உப்புமாவுக்குள் நற்சுனை
நீ சுற்றுலா சென்றதால்...
உடுத்தியவற்றை அடக்கிக் கொள்ளும் வாளி வழியவில்லை
"சிங்க்" ல் பாத்திரங்கள் குவியவில்லை
தேவையில்லாமல் சேமிக்கப்படுகிறது
தண்ணீரும் மின்சாரமும்
சமையல் எரிவாயு, சோப்பு,
பற்பசை எல்லாம்
கூடுதலாக இரண்டு நாள்கள்
வரலாம்.
உன் பள்ளியிலும்
உன் பள்ளி வாகனத்திலும்
உன் இருக்கையில் யாராவது அமர்கிறார்களா என்று தெரியவில்லை
என் காதுகள் அதிகம் ஓய்வெடுக்கின்றன.
காலிங் பெல் அழைப்புகளும்
கதவுகளின் ஓசையும் குறைந்துவிட்டன
நேரத்தித்தின் இறக்கைகள் அசையவில்லை
எழுப்பு மணிக்கு வேலை போய்விட்டது
தூக்கத்தில் யாரும் எட்டி விடவில்லை
தொலைக்காட்சியின் அலறல்கள்
குறைந்து மௌனத்தின் சத்தம்
அதிகமாகிவிட்டது
நான் கத்துவதை மறந்துவிட்டேன்..
நீ வீட்டில் இருக்கும் சமயங்களில் மெளனமாய் மௌனத்திடம் மட்டுமே
பேசுகிறேன்..
உன் புத்தகங்களும் பொருட்களும்
கலைக்கப்படாமல் சற்று தூசியேறிவிட்டன
என் அலைபேசியில் உன் பள்ளித் தோழர்கள் அழைக்காததால்
பேட்டரி சீக்கிரம் குறைவதில்லை
பள்ளியிலிருந்து திரும்ப கொண்டு வரும் டிபன் பாக்ஸின் லேசான துர்நாற்றம் காற்றிலும் என் சுவாசத்திலும் கலக்கவில்லை
காற்றில் கரிவளி சற்று குறைவாயிருப்பதால் பால்கனியில் செடிகள் சற்று வாடியுள்ளன
வீட்டுக்குள் பிராண வாயு வழக்கத்திற்கு மாறாய் அதிகமாய் இருப்பதால் எனக்கு மூச்சு முட்டுகிறது
காட்சிப்பிழைகளும் காணாப் பிழைகளும் நாளை சரியாகிவிடுமென காத்திருக்கிறேன்.
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment