Friday, April 18, 2025

பெண்கல்வி

 ( சற்று பெரிய பதிவு- எனக்குப்பட்டது- மன்னிக்கவும்)


பெண்கல்வி

---


புள்ளிகளை இணைத்தால் கோலங்கள் மட்டுமல்ல,

பெண் கல்வி பற்றிய ஆதங்கங்களும் தென்படுகின்றன.


  ஒரு ஆலமரத்தின்

சிறிய வித்து பல விழுதுகளைக் கொண்ட பெரும் மரத்தை உருவாக்குதல் போல,

பெண் ஒரு சமூகத்தையே அன்றோ உருவாக்குகிறாள்!

ஆனால் அந்த உயர் தகுதிக்கு ஒப்பான கல்வி கற்க வாய்ப்புகள் இன்று பெருகி வரினும் இன்னும் பயணிக்க வேண்டிய தூரமோ, தொட வேண்டிய உச்சங்களோ ஏராளம்.


ஏன்? எனக்கு உதித்த காரணிகள்:


சமூக கோட்பாடுகள்/ வேறுபாடுகள்-

பெண்ணின் விருப்பம் புரியாமல், பள்ளிப் படிப்பு முடிந்தவுடன்( பெரும்பாலும்)

"ஒத்தன் கைலே பிடிச்சி குடுத்துடணம்" 

எனும் பெற்றோரின்" பொறுப்புத்துறப்பு" உணர்ச்சிகள்/ உறவினரின் உந்துதல்கள்.


சூழ்நிலை வேறுபாடுகள்:

கிராமம், சிறு நகரங்கள், மற்றும் பெரு நகரங்களில் உள்ள கல்வி பயில ஏதுவான

குடும்ப சூழ்

நிலைகள்/ கட்டமைப்புகள் என்று ஆய்ந்தால், பெரு  மற்றும் சற்றே சிறுநகரங்களில் பெண் உயர்கல்வி 

கற்க வாய்ப்பு அதிகம்.

ஆனால் கிராமங்கள்அவற்றைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெண்கல்வி என்பது

இன்னும் மொட்டாக உள்ளதே தவிர இன்னும் மலராக முகிழ்க்கவில்லை.

தந்தைக்கு உதவியாக வயலிலோ, தாய்க்கு  துணையாக தாதி எனப்பல சுமைகள்.


முதுகில் சுமக்கும் புத்தகப் பையோடு.

தினம் நெடுஞ்சாலைகள் பல கடக்க  நேரிடும்

கல்விச்சாலைகளை அடைய.


மகள் மணத்துக்கு இலட்சங்களை , செலவழிக்கத் தயாராக உள்ள பெற்றோர் அவள் இலட்சியங்களைத்தொடவிடாமல் அலட்சியம் செய்வது.


மேற்கண்டவை நான் அலுவல் நிமித்தம் பல இடங்களுக்கு சென்ற போது பெற்ற அனுபவங்கள் ; நகரத்தான் என்ற முறையில அல்ல. 


இன்றும் சென்று இன்றைய நிலை காண நினைக்கிறேன். ஆனால் நகரத்தான் முடியவில்லை!


இன்று தொழில் நுட்பத்

தொடர்புடைய பல தொழில்களில், பெறு நிறுவனங்களில்,பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்தாலும்,   பெண்கள் "பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்"   இருந்தாலும்,பெண்களுக்கான " கண்ணாடி உச்சவரம்பு" , ஊதிய வேறுபாடுகள் இன்னும்

தங்கள் நச்சுப்பற்களை நீட்டிக்கொண்டுதான் உள்ளன என்பது வேதனை தரும் உண்மை.


புள்ளி விவரங்கள்( மறுபடியும் புள்ளியா!) நாட்டில் பெண்கள் கல்வி அறிவு பெற்றவர் 75% என்றாலும், அது ஒட்டு மொத்த சதவிகிதமாக உள்ளதால் , கிராம / சிறு நகரங்களில் உள்ள நிலமை சரியாகப் புரிபடவில்லை.


WPL பற்றி ஸீவீ ஐயா குறிப்பிட்டார் . நம் CSK உரிமையாளர் பெண் WPL உருவாக்க மறுத்ததாக கேள்வி; நம் தமிழகத்தில்!


ஆணுக்குப்பெண் சமம் என்று கும்மியடிக்க 

இன்னும் கைகள் காத்திருக்க நேரிடுமோ?!


நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்

எனில் அதன் துணை வேந்தர் குடும்பத்தலைவி அன்றோ! அவள் நற்கல்வி பெற நற் சூழ்நிலைகளும், சமநோக்கு சமுதாயமும் இருப்பின் பல்கலைகள் ஏற்றம்பெறும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...