தனிமைப் பயணம்
அவசரமாக ஓடிச்சென்று
ரயில் பெட்டியில்
எனக்கான இருக்கையில்
அமர்ந்து கொண்டேன்.
பயணச்சீட்டு விவரத்தை
சரிபார்த்துக் கொண்டேன்.
என்னுடன் பயணிப்பவர்களுடன்
வழியனுப்ப வந்தவர்கள்
அன்பையும் உணவையும் பரிமாறிக்கொண்டிருந்தனர் .
என்னை வழியனுப்ப யாராவது
வருவார்களா என
கண்எட்டும் தூரம்வரை
எட்டி பார்த்துவிட்டு
ஆசுவாசப் படுத்திக்கொண்டேன் .
வண்டி கிளம்பிற்று .
சாளரங்களின் வழியே
தலைகளும் ஓசைகளும்
மறையத் தொடங்கின.
தூரத்தில் ஒரு உருவம்
என் பெயர் சொல்லிக் கொண்டு
ஓடி வருவது போல் இருந்தது.
மூச்சிறைக்க ஓடி வந்த அவ்வுருவம்
என் கைப்பிடித்து கூறியது
தைரியமாக போய் வா
நானிருக்கிறேன் என.
மனம் இலேசாகி நன்றி சொன்னேன்.
என் நிழலுக்கு சொந்தக்காரியான
அவ்வுருவத்திற்கு.
ராஜேஸ்வரி.ந
15/4/2025
No comments:
Post a Comment