அலைகளுடன் அலைந்து வந்த குப்பைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
சின்னஞ்சிறிய வெண்சங்கு..
நேற்று பெய்த மழையில் பூத்து தம் இருப்பிடம் காக்க மழையில் நனைந்திடும் சின்னஞ்சிறு
வெண்குடைகள்..
ஈன்ற கன்றுக்குத் தாராளமாய் பாலூட்டி
மிச்சமாய் கிடைக்கும்
ஆ வின் வெண் பால்
புயல் காற்றில்
பறந்து வந்த வெண் பஞ்சு
வெள்ளத்தில் அடித்து வந்த
வெண்ணிறக் காகிதக் கப்பல்..
கவிதை எழுத வேண்டி
காத்திருக்கும்
வெள்ளைக் காகிதம்
மிகவும் ருசியாக இருக்கும்
அடுத்த வீட்டு வெண்பொங்கல்
குட்டைகளாய்த் தேங்கிய
மழை நீர் என்றாலும்
பறந்து மகிழும்
வெண் கொக்குகள்
ஆதவனை மறைத்து
விளையாடும் வெண் மேகங்கள்..
வெண் மேகங்களையும்
மாயமாக்கும்
வெண்பனி..
அரிதாய் காண்கின்ற
வெண் தோகை மயில்..
மிகவும் அரிதாய் அறிமுகமாகும்
வெள்ளந்தி மனிதர்கள்..
பால் குடிக்கும் குழந்தைக்குப்
புதிதாய் முளைத்த
பால் பல்
வெயிலில் கிடைத்த
வெண்ணிலா ஐஸ்க்ரீம்..
வெண்புறா வந்து சென்றதாய் சொல்லும்
ஒற்றை இறகு
ஊதா சோப்பும்
கரைந்து கொடுத்த
வெள்ளை நுரை
"டை" க்குத் தப்பிய
தலையின் நரை..
கருங்கடலில் மிதக்கும்
வெண்ணிலா ..
கருங்கூந்தல் ஏறாத
வெள்ளெருக்கம் பூ
சாம்பாரில் மிதக்காத
வெள்ளை முள்ளங்கி
எல்லா வெண்மையும்
தோற்றுத் தான் போகும்..
தோலின் நிறத்தைக் கொண்டாடும் மனிதர்களிடம் இல்லாத
என் கருத்த பாட்டியின் வெள்ளை மனசுக்கு முன் 🤍
- சாய்கழல் சங்கீதா
---------------------
எதிர்ப்பாட்டு:
கருங்குழலை இரசிக்காத
கவிஞர் உண்டா?
கார்மேகம் கண்டு
ஆடாத கானமயில் உண்டா?
கரும்புகை விட்ட
புகைவண்டியைத்தான்
இரசிக்காத மாந்தர் உண்டா?
கருப்பான காப்பியை
ருசிக்காத நா உண்டா?
கருப்பிலும் இரசிக்க
ஆயிரம் விடயங்கள்.
என்றும்
கருப்பே அழகு
காந்தலே ருசி.
-- முகம்மது சுலைமான்
-------------------
கதிரவனின் தொடுகையில்
வெண்பனியும் விலகும்
காரிருளும் விலகும்
விண்மகளின் மடியில்
வெண்மேகம் விளையாடும்
கார்மேகம் உறவாடும்
வெண்மையும் கருமையும்
நிலவோடு இயைவது
இயற்கையின் ஓவியம்
கடலரசன் உடைகூட
பல நிறங்கள் மாறுவதுண்டு
அலையரசியும் ஆர்ப்பரிப்பாள்
தீண்டும் தென்றலது
நிறபேதம் பார்ப்பதில்லை
வீசாமல் நின்றதில்லை
வெளிச்சம் ...
பிரதிபலித்தால் வெண்மை
உறிஞ்சப்பட்டால் கருமை
சிதறினால் பிற நிறங்கள்
வண்ணங்களால் ஒளிர்ந்தது உலகம்
வண்ணங்களும் ஒளி இழந்தன
மனிதனின் எண்ணங்களால்...
-அமுதவல்லி
----------------
No comments:
Post a Comment