●०●०●०●०●०●०●०●०
மேதினி போற்றும்
மேதினம் வாழிய!
●०●०●०●०●०●०●०●०
காட்டில் மேட்டில் கற்குகையில்
விலங்குகள் போல
வாழ்ந்த மனிதன்
பரிணாம வளர்ச்சியுற்றான்
நாகரீக மலர்ச்சியுற்றான்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அறிவைத் தீட்டி
அறிவியல் வளர்த்து
ஆராய்ச்சிகள் பலவும் செய்து
படிப்படியாக உயர்ந்தான் மனிதன்.
கற்களை உரசி தீப்பொறி கண்டான்
பயணம் செய்ய
சக்கரம் செய்தான்
மனிதகுல வளர்ச்சியிலே
முக்கிய இரண்டு நிகழ்வுகள் இவையே.
அடுத்தநிலைக்கு முன்னேற
மண்ணில் விழுந்த விதைகள் இங்கே
செடியாய் கொடியாய்
மரமாய் கனியாய்
வளருதல் கண்டான்.
அதுவே உழவின் துவக்கமாய் ஆக்கினான்.
உழவு கண்டதும் நீர்நிலை ஓரம்
சமூகம் அமைத்து தங்கலானான்.
நாடோடிபோல இடம்பெயர்ந்து வாழ்ந்த மனிதன்
உழவு வந்ததும் ஓரிடம் தங்கினான்
சமூகம் அமைத்தான்.
இங்கேதானே மனிதகுல நாகரீகம்
உருவாகத் துவங்கியதெனலாம்.
எகிப்திலுள்ள நைல்நதியும்
பாரதத்தின் சிந்து நதியும்
நாகரீகச் சின்னங்களாகின.
தாய்வழிச் சமூகம் மெல்ல மறைந்து
பொருளுடமைச் சமூகம் உருவானது.
ஆண்டான்-அடிமை
சமூகமும் கூட
அதறது அடிதொட்டு வந்திட்டது.
உருவில் பெரியவன் உடலில் வலியவன் தலைவனாக உருவெடுக்க
உழைப்போர் எல்லாம்
அவனுக்காய் உழைக்கும்
அடிமைகளானார் பாரினிலே.
உபரி எனும் சொல்
ஆக்கிரமிக்க
பேராசை மனிதனை ஆட்டுவிக்க
அறிவியல் வளர்ச்சியோ வலுத்தவன் கையில்
செல்வங்களெல்லாம் அவனது பையில்
ஆலைகள் வந்தன,
வேலைகள் வந்தன
உலகமும் கூட சுருங்கத் துவங்கியது.
ஆண்டான்-அடிமை
உறவு என்பது
சற்றே மாறி
முதலாளி-தொழிலாளி
எனும் புதிய சமூக உறவும்
உருவானது.
இலாபம் ஒன்றே குறிக்கோளாக
அபரிமித இலாபமும்
உபரியின் பலனும்
ஓரிடம் சேர
உழைக்கும் கரங்கள்
ஓடாய்த் தேய
முரண்பாடுகளோ தீவிரமானது.
கீழ்திசை தனிலே
கதிரோன் எழுமுன் ஆலை சென்றோர்
மேல்திசையினிலே
பொன்னொளி வீழ்ந்து
மறையும் வரையில்
உழைப்பு, உழைப்பு,
உழைப்பு மட்டுமே.
மின்விளக்கு வந்த பின்னர்
உழைக்கும் நேரம் மேலும் கூடியது.
எந்திரத்துடன் எந்திரமாக ஓய்வு ஒழிச்சல் ஏதுமின்றி
உழைத்த மனிதன் களைத்துப் போனான்.
குடும்பம் குட்டி
மனைவி மக்கள்
எனும் வாழ்வை தொலைத்து வாழ்ந்தான்.
உழைப்போர் குருதியைக் குடித்த கூட்டம்
உண்டு கொழுக்க
உழைக்கும் மக்கள்
உயிரின் வாதையில்
துடித்து நிற்க
வெடித்தெழுந்தன உரிமைக் குரல்கள்
அடக்கி வைத்த சீற்றமது
எரிமலையாக
வெடித்துச் சீறியது
நாளொன்றுக்கு
பன்னிரெண்டு மணிநேரம்
பல சமயங்களில் அதற்கு மேலும்
என உழைத்துக் களைத்த
தொழிலாளர் கூட்டம்
1886-ம் ஆண்டினிலே
அமெரிக்க நாட்டின்
செல்வங் கொழிக்கும்
சிக்காகோ நகரினிலே
மே மாதம் மூன்றாம் நாள்
போர்க்கொடி உயர்த்தினர்
நியாயம் கேட்டனர்.
பரிசாய்க் கிடைத்தது
குண்டாந்தடியும்
குண்டுகளும் மட்டுந்தானே.
நால்வர் இறந்தனர்
உயிரைத் துறந்தனர்
கோபமுற்ற தொழிலாளிகள்
நான்காம் தேதி
ஹே மார்க்கெட் எனுமிடத்தில்
பேரணி போயினர்
கண்டனம் எழுப்பினர்
அமைதியான ஊர்வலத்தில்
முதலாளிகளின் ஏவல் நாய்களும்
அரசாங்கத்தின் காவல் பேய்களும்
ருத்ர தாண்டவம் ஆடி முடித்தனர்.
மேலும் பலர் கொல்லப் பட்டனர்.
இப்போராட்டந்தனில்
உயிரை ஈந்த
உழைப்பாளிகளின் இரத்தந் தோய்ந்த
ஆடைகளே அன்று கொடிகளாகின
அதுவே செங்கொடி பிறக்கக் காரணமாயின.
திருப்தியடையா முதலாளிகளோ
தலைமை தாங்கிய ஏழு பேரை
அரசு எந்திர துணைகொண்டு
தூக்கில் ஏற்றி அகமகிழ்ந்தனரே.
இந்தக் கொடுமை நடந்த பின்னர்
உலகமெங்கிலும் கலகம் தோன்ற
நியாயம் பிறந்தது
எட்டுமணி நேர பணிநேரம்
எனும் உயரிய தத்துவம்
நடைமுறையானது
அதுவே பன்னாடுகளின்
சட்டமுமானது.
இந்தச் சட்டமும் தற்போது
நீர்த்துப் போவதைப்
பார்க்கின்றோம்
நியாயமற்ற நிலைகண்டு
மனமும் நொந்து போகின்றோம்.
மேதினத் தியாகிகள்
செய்த தியாகங்கள்
வீண்போகாதிருக்க
நல்லது செய்வோம்
உழைக்கும் கரங்களை
போற்றி மகிழ்வோம்.
*ஸ்ரீவி*
No comments:
Post a Comment