உலக உடன் பிறப்புகள் நாளில்...
அண்ணா, தம்பியாம், அக்கா, தங்கையாம்
அந்நாள் இவ் உறவுகள் வீடுதோறுமாம்
உண்பது எதையும் அன்று பகிர்ந்தே உண்டோம்
ஒருவரை மற்றொருவர் கண்காணித்தோம்
வண்ண உடைகளும் ஒரே மாதிரியாம்
வடை, வளை அவை அதே அளவிலாம்
தண்ணீர் ஒன்று பருக தனக்கெனும் இன்னொன்று
தளிராய் இருக்கும் போதே பகிரும் குணம் அன்று
தாயம், பல்லாங்குழி விளையாடுவோம் சேர்ந்து
தகராறு, சமாதானம் வருமாம் அடுத்தடுத்து
காயம் படும் ஓடியாடி விளையாடும் நேரம்
கணத்தில் அக்காவின் கையில் மண்ணும்
சாயம் போன ஆடையாம் அண்ணன் போட்டதாம்
சாப்பிட உட்கார்ந்து சேர்ந்து உண்டோமாம்
மாயமாம் இவை இந்நாள் மனையில் ஒரே குழவி
மாற்றாகவும் இருக்கிறது வளர்க்க ஞமலி.
__. குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment