தன்னலமில்லா பெற்றவள் என்னைப் பற்றிக் கொண்டிருந்த விரல்களை விடுவித்துக் கொண்டு
முதல் முறையாக அவள் மட்டும் இறைவனை நேரில் காண சென்ற போது...
பாதி உயிர் கொண்டும் என் உடல் நடமாட முடிந்தது!
பகல் இரவு பேதமில்லை..
எல்லாம் இருட்டு!
"இது என்ன வாழ்க்கை?
"இவ்வளவு தான் வாழ்க்கையா?"
" ஒரு வேளை இப்படி செய்திருந்தால்"
இப்படி பல இப்படிகள்
எண்ண அலைகளாய்
எழும்பி எழும்பி
கரை காண முடியாமல்
குற்ற உணர்வில்
அமிழ்ந்து போக..
மற்றவர்கள் உடனிருந்தும்
யாரும் அற்றவளாய்..
அழுது தீர்க்கலாம் என
முடிவெடுத்தும்
இன்று பெருகி வரும் கண்ணீரில் கால் அளவும் கூட அன்று ஏனோ
ஊற்றெடுக்கவில்லை!
என்னை உலகிற்குக் கொண்டு வந்தவளே இல்லை..
நான் மட்டும் ஏன் இருக்க
வேண்டும் ?
எப்படியும் ஒரு நாள் மடிவேனே!
அறிவிக்கப்படா தேதி
வெகு தொலைவில்
இருக்குமோ?
நாள்களில் நொடிகள்
ஊர்ந்து நகர்ந்தன..
ஏன் வாழ வேண்டும்?
தொடர்ந்து வாழ முடியுமா?
விடையறியா வெறுமை!
நாள்கள் வருடங்களை
எட்ட எட்ட
விடைகள் விரிவடைந்து கொண்டே போயின..
"அம்மா இன்னிக்காவது எனக்குப் பிடிச்சதா செஞ்சி தரீயா?"
என் மூலம் உலகிற்கு வந்தவன் கேட்ட போது
"கடமைக்கு ஏதோ சமைத்துக்
கொண்டிருக்கிறேனே!" புரிந்தது
"அப்பாவ நல்லா பார்த்துக்கோமா" உறவினர்கள் சொன்னபோது உள்ளத்தில் ஊடுருவாமல் ஏதோ
தலையை ஆட்டி வைத்தது
என் உள்ளத்தில் தானே உதித்து உண்மை நிலை உணர்த்தியது
வாழ்க்கைத் துணையாய்
இருப்பேன் என
என் துணைவர் நம்பிக் கொண்டிருப்பது
மூளையின் ஓரத்தில்
சம்மட்டியால் அடித்தது
"ஃபீனிக்ஸ்" பறவைன்னு ஒரு பறவை
இருந்துச்சான்டி..
எரிஞ்சி சாம்பலாகி
சாம்பல்ல இருந்து
உயிரோட வருமாம்....
அம்மா அவ்வப்போது
சொன்னது
அகக் காதுகளில்
புதிதாய் ஒலித்தது..
" நீ ஃபீனிக்ஸ் பறவை போல
உயிர்த்தெழுந்து வருவாயா?"
அம்மாவைக் கேட்டேன்.
என் தமிழில் பேசினாள்..
"அக்கரையில் உனக்காக காத்திருக்கிறேன்..
அங்கிருந்தே உன்னை
பார்த்து வருகிறேன்.
காற்றின் வருடலாய்
உன்னைத் தழுவிக்
கொள்கிறேன்.
இலைகளை அசைத்து
ஓசையில் பேசுகிறேன்.
உன் எண்ணங்களில்
எழும்பி ..
உன் உள்ளத்தில் உறங்கி..
உனக்குள் நான்..
எனக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை
வாசித்துவிட்டேன்.
உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தின் அத்தியாயங்கள்
நீ வாசிக்க வேண்டி காத்திருக்கின்றன.
நீயோ வாழ்ந்து கொண்டே மடிந்து கொண்டிருக்கிறாய்!
என் இராசாத்தி நீ..
உலக வாழ்வில் உன்னைத் தோற்க விடுவேனா?
பிறருக்காக கடமைகள் ஆற்ற வந்தவள் நீ..
எனக்காக வெற்றிகள் குவிக்க வந்தவள் நீ..
உனக்காகவும் கொஞ்சம்
வாழ்ந்துகொள்!
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு உயிர்த்தெழு!
உன் இருண்ட பாதைகளில்
வெளிச்சமாய் நான்!"
என்றாள்..
இதோ உங்கள் முன் உயிரோடு நான்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment