ஏன் சிவந்தாய்? நிலவே!
வெள்ளி முழுநிலவே ! நீ சிவந்தாய் ஏனோ ?
வெவ்வேறு சொல்வேன் அதிலொன்று தானோ?
கள்ளமாய் ஒதுங்கினாயோ யாரோடும் *கொண்டலில்?
கட்டையால் அடித்தாளோ *ரோஹிணியும் மண்டையில்?
பிள்ளைக்கு உனைக் காட்டி சோறூட்டுவார் இலையோ ?
பிடித்ததோ உன் இடத்தைக் கைபேசி? கோபமோ?
வெள்ளை நந்தியாய் பூமி நின்றதோ குறுக்கில்?
*வெய்யோனை மறைத்ததால் சிவந்தாயோ வெறுப்பில் ?
*கொண்டல் -- மேகம்
*ரோஹிணி -- சந்திரனின் பிரியமான மனைவி
*வெய்யோன் -- சூரியன்
__. குத்தனூர் சேஷுதாஸ் 8/9/2025
=========================
ஏன் சிவந்தாய் நிலவே ஏன் சிவந்தாயோ?!
ரோகிணி மீது அதீதப் பிரியம் கொண்டதால்
மற்ற ௨௬ (26 )
மனைவியாரும் ஊடல் கொண்டதாலா?!
மாதம் தோறும் வளர்ந்து தேய்ந்து ஒரு நிலையான உருவம் இல்லாத நிலையை நினைத்து, முகம் சிவந்தாயா?!
" ஏவூர்திகளும்" ஏவுகணைகளும் ஏவி உன்னிடம் நீர் உள்ளதா என வேவு பார்க்கும் பூமியின் நீர் நிலைகளை அழிக்கும் ஆறறிவு ( 6 அறிவு- " ஆறு" அறிவு அல்ல!) படைத்தவர்களாலா?!
முதலில் வெள்ளி நிலாவாகத் தோன்றி,பின்பு சிறிது சிறிதாக கரு உரு , கொண்டாய்.
குங்கும முலாம் பூசிய வெள்ளியாக வெ( ள்)ளிப்பட்டாய்!
விடியலில் வெள்ளித்தட்டாக்க் காட்சி அளித்து மனதில் நம்பிக்கையை ஊட்டினாய்!
இந்த அவசர உலகில் உன்னை நின்று இரசிக்க நேரம்ஏது?
பின்னால் வண்டி ஒலிப்பான்களின் முழக்கம், போக்குவரத்துக்
காவலரின் உருட்டு விழி மிரட்டல்!
உன்வண்ணங்கள்
மாறினாலும் எண்ணங்கள் மாறாமல் நீ வானவெளியில் உலா வருவாயாக!
- மோகன்
====================
நற்சுனை 10
சிவப்பு நிலா
தன் முந்தானையை விடாமல் பிடித்தபடி
வான வீட்டில்
வளைய வரும்
செல்லப் பிள்ளைக்கு
வேடமிட்டு அழகு பார்த்தாள் பூமித்தாய்!
"இரவுச் சூரியன்" ஆனான் சந்திரன்..
- சாய்கழல் சங்கீதா
-------------------------------------
செங்கதிரோன் ஒளியோ சுடும்
செந்நிலவோ தண்மை தரும்
வெட்கமல்ல வெறுப்புமல்ல கோபமல்ல
வெண்ணொளிதான் அள்ளித் தந்தது
தன்னொளி அல்ல என்றாலும்
தண்ணொளி தந்தது முழுமதி
புவி மங்கை தந்ததோ நிழல் திரை
புவி மாந்தர் தந்ததோ தூசும் மாசும்
வெண்ணொளியும் அதில் சிதறியது
வெண்ணிலவும் சிவந்து தெரிந்தது
கவியின் வரிகள் வண்ணம் கொண்டது
கதை பின்னுவோர் கற்பனை கூடியது
வல்லுநர்கள் ஆராய்ச்சி விரிந்தது
வலை எங்கும் இதுவே செய்தி ஆனது
நிழல் திரையும் விலகியது
நிலவும் பால் நிறம் கொண்டது
காலம் காலமாக திகழும் இது
காலம் பிறழாது நிகழும் இது
காலம் நழுவும் மனிதனுக்கு ...
காலத்தோடு பிறழும் மனதுக்கு...
காட்சிகள் எல்லாம் அதிசயமே
--அமுதவல்லி
No comments:
Post a Comment