போனஸ் போனஸ்...
வானத்தில் மீன்கள் இடை வட்ட நிலா போனஸ்
வாழ்க்கைத் துணை முதுமையிலும் வந்தால் போனஸ்
தானம் செய தனம் இருந்தும் ஈகை குணம் போனஸ்
தண்ணீர் மண் பானையில் வெட்டி வேர் போனஸ்
பானகம் அதில் ஏலக்காய் மிதந்தால் போனஸ்
பக்கத்து வீட்டில் ஒரு பதினெட்டும் போனஸ்
மோனையோடு கவிதையில் எதுகை போனஸ்
முள்ளிடை மலரும் ரோஜா அதுவும் போனஸ்
" நான் நான் " இல்லாதது நல்லவரில் போனஸ்
நண்பர் வீட்டு மாமரம் பூத்தாலும் போனஸ்
தேனீக்கள் நம் தோட்டம் தேர்வு செய்தால் போனஸ்
தீந்தமிழில் பேசும் பெற்றோர்களும் போனஸ்
ஊனில் பசிக்கும் வரை உணவு கிடைக்க போனஸ்
உயிர் பிரியும் நொடியில் உறவு மடியும் போனஸ்
ஏன்? ஏன்? என வினவாத ஏவலரும் போனஸ்
இத்துடன் விட்டேனே அதுவும் போனஸ்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-------------------------------------------------
தமிழ்..
நம் நாவில் கொஞ்சித் தவழ்வதுடன்,
சிந்தையில் அமர்ந்து விளையாடி,
கரம் பிடித்து கவிதையாய் உடன்வருவதும் போனஸ்🙏🏻🙏🏻
---இலாவண்யா
---------------------------------------------
கடும் மழையின் இடையே
சுடும் வெயிலும் போனஸ்
கத்தரி வெயிலின் நடுவில்
சிறுமழையும் போனஸ்
சிறு மழையின் சிலிர்ப்பில்
கவி மழையும் போனஸ்
கவி மழையைத் தொடர்ந்து
உரையாடல்களும் போனஸ்
கான்கிரீட் உலகின் ஊடே
பசுமைகளும் போனஸ்
வாகனங்களின் இரைச்சலிடை
குயிலோசையும் போனஸ்
புகைபடர்ந்த நகரமதில்
தூய காற்றும் போனஸ்
வளமொழிந்த ஊரங்கே
சுவைக்க நீரும் போனஸ்
பொங்கித் ததும்பிய இயற்கையை
தொடவே போனஸ் என்ற
மனிதன் ஆனான் மைனஸ் ...
- அமுதவல்லி
---------------------------------
No comments:
Post a Comment