Tuesday, September 30, 2025

கல்வியா, செல்வமா, வீரமா?

 கல்வியா, செல்வமா, வீரமா?

இன்று(01/10/2025)

நவராத்திரியின் நவ( ஒன்பதாவது) நாள்.


சொல் தந்து , அதற்குப் பொருளும் தந்து, நம்வாழ்வினிலே, நம் வாக்கினிலே இனிமை அருளும் வாணியின் தினம்.


ஆகாசவாணி இப்போதெல்லாம்

அலைபேசி வடிவில், "கேட்டவர்க்கு கேட்டபடி" வழங்கும் வரமாக, "சித்திதாத்ரி"யாக.


பெண்சக்தி, அசுர சக்தியை  ஒன்பது நாட்கள் வீரத்துடன் எதிர் கொண்டு போரிட்டு வென்று , பத்தாம்நாள் முழுமையாக,அழித்தது. எனவே அந்த ஒன்பது நாட்களுக்கு, சிறப்பு.


மலைமகள், அலைமகள், கலைமகள் என மூன்று மகள்களைப் போற்றிப் பரவும் இந்த நாட்களில் , நிலவும் தன் கலைகளை மெல்ல மெல்ல வளர்க்கிறது.


வீரம், செல்வம், கல்வி என மூன்று வாழ்வாதாரங்களின்,ஆதார சக்திகளாக மூன்று பெண் தெய்வங்கள்.


ஆனால் இச்சக்திகள் பெண் உருவமாக, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என மங்கல சொரூபமாக , கோலகலமாக, குதூகலமாக, கொண்டாடப்படுகின்றன.


மூன்றும் மாந்தர்க்குத்தேவைதான். 

இதில்உயர்வு ,தாழ்வு இல்லை.


இக்கொண்டாட்டத்தில், பரதமும், உண்டு, புரதமும் உண்டு. பரதம் சரி. அது என்ன புரதம்? விதவிதமான சுண்டல்கள்தான்!இன்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் புரத மேன்மையை நம் முன்னோர் விழாவில் இணைத்து, உடல்நலம் பேண, எளிமை வழி காட்டினர்.


இந்த ஒன்பது நாட்களுமே மகளிர் கூட்டங்கள் " கூடி இருந்து குளிரும் நாட்கள், தேவதைகளாக, வண்ண வண்ண ஆடைகளில்.


ஆனால் பாவாடை தாவணி " மிஸ்ஸிங்குங்க! எழுமூர் அருங் காட்சியகம் சென்று காண வேண்டும்!


வாய் பேசா பொம்மைகள்  மக்களை ஒன்று சேர்க்கும்  விந்தை விழா!


,

Monday, September 29, 2025

பொம்மையோ பொம்மை

 உப்புமா 15


பொம்மையோ பொம்மை


வீட்டிற்கு வீடு தாவி

புன்னகைப் பூக்களை தூவி

வண்ண பொம்மைகள் கண்டேன்

விதவிதமாய் சுண்டலும் உண்டேன்.. 


தலையாட்டி பொம்மைக்கு தலையாட்டி

தாம்பூலம் பெற்றேன்

கை நீட்டி


படிக்கட்டுகள் ஏறிய பொம்மை

பரவசம் ஊட்டியது உண்மை

பச்சைப் புல்லும் வீட்டிற்குள்

சாமிகளெல்லாம் பாட்டுக்குள்


"மகளிர் மட்டும்"  என ஒன்பது நாள்கள்

ஓடி ஓடி ஓய்ந்துவிட்டால்....

இருக்கவே இருக்கு 

வலி நிவாரண தைலங்கள்


- சாய்கழல் சங்கீதா

Sunday, September 28, 2025

கி.ரா.வின் " கதவு "

 கி.ரா.வின் " கதவு "


ஆர்வக் குழந்தைகளோடு பசையாய் ஒட்டியது

   அடுத்த ஊர் போகப் பேருந்தாய் ஓடியது 


தீர்வை கட்டாததால் பிடுங்கப் படுகிறது 

   திடுக்கிட்டத் தாயும் செய்வதறியாது 


கார்காலக் காற்றில் கைக் குழந்தை மரித்தது 

   கஞ்சி அதைச் சாய்த்து நாயும் நக்கியது


கார், பங்களா வேண்டி  நச்சரிக்கும் உலகாம்

   " கதவு "கி.ரா.வின், கண்கள் கலங்கியதாம்.


தேர்ந்தெடுத்து வாசித்த திரு. லட்சுமி நாராயணனுக்கு நன்றி 


__. குத்தனூர் சேஷுதாஸ் 28/9/2025

சேயிழைகள் கூட்டுச் சதி

 சேயிழைகள் கூட்டுச் சதி 


நாலு மணி அடிக்க நடையல்ல ஓட்டம் 

   நான்கு வீடாவது முற்றுகையிடத் திட்டம் 


தோலோடு மூக்குக்கடலை, கொண்டைக்கடலை 

   தொட்டால் வழுக்கும் சுண்டல் வேர்க்கடலை


சேலையில் செல்பவர்க்கு இன்னும் பல உண்டாம் 

   சேயிழைகள் கூட்டுச்சதி " நவராத்திரி " யாம் 


காலை ஆட்டியபடி காத்திருப்பார் கணவராம் 

   கறிவேப்பிலை, கருகிய மிளகாயே வருமாம் 😢


__. குத்தனூர் சேஷுதாஸ் 25/9/2025

Saturday, September 27, 2025

என் நிழல்

நற்சுனை 15


அவன் மனம் பின்னோக்கி

செல்லும்  போததெல்லாம்

முன்னோக்கி செல்கிறது 

அவன் சட்டைப் பொத்தான்..


- சாய்கழல் சங்கீதா


 நற்சுனை 16


என் நிழல்


கொஞ்சம் பூமியை 

வெளிச்ச மழை 

நனைக்காமல் தடுத்துவிடும்

இரக்கமற்ற குடை நான் !


- சாய்கழல் சங்கீதா

Tuesday, September 23, 2025

கருக்கல்

மருந்தும், நோயும் ஒன்றாய்... 


அரும்பு மீசையின் குறுஞ்செய்தி வந்தது

   "அவசியம் வா" என இடமும் சொன்னது 

   

வருந்தும் இடையது மறுக்கவோ முடியாது 

   வாய்க்கால், வயலென நாளும் வளர்வது 


கரும்பு மிக செழித்து வளர்ந்திருந்தது 

   காயும் நிலவும் கீற்றாய்த் தெரிந்தது 


மருந்தும், நோயும் ஒன்றாய் இருந்தது 

   மாலைக் கருக்கல் நேரமாம் அது .


__. குத்தனூர் சேஷுதாஸ் 23/9/2025

=============


உப்புமா 14


கருக்கல்


விடியாத காலையும் கருக்கல் 

விடியப் போகும் மாலையும் கருக்கல்

செங்கல் நிறத்தவனை ஆதரிக்காத மங்கல்..

காலையும் மாலையும் நடத்தும் நொடிகளில் உரையாடல்..

வடக்கையும் தெற்கையும் பிரித்துவிட்டதால் திசைகளுக்குள் ஊடல்..

மயங்கும் கருக்கல் ஒன்றில்

மெல்ல மலரும் வெண் திங்கள் 

அந்தியாம் இதில் மட்டும் தானே

மசால் வடை தேநீருடன்

மயக்கிடும்  வெண் பொங்கல்!!!


- சாய்கழல் சங்கீதா


================

நீ வறுமையா??

 நற்சுனை 14


நீ வறுமையா??


வறுமையே ! 

நீ ஒன்றுமில்லா வறுமை  இல்லையோ?

சிவந்த நிறம் உனக்காமே!

சிவப்பை சூறையாடி வளமைக்கும் வறுமை தந்தாயோ? 

இருளின் அடர் கருப்பு வேண்டாமோ?


பலரிடம் நீ நிறைவாய் இருக்க

நீ எப்படி வறுமை ஆவாய்?


கண்ணீர் குறைக்காமல் பெருக்குகிறாயே..

நீ எப்படி வறுமை ஆவாய்?


எம் மக்கள் வளம் பெற 

நீ வறுமையாகிப் போனால் என்ன???


- சாய்கழல் சங்கீதா

Sunday, September 21, 2025

பாரதி கிரிக்கெட் போட்டிகள் 2025

 *நமது தமிழ் சங்க பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல். வரலாற்று மிக்க வெற்றி பெற்ற பாரதி கிரிக்கெட் போட்டிகள் 2025*


நமது பொதுக்குழுவில் நாம் எடுத்த முடிவின் அடிப்படையில் நேற்று 20 செப்டம்பர் 2025 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நமது சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிகள் நடந்தேறின. திரு ராம் பிரசாத் மற்றும் திருமதி பிரபு குமாரி இருவரும் அமைப்பாளர்களாக இருந்து மிகச் சிறப்பான பணி செய்து இந்த போட்டிகளை திறம்பட, வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது இதய பூர்வமான நன்றிகள். 🙏


முதல் நாள் இரவு முழுதும் மழை பெய்தும், மறுநாள் காலை தொடர்ந்து தூறல் இருந்து கொண்டே இருந்த போதும், ஏழு மணிக்கு துவங்கவிருந்த நமது போட்டிகள், சரியாக எட்டு மணிக்கு துவங்கி விட்டன. அடாது மழை பெய்தாலும் விடாது நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம் என்ற நமது இளைஞர்கள் அணி திரண்டு ஆடியது அவர்களுக்கு அந்த ஆட்டத்தின் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான ஆர்வமும், ஆசையும், அவர்களது துடிப்பும் வெளிப்பட்டன. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை தவிர காலை எட்டு மணிக்கு துவங்கிய போட்டிகள் இரவு ஒன்பதரை மணி வரையிலே தொடர்ந்து நடந்து வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குவதோடு இனிதே நிறைவுற்றது. 


மிக ஆர்வமாக நமது போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த எட்டு ஆடவர் அணிகளுக்கும், இரண்டு மூத்தோர் அணிகளுக்கும் இரண்டு சிறார் அணிகளுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகளும் வாழ்த்துக்களும். 🙏🙏


மிக ஆர்வமாக கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் மிக அருமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கிரிக்கெட் விளையாட்டின் மேலாண்மையை உயர்த்தி பிடித்து, எந்த ஒரு சிறு சல சலப்புமின்றி, கிரிக்கெட் ஒரு கனவான்களின் ஆட்டம் (Gentleman's Game) என்பதை அவர்கள் நிரூபித்தனர். கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வெளியில் இருந்து உற்சாகமளித்த பார்வையாளர்களுக்கும் நமது சங்கம் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது. 🙏


மகளிர் அணி மட்டும் போட்டிகள் நடத்த முடியாமல் போனது வருத்தமே. என்றாலும், எதிர்காலத்தில் ஆர்வத்துடன் மகளிர் முன்பதிவு செய்து விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. 


கொண்டாட்டமும் குதூகலமுமாக நேற்றைய தினம் காலை 7:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை விளையாட்டு மைதானம் களைகட்டி இருந்தது நமக்கு மகிழ்ச்சியை தந்த ஒரு நிகழ்வு. 


நமது குடியிருப்பில் நமது நலச் சங்கத்தால் ஜனவரி மாதம் மட்டும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மட்டும் போதாது என நமது இளைஞர்களும் சிறார்களும் எண்ணுவதை போட்டிகள் உறுதி செய்தன. வருடத்தின் மத்தியில் கூட ஒரு போட்டி நடத்த வேண்டிய அவசியத்தை நேற்றைய உற்சாகமான பங்கேற்பு சுட்டிக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளை நடத்துவது பற்றி நமது சங்கம் மிகத் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்கும். 


பரிசளிப்பின் போது, இதுவரை உறுப்பினராக இல்லாதவரும் உறுப்பினராக இணைந்து நமது சங்கத்தின் கரங்களை பலப்படுத்தவும் – மேலும் மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் நமது தமிழ் சங்கத்தின் சார்பாக தலைவராலும் நிதிச் செயலாளரும் முன் வைக்கப் பட்டது.


வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும், கோப்பைகளை – பரிசுப் பொருள்களை – மெடல்களை நமது மூத்த உறுப்பினர் மழலை மோகன் ஐயா அவர்கள் வழங்கினார்கள். 


போட்டிகளை நேரடி வர்ணனை செய்து பார்வையாளர்களை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மகிழ்விக்க நமது சங்க உறுப்பினர்கள் ஐ.பி.ஸ்ரீனிவாசன் ஐயா மற்றும் சுந்தரம் ஐயா அவர்கள் கொடுத்து உதவிய ஒலிபெருக்கிக் கருவி மிக உதவிகரமாக இருந்தது. அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கிறோம். 🙏🙏


தங்களது நா வன்மையால் வர்ணனை கூறி எல்லாரையும் உற்சாகப்படுத்திய மவுலீஸ்வரன் மற்றும் உமேஷ் இருவருக்கும் நமது நன்றிகள். 


விரைவில் மீண்டும் ஒரு விளையாட்டு களத்தில் களமிறங்கி கலக்கிடுவோம்! அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

Wednesday, September 17, 2025

கொஞ்சாத தாத்தா!

 நற்சுனை 13


கொஞ்சாத தாத்தா! 


இருந்தீர் என பிறர் சொல்ல

வளர்ந்தேன்

மறைந்தீர் என வளர்ந்த

பின் தெளிந்தேன்


சுவரில் பெரிய புகைப்படம்

தேதிகள் சொன்னது என்னிடம்

உங்கள் முகம் மட்டுமே உண்மை

மற்றவை ஓவியரின் திறமை


(இ)லயோலாவில் படித்தீர்களாம் உயர் கல்வி  

இல்லாமல் போனதே என் கல்வியில் உம்  உதவி


அடுக்கடுக்காய் புத்தகங்கள் இசைத்தட்டுகள் உம் வசம்

அனைவர் மீதும் வைத்தீராம் வேட(ஷ)மில்லா பாசம்


மெட்ராஸிலிருந்து வீட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம்

பிஸ்கெட்டுகளும் கேக்குகளும்..

இதனால் பிரியம் வைத்தனரோ

உம் வயிற்றில் பிறக்காத பிள்ளைகளும்?


ஆசிரியை பிள்ளைகளோடு மார்கழி உலா வீதியிலாம்

பக்தியோடு தமிழ் மணமும் கமழ்ந்தது  உம் ஏற்பாடாம்


ஆங்கில அகராதியை கரைத்துக் குடித்தீராம் 

" ஆ" என்று வாய் பிளக்க பொருள் உரைப்பீராம்

வியந்து சொன்னார் தாய் வழிப் பாட்டன் 

அவருக்கு நீர் தானே தாய்வழி மாமன்..

உங்களுக்கும் சேர்த்து

அவரே கொஞ்சினார்..

அறிவுரையும் உம் உருவாய் அவரே நல்கினார்..


என்னைக் கண்டு பூரித்திருப்பீராம்..

தலைக்கு மேல் கொண்டாடி மகிழ்ந்திருப்பீராம்...

மேலும் மேன்மையாய் வளர்த்திருப்பீராம்..

அன்பில் ஆழ்த்தி அணைத்திருப்பீராம்..

என் உடன் பிறந்தவன் 

உம் சாயலாம்

உம் புராணமே பாட்டியின் வாயெலாம்


கொடுத்து வைக்கவில்லை என்றார் பாட்டி ..

உங்கள் புகைப்படத்தை கை தூக்கிக் காட்டி..

நீங்களா?? பாட்டியா?? நானா?

ஒருவர் மட்டும் என்று தவறாய் நினைப்பேனா?


விடை பெற்றீர் உதறிவிட்டு உலகத்தை 

கடைக்குட்டி சிறு குழந்தை என் அத்தை

நான்கு பிள்ளைகள் ஒன்றாய் இழந்தனர் நல்ல தந்தை

வதைந்த பாட்டி மீண்டது தனிக் கதை


யாருக்கு வேண்டுமென

விரைவாக விரைந்தீர்?

நல்லவர்கள் பட்டியலில் இங்கொன்று குறைத்தீர்!


புகைப்படத்துடன் பேசுவேன் விழியால் உங்களிடம்

மீசைக் கவியின் இயற்பெயரே 

உம் பெயரும்

யார் நிரப்புவார் நீங்கள் நிரப்பா வெற்றிடம்? 

தமிழால் நிரப்பலாம் என்று சேர்த்தீரா அவனிடம்?  



- சாய்கழல் சங்கீதா

Tuesday, September 16, 2025

குதிக்கும் " மோமோ "

 குதிக்கும் " மோமோ "


கொட்டித் தீர்த்து மிகவும் களைத்ததோ வானம் ! 

   குழந்தைகள் வயிற்றெரிச்சல் கொள்ள (பள்ளி) வாகனம் 


சட்டை மாட்டி புறப்பட்டேன் காய்கறி வாங்க 

   சாலையது பவானி அம்மன் கோயில் தாங்க


குட்டி குட்டி *நுணல்களாம் ஆயிரங்களில் 

   குதூகலமாய் குதிக்க, நானோ வியப்பில் 


*முட்டங்கள் திகைத்தன எதைப் பிடித்துத் தின்ன

   " மோமோ " எவ்வளவாம் நம்மால் முடியும் உண்ண?


* நுணல் -- தவளை 

* முட்டம் -- காகம் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 16/9/2025

Monday, September 15, 2025

வாசிப்பு அரங்கம் மற்றும் இலக்கண வகுப்பு கோலாகல துவக்கம்

 §∆§∆§∆§∆§∆§∆§∆§∆§

*வாசிப்பு அரங்கம் மற்றும் இலக்கண வகுப்பு கோலாகல துவக்கம்!*

§∆§∆§∆§∆§∆§∆§∆§∆§


நமது *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்* திட்டமிட்டபடி மாதம் இருமுறை அமரவிருகின்ற வாசிப்பு வட்டமும் நடத்தப்பட இருக்கின்ற தமிழ் இலக்கண வகுப்பும் மிகச் சிறப்பான முறையில் நேற்று  துவங்கின. அதன் விவரணம்:


*சிறுவர் வாசிப்பு வட்டம் – அமர்வு 1 (14-9-2025)*


பங்கேற்றவர்கள் விவரம்:

சிறுவர்கள்

1. செல்வன். ஸ்ரீநிகிதன்

2. செல்வி. ஆராதனா

3. செல்வி. ஜனனி

4. செல்வன்.ஸ்ரீராம்

5. செல்வன். சாய் பிரணவ்

6. செல்வன். மகிழ்மித்ரன்

7. செல்வன்.ஜியோ

8. செல்வன். கௌசலேஷ்

9.செல்வி .நிவர்சனா

10.செல்வி. ஆதிரா

11. செல்வன். அர்மான்

12.செல்வி. அர்ஃபா

13. செல்வன். ஆதவ்

14. செல்வன். அவினாஷ்

15. செல்வன். இளமாறன்

16. செல்வன். ப்ரிதிவ்

17. திரு.சாய்ராம்

18. திருமதி.மகாலட்சுமி

19. திரு.ஸ்ரீவெங்கடேஷ்

20. திருமதி.ராஜேஸ்வரி

21. திரு.கணேசன்

22. திருமதி.வித்யா

23. திருமதி.ஷியாமளா

24. திருமதி.மல்லிகா

25. திருமதி.தேவி

26. திருமதி.மலர்விழி

27. திரு.நாகராஜன்

28. திருமதி.மஞ்சுளா

29. திருமதி. சுல்தானா

30.திருமதி. தனலக்ஷ்மி குமார்

31. திருமதி.லலிதா கிருஷ்ணன்

32. திரு.செல்வன்

33. திரு. வெ. நாகராஜன்.


சிறுவர்களுக்கான முதல் வாசிப்பு வட்ட அமர்வு 14 செப்டம்பர் மாலை 6மணிக்கு கிளப்ஹௌஸ் ஜாமிங்க் ரூமில் இனிதே துவங்கியது. செல்வி ஆராதனா *பனிமனிதன்* (ஆசிரியர் திரு. ஜெயமோகன்) நாவலைப் பற்றியத் தன் அனுபவங்களை அனைவருடனும் சுவைபட பகிர்ந்து கொண்டார். சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் பொறுமையுடனும் கவனித்தனர். தொடர்ந்து திரு. சாய்ராம் ஐயாவின் அழைப்பில் பேரில் செல்வன் ப்ரிதிவ் பனிமனிதன் கதையின் முதல் அத்தியாத்தை அழகாக வாசித்தார். பின்னர் நடந்த கலந்துரையாடலில் சிறுவர்கள் பின்வரும் ஆலோசனைகளை முன் வைத்தனர்:


1. கதையைப் படித்து முடித்ததும், ஒரு வினாடி வினா வைக்கலாம்.

2. கதைப் பகிருதலின் போது கதைக்கு தொடர்பான சில படங்களை வைக்கலாம்,

3. கதையை ஒரு நாடகமாக நடிக்கலாம்.


இத்துடன் பலர் பனிமனிதன் கதையை வாசிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர். அதன் படி புத்தகம் வாசிப்பு சுற்றுக்கு அளிக்கப்படும்.

அடுத்தக்கூட்டம் செப்.27–ம் தேதி வைக்கப் படும்.


*பெரியோருக்கான வாசிப்பு அரங்கம் முதல் அமர்வு*


சிறார்களுக்கான வாசிப்பு அரங்கம் முடிந்த பிறகு பெரியவர்களுக்கான வாசிப்பா அரங்கம் துவங்கியது அதில் பங்கேற்றவர்கள்: 

1.தேவி

2.ஸ்ரீவிதயா

3.காமாட்சி

4.மகாலட்சுமி

5.செல்வன்

6.சாய்ராம்

7.ஷண்முக சுந்தரம்

8.லக்ஷ்மி நாராயணன்

9.கணேசன்

10.வே. நாகராஜன்

11.சு. தே. நாகராஜன்

12.ஸ்ரீவெங்கடேஷ்

13.தனலக்ஷ்மி குமார்

14.சங்கீதா

15.ஆர். சண்முக சுந்தரம்.


திரு லட்சுமி நாராயணன் அவர்கள் சுஜாதாவின் பல்வேறு சிறுகதைகளை தொகுத்து வெளியிடப்பட்ட *ஸ்ரீரங்கத்து தேவதைகள்*  எனும் நூலை பற்றிய ஓர் அறிமுகம் செய்துவிட்டு சுஜாதா பற்றிய குறிப்புகளோடு அந்த தொகுப்பில் இருக்கும் *பேப்பரில் பேர்* என்னும் கதையை வாசித்தார் அனைவரும் ரசித்து சிரித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுஜாதாவின் மிக எளிய நடையும்  வாசகர்கள் அனைவரையும் நேரடியாக கதை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிலான எழுத்து நடையும் மிகச் சிறப்பாக இருந்தன. அதன் பிறகு, அதன் மீது சிறிய கலந்துரையாடலும் நடந்தது குறிப்பிடத் தக்கது. 


*இலக்கண வகுப்பு துவக்கம் - அறிமுக உரையாடல்*


அதன் பின்னர், திரு. ஆர். சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் தாங்கள் எடுக்கவிருக்கும் இலக்கண வகுப்புகளை பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதன் அடிப்படையில் இலக்கண வகுப்புகள் பெரியோரின் வாசிப்பு வட்டம் முடிந்தவுடன் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. தற்சமயத்திற்கு குழந்தைகளுக்கான இலக்கண வகுப்பு என்பதை வாசிப்பு வட்டத்தின் போது இடையிடையே சிறு குறிப்புகளாக குறிப்பிடுவதோடு போதும் எனவும் தனியே நடத்திட வேண்டாம் எனவும் முடிவானது. இலக்கண வகுப்பிற்கு வரக் கூடியவர்கள் தொடர்ந்து வகுப்புகளில் தங்கள் வருகையை உறுதி செய்வது நாம் பல விடயங்களை கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்; குறிப்புகள் எடுப்பதும் முக்கியம் எனவும் விவாதிக்கப் பட்டது. ஒரு கரும் பலகையை வைத்து வகுப்பு எடுப்பது – அதற்கான முயற்சியை தமிழ்ச்சங்கம் மேற்கொள்வது 

எனவும் முடிவானது. 


*நல்ல துவக்கம் வெற்றியை உறுதி செய்கிறது*

நேற்றைய அமர்வும் இலக்கண வகுப்பு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஆர்வத்துடன் சிறுவர்களும் பெரியவர்களும் வாசிப்பு வட்ட அமர்வில் இருந்ததும் இலக்கண வகுப்பில் ஆர்வம் காட்டியதும் நல்ல அறிகுறியே. 


*நன்றி கூறுகிறோம்*


இடத்தைக் கொடுத்த உதவிய நமது நலச் சங்கத்திற்கும் (PWOWA) தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை மிக கவனமாக திட்டமிட்டு அமர்வுகளை நடத்திய திருமதி. ஆர். மகாலட்சுமி மற்றும் திரு. லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் இலக்கண வகுப்பினுடைய அறிமுக உரையை ஆற்றி உற்சாகம் கொடுத்த திரு. ஆர். சண்முகசுந்தரம் அவர்களுக்கும், நல்ல விஷயங்களுக்கு எப்போதுமே ஆதரவு தரக்கூடிய நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வருகைக்கும், கலந்து கொண்ட அனைத்து சிறார்களுக்கும் நமது தமிழ் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறது.🙏

Saturday, September 13, 2025

சும்மா

 உப்புமா 11


"சும்மா இரு" க்க பயிலும் மனம்

சும்மா இல்லாமல்

சும்மா சும்மா

சும்மாவுக்குள் 

சதா சத்தமிடுகிறது 

சும்மாவே!


- சாய்கழல் சங்கீதா


===========

சும்மா என்பது சும்மா இல்ல! 


நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “

"சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.


உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?


பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".


"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.


1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )


2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)


3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)


4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)


5. "சும்மா" கதை விடாதே? (பொய் )


6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )


7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)


8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)


9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)


10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )


11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )


12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)


13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)


14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)


15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)


நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை."


கணவன் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கையில், மனைவி" சும்மாதானே இருக்கீங்க; இந்த துணியை எல்லாம் ஒழுங்கா மடிச்சி வையுங்க" என்று ஒரு " செல்லக்" கட்டளி இடுவார்.

சூபர் ஸ்டார் ரஜினி" சும்மா அதிருது இல்லே!" என்றால் அரங்கம் அதிருமர கைத்தட்டல்கள்.

ஒரே " சும்மா" தான்.

ஆனால் புரிதல் வேறு; அர்த்தங்கள் வேறு!

- மோகன்

============

இள வயதில் 

சும்மா இருந்தால் 

வீட்டிலே மட்டுமல்ல

வெளியேயும் 

பட்டப் பெயர்

"வேலையில்லா

சோம்பேறி" என்று.


அலுவலகத்தில்

சும்மா இருந்தால் 

வேலைக்கு

உலை வைப்பார்

உயரதிகாரி.


ஓய்வு பெற்றபின்

சும்மா இருந்தால் 

இந்த பெருசு

வயதான காலத்தில் 

படுத்துதுனு 

வீட்டிலே புலம்பல்.


வலி இருந்தாலும்

"சும்மா" 

இருப்பதொரு

சுகம்.


- முகம்மது சுலைமான்



Thursday, September 11, 2025

பாரதியின் நினைவு நாள்

 பாரதியின் நினைவு நாள் இன்று..


ஏன் மறந்தாய் மனமே????!!!


நித்தம் தமிழ் வாசம்

அவன் சங்கத்த்தால் 

தானே உன் வசம்?

நன்றி உண்டா உனக்கு?

நன்றி சொன்னாயா அவனுக்கு?


தமிழில் ஊறிய அவனுக்கு நன்றிகள் பல

தமிழால் நவின்றிட

வேண்டாமா?

அவன் ஆற்றிய தமிழனைத்தும் 

நினைத்து உவக்க வேண்டாமா?


படிக்க சொன்னான்

தமிழ் இலக்கணம்

நினைக்க வேண்டாமா இன்று அவனை சில கணம்?


பிறந்தது நல்ல

வாசிப்பு வட்டம் 

வாசிக்க வைக்க

அவன் போட்ட திட்டம்


குழந்தைகளை சேர்க்கிறான் படவரியில்..

நன்றியுரைக்க முடியுமா

ஒரு வரியில்?


ஒரு நாளும் பிரியவில்லை மனதளவில்...என்பதால்

மறந்தாயோ அவன் பிரிந்ததை உடலளவில்?


- சாய்கழல் சங்கீதா


-------------------------------

•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•

செப்டம்பர் 11 :

*ஞானச் சூரியன் அஸ்தமனம் ஆன தினம்*

•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°


சூரியன் அஸ்தமனம் ஆகாத நாடென 

ஆழிசூழ் உலகே கொண்டாடிய நாடு 

பூரித்து கர்வத்தோடு இருந்த நாடு 

ஆங்கில ஏகாதிபத்திய இங்கிலாந்து நாடு 


புண்ணிய பூமி பாரத நாட்டை 

அடக்கி ஆண்ட இங்கிலாந்து நாடு 

அந்நிய ஆட்சியை எதிர்த்தனர் பலர் 

அடங்கா சினத்தோடு களமும் கண்டனர் 


சூரியன் அஸ்தமனம் ஆகா அரசை 

அஸ்தமிக்க செய்ய கிளர்ந்து எழுந்தது 

ஞானச் சூரியனாக அக்கினிக் குழம்பொன்று 

எமக்குத் தொழில் கவிதை என முழங்கியது 


அச்சம் என்றால் ஏதென அறியாது

ஆங்கில அரசை அலறச் செய்து

சுதந்திரக் கனலை வளர்த்தெடுத்து 

ஆங்கிலேயரை அச்சுறுத்தியது. 


காலனுக்கே அஞ்சிடா நெஞ்சு 

ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்

கோலனுக்கா அஞ்சி நடுங்கும் 

கதற விட்டது பரங்கியரை.


காலருகே வரச் சொல்லி காலனையே 

மிதிப்பேன் எனச் சொன்ன ஞானச்சூரியனும் 

தன் பணியை நிறைவு செய்து 

அஸ்தமனம் ஆன தினம் இன்று 


அஸ்தமனம் ஆன பின்பும் 

தான் பரப்பிய அறிவொளியால் 

பூவுலகை ஒளிரச் செய்யும் 

ஞானச்சுடரை போற்றிடுவோம்.


அவன் ஏற்றிய தமிழ் ஒளியை

அணையாது காத்திடுவோம் 

அவனி எங்கும் அவன் புகழை 

பேரொளி வீச ஏற்றிடுவோம்!


*உங்கள்_தோழன்_ஶ்ரீவி*


---------------------------------

மாகவியே ! பாரதியே !...


அருவியாய்ச் செந்தமிழை எங்கிருந்து கொட்டினாய் !

   அழகுத் தமிழ்ப் பாவால் அனைவரையும் கட்டினாய் 


சரஸ்வதி எனும் பொருளில் "பாரதி" என்ற பட்டம் 

   சாத்தியமாம் சிறு வயதில் உனக்கு மட்டும் 


குருவி, காக்கையையும் தன் சாதியில் சேர்த்தாய் 

   குவலயம் முழுதும் ஒரே குடும்பமாய்ப் பார்த்தாய்


விரி உலகில் பாரதமே சிறந்ததெனப் போற்றினாய் 

   விடுதலை கிடைத்ததாய் முனமே பறை சாற்றினாய் 


குருதியது பலர் சிந்தி கிட்டிய நம் சுதந்திரம் 

   கொஞ்சு தமிழ் அதுவாம் நீ எடுத்த ஆயுதம் 


அரிமாவாய்ப் பகைவர்களை ஓட வைத்தாய் 

   ஆணும், பெணும் நிகரென ஆட வைத்தாய் 


வறுமை கண்டு அஞ்சி என்றும் துவளவில்லை 

   வான்மழையாய் கொட்டிய கவிதை அளவேயிலை 


மரணமெனும் அரவு தீண்ட மரிப்பார் மனிதராம் 

   மாகவியே! பாரதியே! வாழ்வாய் இனியுமாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/9/2025


==============================


Tuesday, September 9, 2025

நிலையாமை

 நற்சுனை 11 


நிலையாமை


இனிய பிறந்தநாள் 

வாழ்த்துகள் என்று பூங்கொத்து கொடுத்து இன்புற வாழ்த்திவிட்டு

ஆழ்ந்த இரங்கல்கள்

என்று மலர் வளையமிட்டு துன்பத்தை வருடிப் பதிவிட்டேன்..


வெவ்வேறு புலனக் குழுக்களில் !


- சாய்கழல் சங்கீதா

Monday, September 8, 2025

ஏன் சிவந்தாய்? நிலவே!

 ஏன் சிவந்தாய்? நிலவே!


வெள்ளி முழுநிலவே ! நீ சிவந்தாய் ஏனோ ?

   வெவ்வேறு சொல்வேன் அதிலொன்று தானோ?


கள்ளமாய் ஒதுங்கினாயோ யாரோடும் *கொண்டலில்?

   கட்டையால் அடித்தாளோ *ரோஹிணியும்  மண்டையில்?


பிள்ளைக்கு உனைக் காட்டி சோறூட்டுவார் இலையோ ?

   பிடித்ததோ உன் இடத்தைக் கைபேசி? கோபமோ? 


வெள்ளை நந்தியாய் பூமி நின்றதோ  குறுக்கில்?

   *வெய்யோனை மறைத்ததால் சிவந்தாயோ வெறுப்பில் ?


*கொண்டல் -- மேகம்

*ரோஹிணி -- சந்திரனின் பிரியமான மனைவி 

*வெய்யோன் -- சூரியன் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 8/9/2025


=========================

ஏன் சிவந்தாய் நிலவே ஏன் சிவந்தாயோ?!


ரோகிணி மீது அதீதப் பிரியம் கொண்டதால்

மற்ற   ௨௬ (26 )

மனைவியாரும் ஊடல் கொண்டதாலா?!


மாதம் தோறும் வளர்ந்து தேய்ந்து ஒரு நிலையான உருவம் இல்லாத நிலையை நினைத்து, முகம் சிவந்தாயா?!


" ஏவூர்திகளும்" ஏவுகணைகளும் ஏவி உன்னிடம் நீர் உள்ளதா  என வேவு பார்க்கும் பூமியின் நீர் நிலைகளை அழிக்கும் ஆறறிவு ( 6 அறிவு- " ஆறு" அறிவு அல்ல!) படைத்தவர்களாலா?!


முதலில் வெள்ளி நிலாவாகத் தோன்றி,பின்பு சிறிது சிறிதாக கரு உரு , கொண்டாய். 

குங்கும முலாம் பூசிய வெள்ளியாக  வெ( ள்)ளிப்பட்டாய்!

விடியலில் வெள்ளித்தட்டாக்க் காட்சி அளித்து மனதில் நம்பிக்கையை ஊட்டினாய்!


இந்த அவசர உலகில் உன்னை நின்று இரசிக்க நேரம்ஏது?

பின்னால் வண்டி ஒலிப்பான்களின் முழக்கம், போக்குவரத்துக் 

காவலரின் உருட்டு விழி மிரட்டல்!


உன்வண்ணங்கள் 

மாறினாலும் எண்ணங்கள் மாறாமல் நீ வானவெளியில் உலா வருவாயாக!


- மோகன்

====================

நற்சுனை 10


சிவப்பு நிலா


தன் முந்தானையை விடாமல் பிடித்தபடி 

வான வீட்டில்

வளைய வரும் 

செல்லப் பிள்ளைக்கு

வேடமிட்டு அழகு பார்த்தாள் பூமித்தாய்!


"இரவுச் சூரியன்" ஆனான் சந்திரன்..


- சாய்கழல் சங்கீதா

-------------------------------------

செங்கதிரோன் ஒளியோ சுடும்

செந்நிலவோ தண்மை தரும்


வெட்கமல்ல வெறுப்புமல்ல கோபமல்ல

வெண்ணொளிதான் அள்ளித் தந்தது


தன்னொளி அல்ல என்றாலும்

 தண்ணொளி தந்தது முழுமதி 


புவி மங்கை தந்ததோ  நிழல் திரை

புவி மாந்தர் தந்ததோ தூசும் மாசும்


வெண்ணொளியும் அதில் சிதறியது

வெண்ணிலவும் சிவந்து தெரிந்தது


கவியின் வரிகள் வண்ணம் கொண்டது

கதை பின்னுவோர் கற்பனை கூடியது


வல்லுநர்கள் ஆராய்ச்சி விரிந்தது

வலை எங்கும் இதுவே செய்தி ஆனது


நிழல் திரையும் விலகியது

நிலவும் பால் நிறம் கொண்டது


காலம் காலமாக திகழும் இது

காலம் பிறழாது நிகழும் இது


காலம் நழுவும் மனிதனுக்கு ...

காலத்தோடு பிறழும் மனதுக்கு...

காட்சிகள் எல்லாம் அதிசயமே


--அமுதவல்லி


Sunday, September 7, 2025

*செப்டம்பர் 8 ~* *சர்வதேச எழுத்தறிவு தினம்*

 •°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

*செப்டம்பர் 8 ~*

*சர்வதேச எழுத்தறிவு தினம்*

•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°


விலங்கோடு விலங்காய் வாழ்ந்திருந்த மனிதன் 

பரிணாம வளர்ச்சி உற்றான்.


முதுகு வளைத்து கூன் போட்டு 

நடந்த மனிதன் 

நேராய் நிமிர்ந்து நடந்தான். 


விலங்குகளை வேட்டையாட 

இரும்புக் கருவிகளைக் 

கண்டு பிடித்தான். 


சக்கரமும், தீயும், உழவும் 

அவன் வளர்ச்சிக்கு 

அடி கோலின.


நாடோடி வாழ்வைத் துறந்து நதிக்கரையோரம் 

சமூகங்கள் அமைத்தான்.


தமக்குள் கருத்துப் பரிமாற 

ஒலி வடிவத்தில் 

மொழி சமைத்தான்.


ஆதி குடிகளில் கூவல் குடியே 

தகவல் பரிமாற்றத்திற்கு 

வித்திட்டன. 


ஒலி வடிவம் நாள் போக்கில்

வரி வடிவங்களாய் 

உருவெடுத்தன.


எழுத்து வடிவம் பெற்று 

ஒவ்வொரு மொழியும் 

வளர்ச்சி உற்றன.


நவ நாகரீக கணினி உலகில் 

இன்றும் எழுதப் படிக்க தெரியாதோர் எண்ணிக்கை கோடிகளாம்.


எழுத்தறிவின்றி எந்த மனிதனும் இருந்திடக் கூடாது என 

உருவான நாளாம் இன்று 


உலக எழுத்தறிவு தினம் 

இன்றாம்.

அனைவரும் எழுத படிக்க கற்றல் நன்றாம்..


இணையம் கோலோச்சும் இந்நாளில் 

அதையும் நாம் கற்றிடுவோம் 

இணையில்லா எழுத்தறிவை பெற்று நாமும் வென்றிடுவோம்.


*உங்கள்_தோழன்_ஶ்ரீவி*

அந்த நாளும் வந்திடாதோ..?

 ^°^°^°^°^°^°^°^°^°^°^°

*அந்த நாளும்  வந்திடாதோ..?*

^°^°^°^°^°^°^°^°^°^°^°


கோடை விடுமுறையில் பாட்டி வீடு செல்லும் போது, 


அக்கம்பக்க சிறார்களுடன் வயல்வெளியில் விளையாடும் போது,


உச்சி வெயிலில் குளுகுளு நிழல் தரும் மரத்தடியில் இளைப்பாறும் போது,


மண் தரையில் கோடு போட்டு ஆடுபுலி ஆட்டம்

ஆடும் போது,


பசிக்கையிலே புளியம்பழம் பறிக்க 

மரம் மீது ஏறும்போது,


ஓடையிலே களைப்பு நீங்க நீந்திக் 

களிக்கும் போது,


ஆவினங்கள் கத்தும் போதும், 

புள்ளினங்கள் கூவும் போதும்

உடன் சேர்ந்து கூவும் போது, 


கொண்டாட்டமும் குதூகலமுமாய் 

வாழ்ந்து நாமும் 

மகிழ்ந்த போது, 


*பூவுலகே நம் காலடியில் இருந்ததன்றோ..*


புத்துணர்வு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன்றோ..


*அந்த நாளும் இனிமேல் வந்திடாதோ..?*

ஆனந்தத்தை அள்ளித் தந்திடாதோ..!


*ஶ்ரீவி*


------------------

பாட்டி வீடில்லை, 

என் வீடே அங்கேதான்.


கொள்கைக் 

கூட்டணியுடன் 

பத்து பேர்.


வெம்மையான 

கதிரவனும் 

எங்கள் 

விளையாட்டுத் 

தோழன்.


எல்லா விடுமுறை 

நாட்களும் 

காலை முதல் 

மாலை வரை

களை கட்டும்.


ரோட்டோரப் 

புளிய மரத்தில் 

மரக்குரங்கு.


கல்லா மண்ணா, 

கோலிக் குண்டு,

கிட்டிப் புள், பம்பரம்,

வகை வகையான

விளையாட்டு. 


சைக்கிள் டயரை 

உருட்டுவதில் 

போட்டி.


சைக்கிளை 

வாடகைக்கு 

எடுத்து எங்களுக்குள்

பங்கு.


ஓட்டத் தெரியாத 

நண்பனுக்குக் 

குரங்குப் பெடலில் 

ஓட்டப் பயிற்சி.


அரசமரக் கிணற்றில் 

மணிக் கணக்காய் ஊறி,

வெளியேறும்போது 

உரிந்து வரும் தோல்.


மழைக் காலங்களில் 

நிரம்பி வழியும் 

மணப்பாறைக் குளத்தில் 

உள்ளே விழுந்தால் 

யார் முதலில் 

வெளியேறுவது 

என்று எங்களுக்கும் 

எருமைகளுக்கும் போட்டி.


பசி எடுத்தால் 

ஐந்து பைசாவிற்கு 

கை நிறைய வாங்கிய 

பிஸ்கட் தூளில் பங்கு.


வெயிலோடு 

விளையாடி 

மாலை கருப்பாய் 

வீடு திரும்பும்போது 

அன்னையிடம் 

ஆரம்பிக்கும் 

ஓட்டப் பந்தயம்.


- முகம்மது சுலைமான்

===================================- 

நினைவலையில் மீனாம்


குற்றாலம் என்றாலே சிலருக்கு குதூகலம் 

   குத்தனூர் என குதிப்பேனாம் நானும் 


பெற்ற தாய் அடுத்து இது தான் வருமாம் 

   பிறந்த, வளர்ந்த ஊர் அதுவே தானாம் 


முற்றம், திண்ணை, தோட்டமும் உண்டாம் 

   மோர் உறையாக கேட்பாரும் உண்டாம் 


வற்றாத ஏரி, குளம், வாய்க்கால்கள் எங்கும் 

   வழுக்கும் மீன்கள் அவை பிடிக்க ஆசையும் 


இற்று அறுந்து விடும் இல்லை அஞ்சுதல்

   எமக்கு ஆலமர விழுதுகளே ஊஞ்சல் 


பற்றி மந்தியாய்ப் பனைமரம் ஏறுவோம்

   பழமதைச் சுட்டு, தின்று பசியாறுவோம் 


மற்றதெலாம் மறந்து போக இவை இல்லை ஏனாம்!

   மண்ணோடு மனது அது ஒட்டியது தானாம் 


கற்க, காசு தேடி மண் விட்டுப் போனோம் 

   காலம் கடந்து நினைவலையில் மீனாம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 7/9/2025



Friday, September 5, 2025

சாம்பார்

 உப்புமா 8


சாம்பார்


உன்னை பிடிக்காதவர் யார்?

வீட்டில் நடப்பது உன் தர்பார்

போட்டிக்கு வந்தனர் பலர்..பார் !

நீயே என்றும் சலிக்கா சாம்பார்


வீட்டுக்கு வீடு

நாளுக்கு நாள் 

உன் ருசி மாறும்..

உணவு விடுதியிலோ

மாஸ்டர் மாறினால்

மட்டுமே மாறும்...


காலை மதியம் மாலை இரவு

வேண்டும் உன் தயவு..

நீ ரொம்ப நல்லவன் 

கண்டு சொன்னது ஆய்வு..


முருங்கை வெண்டை 

கத்திரி முள்ளங்கி

பூசணி கீரை 

எல்லாம் உன் நட்பாம்

" சரியான சாம்பார்" என்றால்

அடக்கமுடியா சிரிப்பாம் 


இட்லி வடையுடன் வாட்டமாய்

ஆந்திராவில் காட்டமாய்

காய்கறிகளோடு கூட்டமாய் 

நீர் மிகுந்தால் ஓட்டமாய்..


டிபன் சாம்பார்

அரைத்து விட்ட சாம்பார்

கதம்ப சாம்பார் 

திடீர் சாம்பார்


எல்லாம் சாம்பார்மயம்

சாம்பார் இருக்க ஏது பயம்!!!


- சாய்கழல் சங்கீதா

நீர் சுழற்சி (water cycle)

 நற்சுனை 11


நீர் சுழற்சி (water cycle)


யாருக்கும் தெரியாமல் வியர்த்தன

மீன்களும் குளமும்..


தாகம் தணித்தன..

ஊரறிய குளத்திற்கு மேகம்!

மாராப்புக்குள் மீன்களுக்கு குளம்!


- சாய்கழல் சங்கீதா

Thursday, September 4, 2025

ஆசிரியர் தினம்

 நற்சுனை 10


ஆசிரியர் தினம்


பேசும் புத்தகங்களாய்

அறிவுச் சாவிகளாய்

சீராக்கும் சிற்பிகளாய்

வழி காட்டும் லாந்தர்களாய்

நீவிர்!


கரும்பலகையில் நீங்கள் இட்ட

நட்சத்திரங்களால்

மாணவர்கள் மின்னும் நட்சத்திரங்களாய்!


நீங்கள் கரம் பிடித்த 

" சாக்பீஸ்" தேயத் தேய 

வளர்பிறையாய் ஆகுவோம் முழு"மதி"யாய்!


உதிர்த்த சொற்களெல்லாம்

உயர்த்தும் சொற்களன்றோ!

திட்டித் தீர்த்ததெல்லாம்

தீயவை அகற்ற அன்றோ!


நன்றிகள் கோடி உரைத்தேன்

உம் நாளில்.

ஒரு நாள் போதுமா??? 

என்றென்றும் 

எம் நினைவில்...


இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்💐


- சங்கீதா


=======================

வணக்கத்துக்குரிய குருவே !


கல்லாக இருப்பதைக் கனிய வைப்பீர்

   களிமண் கொடுக்க பாண்டமாக்குவீர்


புல்லைக் கொடுத்தாலும் புலவனாக்குவீர்

   புழு ஒன்றையும் நீர் புலியாக்குவீர் 


பொல்லாதன செய்தால் பிரம்பெடுப்பீர் 

   பொத்தான் போடாதாரை ஓட வைப்பீர்


செல்லாக்காசையும் தங்கமாக்குவீர்

   செழிக்க கிளர் நிலம் பார்த்து மகிழ்வீர்


கொல்லாமை மேன்மை எனும் நீர் வள்ளுவன் 

   கொடுப்பதின் சிறப்பில் ஔவையும் தான் 


கல்விக் கண் திறந்து விடும் நீரும் சிற்பி

   காதில் ஒலிக்கிறதோ "கற்பி! கற்பி!!"


எல்லாரையும் ஏற்றி விடும் நீரும் ஏணி

   இறைக்க இறைக்க வற்றா அக் கேணி


கல்லால மரம் கீழ் அருளும் அக் குருவாம்

   கல்விக் கூடங்களில் உம் போல் பலராம். 


என்றும் வணங்கும் 

__. குத்தனூர் சேஷுதாஸ் 5/9/2025

===================================

ஏற்றி விடும் ஏணியாய் 

ஆற்றைக் கடக்கும் தோணியாய்

நாற்றைக் காக்கும் நல்லுரமாய்

ஊற்றெடுக்கும் ஞானக் கேணியாய் 


கல்வி கற்பித்த நல்லாசிரியரை 

நல்வழி காட்டி 

வழி நடத்தியவரை

அன்போடு நாமும் நினைவு கூர்வோம்

நன்றியும் சொல்லி வாழ்த்துரைப்போம் 


*ஆசிரியர் தின   நல் வாழ்த்துகள்*


- ஸ்ரீவி


--------------------------

ஆசிரியர் தினம்

05/09/2025


ஆசான்  மற்றும்ஆசிரியை தம் சேவைகளை நன்றியுடன்  

நினைவு கூறும் நாள்.


ஓர்ஆசிரியர் நாட்டின் அதிபராக உயர்ந்த நம்நாடு " பாருக்குள்ளே நல்ல நாடு" அன்றோ!


'முளைத்து மூன்று இலை நன்றாக விடும்வரை' பேணி வளர்த்து விடும் பெற்றோர் முதல் ஆசான்கள்.


பள்ளி, கல்லூரி என உயர உயர சளைக்காமல் தூக்கி விட்ட ஆசிரியர் கரங்கள்.


தாம் இருந்த இடத்தில் இருந்தாலும் மாணாக்கனின் உயர்வு கண்டு கண்கள் பனிக்க இறும்பூது அடையும் கரும்பு நெஞ்சங்கள்!


அல்லவை நீக்கி நல்லவை

 பயிற்றுவிக்கும் " வாலறிவர்கள்".


வாழ்வின்ஓட்டத்தில்  முறையான கல்வி கற்பித்தவர்களோடு  , பயணம் சரியாக செல்ல கற்பித்த  மற்ற ஆசான்கள் ஏராளம் !ஏராளம்!


துவிச்சக்கர வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்த தந்தை,

கணிப்பொறி தட்டி வாழக்கையின் வளமான கதவுகளைத்திறக்க உதவிய கணிப் பொறியாளர்,

சாதம் செய்வது எப்படி என்று காட்டிய இல்லாள்,

தலையில் காப்புக்கவசம்அணிய அறிவுறுத்தும் பாதுகாவலர் ........ம்ம் சொல்லி மாளாது.


 தினமும் ஓர்ஆசிரியர், கற்பது வாழ்க்கைக் கல்வியில் மற்றோர் பாடம்.


ஆசிரியர் பதவிக்குத்தான் ஓய்வு; ஆசிரியர்களுக்கு அல்ல.


எல்லா ஆசிரியர்களையும் எவ்வளவு முறை வணங்கினாலும் போதாது. இரு கைகள் போதாது என்றால் தலை 

இருக்கிறதே!


நன்றி கலந்த வாழ்த்துகள்🙏🙏

- மோகன்


================================


Wednesday, September 3, 2025

பழமொழிகள்

பழமொழிகள்

பழமொழிகளைப்பற்றி ஆய்வது, அறிவது எனக்குப்

பிடித்தமான ஒன்று. 


பழமொழிகள் நம்தமிழ்மண்ணின் பாரம்பரியம் மற்றும் வட்டார சொலவடை எனப் பலப்பல அரிய செய்திகளை நாம் அறியச்செய்கின்றன.


பழமொழிகளின் உண்மை வடிவம்,அவை இன்று மருவிய வடிவம் எனப்பார்த்தால் இவை எதைக்குறிப்பிட்டு உணர்த்துகின்றன என்பதை அறிய முடியும்.


நான் குறிப்பிடுவன யாவும் என் முயற்சி இல்லை-" சொந்த சாகித்யம் கிடையாது"!


பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் பதிவுகளை/ கருத்துகளைப்படித்து, உள் வாங்கிப் பதிவிட முயல்கிறேன்.

மாற்றுக்கருத்துகளுக்கும் வாய்ப்புண்டு.


இன்று-

அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் - அற்பனுக்கு( பணம் இல்லாதவனுக்கு) செல்வம் வந்தால் எப்படி அற்பமாக நடப்பான் என்று குறிப்பதாக அமைகிறது.


ஆனால்,


அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன், அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது பழமொழியின் உண்மை வடிவமாக இருக்கக்கூடும்


உண்டி குறைத்தல், பெண்டிர்க்கு அழகு -

இன்று வழங்குவது. 

பழமொழியில்,  பெண்களுக்கான " டயட்டிங்கா"?

இல்லை!


உண்டி (உணவு)யைக் குறைத்தால் பண்டிக்கு (வயிற்றுக்குச் சேரும்) அழகு / பொருள் = தொப்பை வராது

(பண்டி- வயிறு)


அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல - இன்று வழங்குவது. பெண்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. அதுவல்ல.


அரசினை (அரசமரத்தை) நம்பி புருசனைக் கைவிட்டது போல என்பது சரியாக இருக்கலாம். பெண்கள் அரச மரத்தை, மகப்பேறு வேண்டி சுற்றுவதுண்டு.  அரச மரம் அரசனாக, கருதப்படும். அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்வதுண்டு, கிராமங்களில்.  ஆனால் அதை மட்டும் நம்பாமல் கட்டிய கணவனையும் நம்பி மகப்பேறு அடைய வேண்டும் என்று உணர்த்துவதாக இருக்கலாம்.    இந்த எளிய முயற்சியை , தொடர முயல்வேன்....


மோகன்

Tuesday, September 2, 2025

உலக தேங்காய் நாளாம் (3, செப்டம்பர்)

 உலக தேங்காய் நாளாம் (3, செப்டம்பர்)


பொட்டுக் கடலையும், நீயும் நல்லிணை

   பூ இட்லி, வடையும் உம்மால் விற்பனை 


சட்டென்று விருந்து வர துவையல் ஆவாய் 

   சப்பு கொட்டி அவர் உண்ணக் காண்பாய்


சுட்ட அப்பளம், துவையலும் மிக விருப்பம் 

   சூப்பர் ஸ்டார் சொன்னது நினைவிருக்கும் 


குட்டி போடும் நாய்க்கு நீ கிடைத்தது போலாம் 

   கொடாதான் கையிலுள்ள பெரும் செல்வமாம் 



வெல்லமும், நீயும் சேர்ந்த "பூர்ணம்" கூட்டணி

   வெண் கொழுக்கட்டையாய் விநாயகர் கையணி


பல்லில் மாட்டிக்கொண்டு பாடாய் படுத்துவாய் 

   பர்பி என்ற பெயரிலோ நாவில் ஊறுவாய்


கொல்லைப் புறம் நீ குலைகுலையாய்த் தொங்குகிறாய்

   குத்தி துளையிட்டு குடிக்கத் தோன்றும் ஆசையாய் 

   

"சொல்லலையார்"க்கு நீ மிகவும் பிடித்தது ஏனாம்?

   சொல்! தேங்காய்! ஊர்க்குருவி என்னிடமாம்!


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/9/2025

குடை

 குடை !!!

அடை மழையிலும்

கோடை வெயிலிலும்

நம்மைக் காக்கும்

படை!!!


மடிக்கும் போது

தூங்குமே!

விரித்தால் உடனே 

விழிக்குமே!


குடைகள்..

விரித்து மடித்து விளையாட

வண்ண பொம்மைகள்!

கருப்பு, வெள்ளையோடு

கண்கவரும் பல வண்ணங்கள்..

பூக்கள், கோடுகளோடு

அழகிய வடிவமைப்புகள்..

கண்ணாடி போலவும்

காட்டும் ஜாலங்கள்!!

ஆலங்கட்டிகள் தாளம் போடும்

மேளங்கள்!

மழையில் உழைத்துத் 

தரையில் சிந்துமே

வியர்வைத் துளிகள்!!


நீண்ட பெரிய குடைக்குக் கீழே சிறு குடும்பமே இளைப்பாருமே!

சின்னஞ்சிறிய குடைகளோ 

குட்டிச் சுட்டி

ராசாக்களுக்கும்

ராசாத்திகளுக்கும்

மணிமகுடமாகுமே!!

தள்ளாடும் வயதினிலே 

ஊன்றுகோலாகவும்

பணி செய்யுமே!

மழைக்காலத்தில்

குடைக்கம்பிகளை 

விரித்தாடும்

மயிலாகுமே!!!


சங்கீதா

நீ சுற்றுலா சென்றதால்...

 உப்புமாவுக்குள் நற்சுனை



நீ சுற்றுலா சென்றதால்...


உடுத்தியவற்றை அடக்கிக் கொள்ளும் வாளி வழியவில்லை


"சிங்க்" ல் பாத்திரங்கள் குவியவில்லை


தேவையில்லாமல் சேமிக்கப்படுகிறது 

தண்ணீரும் மின்சாரமும்


சமையல் எரிவாயு, சோப்பு, 

பற்பசை எல்லாம்

கூடுதலாக இரண்டு நாள்கள்

வரலாம்.


உன் பள்ளியிலும் 

உன் பள்ளி வாகனத்திலும்

உன் இருக்கையில் யாராவது அமர்கிறார்களா என்று தெரியவில்லை


என் காதுகள் அதிகம் ஓய்வெடுக்கின்றன.

காலிங் பெல் அழைப்புகளும் 

கதவுகளின் ஓசையும் குறைந்துவிட்டன


நேரத்தித்தின் இறக்கைகள் அசையவில்லை 

எழுப்பு மணிக்கு வேலை போய்விட்டது

தூக்கத்தில் யாரும் எட்டி விடவில்லை


தொலைக்காட்சியின் அலறல்கள் 

குறைந்து மௌனத்தின் சத்தம்

அதிகமாகிவிட்டது 


நான்  கத்துவதை மறந்துவிட்டேன்..

நீ வீட்டில் இருக்கும் சமயங்களில் மெளனமாய் மௌனத்திடம் மட்டுமே

பேசுகிறேன்..


உன் புத்தகங்களும் பொருட்களும்

கலைக்கப்படாமல்  சற்று தூசியேறிவிட்டன


என் அலைபேசியில் உன் பள்ளித் தோழர்கள் அழைக்காததால்

பேட்டரி சீக்கிரம் குறைவதில்லை


பள்ளியிலிருந்து திரும்ப கொண்டு வரும் டிபன் பாக்ஸின் லேசான துர்நாற்றம் காற்றிலும் என் சுவாசத்திலும் கலக்கவில்லை


காற்றில் கரிவளி சற்று குறைவாயிருப்பதால் பால்கனியில் செடிகள் சற்று  வாடியுள்ளன

வீட்டுக்குள் பிராண வாயு வழக்கத்திற்கு மாறாய் அதிகமாய் இருப்பதால்  எனக்கு மூச்சு முட்டுகிறது


காட்சிப்பிழைகளும் காணாப் பிழைகளும் நாளை சரியாகிவிடுமென காத்திருக்கிறேன்.

  

- சாய்கழல் சங்கீதா

Monday, September 1, 2025

பிரியாப் பிரிவு

 நற்சுனை 9


பிரியாப் பிரிவு


பொத்தி வச்ச 

பறவைக் குஞ்சு

தனியே பறக்க

பதறுது நெஞ்சு

புலம்பல் இதோ

கவிதையாச்சு..


பள்ளியில் கல்விச் சுற்றுலா..

பறக்கப் போறேன்னு துணிச்சலோடு

பறக்க அத்தனை ஆயத்தம்

கூட்டுக்குள் செய்தது மகிழ்வோடு


திங்கள் கிளம்பி புதன் வரும்

முழுசாய் ஒரு நாள்

பிரிந்ததில்லை இருவரும்.. 


பித்துப் பிடித்து தாய்ப் பறவை 

பிதற்றிப் பரிதவிக்குது 

பிள்ளை மனம் கல்லாய்

சிறகைக் காட்டி சிரிக்குது

அலட்டாத அப்பன் பறவை

அகத்தில் ஆடிக் கிடக்குது??!! 


ஒருமையாம் கூட்டுக்குள்

ஒளிக்க வேண்டுமோ சிறகுக்குள்?

ஜொலிக்க வேண்டாமா 

பறந்து பரந்த பாருக்குள்!

பன்மை உலகம் காண

செல்லச் "சிட்டு"வின்

முதல் பிர(பற)யாணம்..

இனிக்க இறையெல்லாம்

வேண்டுது தாய் மனம்..


இளம் சிறகுகளை

தட்டிக் கொடுத்தது..

பாதுகாப்பு படலம்

ஓதி முடித்தது..


மெல்ல மெல்ல விரியுமே

பிரிவுப் பூ..

இதழ்களுக்கிடையே

இடைவெளிகள் அகன்று கொண்டே...

மன மலரின் அடியில்

ஒட்டியிருக்குமே அன்"பூ"...

இதழ்களின் இடைவெளிகளை அகற்றிக் கொண்டே !



- சாய்கழல் சங்கீதா

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...