்வாகிகளை தேர்தல் குழு மேடைக்கழைத்து அறிமுகப் படுத்தியது.


நமது அமைப்பு விதிகளின் படி நிர்வாகக் குழு உறுப்பினர்களை புதிய நிர்வாகிகள் நியமிப்பார்கள் என்ற தகவலை தேர்தல் குழு அறிவித்தது. 


நிறைவு நிரலாக, நமது சங்கத்துக்கான வலைப் பதிவு தளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் அமுதவல்லி அதனை திரையில் ஒளிர விட்டு அறிமுகப் படுத்தினார். உறுப்பினர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார்.


பின், உதவிச் செயலர்   ராஜேஸ்வரி நன்றி நவின்றார்.


நிகழ்ச்சியை ஆர். மகாலக்ஷ்மி சிறப்பாக தொகுத்தளித்தார்.


தேசியப் பண்ணோடு பொதுக் குழு நிறைவுற்றது. 


நன்றி நவிலல்🙏


 *பொதுக் குழு சிறப்புற நடந்திட கரத்தாலும் கருத்தாலும் உதவிய தமிழ் உறவுகள்*


*பெருந் திரளாகக் கலந்து கொண்டதோடு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தும் ஜனநாயகக் கடமையை சிறப்புற ஆற்றியும் பங்களித்த உறுப்பினர்கள்*


*சீரிய முறையில் தேர்தலை நடத்தித் தந்த தேர்தல் குழுவினர்*


*வலைப் பதிவு தளம் உருவாக்கி நம் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அதனை அறிமுகப் படுத்திய அமுதவல்லி*


அனைவருக்கும் நெஞ்சுநிறை நன்றிகளை நம் சங்கம் உரித்தாக்குகிறது.


நன்றி🙏


ஸ்ரீவி

தலைவர்

நிர்வாகக் குழுவிற்காக.

காபி☕ ...

கடுமையான பணிக்குப் பின்

களைப்பது நீங்க

கமகமக்கும் காஃபி ஒரேஒரு

'ஸிப்'

புத்துணர்வோ புதுப் புனலாய் பெருகும்

காஃபியின் சுவைதனிலே நம் மனதோ உருகும்!


--உங்கள் தோழன் ஸ்ரீவி 


------------------------------------------------------------------------------

தோழி வீட்டுக் காபி☕ ...


வீணை 
"கா"னம் பயில வந்த எமக்கு 
"பி"ரமாதமாக காபி கலக்கிய தோழி யின் காபி கலக்கும் வித்தையைக் காப்பியடிக்க ஆசை! 
காபியின் வாசனை மூக்கைத் துளைக்க..
எங்கள் வாய் மறுப்பேதும் சொல்லாமல்
"கப்சிப்" ஆகி "கப்" பில் இருந்த கலக்கப்பட்ட கலக்கலான காபியைச் "சிப்" செய்ததால் காபி "கப்" ஒரு துளியும் மிச்சமாகாமல் காலி "கப்" பாகி விட்டது!


- சாய்கழல் சங்கீதா

----------------------------------------------
குடிக்கவும்.....காபி
படிப்பிலும்..... காபி (copy)
பாடவும்......காபி(ராகம்)
வேலையும்.... காபி (copywriter)

- சாய் ராம்



Monday, April 14, 2025

தனிமைப் பயணம்

 தனிமைப் பயணம் 


அவசரமாக ஓடிச்சென்று 

ரயில் பெட்டியில்

எனக்கான இருக்கையில் 

அமர்ந்து  கொண்டேன். 


பயணச்சீட்டு விவரத்தை 

சரிபார்த்துக் கொண்டேன். 

என்னுடன் பயணிப்பவர்களுடன் 

வழியனுப்ப வந்தவர்கள் 

அன்பையும் உணவையும் பரிமாறிக்கொண்டிருந்தனர் .


என்னை வழியனுப்ப யாராவது 

வருவார்களா என

கண்எட்டும் தூரம்வரை 

எட்டி பார்த்துவிட்டு 

ஆசுவாசப் படுத்திக்கொண்டேன் .


வண்டி கிளம்பிற்று .

சாளரங்களின் வழியே 

தலைகளும் ஓசைகளும் 

மறையத் தொடங்கின.


தூரத்தில் ஒரு  உருவம் 

என் பெயர் சொல்லிக் கொண்டு 

ஓடி வருவது போல் இருந்தது. 


மூச்சிறைக்க ஓடி வந்த  அவ்வுருவம்

என் கைப்பிடித்து கூறியது

தைரியமாக போய் வா

நானிருக்கிறேன் என.


மனம் இலேசாகி நன்றி சொன்னேன். 

என் நிழலுக்கு சொந்தக்காரியான

அவ்வுருவத்திற்கு.



ராஜேஸ்வரி.ந

15/4/2025

"விசுவாவசு" இவ்வாண்டில்...


சித்திரை முதல் இன்று தமிழாண்டு தொடக்கம் 

   சிறப்பாய் "விசுவாவசு" இவ்வாண்டு இருக்கும் 


புத்திரி, புத்திரன் கழுத்தில் மணமாலை ஏறும்

   புழு பூச்சி உண்டாகி அவர் வாழ்வு சிறக்கும் 


சத்தான உணவையே பிள்ளைகள் உண்ணும்

   சடுகுடு விளையாடி, களைக்கும், துஞ்சும் 

   

தித்திக்கும் தமிழதில் திகட்டா பலவும் வரும் 

   " தொடை நடுங்கி, கோடை இடி" அதுவும் சேரும்


பத்திரமாய் இதயங்கள் பாதுகாக்கப் படும்

   பல மருத்துவமனை வெறிச்சோடிப் போகும் 

   

அத்திப்பழ அரசியல் அது அடியோடு தொலையும் 

   அத்தனை புழுவும் முத்தாய் மாதுளையாகும்


குத்தனூரானுக்கும் மேடை தந்த தமிழ்ச் சங்கம் 

   குறித்த தேர்தல் இன்று நலமாய் நடக்கும் 


அத்துணை இன்பமவை குற்றாலமாய்க் கொட்டும்

   அகிலம் முழுமைக்கும் அமைதியது கிட்டும்.


__. குத்தனூர் சேஷுதாஸ்

Thursday, April 10, 2025

உலக உடன் பிறப்புகள் நாளில்...

 உலக உடன் பிறப்புகள் நாளில்...


அண்ணா, தம்பியாம், அக்கா, தங்கையாம் 

   அந்நாள் இவ் உறவுகள் வீடுதோறுமாம் 


உண்பது எதையும் அன்று பகிர்ந்தே உண்டோம் 

   ஒருவரை மற்றொருவர் கண்காணித்தோம்


வண்ண உடைகளும் ஒரே மாதிரியாம்

   வடை, வளை அவை அதே அளவிலாம்


தண்ணீர் ஒன்று பருக தனக்கெனும் இன்னொன்று

   தளிராய் இருக்கும் போதே பகிரும் குணம் அன்று 


தாயம், பல்லாங்குழி விளையாடுவோம் சேர்ந்து 

   தகராறு, சமாதானம் வருமாம் அடுத்தடுத்து 


காயம் படும் ஓடியாடி விளையாடும் நேரம் 

   கணத்தில் அக்காவின் கையில் மண்ணும் 


சாயம் போன ஆடையாம் அண்ணன் போட்டதாம்

   சாப்பிட உட்கார்ந்து சேர்ந்து உண்டோமாம்

   

மாயமாம் இவை இந்நாள் மனையில் ஒரே குழவி

   மாற்றாகவும் இருக்கிறது வளர்க்க ஞமலி.


__. குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, April 9, 2025

பார்வைகள் பலவிதம்

முட்களைப் 

புரிந்து கொள்ள 

புத்தியே போதுமானது!!

ஆனால் 

பூக்களைப் 

புரிந்து கொள்ள

இதயம் வேண்டும்!!!


- ஓஷோ

---------------------------------------------------------------------------------------------


பார்வைகள் பலவிதம் 


புத்தியின் கண்களுக்கு முள்களே தெரியும் 

   பூவை, மென்மையை மனமே அறியும் 


பத்தினியின் கண்கள் குறைகளைத் தேடும்

   பல்லிடை வெண்டையாம் கணவன் பாவம் 


சத்தியம் பார்வையில் எல்லாம் சமமாகும் 

   சாட்சி கண்டு சட்டமோ முடிவு சொல்லும் 


அத்திப்பழம் பார்க்க ஆவலைத் தூண்டும் 

   அதனுளே அத்தனையும் புழுக்களாகும்


கத்தி முகத்தில் கண்களே இல்லையாம்

   காயோ, விரலோ வெட்டித் தள்ளுமாம்


" சித்தி " தொடர் பாரா கண் இங்கு துஞ்சா

   சீனக் கண்களுக்கு தப்பும் ஓர் உயிரா ?


குத்துச்சண்டையில் கோபமே கண்களாம்

   குடும்பம் நடத்த கோலவிழிப் பெண்களாம்


அத்தை மகனின் தோற்றம் அந்த மன்மதனாம்

   அவ்வாறே மாமன் மகள் அழகு ரதி ஏனாம்?


__. குத்தனூர் சேஷுதாஸ்


---------------------------------------

பூக்களைப் புரிந்து கொள்ள

இதயம் போதுமானது..

ஆதாயகங்களைத் தேடாத

இதயங்களை அறிந்துகொள்ள

வேண்டியது யாதோ??🤔

- சங்கீதா

-------------------------------------------------

சில முட்கள் காலம் காட்டும்

சில காலை வாட்டும்.

சில ,மலருக்கு பாதுகாப்பு ஊட்டும்




இருக்குமிடம் தெரிந்தால்  அவை செய்யும்

பணியின்புரிதல்  எளிது.


ஆனால் பூக்கள் அப்படி அல்ல.

மண விழாவிலோ

பிண ஊர்தியிலோ

பூங்காவில் உதிர்ந்து கிடந்தாலும்   கூட இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற

உணர்வுகளை ஊட்டும்.


முள்ளும் மலராகலாம்

இதயம் இருந்தால்.


---மோகன்




Saturday, April 5, 2025

வெண்மை

 அலைகளுடன் அலைந்து வந்த குப்பைகளுக்குள் 

ஒளிந்திருக்கும் 

சின்னஞ்சிறிய வெண்சங்கு..


நேற்று பெய்த மழையில் பூத்து தம் இருப்பிடம் காக்க மழையில் நனைந்திடும் சின்னஞ்சிறு

வெண்குடைகள்..


ஈன்ற கன்றுக்குத் தாராளமாய் பாலூட்டி

மிச்சமாய் கிடைக்கும்

ஆ வின்  வெண் பால்


புயல் காற்றில் 

பறந்து வந்த வெண் பஞ்சு


வெள்ளத்தில் அடித்து வந்த

வெண்ணிறக் காகிதக் கப்பல்..


கவிதை எழுத வேண்டி

காத்திருக்கும்

வெள்ளைக் காகிதம்


மிகவும் ருசியாக இருக்கும்

அடுத்த வீட்டு வெண்பொங்கல்


குட்டைகளாய்த் தேங்கிய 

மழை நீர் என்றாலும்

பறந்து மகிழும்

வெண் கொக்குகள்


ஆதவனை மறைத்து 

விளையாடும் வெண் மேகங்கள்..

வெண் மேகங்களையும்

மாயமாக்கும் 

வெண்பனி..


அரிதாய் காண்கின்ற

வெண் தோகை மயில்..


மிகவும் அரிதாய் அறிமுகமாகும்

வெள்ளந்தி மனிதர்கள்..


பால் குடிக்கும் குழந்தைக்குப்

புதிதாய் முளைத்த

பால் பல்


வெயிலில் கிடைத்த

வெண்ணிலா ஐஸ்க்ரீம்..


வெண்புறா வந்து சென்றதாய்  சொல்லும்

ஒற்றை இறகு


ஊதா சோப்பும் 

கரைந்து கொடுத்த

வெள்ளை நுரை


"டை" க்குத் தப்பிய

தலையின் நரை..


கருங்கடலில் மிதக்கும்

வெண்ணிலா ..

கருங்கூந்தல் ஏறாத

வெள்ளெருக்கம் பூ


 சாம்பாரில் மிதக்காத

வெள்ளை முள்ளங்கி 


எல்லா வெண்மையும்

தோற்றுத் தான் போகும்..

தோலின் நிறத்தைக் கொண்டாடும் மனிதர்களிடம் இல்லாத

என் கருத்த பாட்டியின் வெள்ளை மனசுக்கு முன் 🤍


- சாய்கழல் சங்கீதா



---------------------

எதிர்ப்பாட்டு:


கருங்குழலை இரசிக்காத

கவிஞர் உண்டா?

கார்மேகம் கண்டு

ஆடாத கானமயில் உண்டா?

கரும்புகை விட்ட

புகைவண்டியைத்தான் 

இரசிக்காத மாந்தர் உண்டா?

கருப்பான காப்பியை

ருசிக்காத நா உண்டா?


கருப்பிலும் இரசிக்க 

ஆயிரம் விடயங்கள்.


என்றும்

கருப்பே அழகு

காந்தலே ருசி.


-- முகம்மது சுலைமான்

-------------------

கதிரவனின் தொடுகையில்

வெண்பனியும் விலகும்

காரிருளும் விலகும்


விண்மகளின் மடியில்

வெண்மேகம் விளையாடும்

கார்மேகம் உறவாடும்


வெண்மையும் கருமையும்

நிலவோடு இயைவது

இயற்கையின் ஓவியம் 


கடலரசன் உடைகூட

பல நிறங்கள் மாறுவதுண்டு

அலையரசியும் ஆர்ப்பரிப்பாள்


தீண்டும் தென்றலது

நிறபேதம் பார்ப்பதில்லை

வீசாமல் நின்றதில்லை 


வெளிச்சம் ...

பிரதிபலித்தால் வெண்மை

உறிஞ்சப்பட்டால் கருமை

சிதறினால் பிற நிறங்கள்


வண்ணங்களால் ஒளிர்ந்தது உலகம்

வண்ணங்களும் ஒளி இழந்தன

மனிதனின் எண்ணங்களால்...


-அமுதவல்லி

----------------


Friday, April 4, 2025

எல்லாம் கணக்கு

 எல்லாம் கணக்கு


கனி தரும் தருவுக்குப் பின் காரணம் உண்டு

   கணக்கு தன் இனம் அதனால் பெருகுமென்று


வனிதையர் பூச்சரம் தலையில் சூடிக் கொள்வார்

   வாசம், நிறம் காட்டி வளர்க்க செடி வைக்குது


சுனையில் குளிர்ந்த நீர் சுரந்து பெருகுது

   சும்மா அது ஓரிடத்தில் இருக்க முடியாது


மனிதன் கிடைக்குதென பயன் படுத்துகிறான்

   மரம், மலர், சுனைக்கு மகுடம் சூட்டுகிறான். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Thursday, April 3, 2025

போனஸ் போனஸ்...

 போனஸ் போனஸ்... 


வானத்தில் மீன்கள் இடை வட்ட நிலா போனஸ்

   வாழ்க்கைத் துணை முதுமையிலும் வந்தால் போனஸ்


தானம் செய தனம் இருந்தும் ஈகை குணம் போனஸ்

   தண்ணீர் மண் பானையில் வெட்டி வேர் போனஸ்


பானகம் அதில் ஏலக்காய் மிதந்தால் போனஸ்

   பக்கத்து வீட்டில் ஒரு பதினெட்டும் போனஸ்


மோனையோடு கவிதையில் எதுகை போனஸ்

   முள்ளிடை மலரும் ரோஜா அதுவும் போனஸ்


" நான் நான் " இல்லாதது நல்லவரில் போனஸ்

   நண்பர் வீட்டு மாமரம் பூத்தாலும் போனஸ்


தேனீக்கள் நம் தோட்டம் தேர்வு செய்தால் போனஸ்

   தீந்தமிழில் பேசும் பெற்றோர்களும் போனஸ்


ஊனில் பசிக்கும் வரை உணவு கிடைக்க போனஸ்

    உயிர் பிரியும் நொடியில் உறவு மடியும் போனஸ்


ஏன்? ஏன்? என வினவாத ஏவலரும் போனஸ்

   இத்துடன் விட்டேனே அதுவும் போனஸ். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


-------------------------------------------------

தமிழ்..

நம் நாவில் கொஞ்சித்  தவழ்வதுடன்,

சிந்தையில் அமர்ந்து விளையாடி, 

கரம் பிடித்து கவிதையாய் உடன்வருவதும் போனஸ்🙏🏻🙏🏻

---இலாவண்யா

---------------------------------------------

கடும் மழையின் இடையே

சுடும் வெயிலும் போனஸ்


கத்தரி வெயிலின் நடுவில்

சிறுமழையும் போனஸ்


சிறு மழையின் சிலிர்ப்பில்

கவி மழையும் போனஸ்


கவி மழையைத் தொடர்ந்து 

உரையாடல்களும் போனஸ்


கான்கிரீட் உலகின்‌ ஊடே

பசுமைகளும் போனஸ்


வாகனங்களின்‌ இரைச்சலிடை

குயிலோசையும் போனஸ்


புகைபடர்ந்த நகரமதில்

தூய காற்றும் போனஸ்


வளமொழிந்த ஊரங்கே

சுவைக்க நீரும் போனஸ்


பொங்கித் ததும்பிய இயற்கையை

தொடவே போனஸ் என்ற

மனிதன் ஆனான் மைனஸ் ...


- அமுதவல்லி

---------------------------------



Wednesday, April 2, 2025

பளிச்சென...

 பளிச்சென... 


உலகு என்றும் என்னை ஓரம் கட்டாது

   உம்மணா மூஞ்சியும் நகைக்கத் தவறாது


வலதை இடதாய்க் காட்டி வம்பு செய்வேன்

   வாயாட பேச்சாளரை வளர்த்திடுவேன்

   

திலகம் இட்டுக் கொள்ள உதவி செய்வேன்

   தினமும் வஞ்சியரைக் கெஞ்ச வைப்பேன்


புலியே எதிரே வந்தால் புறமுதுகு காட்டேன்

   போட்டியாய் வேறொரு புலி நிறுத்துவேன் 


எலி வந்தால் நேரே ஏளனம் செய்யேன்

   எல்லோரும் அழகு என்றே சொல்வேன்


மலையையும் என்னுள் அடக்கிக் காட்டுவேன்

   மங்கலப் பொருள்களில் நானும் ஒன்றாவேன்


புலவன் போல் ஒருநாளும் பொயுரைக்க மாட்டேன்

   பூவையரே அழகென்பான் அதுவும் அறிவேன்


பலவாம் பயன்கள் இவ்வாறு என்னால்

   பரவசம், பளிச்சென " கண்ணாடி " என்றால். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


-------------------------------------------

என் பெயர் கண்ணாடி 

வந்து நில் என் முன்னாடி,     

உன்னை பிரதிபலிப்பேன் உள்ளபடி...     

ஏனென்றால் எனக்கு பொய் சொல்ல தெரியாது          

வஞ்ச புகழ்ச்சி முடியாது  

உண்மையை மட்டுமே உரைப்பதால்           

நானும் காந்தி தான்  

என் பெயர் கண்ணாடி.


--சந்திரசேகரன்

-------------------------------------------



மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...